Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

லாமு—காலத்தால் கறைபடியாத தீவு

லாமு—காலத்தால் கறைபடியாத தீவு

லாமு—காலத்தால் கறைபடியாத தீவு

கென்யாவிலுள்ள விழித்தெழு! நிருபர்

மென்மையான காற்றலை கப்பலின் பாய்த்துணியின்மீது மோதுவதால் அது உப்பிக்கொள்ள, அந்தச் சிறிய மரக்கலம் முன்னோக்கிச் செல்கிறது. கப்பல் தளத்துக்கு மேலே கம்பத்தை இறுக்கமாக பற்றிக்கொண்டு காவலாள் நிற்கிறான். இந்து மகா சமுத்திரத்தில் சூரிய ஒளி பிரதிபலிப்பதால் அவன் கண்கூசுகிறது. அதையும் பொருட்படுத்தாமல் தரை எங்காவது தென்படுமா என்பதை அடிவானத்தில் கஷ்டப்பட்டு தேடிக்கொண்டிருக்கிறான். அது பொ.ச. 15-வது நூற்றாண்டு, இந்தக் கப்பலோட்டிகள் லாமு தீவைத் தேடிக்கொண்டு செல்கிறார்கள்.

பொன், யானைத் தந்தம், நறுமண பொருட்கள், அடிமைகள் எல்லாம் இருந்தது ஆப்பிரிக்காவில். அங்கு செல்வங்கள் குவிந்து கிடந்தன, ஆய்வு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்தது. ஆகவே துணிச்சல் மிக்க இந்த ஆட்கள் தூர தேசங்களிலிருந்து கிழக்கு ஆப்பிரிக்க கரையை நோக்கி பயணப்பட்டார்கள். ஆப்பிரிக்காவின் புதையல்களைத் தேடி வந்த இந்த மாலுமிகள் கொந்தளிப்பான கடலையும் புயல் காற்றையும் பார்த்து பயந்துவிடவில்லை. இந்தச் சிறிய மரக்கலங்களில் நெருக்கியடித்து ஏறி நீண்ட தூர பயணங்களை அவர்கள் மேற்கொண்டனர்.

கிழக்கு ஆப்பிரிக்க கரையின் ஓரத்தில் கென்யாவுக்கு அருகில் சிறு சிறு தீவுகள் அடங்கிய இந்த லாமு தீவு அமைந்திருக்கிறது. கடல்பயணிகளுக்கும் உறுதியில்லாத அவர்களுடைய கப்பல்களுக்கும் பவழப்பாறைகள் சூழ்ந்த இந்த ஆழமான துறைமுகம் வசதியாக இருந்தது. இங்கே அவர்கள் சுத்தமான தண்ணீரையும் உணவுப் பொருட்களையும் கப்பலில் ஏற்றிக்கொள்வார்கள்.

பதினைந்தாம் நூற்றாண்டுக்குள் லாமு தீவு செழிப்பான வியாபார பட்டணமாகவும் சப்ளை மையமாகவும் ஆகிவிட்டது. 16-வது நூற்றாண்டில் இங்கு வந்த கப்பலோட்டிகள், பணக்கார வியாபாரிகள் சில்க் தலைப்பாகையையும், தழைய தழைய தொங்கும் நீண்ட உடைகளையும் அணிந்திருப்பதைக் கண்டார்கள். நறுமணம் பூசியிருந்த பெண்கள் குறுகலான தெருக்களின் வழியாக செல்லும் போது தங்க வளையல்களையும் தண்டைகளையும் அணிந்திருந்தார்கள். துறைமுகம் முழுவதிலும் கப்பல்கள் நின்றன, முக்கோண அமைப்புடைய கப்பலின் பாய்மரங்கள் மடித்து வைக்கப்பட்டிருக்க, கப்பல்களில் வெளி நாடுகளுக்கு எடுத்துச் செல்வதற்கு சரக்குகள் நிரம்பி வழிந்தன. கூட்டம் கூட்டமாக கட்டி வைக்கப்பட்டிருந்த அடிமைகள் கப்பல்களில் ஏற்றப்பட காத்திருந்தனர்.

ஆரம்ப காலத்தில் ஐரோப்பிய ஆய்வுப்பயணிகள் லாமுவின் சாக்கடை கழிவு நீக்க ஏற்பாடுகளையும் கட்டடக் கலையையும் பார்த்து வியந்துபோயினர். பவழப்பாறைகளை எடுத்து அதை கையினால் செதுக்கி கடலோரமாக வீடுகள் கட்டினர்; உள்ளூரில் இருக்கும் கற்சுரங்கங்களில் இந்தக் கற்கள் செதுக்கப்பட்டன. மிகவும் அழகாக செதுக்கி அமைக்கப்பட்ட கனமான மரக் கதவுகள் நுழைவாசலுக்கு பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்தன. வீடுகள் அழகாக வரிசையாக கட்டப்பட்டிருந்தன. குறுகலான தெருக்களின் வழியாக குளிர்ந்த கடல்காற்று உள்ளே வந்து படுபயங்கரமாக இருந்த உஷ்ணத்தைத் தணிப்பதற்கு ஏதுவாக அவை வடிவமைக்கப்பட்டிருந்தன.

செல்வந்தர்களின் வீடுகள் பெரியதாகவும் விசாலமாகவும் இருந்தன. குளியல் அறைகளில் பழங்காலத்திய பிளம்மிங் சிஸ்டத்தின் மூலமாக வந்த சுத்தமான தண்ணீர் இருந்தது. கழிவு அகற்றுவதற்கான அமைப்பும் அதேவிதமாக பிரமிக்க வைத்தது, ஏனென்றால் அந்தச் சமயத்தில் பல ஐரோப்பிய நாடுகளில்கூட அது அவ்வளவு உயர்தரமாக இருக்கவில்லை. கல்லில் வெட்டி அமைக்கப்பட்ட பெரிய பைப்புகள் சமுத்திரம் இருக்கும் பக்கம் சாய்வாகவும், மண்ணில் ஆழமாக தோண்டப்பட்டிருந்த பள்ளங்களுக்குச் செல்லும்படியும், சுத்தமான தண்ணீர் இருக்கும் இடங்களிலிருந்து வெகு தொலைவிலும் அமைக்கப்பட்டிருந்தன. வீடுகளுக்கு சுத்தமான தண்ணீர் சப்ளைசெய்த கல் தொட்டிகளில் சிறிய மீன்கள் இருந்தன, இவை லார்வா பருவத்திலிருக்கும் கொசுக்களைத் தின்று பூச்சிகளின் எண்ணிக்கையை குறைத்தன.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பார்த்தால், சமுத்திர பயணிகளுக்கு தந்தம், எண்ணெய், விதைகள், விலங்கின் தோல், ஆமை ஓடு, நீர்யானைப் பல், அடிமைகள் என்று எல்லாவற்றையும் பெருமளவில் லாமு சப்ளை செய்துகொண்டிருந்தது. ஆனால் காலப்போக்கில் அதன் செழுமை குறைய ஆரம்பித்தது. கொள்ளை நோயினாலும், எதிரிகள் சூறையாடியதாலும், அடிமை வியாபாரம் கட்டுப்படுத்தப்பட்டதாலும் லாமுவின் பொருளாதார முக்கியத்துவம் குறைந்துபோனது.

கடந்த காலத்துக்குள் காலடி வைத்தல்

லாமுவின் துறைமுகத்துக்கு இன்று கடற்பயணம் செய்வது வரலாற்றில் பின்நோக்கிச் செல்வதுபோல இருக்கிறது. இங்கு அகலமான நீல நிற இந்து மகா சமுத்திரத்தின் பரப்பிலிருந்து காற்று ஒரே சீராக அடிக்கிறது. மென்மையான பச்சை கலந்த நீல நிறத்தில் அலைகள் வெண்மையான மணலுள்ள கடற்கரைமீது வந்து மோதுகின்றன. பழங்கால டிசைன் மரக்கலங்கள் கடற்கரையோரமாக ஊர்ந்து செல்கின்றன, முக்கோண வடிவ வெள்ளை நிற கப்பல்பாய்கள் பட்டாம்பூச்சியின் விரிந்த இறகுகள் போல காட்சியளிக்கின்றன. மீன், பழம், தேங்காய், மாடுகள், கோழிகள், பயணிகள் எல்லாவற்றையும் ஏற்றிக்கொண்டு அவை லாமு துறைமுகம் நோக்கிச் செல்கின்றன.

மரக்கலங்களிலிருந்து சரக்கை இறக்கி வைக்கும் ஆட்களுக்கு உஷ்ணமான காற்றில் ஆடிக்கொண்டிருக்கும் பனைமரங்கள் கொஞ்சம் நிழல்தருகின்றன. சந்தையில் பண்டமாற்று செய்யும் ஆட்களின் கூச்சல் கேட்கிறது. இந்த வியாபாரிகள் தங்கம், தந்தம் அல்லது அடிமைகளை வாங்கவில்லை. இவர்கள் வாழைப்பழம், தேங்காய், மீன், கூடைகள் ஆகியவற்றை வாங்குகிறார்கள்.

பெரிய மாமரத்தின் நிழலில் அமர்ந்துகொண்டு ஆண்கள் தாழையின் நாரிழையிலிருந்து எடுக்கப்பட்ட நீண்ட கயிறுகளை வைத்து தங்கள் மரக்கலங்களை செலுத்தும் பாய்களை செப்பனிடுகிறார்கள். தெருக்கள் குறுகலாக இருக்கின்றன, எல்லா திசைகளிலிருந்தும் ஆட்கள் வருகிறார்கள். நீளமாக தழைய தழைய வெள்ளை அங்கிகளை உடுத்திய வியாபாரிகள், உள்ளே வந்து எங்களிடமுள்ள பொருட்களை வந்து பாருங்கள் என்று கூவிக்கொண்டே இருக்கின்றனர். சாக்குகளில் தானியக் குவியலை ஏற்றிச்செல்லும் கட்டை வண்டி ஒன்றை இழுக்க பாடுபடும் ஒரு கழுதை மக்கள் கூட்டத்தின் நடுவில் புகுந்து செல்கிறது. இத்தீவில் போக்குவரத்துக்கு மோட்டார் வாகனங்கள் எதுவும் இல்லை என்பதால் இத்தீவு மக்கள், தீவு முழுவதிலும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு நடந்து செல்கிறார்கள். படகில் மாத்திரமே தீவுக்குச் செல்ல முடியும்.

நண்பகலில் சூரியன் உச்சிக்கு போகும்போது நேரம் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிடுவது போல இருக்கிறது. தாங்க முடியாத உஷ்ணம், வெகு சிலரே நடமாடுவதைக் காண முடிகிறது, கழுதைகள்கூட ஒரே இடத்தில் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு நிற்கின்றன, அவை உஷ்ணம் குறைவதற்கு காத்திருக்கின்றன.

சூரியன் இறங்க ஆரம்பிக்கும்போது உஷ்ணம் குறைந்துவிடுகிறது, தூங்கிக்கொண்டிருக்கும் தீவு விழித்துக்கொள்கிறது. செதுக்கு வேலைப்பாடுமிக்க கனமான கதவுகளைத் திறந்து வியாபாரிகள் வியாபாரத்தை தொடர்கின்றனர், இவர்கள் கடைகளை இரவு வெகு நேரம் திறந்து வைத்திருக்கிறார்கள். பெண்கள் தங்கள் சிறிய குழந்தைகளைக் குளிப்பாட்டி அவர்களுடைய மேனி மின்னும் வரையாக தேங்காய் எண்ணெய் தேய்க்கின்றனர். தென்னை ஓலையில் பின்னப்பட்ட பாய்களில் அமர்ந்து பெண்கள் உணவு சமைக்கின்றனர். இங்கே இன்னும் இவர்கள் விறகடுப்பைத்தான் பயன்படுத்துகின்றனர், நறுமண பொருட்களை சேர்த்து மீன் உணவையும், தேங்காய் பாலில் அரிசியையும் சுவையாக சமைக்கின்றனர். மக்கள் நட்போடு பழகுகிறார்கள், தாராளமாக உபசரிக்கிறார்கள், வாழ்க்கையை எளிதாக எடுத்துக்கொள்கிறார்கள்.

லாமு முன்னாளைய சிறப்பை இழந்துவிட்டபோதிலும் 20-ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாரம்பரியமான ஆப்பிரிக்க கலாச்சாரம் இன்னும் அங்கே செழித்தோங்குகிறது. அனலான வெப்ப மண்டல சூரியனுக்குக் கீழே வாழ்க்கை அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தது போலவே ஓடிக்கொண்டிருக்கிறது. இங்கே செல்லும் ஒருவர் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் ஒரே சமயத்தில் காண்கிறார். ஆம் கடந்துபோன யுகத்தில் இன்னும் எஞ்சியிருக்கும் பெருமை, காலத்தால் மாறிவிடாத லாமுவுக்கு உண்டு.

[பக்கம் -ன் பெட்டி/படம்16, 17]

லாமுவுக்கு எங்கள் பயணம்

சமீபத்தில் நாங்கள் ஒரு குழுவாக சேர்ந்து லாமுவுக்குச் சென்றோம், ஆனால் பொருட்களை வாங்கவோ விற்கவோ நாங்கள் அங்கே போகவில்லை. எங்களுடைய கிறிஸ்தவ சகோதர சகோதரிகள், யெகோவாவின் சாட்சிகளை சந்திப்பதற்காக சென்றோம். கரடுமுரடான கென்யா கரையோரத்திற்கு மேலே எங்களுடைய இலேசான விமானம் வடக்கு நோக்கி பறந்தது. தூரத்தில் கீழே செழிப்பான வெப்பமண்டல காட்டின் விளிம்பில் வெள்ளை ரிப்பன் போல காட்சியளித்த மணலின்மீது மென்மையாக அலைகள் மோதின. திடீரென்று பார்க்கும்போது லாமு தீவுகள் நீலமும் பச்சையும் கலந்த சமுத்திரத்தில் மணிகற்களைப் போல ஜொலிப்பது தெரிந்தது. பெரிய ஆப்பிரிக்க கழுகை போல நாங்கள் தீவுகளைச் சுற்றி வட்டமிட்டு கீழே இறங்கினோம். முக்கிய தீவில் இருந்த ரன்வேயில் விமானத்தை இறக்கினோம். விமானத்தைவிட்டு நாங்கள் வெளியே வந்து தண்ணீரில் நடந்து லாமுவுக்குச் செல்ல ஒரு மரப்படகில் ஏறினோம்.

அது பிரகாசமான ஒரு நாள், புத்துணர்ச்சி அளித்த கடல்காற்று ரம்மியமாக வீசிக்கொண்டிருந்தது. தீவுக்கு பக்கத்தில் வந்தபோது தோணித்துறையில் ஆட்கள் நடமாட்டம் அதிகமிருந்தது. பலசாலியாக இருந்த ஆண்கள் கனமான சாமான்களைத் தூக்கிச் சென்றனர், பெண்கள் சாமான்களை பாலன்ஸ் செய்து தங்கள் தலையில் சுமந்து சென்றனர். நாங்கள் எங்கள் பெட்டிகளை எல்லாம் தூக்கிக்கொண்டு மக்கள் கூட்டத்தைக் கடந்து ஒரு பனை மரத்தின் நிழலில் நின்றுகொண்டோம். ஒரு சில நிமிடங்களில் எங்கள் கிறிஸ்தவ சகோதரர்கள் நாங்கள் இருக்கும் இடத்தைக் கண்டுப்பிடித்து எங்களை இன்முகத்துடன் வரவேற்று அவர்களுடைய வீட்டுக்கு எங்களை அழைத்துச் சென்றனர்.

கடலுக்கு அருகிலிருந்த இடத்தில் சகோதர சகோதரிகளை சந்திப்பதற்காக நாங்கள் அதிகாலமே எழுந்துகொண்டோம். சபை கூட்டங்களுக்குச் செல்ல நாங்கள் வெகு தூரம் பிரயாணம் செய்ய வேண்டும், அதற்கு பல மணிநேரம் எடுக்கும். குடிப்பதற்கு தண்ணீர், தலைக்குத் தொப்பி, நடப்பதற்கு உகந்த காலணிகள் ஆகியவற்றோடு புறப்பட்டு விட்டோம். கூட்டங்கள் நடைபெறவிருந்த இடத்துக்கு எங்கள் பயணம் ஆரம்பமானது.

சகோதரர்கள் படகில் இருந்த பயணிகளிடம் சாட்சிகொடுக்க சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டார்கள். படகைவிட்டு இறங்குவதற்குள் நாங்கள் பலரிடம் பைபிளைப் பற்றி பேசி பல பத்திரிகைகளையும் அளித்துவிட்டோம். ஆள் நடமாட்டம் இல்லாத சாலை புழுக்கமாகவும் புழுதியாகவும் இருந்தது. ஆள் அரவமில்லாத புதர்கள் வழியாக நடந்துசெல்லும்போது கவனமாக இருக்கும்படி எங்களிடம் சொன்னார்கள். ஏனெனில் அங்கு காட்டு விலங்குகள் இருந்தன. சில சமயங்களில் யானைகளும் சாலையைக் கடக்குமாம். நாங்கள் சென்றடைய வேண்டிய இடத்துக்கு மெதுவாக நடந்து செல்லுகையில் சகோதரர்கள் முகத்தில் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும்தான் காண முடிந்தது.

சீக்கிரத்தில், ஒரு சிறிய கிராமம் தென்பட்டது, அங்கே தொலைவில் இருந்த மற்ற இடங்களிலிருந்து நடந்து வந்திருந்த சபையிலுள்ள மற்றவர்களைச் சந்தித்தோம். நீண்ட தூர பிரயாணத்தின் காரணமாக ஒரே நாளில் நான்கு கூட்டங்களும் நடத்தப்பட்டன.

அரை குறையாக கட்டி முடிக்கப்பட்ட ஒரு பள்ளியில் கூட்டங்கள் நடைபெற்றன, கதவுகளும் ஜன்னல்களும்கூட இன்னும் அதில் பொருத்தப்படவில்லை. 15 பேரும் குறுகலான மர பெஞ்சுகளில் ஒரு வகுப்பறையில் அமர்ந்து பைபிள் அடிப்படையில் அமைந்த சிறப்பான ஒரு நிகழ்ச்சியை அனுபவித்து மகிழ்ந்தோம், அது மிகவும் உற்சாகமளிப்பதாகவும் படிப்பினை அளிப்பதாகவும் இருந்தது. எங்களுக்கு மேலே தகர கூரையிலிருந்து வந்த கடுமையான உஷ்ணத்தை யாரும் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. ஒன்றாக சேர்ந்திருப்பதே அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. நான்கு மணிநேர கூட்டம் முடிந்தபிறகு, நாங்கள் விடைபெற்று வித்தியாசமான திசைகளில் பிரிந்து சென்றோம். லாமுவுக்கு நாங்கள் திரும்பியபோது சூரியன் அடிவானத்தில் மறைந்துகொண்டிருந்தது.

அன்று மாலை, இரவு நேர குளிர்ச்சியில் லாமுவில் வாழ்ந்துவந்த சாட்சி குடும்பங்களோடு நாங்கள் எளிமையான உணவு உண்டோம். அதைத் தொடர்ந்து வந்த நாட்களில் நாங்கள் பிரசங்க வேலையில் அவர்களோடு சேர்ந்துகொண்டோம். பைபிள் சத்தியத்துக்காக பசியாயிருந்த ஆட்களைத் தேடிக்கொண்டு, வளைந்து வளைந்து சென்ற குறுகலான தெருக்களில் நடந்துசென்றோம். சொற்ப எண்ணிக்கையில் இருந்த சகோதர சகோதரிகளின் வைராக்கியத்தையும் தைரியத்தையும் பார்க்க எங்களுக்கு உற்சாகமாக இருந்தது.

கடைசியாக நாங்கள் புறப்பட வேண்டிய நாள் வந்தது. கப்பல் துறைமுகத்துக்கு சகோதரர்கள் வந்தார்கள், நாங்கள் மிகவும் சோகத்தோடு அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டோம். நாங்கள் வந்தது அவர்களுக்கு உற்சாகமாக இருந்ததாக அவர்கள் சொன்னார்கள். அவர்கள் எங்களுக்கு எவ்வளவு உற்சாகமாக இருந்திருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியுமா என்று நாங்கள் யோசித்துக்கொண்டோம். முக்கிய தீவுக்கு திரும்பி வந்து விமானத்தில் ஏறினோம். எங்களுடைய சிறிய விமானம் மேலே உயர்ந்து வானில் இன்னும் மேல் நோக்கிச் சென்றபோது நாங்கள் அங்கிருந்து கண்ணுக்கினிய லாமு தீவை கீழே பார்த்தோம். அங்கு வசிக்கும் சகோதரர்களின் பலமான விசுவாசம், கூட்டங்களுக்குச் செல்ல அவர்கள் செய்யும் நீண்ட பயணங்கள், சத்தியத்திற்கான அவர்கள் வைராக்கியம், அன்பு ஆகியவை எங்கள் மனத்திரையில் ஓடின. சங்கீதம் 97:1-லுள்ள தீர்க்கதரிசனம் நீண்ட காலத்துக்கு முன்பே பதிவுசெய்யப்பட்டது: ‘கர்த்தர் [“யெகோவா,” NW] ராஜரிகம்பண்ணுகிறார்; பூமி பூரிப்பாகி, திரளான தீவுகள் மகிழக்கடவது.’ ஆம், எங்கோ வெகு தொலைவிலிருக்கும் லாமு தீவு மக்களுக்கும்கூட கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ் எதிர்காலத்தில் பரதீஸில் வாழும் மகத்தான நம்பிக்கையில் களிகூருவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.​—⁠அளிக்கப்பட்டது.

[பக்கம் 15-ன் தேசப்படங்கள்/படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

ஆப்பிரிக்கா

கென்யா

லாமு

[பக்கம் 15-ன் படத்திற்கான நன்றி]

© Alice Garrard

[பக்கம் 16-ன் படத்திற்கான நன்றி]

© Alice Garrard