Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயேசுவை வணங்குவது சரியா?

இயேசுவை வணங்குவது சரியா?

பைபிளின் கருத்து

இயேசுவை வணங்குவது சரியா?

இயேசு கிறிஸ்துவே சர்வவல்லமையுடைய கடவுள் என்று நினைத்து கிறிஸ்தவமண்டலத்திலுள்ள அநேகர் அவரை நூற்றாண்டுகளாகவே வணங்கி வந்திருக்கின்றனர். ஆனால் இயேசுவோ, யெகோவா தேவனுக்கு கவனத்தை திருப்பி அவரை மாத்திரமே வணங்க வேண்டும் என்று சொன்னார். உதாரணமாக, பிசாசு தன்னை வணங்கும்படி அவரை தூண்டியபோது இயேசு இவ்வாறு சொன்னார்: “உன் தேவனாகிய கர்த்தரைப் [“யெகோவாவை,” NW] பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக.” (மத்தேயு 4:10) பிற்பாடு இயேசு தம்முடைய சீஷர்களுக்கு இவ்வாறு அறிவரை கூறினார்: “பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.”—மத்தேயு 23:9.

ஒவ்வொருவரும் கடவுளுக்கு செலுத்த வேண்டிய வணக்க முறையைப் பற்றி சமாரிய பெண்ணிடம் இயேசு விவரித்தார். அவர்களுடைய வணக்கம் ஆவியுடனும் உண்மையுடனும் இருக்க வேண்டும் என்று சொன்னார். உண்மையில், ‘தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாய் இருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.’ (யோவான் 4:23, 24) ஆம், பயபக்தியோடுகூடிய வணக்கத்தை கடவுளுக்கு மாத்திரமே செலுத்த வேண்டும். வணக்கத்தை வேறு யாருக்கோ அல்லது வேறு எதற்கோ செலுத்துவது ஒரு வகை விக்கிரகாராதனை; அதை எபிரெய, கிரேக்க வேதாகமம் ஆகிய இரண்டுமே கண்டனம் செய்கின்றன.—யாத்திராகமம் 20:4, 5; கலாத்தியர் 5:19, 20.

‘ஆனால் நாம் இயேசுவையும் வழிபட வேண்டும் என பைபிள் சொல்கிறது அல்லவா? “தேவதூதர் யாவரும் அவரைத் [இயேசுவை] தொழுது கொள்ளக்கடவர்கள் [“வணங்கக்கடவர்கள்,” கிங் ஜேம்ஸ் வர்ஷன்]” என்று எபிரெயர் 1:6-ல் பவுல் சொல்கிறார் அல்லவா?’ என சிலர் வாதாடலாம். விக்கிரகாராதனையைப் பற்றி பைபிள் சொல்வதன் அடிப்படையில் இந்த வசனத்தை நாம் எவ்வாறு புரிந்துகொள்ளலாம்?

வழிபாட்டை பற்றி பைபிள் சொல்வது

முதலாவதாக, தொழுதுகொள்ளுதல் என்று பவுல் சொன்னபோது அவர் எதை அர்த்தப்படுத்தினார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். புராஸ்கிநியோ (pro·sky·neʹo) என்ற கிரேக்க வார்த்தையை அவர் பயன்படுத்தினார். சொல்லர்த்தமாக இந்த வார்த்தை, ‘மதிப்பு அல்லது மரியாதையை தெரிவிப்பதற்கு அடையாளமாக ஒருவருடைய கையை முத்தமிடுவதை’ அர்த்தப்படுத்துகிறது என எங்கர் பைபிள் டிக்ஷ்னரி சொல்கிறது. இந்த வார்த்தை “கடவுளுக்கு அல்லது மனிதனுக்கு காண்பிக்கப்படும் பயபக்தியை குறிக்கிறது” என டபிள்யூ. ஈ. வைன் என்பவர் எழுதிய ஏன் எக்ஸ்பாஸிட்டரி டிக்ஷ்னரி ஆஃப் நியூ டெஸ்டமென்ட் உவர்ட்ஸ் சொல்கிறது. பைபிள் காலங்களில் புராஸ்கிநியோ என்ற வார்த்தை உயர்ந்த அந்தஸ்திலுள்ள ஒருவருக்கு முன்னால் சொல்லர்த்தமாகவே தலைவணங்குவதை இது அர்த்தப்படுத்தியது.

தன்னுடைய எஜமானருக்கு பெருந்தொகையை செலுத்த முடியாத அடிமையைப் பற்றி இயேசு சொன்ன உவமையை கவனியுங்கள். இந்த கிரேக்க வார்த்தையின் ஒரு வடிவம் இந்த உவமையில் வருகிறது, கிங் ஜேம்ஸ் வர்ஷன் தமிழ் பைபிள் அதை இவ்வாறு மொழிபெயர்க்கிறது: “அப்பொழுது, அந்த ஊழியக்காரன் தாழ விழுந்து, வணங்கி: ஆண்டவனே! என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன்.” (மத்தேயு 18:26) (நேரெழுத்து எங்களுடையது.) இந்த மனிதன் விக்கிரகாராதனைக்குரிய செயலையா செய்துகொண்டிருந்தான்? நிச்சயமாகவே இல்லை! தன்னுடைய எஜமானரும் அதிகாரியுமாக இருந்த அந்த ராஜாவுக்குரிய மதிப்பு அல்லது மரியாதையைத்தான் செலுத்திக்கொண்டிருந்தான்.

இப்படிப்பட்ட வணக்க செயல்கள், அல்லது மரியாதைக்குரிய செயல்கள், பைபிள் காலங்களில் கீழை நாடுகளில் மிகவும் சர்வசாதாரணம். யாக்கோபு தன்னுடைய சகோதரனாகிய ஏசாவை சந்திக்கும்போது ஏழு தடவை தரைமட்டும் குனிந்து தலைவணங்கினார். (ஆதியாகமம் 33:3) எகிப்தின் அரண்மனையில் யோசேப்புக்கு மரியாதை செலுத்தும்போது, அவருடைய சகோதரர்கள் அவருக்கு முன்பாக முகங்குப்புறத் தரையிலே விழுந்து வணங்கினார்கள், அல்லது மரியாதை செலுத்தினார்கள். (ஆதியாகமம் 42:6) இவற்றை கவனிக்கையில், சிறுபிள்ளையாகிய இயேசுவை “யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர்” என வானசாஸ்திரிகள் உணர்ந்துகொண்டபோது என்ன நடந்தது என்பதை நாம் நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது. கிங் ஜேம்ஸ் வர்ஷனில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளபடி, அந்த விவரப்பதிவு நமக்கு சொல்கிறது: “தாழவிழுந்து அவரை வணங்கினார்கள் [புராஸ்கிநியோ].மத்தேயு 2:2, 11.

அப்படியானால், புராஸ்கிநியோ என்ற வார்த்தை சில பைபிள் மொழிபெயர்ப்புகளில் “வணங்கினார்கள்” என மொழிபெயர்த்திருந்தால், அது யெகோவாவுக்கு மாத்திரமே செலுத்த வேண்டிய வழிபாட்டை குறிப்பதில்லை. மற்றொரு நபருக்கு காண்பிக்கப்படும் மரியாதையையும் கனத்தையும் இது குறிக்கக்கூடும். தவறான புரிந்துகொள்ளுதலை தவிர்ப்பதற்காக, சில பைபிள் மொழிபெயர்ப்புகள் புராஸ்கிநியோ என்ற வார்த்தையை எபிரெயர் 1:6-ல் இவ்வாறு மொழிபெயர்க்கின்றன: “மரியாதை செலுத்தக்கடவர்கள்” (நியூ ஜெரூசலம் பைபிள்), “கனம்பண்ணக்கடவர்கள்” (த கம்ப்ளீட் பைபிள் இன் மாடர்ன் இங்லிஷ்), “சாஷ்டாங்கமாக விழுந்து பணிந்துகொள்ளக்கடவர்கள்” (டொன்டியத் சென்சுரி நியூ டெஸ்டமென்ட்), அல்லது “அவருக்கு முன்பு தலைவணங்கக்கடவர்கள்” (நியூ உவர்ல்டு டிரான்ஸ்லேஷன்).

இயேசுவுக்கு தலைவணங்குவது சரியே

இயேசுவுக்கு தலைவணங்குவது சரியா? அவர் தகுதியானவரா? நிச்சயமாகவே தகுதியானவர்! எபிரெயருக்கு எழுதிய கடிதத்தில், அப்போஸ்தலன் பவுல் அதை விவரிக்கிறார்: “சர்வத்துக்கும் சுதந்தரவாளியா[கிய இயேசு], . . . உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார்.” (எபிரெயர் 1:2-4) எனவே, “இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கை பண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.”—பிலிப்பியர் 2:10, 11.

இந்த உயர்ந்த ஸ்தானத்தையும் செயற்படுத்தும் மிகுந்த அதிகாரத்தையும் விரைவில் இயேசு பயன்படுத்தி, இந்தப் பூமியை பூங்காவனம் போன்ற பரதீஸாக மாற்றுவார். கடவுளுடைய வழிநடத்துதலில், மேலும் இயேசுவின் கிரயபலியினால், தம்முடைய நீதியுள்ள அரசாட்சிக்கு கீழ்ப்படிகிறவர்களுடைய நன்மைக்காக இந்த உலகிலுள்ள எல்லா வருத்தத்தையும் வேதனையையும் துன்பத்தையும் நீக்குவார். ஆகவே, அவர் நம்முடைய மரியாதையையும் கனத்தையும் பெறுவதற்குத் தகுதியானவர் அல்லவா?—சங்கீதம் 2:12; ஏசாயா 9:6; லூக்கா 23:43; வெளிப்படுத்துதல் 21:3, 4.

“தனிப்பட்ட பக்தியை கேட்கிற கடவுள்”

ஆனால், நம்முடைய வழிபாடு—அதாவது, மத சம்பந்தமான வணக்கம் மற்றும் பக்தி—கடவுளுக்கு மாத்திரமே செலுத்தப்பட வேண்டும் என பைபிள் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. “தனிப்பட்ட பக்தியை கேட்கிற கடவுள்” என மோசே அவரை விவரிக்கிறார். “வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்கள்” என பைபிள் புத்திமதி கூறுகிறது.—உபாகமம் 4:24, NW; வெளிப்படுத்துதல் 14:7.

மெய் வணக்கத்தில் இயேசு முக்கிய பாகத்தை வகிக்கிறார், மதிப்பையும் மரியாதையையும் பெற்றுக்கொள்வதற்கு தகுதியானவராக இருக்கிறார். (2 கொரிந்தியர் 1:20, 21; 1 தீமோத்தேயு 2:5) நாம் யெகோவா தேவனை அணுகுவதற்கு அவரே வழியாக இருக்கிறார். (யோவான் 14:6) ஆகவே, மெய் கிறிஸ்தவர்கள் சர்வவல்லவராகிய யெகோவா தேவனை மாத்திரமே வழிபடுகிறார்கள்.