Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எல் நினோ என்பது என்ன?

எல் நினோ என்பது என்ன?

எல் நினோ என்பது என்ன?

பெருவிலுள்ள லிமாவுக்கு அருகே சாதாரணமாக வறண்டு இருக்கும் அப்யூரிமேக் நதி, கார்மன் என்ற பெண்ணின் எல்லா உடைமைகளையும் வாரிக்கொண்டுபோனபோது, “என்னைப் போல எத்தனையோ பேர் எல்லாவற்றையும் இழந்தனர்” என்று புலம்பிக்கொண்டிருந்தாள். வடக்கே பெய்த ஓயாத மழையினால் கரையோரத்தில் இருந்த சாச்சூரா பாலைவனம் தற்காலிகமாக பெருவிலுள்ள இரண்டாவது பெரிய ஏரி போல மாறியது, இதன் பரப்பளவு சுமார் 5,000 சதுர கிலோமீட்டர். கோளத்தின் மற்ற இடங்களில், சரித்திரம் காணாத வெள்ளம், பயங்கர புயற்காற்றுகள், கடுமையான வறட்சி ஆகியவை பஞ்சத்துக்கும் கொள்ளைநோய்க்கும் காட்டுத்தீக்கும், பயிர், உடைமைகள், சுற்றுச்சூழல் ஆகியவை சேதமடைவதற்கும் வழிநடத்தியுள்ளன. இவை அனைத்தும் ஏன் ஏற்பட்டது? 1997-⁠ன் முடிவில் வெப்பமண்டல அல்லது நிலநடுக்கோடு அருகிலுள்ள பசிபிக் சமுத்திரத்திலிருந்து கிளம்பி சுமார் எட்டு மாதங்கள் நீடித்த எல் நினோதான் இதற்கு காரணம் என்பது பலரின் கருத்து.

எல் நினோ என்பது என்ன? அது எவ்வாறு தோன்றியது? அதன் பாதிப்பு ஏன் இத்தனை இடங்களில் பரவியிருக்கிறது? அடுத்த முறை அது எப்போது தோன்றும் என்பதை துல்லியமாக முன்கூட்டியே கணிக்க முடியுமா, அதனால் உயிருக்கும் உடைமைக்கும் நேரிடும் சேதம் குறைவதற்கு வாய்ப்பிருக்குமா?

தண்ணீர் உஷ்ணமாவதோடு அது ஆரம்பமாகிறது

“எல் நினோ என்பது என்ன என்று சரியாக விளக்கவேண்டுமானால், இரண்டிலிருந்து ஏழு வருடங்களுக்கு ஒரு முறை தொடர்ச்சியாக பெருவின் கரையோரத்தில் வரும் சூடேறிய நீரோட்டமே” என்று நியூஸ்வீக் பத்திரிகை கூறுகிறது. நூறு வருடங்களுக்கும் மேலாக பெருவின் கரையோரத்தில் நீர் இப்படி சூடாவதை கப்பலோட்டிகள் கவனித்திருக்கின்றனர். இந்தச் சூடான நீரோட்டம் பொதுவாக கிறிஸ்மஸ் சமயத்தில் காணப்பட்டதன் காரணமாக இதற்கு எல் நினோ என்ற பெயர் சூட்டப்பட்டது. ஸ்பானிய மொழியில் இதற்கு குழந்தை ஏசு என்று அர்த்தம்.

பெருவின் கரையோரப் பகுதியில் தண்ணீர் உஷ்ணமானவுடன் அங்கே கன மழைப் பெய்கிறது. மழை வந்தவுடன் வனாந்தரம் பூப்பூக்கின்றது, வீட்டுவிலங்குகள் புஷ்டியாக ஆகின்றன. மழை மிகவும் அதிகமாக இருக்கும்போது அந்தப் பகுதியில் வெள்ளம் ஏற்படுகிறது. இதோடு, கடலில் மேலே இருக்கும் சூடான நீர் அடியில் இருக்கும் ஊட்டச்சத்து மிக்க குளிர்ச்சியான தண்ணீரை மேலே செல்லாதபடி தடைசெய்துவிடுகிறது. இதன் காரணமாக கடல்வாழ் உயிரினங்களும் ஒரு சில மீன்களும்கூட உணவைத் தேடி இடம்பெயர்ந்து செல்கின்றன. எல் நினோவினால் ஏற்படும் பாதிப்பு பெருவியன் கரைக்கு அப்பால் வெகுதூரத்தில் உள்ள இடங்களிலும் உணரப்படுகிறது.  a

காற்றினாலும் தண்ணீரினாலும் உண்டாவது

பெருவின் கரையோரத்துக்கு அருகிலுள்ள சமுத்திரத்தின் தட்பவெப்பம் வழக்கத்துக்கு மாறாக உயர்வதற்கு காரணம் என்ன? இதைப் புரிந்துகொள்வதற்கு, வாக்கர் சர்குலேஷன் எனப்பட்ட சுழல்கிற இராட்சத வளையத்தைப்பற்றி புரிந்துகொள்ள வேண்டும். இது கிழக்கு மற்றும் மேற்கு வெப்பமண்டல பசிபிக்கின் இடையில் வளிமண்டலத்தில் காணப்படுகிறது b இந்தோனீஷியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் அருகில் சூரியன் மேற்கே இருக்கும் மேல்மட்ட தண்ணீர்களை சூடாக்கும்போது உஷ்ணமான ஈரக்கசிவுள்ள காற்று வளிமண்டலத்தில் மேலே செல்வதால் தண்ணீரின் மேற்பரப்புக்கு அருகில் தாழ்வான அழுத்த மண்டலம் உருவாகிறது. மேலே செல்லும் காற்று குளிர்ந்து ஈரத்தை விடுவித்து அந்தப் பகுதிக்கு மழையை கொண்டுவருகிறது. வளிமண்டலத்தின் மேற்பகுதியிலுள்ள காற்று வறட்சியான காற்றை கிழக்கே விரட்டிவிடுகிறது. கிழக்கே அது பயணப்படுகையில் காற்று அதிக குளிர்ச்சியாகவும் வேகமாகவும் வீசி பெருவையும் ஈக்குவடாரையும் அடைகையில் கீழே இறங்க ஆரம்பிக்கிறது. இதனால் சமுத்திர மேற்பரப்புக்கு அருகில் உயர் அழுத்த மண்டலம் உருவாகிறது. தாழ்வான உயரத்தில் வியாபாரக்காற்று என்றழைக்கப்படும் வேகக் காற்று இந்தோனீஷியா நோக்கி மேற்குப்புறமாக அடித்து வளையத்தை பூர்த்தியாக்குகிறது.

வெப்பமண்டல பசிபிக்கின் மேற்பரப்பின் தட்பவெப்ப நிலையை வியாபாரக்காற்று எவ்வாறு பாதிக்கிறது? “இந்தக் காற்றுகள் பொதுவாக சிறிய குளத்தில்வீசும் மென்காற்று போல செயல்படுகின்றன. இது மேற்கு பசிபிக்கில் உஷ்ணமான மேற்பரப்பு நீரை மேலே தள்ளுவதால் அங்கே கடல் மட்டம் நிலநடுக்கோட்டில் இருப்பதைவிட 60 சென்டிமீட்டர்கள் உயரமாகவும் எட்டு டிகிரி செல்சியஸ் அதிக வெப்பமாகவும் இருப்பதாக” நியூஸ்வீக் சொல்லுகிறது. கிழக்கு பசிபிக்கில் ஊட்டச்சத்துமிக்க குளிர்ந்த நீர் கீழிருந்து மேல்நோக்கி வருவதால் கடல்வாழ் உயிரினங்கள் அங்கே பெருகி செழிப்பாக இருக்கின்றன. இயல்பான நிலையில் அல்லது எல் நினோ இல்லாத ஆண்டுகளில் சமுத்திரத்தின் மேற்பரப்பின் தட்பவெப்பம் மேற்கிலிருப்பதைவிட கிழக்கில் அதிக குளிராக உள்ளது.

வளிமண்டலத்தில் என்ன மாற்றங்கள் நிகழ்வதால் எல் நினோ ஏற்படுகிறது? “ஒரு சில வருடங்களுக்கு ஒரு முறை வியாபாரக்காற்றுகள் குறைவாக வீசுகின்றன அல்லது மறைந்தும்விடுகின்றன, காரணங்களை இன்னும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை” என்பதாக நேஷனல் ஜியாக்கிராஃபிக் குறிப்பிடுகிறது. இந்தக் காற்றுகளின் வேகம் குறையும்போது, இந்தோனீஷியாவுக்கு அருகில் திரண்டிருக்கும் உஷ்ணமான தண்ணீர் கிழக்கு பிரதேசத்திற்கு வந்துவிடுகிறது; ஆகவே பெருவிலும் கிழக்கே இருக்கும் மற்ற இடங்களிலும் சமுத்திர மேற்பரப்பின் வெப்பம் அதிகமாகிறது. இதனால் வளிமண்டல அமைப்பின்மீது பாதிப்பை ஏற்படுத்துகிறது. “கிழக்கே வெப்பமண்டல பசிபிக் சமுத்திரம் வெப்பமடைகையில் வாக்கர் சுழற்சி பலவீனமடைகிறது, இதனால் கன மழை வளிமண்டலம் கிழக்குபக்கமாக நகர்ந்துசெல்கிறது, இது மேற்கிலிருந்து மையப் பகுதிக்கும் கிழக்கு வெப்பமண்டல பசிப்பிக்கை நோக்கியும் நகருகிறது” என்று ஒரு புத்தகம் கூறுகிறது. இப்படியாக நிலநடுக்கோட்டுக்கு அருகிலுள்ள பசிபிக் முழுவதிலுமாக வானிலை பாதிப்புக்குள்ளாகிறது.

ஆற்றோட்டத்திலுள்ள ஒரு பாறையைப்போல

எல் நினோவினால் தூர இடங்களிலுள்ள வானிலையும் மாறிவிட முடியும், வெப்பமண்டல பசிபிக்கின் நீரோட்டத்தினால் இது நிகழலாம். எப்படி? வளிமண்டல சுழற்சி அமைப்பை ஏஜென்டாக பயன்படுத்திக் கொள்வதன் மூலம். உள்ளூரில் வளிமண்டல சுழற்சியில் ஏற்படும் தடையினால் வெகு தூரம் வரைக்கும் எட்டும் பாதிப்புகளை, நீரோட்டத்தின் நடுவில் இருக்கும் பாறையினால் எங்கும் உண்டாகும் சிற்றலைகளுக்கு ஒப்பிடலாம். உஷ்ணமான வெப்பமண்டல சமுத்திரத்திலிருந்து மேலெழுந்துவரும் அடர்த்தியான மழை மேகங்கள், வளிமண்டலத்தில் ஒரு பாறையைப் போல இருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டருக்கு அப்பாலும் வானிலையை பாதிக்கிறது.

எல் நினோ, வளிமண்டலத்தின் உயர்ந்த பகுதிகளில், வேகமாக கிழக்கு நோக்கிவீசும் ஜெட் ஸ்ட்ரீம்ஸ் என்று அழைக்கப்படும் காற்றோட்டத்திற்கு பலம் அளித்து திசைதிருப்பிவிடுகிறது. இப்படிப்பட்ட உயர்ந்த பகுதிகளில் பெரும்பாலான புயல்காற்றுகளை வழிநடத்துவதே இந்த ஜெட் ஸ்ட்ரீம்ஸ்தான். இந்த ஜெட் ஸ்ட்ரீம்ஸ் பலம்பெறுவதும் இடமாறுவதும்கூட பருவ காலத்திற்குரிய வானிலையை தீவிரமாக்கவோ அல்லது தணிக்கவோ முடியும். உதாரணமாக, எல் நினோ குளிர்காலங்கள் வட ஐக்கிய மாகாணங்களில் இயல்பாயிருப்பதைவிட வெதுவெதுப்பாயும் தெற்கு மாகாணங்களில் அதிக ஈரமாயும் கடுங்குளிராயும் இருக்கின்றன.

முன்னறிவிக்க முடியுமா?

ஒரு சில நாட்களுக்கு முன்புதான் புயல்காற்றுகளைக் குறித்து முன்னறிவிக்க முடியும். எல் நினோவையும் அப்படித்தான் முன்னறிவிக்க முடியுமா? இல்லை, இதில் குறுகிய கால வானிலை நிகழ்ச்சிகள் உட்படுவதில்லை, அதற்கு பதிலாக மாத கணக்கில் பெரும் பகுதிகளில் அசாதாரணமான வானிலை இருப்பதை வைத்துதான் எல் நினோவை முன்னறிவிக்கிறார்கள். வானிலை ஆய்வாளர்கள் எல் நினோவை முன்னறிவிப்பதில் ஓரளவு வெற்றியை கண்டிருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

உதாரணமாக 1997-98 எல் நினோ குறித்த முன்னறிவிப்பு மே 1997-⁠ல், அதாவது ஆறு மாதங்களுக்கு முன்பே கொடுக்கப்பட்டது. இதற்காக வெப்பமண்டல பசிபிக் முழுவதிலும் ஆங்காங்கே நங்கூரமிடப்பட்ட மிதவைக் கருவிகள் இருப்பதைக் காண முடிகிறது. இவை சமுத்திர மேற்பரப்பில் காற்றின் அழுத்தத்தையும் 500 மீட்டர் ஆழம்வரையாக சமுத்திரத்தின் தட்பவெப்ப நிலையையும் மதிப்பிடுகின்றன. வானிலை கண்டறியும் கம்ப்யூட்டர் மாதிரி படிவத்திற்குள் இந்தத் தகவலை செலுத்தும்போது வானிலையை முன்னறிய முடிகிறது.

எல் நினோ நிகழப்போவது சீக்கிரமே தெரிந்தால் எதிர்பார்க்கப்படும் மாற்றங்களுக்காக மக்கள் தயாராக இருப்பதற்கு உதவியாக இருக்கும். உதாரணமாக 1983 முதற்கொண்டு, எல் நினோ முன்னறிவிக்கப்படுவதன் காரணமாக பெருவிலுள்ள விவசாயிகள் ஈரமான வானிலைக்கு உகந்த கால்நடைகளையும் பயிர்களையும் வளர்க்க ஊக்குவிக்கப்படுகிறார்கள், மீனவர்களும் மீன்பிடிப்பதை விடுத்து வெப்பமான தண்ணீர்களில் வரும் இறால்மீனை பிடிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆம், எல் நினோ திருத்தமாக முன்னறிவிக்கப்பட்டால் அதற்கு தயாராக இருக்கலாம், இதனால் உயிர்ச்சேதமும் பொருளாதார சேதமும் குறையும்.

நம்முடைய பூமியின் வானிலைகளை கட்டுப்படுத்தும் இயற்கை நிகழ்ச்சிகளை அறிவியல்பூர்வமாக ஆய்வுசெய்கையில் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பாக பண்டைய இஸ்ரவேலை ஆண்ட சாலொமோன் அரசன் ஆவியால் ஏவப்பட்டு எழுதிய வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்பதை உறுதிசெய்கிறது. அவர் இவ்வாறு எழுதினார்: “காற்று தெற்கே போய், வடக்கேயுஞ்சுற்றி, சுழன்று சுழன்று அடித்து, தான் சுற்றின இடத்துக்கே திரும்பவும்வரும்.” (பிரசங்கி 1:6) காற்றோட்டத்தையும் சமுத்திர நீரோட்டத்தையும் ஆய்வுசெய்து நவீன மனிதன் வானிலைக் குறித்து அதிகம் கற்றுக்கொண்டுவிட்டான். எல் நினோ போன்ற நிகழ்ச்சிகளைப் பற்றிய எச்சரிக்கைகளுக்கு கவனம் செலுத்துவதன் மூலம் நாம் பயன்பெறுவோமாக.

[அடிக்குறிப்புகள்]

a இதற்கு எதிர்மாறாக தென் அமெரிக்காவின் மேற்கு கரைக்கு அருகில் தண்ணீரின் வெப்பம் குறிப்பிட்ட இடைவெளியில் குளிர்ந்துவிடுவதற்கு பெயர்தான் லா நின்யா (ஸ்பானிய மொழியில் “சிறு பெண்”). லா நின்யாவினாலும் வானிலையில் பெரிய பாதிப்புகள் ஏற்படுகின்றன.

b இந்த வளையத்துக்கு, 1920-களில் இது எவ்வாறு உருவாகிறது என்பதை ஆய்வு செய்த பிரிட்டன் நாட்டு விஞ்ஞானி சர் கில்பர்ட் வாக்கர் என்பவரின் பெயர் வழங்கப்படுகிறது.

[பக்கம் 27-ன் பெட்டி]

எல் நினோவின் அழிவு தடயங்கள்

◼ 1525: பெருவில் எல் நினோவைப் பற்றி முதல் முதலாக செய்யப்பட்ட வரலாற்று பதிவு.

◼ 1789-93: இந்தியாவில் 6,00,000-⁠க்கும் அதிகமானவர்களின் மரணத்துக்கும் தென் ஆப்பிரிக்காவில் கடுமையான பஞ்சத்துக்கும் எல் நினோ காரணமாக இருந்தது.

◼ 1982-83: முக்கியமாக வெப்பமண்டல பிரதேசங்களில் 2,000 பேருக்கும் அதிகமானவர்களின் மரணத்துக்கும் 1,300 கோடி மதிப்புள்ள உடைமைகள் சேதமாவதற்கும் இந்த நிகழ்ச்சி காரணமாயிருந்தது.

◼ 1990-95: இடைவிடாது தொடர்ந்து நடந்த மூன்று சம்பவங்களினால் பதிவிலிருக்கும் நீண்ட எல் நினோ சம்பவித்தது.

◼ 1997-98: ஒரு எல் நினோ ஏற்படுத்தும் வெள்ளப்பெருக்கும் வறட்சியும் வெற்றிகரமாக முன்னறிவிக்கப்பட்ட போதிலும் சுமார் 2,100 பேர் உயிரிழந்தனர், உலகம் முழுவதிலும் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு 3,300 கோடி டாலர்.

[பக்கம் 24, 25-ன் படம்/தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

இயல்பான நிலை

வாக்கர் சுழற்சியின் மாதிரி

பலமான வியாபாரக்காற்று

வெப்பமான சமுத்திர நீர்

குளிர்ந்த சமுத்திர நீர்

[பக்கம் 24, 25-ன் படம்/தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

எல் நினோ

ஜெட் ஸ்ட்ரீம்ஸ் பாதையை மாற்றுகிறது

பலமிழந்த வியாபாரக்காற்று

வெப்பமான தண்ணீர் கிழக்கே செல்கிறது

இயல்பைவிட சற்று வெதுவெதுப்பாக அல்லது வறட்சியாக

இயல்பைவிட குளிராக அல்லது ஈரமாக

[பக்கம் 26-ன் படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

எல் நினோ

மேலே கோளத்தின்மீது காணப்படும் சிவப்பு நிறங்கள் இயல்பைவிட வெதுவெதுப்பாயிருக்கும் தண்ணீரின் வெப்பநிலையைக் காட்டுகிறது

இயல்பானது

வெதுவெதுப்பான நீர் மேற்கு பசிபிக்கில் திரளுவதால் ஊட்டச்சத்துமிக்க குளிர்ந்த நீர் கிழக்கில் மேலெழுவதை அனுமதிக்கிறது

எல் நினோ

வலிமை இழந்த வியாபாரக்காற்று வெதுவெதுப்பான நீர் திரும்ப கிழக்கே வருவதற்கு அனுமதித்து, குளிர்ச்சியான நீர் மேல்மட்டத்துக்கு வருவதைத் தடைசெய்கிறது

[பக்கம் 24, 25-ன் படங்கள்]

பெரு வெள்ளத்தில் மூழ்கிய சாச்சூரா பாலைவனம்

மெக்ஸிக்கோ சூறாவளி லின்டா

கலிபோர்னியா மண் சரிவுகள்

[படங்களுக்கான நன்றி]

பக்கங்கள் 24-5, இடமிருந்து வலம்: Fotografía por Beatrice Velarde; Image produced by Laboratory for Atmospheres, NASA Goddard Space Flight Center; FEMA photo by Dave Gatley