Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பெட்ரா—கல்லில் ஒரு காவியம்

பெட்ரா—கல்லில் ஒரு காவியம்

பெட்ரா—கல்லில் ஒரு காவியம்

பண்டைய நகரங்கள் பெரும்பாலும் முக்கிய நதிக்கரைகளிலேயே அமைக்கப்பட்டிருந்தன. ஏனென்றால் தண்ணீர் வளங்கள் இந்த நகரங்களின் செழுமைக்கு கைகொடுத்ததோடு பாதுகாப்பாகவும் திகழ்ந்தன. ஆனால் தண்ணீர் குறைவாக இருந்ததால் பிரபலமடைந்த ஒரு நகரம் உங்களுக்குத் தெரியுமா? அது அரேபிய பாலைவனத்தின் வடமேற்கு எல்லையில் அமைந்திருந்தது. அதன் பெயர் பெட்ரா.

மத்தியதரை பிரதேசத்தின் எல்லைக்கு அருகில் பாலைவன பிரதேசங்கள் இருந்தன; அங்கு இருந்த வணிகர் கூட்டத்துப் பாதைகள் தூரத்தில் இருந்த நகரங்களை இணைத்தன. நவீன நாளில் கண்டங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகளைப் போல இவை இருந்தன. பெட்ரோல் போட கார்களை அவ்வப்போது நிறுத்த வேண்டியது போலவே, தண்ணீர் காட்டுவதற்கு ஒட்டகங்களை அவ்வப்போது நிறுத்த வேண்டும். பாலைவனத்தில் தண்ணீர் இல்லாமல் தாக்குப்பிடிப்பதற்கு ஒட்டகங்கள் பெயர்போனதாக இருந்தாலும் இது அவசியம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக பெட்ராதான் மத்திய கிழக்கில் ஒட்டகங்களுக்குத் தண்ணீர் காட்டுவதற்கு மிகவும் பிரபலமாக இருந்த இடம்.

பெட்ரா, இரண்டு முக்கியமான வியாபார மார்க்கங்கள் சந்திக்கும் இடத்தில் அமைந்திருந்தது. சிவந்த சமுத்திரத்தை தமஸ்குவுடனும் பெர்சிய வளைகுடாவை காசாவோடும் மத்தியதரைக் கடலோரத்தில் இணைக்கும் இடத்தில் அது அமைந்திருந்தது. விலைமதிப்புள்ள நறுமண பொருட்களை ஒட்டகங்களில் ஏற்றிக்கொண்டு வளைகுடாவிலிருந்து புறப்படும் வணிகர் கூட்டம், கடைசியாக பெட்ராவின் வாயிலான சிக்-ஐ வந்தடையும். இது இடுங்கிய செங்குத்தான பள்ளத்தாக்கில் அமைந்திருந்தது, இங்கு வந்து சேர அரேபிய பாலைவனத்தின் கடுங்குளிரை வாரக்கணக்கில் தாங்கிக்கொள்ள வேண்டும். பெட்ராவுக்கு வந்துவிட்டால் உணவு, தங்குவதற்கு இடம், எல்லாவற்றுக்கும் மேலாக குளிர்ந்த தண்ணீர் எதற்குமே பஞ்சமில்லை.

பெட்ராவில் இதெல்லாம் இலவசமாக கிடைத்துவிடாது. காவலாளிகளுக்கு, வாயிற்காப்போருக்கு, குருக்களுக்கு, ராஜாவின் வேலைக்காரர்களுக்கு என்று எல்லாருக்கும் பரிசு பொருட்கள் கொடுத்தாக வேண்டும் என ரோம சரித்திராசிரியராகிய பிளைனி அறிவிக்கிறார். அதோடு கால்நடை தீவனங்களும் தங்குமிடமும் பணம் கொடுத்தால் கிடைக்கும். ஆனால் நறுமண பொருட்களுக்கும் வாசனை திரவங்களுக்கும் பணக்கார ஐரோப்பிய நகரங்களில் நல்ல பணம் கிடைத்ததால் இந்த வணிகர் கூட்டங்கள் வந்துகொண்டுதான் இருந்தன. இதனால் பெட்ராவில் பணம் குவிந்தது.

தண்ணீர் சேமிப்பும் கைதேர்ந்த கல் வேலையும்

வருடத்துக்கு சுமார் 15 சென்டிமீட்டர் மழைதான் பெட்ராவில் பெய்கிறது. மருந்துக்குக்கூட ஓடைகள் கிடையாது. நகரத்துக்கு தேவையான தண்ணீர் பெட்ரா மக்களுக்கு எவ்வாறு கிடைத்தது? உறுதியான பாறைகளில் அவர்கள் கால்வாய்கள், நீர்தேக்கங்கள், தண்ணீர் தொட்டிகள் ஆகியவற்றை செதுக்கி உருவாக்கினார்கள். காலப்போக்கில் பெட்ராவிலும் அதைச் சுற்றிலும் பெய்த ஒவ்வொரு மழைத்துளியையும் இவர்கள் சேகரித்து பாதுகாத்தனர். தண்ணீரை சாமர்த்தியமாக பாதுகாத்த காரணத்தால் அவர்களால் பயிர் செய்யவும் ஒட்டகங்களை வளர்க்கவும் ஒரு பெரிய வர்த்தக வளாகத்தை உருவாக்கவும் முடிந்தது. இங்கே சாம்பிராணி, வெள்ளைப்போளம் வியாபாரம் செய்தவர்கள் செல்வ சீமான்களாக திகழ்ந்தனர். இன்றும்கூட வளைந்து வளைந்து செல்லும், கல்லினால் கட்டப்பட்ட கால்வாய் சிக் முழுவதுக்கும் தண்ணீரை எடுத்துச் செல்கிறது.

பெட்ரா குடிமக்களுக்கு தண்ணீரை எப்படி செலவழிப்பது என்பதும் தெரியும். கட்டுமான வேலையும் அவர்களுக்கு அத்துப்படி. பெட்ரா என்ற பெயரின் அர்த்தமே பெரிய “கற்பாறை” என்பதாகும். இந்தப் பெயரைக் கேட்டால் நம் நினைவுக்கு வருவது கல்தான். பெட்ரா, ரோம உலகிலிருந்த மற்ற நகரங்களைப் போல இல்லை. இது கல்லால் கட்டப்பட்ட நகரமாக இருந்தது. நபட்டீயர்கள்தான் இந்த நகரத்தைக் கட்டியவர்கள், அவர்கள் மிகவும் பொறுமையாக தங்கள் வீடுகளையும் கல்லறைகளையும் கோவில்களையும் உறுதியான கற்பாறையைச் செதுக்கி உருவாக்கினார்கள். செம்மண் பாறை மலைகள் அருகில் இருந்ததால் இது வசதியாக இருந்தது. பொ.ச. முதல் நூற்றாண்டுக்குள் பாலைவனத்தின் நடுவில் மிகவும் சிறப்பான ஒரு நகரம் உருவாகியிருந்தது.

வியாபாரத்திலிருந்து சுற்றுலா வரையாக

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வியாபாரத்தினால் பெட்ராவில் பணம் குவிந்தது. ஆனால் கிழக்கு நோக்கிச் செல்ல ரோமர்கள் கடல்மார்க்கத்தைக் கண்டுப்பிடித்த போது தரைமார்க்க நறுமணப் பொருட்களின் வியாபாரம் நொடித்துப்போனது. ஆகவே பெட்ரா கைவிடப்பட்டது. ஆனால் பாலைவன சிற்பிகளின் கைவேலை மறைந்துவிடவில்லை. இப்போதெல்லாம் கடந்த கால மகிமையை இன்னும் பறைசாற்றும் இளஞ்சிவப்பு-சிவப்பு வண்ண பெட்ரா நகரைக் கண்டு களிக்க ஆண்டுதோறும் ஜோர்தானுக்கு ஐந்து லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

குளுகுளுவென்றிருக்கும் செங்குத்தான பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் சிக்கில் அரை மைல் தூரம் நடந்தபின் வரும் திருப்பத்தில் சுற்றுலா பயணி கருவூல மனையைக் காண்கிறார். இந்தக் கண்கவர் கட்டடத்தின் முகப்பு பிரமாண்டமான பாறையிலிருந்து செதுக்கி உருவாக்கப்பட்டது. மிகவும் கவனமாக பாதுகாக்கப்பட்டுள்ள இந்த முதல் நூற்றாண்டு கட்டடத்தைப் பார்க்கும் ஒருவரால் அதை மறக்கவே முடியாது. இந்தப் பெரிய கட்டடத்தின் உச்சியில் அமைந்திருக்கும் மாபெரும் கல்தாழியின் பெயரே இதற்கு சூட்டப்பட்டுள்ளது. இங்குதான் பொன்னும் விலைமதிப்புள்ள கற்களும் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்ததாக சொல்கின்றனர்.

பள்ளத்தாக்கு அகலமாகுமிடத்தில் மணற்பாறை சுவர்களையும் பல குகைகளையும் கொண்ட, இயற்கையாய் அமைந்திருக்கும் ஒரு பெரிய அரங்கத்தினுள் சுற்றுலா பயணி நுழைகிறார். ஆனால் சமாதிகள்தான் அவருடைய கவனத்தை மிகவும் கவர்ந்திழுக்கின்றன. இவை செங்குத்தான பாறை முகப்பில் செதுக்கப்பட்டுள்ளன. இருண்டு கிடக்கும் உட்புறத்தினுள் துணிந்துசெல்லும் சுற்றுலா பயணிகள் அந்த உயரமான கல்லறைக்கு முன்னால் எறும்புபோல காட்சியளிக்கிறார்கள். முதலாம் இரண்டாம் நூற்றாண்டுகளில் அந்நகரில் ரோமர்கள் இருந்திருக்க வேண்டும் என்பதற்கு அங்கு காணப்படும் வரிசையான தூண்களும் அரங்கமுமே சாட்சி.

நபட்டீயர் பரம்பரையில் வந்த நவீன நாளைய அராபிய நாடோடிகள், நடக்க கஷ்டப்படும் சுற்றுலா பயணிகளை ஒட்டகத்தில் அழைத்துச் செல்கின்றனர். நினைவுப் பொருட்களை விற்கின்றனர். பெட்ரா நீரூற்றில் ஆட்டு மந்தைகளுக்குத் தண்ணீர் காட்டுகின்றனர். இவை இன்னும் மனிதனின் தாகத்தையும் மிருகத்தின் தாகத்தையும் தணித்து புத்துயிரளித்துக் கொண்டுதான் இருக்கின்றன. பெட்ராவின் பண்டைய நெடுஞ்சாலை இன்னும் பிரத்தியேகமாக ஒட்டகங்களுக்கும் குதிரைகளுக்கும் கழுதைகளுக்கும் பயன்படுகிறது. ஆக ஒட்டகங்கள் ராஜாவாக பாலைவனத்தில் சுற்றித்திரிந்து பெட்ரா அந்தப் பாலைவன பிரதேசத்தை தன் ஆதிக்கத்தில் வைத்திருந்த அந்தக் காலத்தில் கேட்கப்பட்ட அதே சப்தங்கள் இன்றும் அந்நகரில் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

சூரியன் மறையும் சமயம் வரும்போது பிரமாண்டமான கட்டட முகப்புகள் செந்நிறமாக தோன்றுகிறது. அப்போது சுற்றுலா பயணி பெட்ரா கற்பிக்கும் பாடத்தை சற்று சிந்தித்துப் பார்க்கிறார். இப்படிப்பட்ட தரிசான ஒரு சுற்றுப்புறத்தில் கிடைக்கும் மிகக் குறைந்த வள ஆதாரங்களையும் பாதுகாக்க மனிதனுக்கிருக்கும் சாமர்த்தியத்துக்கு இந்நகரமே சாட்சி. பொருளாதார செல்வங்கள் சீக்கிரமாய் ‘ஆகாய மார்க்கமாய்ப் பறந்து போய்விடும்’ என்பதையும்கூட இது நமக்கு நினைப்பூட்டுகிறது.​—நீதிமொழிகள் 23:4, 5.

[பக்கம் 18-ன் படத்திற்கான நன்றி]

Inset: Garo Nalbandian