நீங்கள் எப்படி நிறுத்தலாம்?
நீங்கள் எப்படி நிறுத்தலாம்?
சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ளும்போது முதல் முயற்சியிலேயே வெற்றி கிட்டாது. அதைப் போலத்தான் புகைபிடிப்பதை விட்டுவிட எடுக்கும் முயற்சியும். ஆகவே, நீங்கள் அந்தப் பழக்கத்தை விட்டொழிக்க நெஞ்சில் உறுதிபூண்டிருந்தால், வெற்றிகரமாக கைவிடும் வரை விடாமல் முயல வேண்டும். சறுக்கும் ஒவ்வொரு சமயத்தையும் தோல்வியாக கருதாதீர்கள். அதை வெற்றிக்கு ஒரு படியாக கருதுங்கள், ஒரு சிறு சறுக்கல் முன்னேறுவதற்கான ஒரு அனுபவமாக அமையலாம். இதோ, உங்களுக்காக சில ஆலோசனைகள். இவை அநேகருக்கு கைகொடுத்திருக்கின்றன, ஆகவே உங்களுக்கும் கைகொடுக்கும்.
கைவிட உங்கள் மனதை பக்குவப்படுத்துங்கள்
■ முதலில், கைவிட நீங்கள் எடுக்கும் முயற்சி பயனுள்ளதே என்பதை உங்களுடைய இதய பலகையில் எழுதிவிட வேண்டும். கைவிட விரும்புவதற்கான காரணங்களை பட்டியல் போடுங்கள்—கிடைக்கும் எல்லா பலன்களையும்தான். நீங்கள் கைவிட்ட பிறகு, இந்தப் பட்டியலை பரிசீலனை செய்வது உங்களுடைய உறுதியை ஊக்கப்படுத்தும். கடவுளைப் பிரியப்படுத்த வேண்டும் என்ற எண்ணமே கைவிடுவதற்கு மிகப் பெரிய தூண்டுகோல். நம்முடைய முழு மனதோடும் இருதயத்தோடும் ஆத்துமாவோடும் பலத்தோடும் கடவுளிடம் அன்புகூர வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. நாம் புகைக்கும் பழக்கத்திற்கு அடிமைப்பட்டிருந்தால் இதை செய்ய முடியாது.—மாற்கு 12:30.
■ நீங்கள் எப்பொழுது, ஏன் புகைக்கிறீர்கள் என்பதை அலசிப் பாருங்கள். ஒரு நாளில் சிகரெட்டை எப்பொழுது, எங்கே பற்ற வைக்கிறீர்கள் என்பதை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும். உங்களை புகைக்க தூண்டும் சூழ்நிலைமைகளை முன்கூட்டியே அறிந்துகொள்வதற்கு இது உதவும்.
கைவிடுவதற்கு ஒரு நாளை குறியுங்கள்
■ கைவிடும் நாளை தீர்மானித்து, அதை உங்களுடைய காலண்டரில் குறித்து வையுங்கள். வேலை நெருக்கடி இல்லாத ஒரு நாளை தீர்மானித்துக்கொள்வது மிகவும் நல்லது. அந்த நாள் வரும்போது, புகைபிடிப்பதற்கு முழுமையாக முழுக்குப் போட்டுவிடுங்கள்—உடனடியாகவும் முற்றிலுமாகவும்.
■ கைவிடும் நாள் வருவதற்கு முன்பு, ஆஷ்-ட்ரேகளையும் வத்திப் பெட்டிகளையும் லைட்டர்களையும் தூக்கியெறிந்து விடுங்கள். புகையிலை நெடி அடிக்கும் எல்லா துணிமணிகளையும் துவைத்துவிடுங்கள்.
■ கைவிடுவதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு கைகொடுக்கும் ஆபீஸ் தோழர்களையும் நண்பர்களையும் குடும்பத்தினரையும் பட்டியல் போட்டுக்கொள்ளுங்கள். உங்கள் முன்னால் யாரும் புகைபிடிக்கக் கூடாது என்பதை சொல்ல தயங்காதீர்கள்.
■ நீங்கள் கைவிடும் நாளில் ஏதாவது வேலையில் மூழ்கியிருக்க திட்டமிடுங்கள். புகைபிடித்தல் கூடாது என்ற வாசகம் வரையப்பட்ட இடங்களுக்கு, அதாவது
மியூஸியம், ஏர்கன்டிஷன் தியேட்டர் போன்ற இடங்களுக்குச் செல்லுங்கள். நீங்கள் உடற்பயிற்சியும் செய்யலாம்—நீந்தலாம் அல்லது சைக்கிள் ஓட்டலாம் அல்லது நெடுந்தூரம் நடந்து செல்லலாம்.பின்வாங்கும் அறிகுறிகளை சமாளித்தல்
■ நீங்கள் செயின் ஸ்மோக்கராக இருந்தால், உங்களுக்கு பின்விளைவுகள் ஏற்படும், கடைசி சிகரெட்டை இழுத்த சில மணிநேரத்திற்குள்ளாகவே ஆரம்பிக்கலாம். அதாவது, எரிச்சல், பொறுமையின்மை, பகைமை, கவலை, மனச்சோர்வு, தூக்கமின்மை, களைப்பு, அகோர பசி, சிகரெட் மீது வாஞ்சை ஏற்படலாம். இந்த அறிகுறிகளை தணிப்பதற்கு ஒருவேளை உங்களுடைய மருத்துவர் சில மருந்துகளை எழுதித் தரலாம். அதோடு, இந்தப் போராட்டத்தில் நீங்கள் ஜெயிப்பதற்கு உதவும் விஷயங்கள் இருக்கின்றன.
■ கஷ்டமான முதல் சில வாரங்களில், கலோரி குறைவான உணவுப் பொருட்களை சாப்பிடுங்கள், வயிறுமுட்ட தண்ணீர் குடியுங்கள். கேரட்டுகள், பீட்ரூட்டுகள் போன்ற பச்சை காய்கறிகளை கொறிப்பது சிலருக்கு பயனளித்திருக்கிறது. நீங்கள் உடற்பயிற்சி செய்தால், எடையை குறைப்பீர்கள், நடுக்கம் தணியும்.
■ புகைபிடிப்பதற்கு உங்களைத் தூண்டும் இடங்களையும் சூழ்நிலைமைகளையும் தவிருங்கள்.
■ புகைபிடிப்பதற்கு உங்களைத் தூண்டும் தவறான சிந்தனைகளை எதிர்த்துப் போராடுங்கள். மனம் பொதுவாக இப்படியெல்லாம் சொல்லும்: ‘இவ்வளவு அவஸ்தைப்படுவதற்குப் பதில் இன்னைக்கு மட்டும் ஒரு சிகரெட் பற்றவைக்கலாம்.’ ‘புகைபிடிப்பது மட்டும்தான் எங்கிட்ட இருக்கிற ஒரே கெட்ட பழக்கம்!’ ‘புகைபிடிப்பது ஒன்றும் அவ்வளவு கெடுதி அல்ல; ‘சதா ஊதித் தள்ளுகிற சிலர் 90 வயசுக்கு மேல்கூட வாழ்கிறார்கள்.’ ‘எப்படியோ ஏதோ ஒரு காரணத்தால் ஒருநாளைக்கு சாகத்தான் போகிறேன்.’ ‘புகைபிடிக்கவில்லையென்றால் வாழ்க்கையில் ஒரு சுவையே இருக்காது.’
■ தூண்டுதலுக்கு இடமளிக்கப் போகும் தருணத்தில், தாமதியுங்கள். பத்து நிமிஷம் பொறுத்திருந்தால் போதும், தீவிர ஆசை பறந்துவிடும். ஒருபோதும் புகைக்கக் கூடாது என்ற எண்ணத்தை சிலசமயங்களில் ஜீரணிக்க முடியாது. அப்படி நீங்கள் உணர்ந்தால், இன்றைக்கு மட்டும்தான் என எண்ணிக்கொள்ளுங்கள்.
■ நீங்கள் கடவுளை சேவிக்க விரும்பினால், உதவிக்காக ஜெபியுங்கள். வாழ்க்கையை கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக நடத்த முயற்சி செய்பவர்களுக்கு நம்முடைய அன்பான படைப்பாளர் “ஏற்ற சமயத்தில் உதவியை” வழங்க முடியும். (எபிரெயர் 4:16) ஆனால் ஒரு அற்புதத்தை எதிர்பார்க்காதீர்கள். உங்களுடைய ஜெபங்களுக்கு இசைவாக நீங்கள் செயல்பட வேண்டும்.
மறுபடியும் ஆரம்பித்துவிடாதீர்கள்
■ முதல் மூன்று மாதங்கள் மிகவும் கஷ்டகாலமாக இருக்கலாம், ஆனால் நீங்கள் அதை தாண்டி வந்த பிறகும், சாத்தியமானால், புகைபிடிப்பவர்களையும் புகைபிடிக்கத் தூண்டும் சூழ்நிலைமைகளையும் தவிருங்கள்.
■ எப்பொழுதாவது புகைபிடிக்கலாம் என்று நினைத்து உங்களை முட்டாளாக்கிக் கொள்ளாதீர்கள், நீங்கள் புகைபிடிப்பதை நிறுத்தி ஒரு வருஷமோ இரண்டு வருஷமோ ஆனாலும்கூட.
■ “ஒரேவொரு சிகரெட்” என்ற தூண்டுதலுக்கு அடிபணிந்துவிடாதீர்கள். ஒரு சிகரெட் என்பது பல சிகரெட்டுகளை பற்றவைப்பதற்கு வழிவகுத்துவிடும். ஆனால் நீங்கள் பலவீனமாகி ஒரு சிகரெட்டை பற்றவைத்துவிட்டால், கைவிடுவதற்கு நீங்கள் உழைத்த உழைப்பெல்லாம் வீணாகிவிடும். ஆனால், பலவீனத்தால் ஒரு சிகரெட்டை பற்றவைத்துவிட்டால், மற்றொன்றை பற்றவைத்துத்தான் ஆகவேண்டும் என்ற அவசியமில்லை. ஆரம்பித்துவிட்டால், மீண்டும் நிறுத்துங்கள்.
புகைபிடிக்கும் கோடிக்கணக்கானோர் நிறுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். மன உறுதியுடனும் விடாப்பிடியுடனும் இருந்தால், உங்களுக்கும் வெற்றி நிச்சயம்!