Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இன்று ஒழுக்கநெறிகளின் நிலை என்ன?

இன்று ஒழுக்கநெறிகளின் நிலை என்ன?

இன்று ஒழுக்கநெறிகளின் நிலை என்ன?

ஏப்ரல் 1999-ல் ஒரு நாள். அ.ஐ.மா., கொலராடோ, டென்வருக்கு அருகிலுள்ள லிட்டில்டன் பட்டணம். காலை நேர அமைதி கலைக்கப்பட்டது. கருப்பு ரெயின் கோட் அணிந்த இருவர், உள்ளூர் உயர்நிலைப் பள்ளிக்குள் புயலென நுழைந்தனர். மாணவர்களையும் ஆசிரியர்களையும் பார்த்து வெறித்தனமாக சுட ஆரம்பித்தனர். குண்டுகளையும் எறிந்தனர். மாணவர்களில் 12 பேரும் ஓர் ஆசிரியரும் இறந்தனர். மேலும், 20-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த திடீர் தாக்குதலை செய்தவர்கள் கடைசியில் தங்கள் உயிரையும் மாய்த்துக்கொண்டார்கள். அவர்கள் இருவருமே 17, 18 வயதே நிரம்பியவர்கள். சில பிரிவினர்மீது இவர்கள் மிகுந்த மனக்குரோதம் கொண்டிருந்தனர்.

ருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், மேலே குறிப்பிட்டுள்ள உதாரணம் எங்கோ ஓர் இடத்தில் கேள்விப்படும் சம்பவம் அல்ல. உலகம் முழுவதும் இப்படிப்பட்ட சம்பவங்களை செய்தித்தாள்கள், ரேடியோ, டெலிவிஷன் மூலம் கேள்விப்படுகிறோம். 1997-ன்போது, சுமார் 11,000 ஆயுதந்தாங்கிய வன்முறை சம்பவங்கள் அமெரிக்கப் பள்ளிகளில் நடந்தனவென கல்வி புள்ளியியலுக்கான தேசிய மையம் அறிக்கையிடுகிறது. ஜெர்மனியிலுள்ள ஹாம்பர்க்கில், 1997-ன்போது, வன்முறை செயல்கள் 10 சதவீதம் அதிகரித்துள்ளன. குற்றவாளிகளில் 44 சதவீதத்தினர் இருபத்தோரு வயதிற்குட்பட்ட இளைஞர்களே.

அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் மத்தியில் ஊழல் சர்வசாதாரணம். 1997-ன்போது, யூரோப்பியன் யூனியனில் 140 கோடி டாலர் ஊழல் கணக்கிடப்பட்டுள்ளதாக யூரோப்பியன் யூனியன் கமிஷனர் அனிடா க்ரேடீன் ஓர் அறிக்கையில் தெரிவிக்கிறார். போக்குவரத்து விதிகளை மீறியதற்காக விதிக்கப்பட்ட அபராதத்தை கட்டாமல் ஏய்ப்பது முதல் விவசாயத்திற்காக அல்லது மற்றவற்றிற்காக வழங்கப்படும் யூரோப்பியன் யூனியனின் மானியங்களை மோசடி செய்து பெறுவது வரை அனைத்தும் இதில் அடங்கும். கருப்புப்பணத்தை பெருமளவில் வெள்ளையாக்குவது, ஆயுதங்களையும் போதைப்பொருட்களையும் கடத்துவது போன்றவை அனுமதிக்கப்பட்டு இருக்கின்றன. குற்றச்செயல்களில் ஈடுபடும் நிறுவனங்கள், யூரோப்பியன் யூனியன் ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்து அவர்களுடைய வாயை கட்டிப்போட்டிருக்கின்றனர். இதன் காரணமாக, யூரோப்பியன் யூனியன் கமிஷனில் இருந்த அனைத்து அதிகாரிகளும் 1999-ல் ராஜினாமா செய்தனர்.

எனினும், சமுதாயத்தின் மேல்மட்டத்தில் உள்ளவர்கள் மட்டும் ஏமாற்றுவதில்லை. சட்டவிரோதமான வேலையாட்களைப் பற்றிய யூரோப்பியன் யூனியன் கமிஷனின் அறிக்கை ஒன்று இதை நிரூபிக்கிறது. யூரோப்பியன் யூனியனின் மொத்த தேசிய உற்பத்தியில் 16 சதவீதம், பதிவு செய்யப்படாத வியாபாரங்களில் இருந்து வரும் வருமானமாகும். இவற்றிற்கு வரிகளும் செலுத்தப்படுவதில்லை. ரஷ்யாவில், மொத்த வருமானத்தில் 50 சதவீதம் சட்டவிரோதமானவை என அறிக்கையிடப்படுகிறது. மேலும், ஐக்கிய மாகாணங்களில், வேலையாட்கள் பணத்தை அல்லது பொருட்களை திருடுவதால் அமெரிக்க கம்பெனிகளுக்கு ஏற்படும் நஷ்டம் 40,000 கோடி டாலருக்கும் அதிகம் என சான்றளிக்கப்பட்ட மோசடி பரிசோதகர்களின் சங்கம் குறிப்பிட்டது.

பிள்ளைகளைக் குறிவைக்கும் காமக்கொடூரர்கள் (pedophiles) பலர் இன்டர்நெட்டை உபயோகிக்கின்றனர். சட்டவிரோதமான பாலுறவு நடவடிக்கைகளில் பிள்ளைகளையும் மைனர்களையும் கவர்ந்திழுக்க இவர்கள் முயலுகின்றனர். இன்டர்நெட்டில் வரும் குழந்தைப் பாலியல் காட்சிகள் அதிகரித்து வருகின்றன. இது கவலைக்குரிய விஷயம் என ஸ்வீடனின் குழந்தைகளைக் காப்பீர் அமைப்பின் பிரதிநிதி தெரிவிக்கிறார். 1997-ல் நார்வேயில், இன்டர்நெட்டில் குழந்தைப் பாலியல் காட்சிகளைக் காட்டும் வெப் சைட்டுகள் இருப்பதைப் பற்றி சுமார் 1,883 துப்புகளை இந்த அமைப்பு பெற்றது. அடுத்த வருடம், இந்த துப்புகள் ஏறக்குறைய 5,000 ஆக மளமளவென உயர்ந்தன. இந்த அருவருக்கத்தக்க செயல்களை கட்டுப்படுத்த முடியாத அரசாங்கங்களும் அல்லது உள்ளூர் அதிகாரிகளும் உள்ள நாடுகளில் இவ்விதமான படங்கள் தயாரிக்கப்படுகின்றன.

கடந்த காலங்களில் மேம்பட்டதாக இருந்ததா?

இன்று உலகம் முழுவதிலும் இருக்கும் ஒழுக்கநெறிகளின் தரங்கெட்ட நிலையை பார்க்கும் அநேகர் அதிர்ச்சியடைகின்றனர். தங்களுடைய பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிமார் காலத்தில் இருந்த சமுதாய ஒற்றுமையுணர்வை அவர்கள் மிகவும் வாஞ்சையோடு நினைத்துப் பார்க்கின்றனர். அந்த நினைவுகளில் மூழ்கி திளைக்கின்றனர். அப்போது மக்கள் நடத்திய அமைதியான வாழ்க்கையைப் பற்றி அவர்கள் கேள்விப்பட்டிருக்கலாம். சமுதாயத்தின் எல்லா நிலைகளிலும் நேர்மை, ஒழுக்கத்தின் மற்ற அம்சங்கள் உயர்வாக மதிக்கப்பட்டன என்பதைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கலாம். அப்போது மக்கள் கடின உழைப்பாளிகளாய் இருந்தனர் என்றும் ஒருவருக்கொருவர் உதவிக்கரம் நீட்டுபவர்களாய் இருந்தனர் என்றும் வயதானவர்கள் சொல்லியிருக்கலாம். அந்தக் காலங்களில், குடும்பப் பிணைப்புகள் பலமாய் இருந்ததென்றும், இளைஞர் எந்தளவு பாதுகாப்பாய் உணர்ந்தனரென்றும், பெற்றோருடைய பண்ணையிலோ அல்லது ஒர்க்‍ஷாப்பிலோ உதவி செய்கிறவர்களாய் இருந்தனரென்றும் அவர்கள் சொல்லியிருக்கலாம்.

இது பின்வரும் இந்தக் கேள்விகளை எழுப்புகின்றன: கடந்த காலங்களில் மக்களின் ஒழுக்கநெறிகள் உண்மையிலேயே சிறந்ததாக இருந்ததா? அல்லது கடந்த காலத்தைப் பற்றிய ஏக்கம் நம் நினைவுகளை திரித்துவிடுகின்றனவா? சரித்திராசிரியர்களும் சமூகவியலாளர்களும் இந்தக் கேள்விகளுக்கு எவ்விதம் பதிலளிக்கிறார்கள் என்பதை ஆராய்வோமாக!

[பக்கம் -ன் பெட்டி3]

ஒழுக்கநெறிகள்—விளக்கம்

“ஒழுக்கநெறிகள்” என்ற பதம், மனித நடக்கைகளில் சரியெது தவறெது என்பதற்கான நியமங்கள் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. நேர்மை, உண்மைத்தன்மை, பாலுறவு மற்றும் மற்ற நடத்தைகளில் உயர்ந்த தராதரங்கள் ஆகியவையும் இதில் அடங்கும்.