Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

சின்னத்திரை ஆபத்து

இரண்டு வயதிற்கும் உட்பட்ட குழந்தைகளை டிவி பார்க்க அனுமதிக்க வேண்டாம் என அமெரிக்காவின் குழந்தைகள் மருத்துவ கழகம் பரிந்துரை செய்வதாக த டோரன்டோ ஸ்டார் அறிவிக்கிறது. மூளை வளர்ச்சியின் ஆரம்ப காலத்தின்போது அல்லது தவழும் வயதிலுள்ள குழந்தைகளுக்கு, தங்கள் பெற்றோர்களோடும் மற்றவர்களோடும் நேரடி தொடர்பு இருக்க வேண்டும் என ஆராய்ச்சி காண்பிக்கிறது. ஆனால், “சமுதாயத் திறமைகளையும், உணர்ச்சி சம்பந்தப்பட்ட விஷயங்களையும் தன்னுடைய அறிவுத்திறனையும் வளர்த்துக்கொள்ள உதவி செய்யும் இப்படிப்பட்ட தொடர்பை” டிவி கெடுத்துவிடலாம். இது அவர்களுடைய முன்னேற்றத்தை தடை செய்யலாம். இருப்பினும், இதை எல்லா வல்லுநர்களும் ஒத்துக்கொள்வதில்லை. உதாரணமாக, தினமும் பெற்றோருடைய கண்காணிப்பில் அதிகபட்சமாக 30 நிமிடங்களுக்கு தரமான நிகழ்ச்சிகளை பிள்ளைகள் பார்க்க அனுமதிப்பது, அப்பிள்ளைகள் “பெற்றோரால் பயிற்றுவிக்கப்பட ஒரு வாய்ப்பை அளிக்கிறது” என சொல்கிறது கனடாவின் குழந்தைகள் நல அமைப்பு. இருப்பினும், இளம் பிள்ளைகளுடைய படுக்கை அறைகளில் டிவியோ கம்ப்யூட்டரோ இருக்கக்கூடாது என்பதையும், குழந்தைகள் அங்கும் இங்கும் போகாதபடி குழந்தைகளை பேணும் நபராக டிவியை பயன்படுத்தக்கூடாது என்பதையும் இரு அமைப்புகளுமே ஒத்துக்கொள்கின்றன. டிவி பார்ப்பது இளம் பிள்ளைகளுடைய உடல் நலத்தை பாதிக்கக்கூடும் என்பதால் “குழந்தைகள் வெளியே சென்று விளையாடவும், புத்தகங்களை வாசிக்கவும், புதிர் போட்டிகளிலும் மற்ற விளையாட்டுகளிலும் கலந்துகொள்ளவும் உற்சாகப்படுத்தப்படுகின்றனர்.”

வேலையில் வெறுப்பு

சிலர் ஏன் வேலை சமயத்தில் தங்கள் நிதானத்தை இழந்துவிடுகின்றனர் அல்லது கோபாவேசப்படுகின்றனர்? இதற்கான காரணம் வேலையில் எதிர்ப்படும் அழுத்தம் மட்டுமல்ல, வெறுப்பை சகித்துக்கொள்ளாமையும்தான் என்பதாக டோரன்டோவைச் சேர்ந்த மனோதத்துவ அறிஞர் சாம் க்லோரிக் குறிப்பிடுகிறார். “தங்கள் உயிரையே கொடுத்து வேலை செய்வதாகவும் தாங்கள் செய்யும் வேலைக்கு தகுந்த ஊதியம் கொடுக்கப்படுவதில்லை” எனவும் நினைக்கும் சில ஊழியர்களுக்கு இந்நிலை ஏற்படுகிறது என்பதாக அவர் நம்புகிறார் என்று க்ளோப் அண்ட் மெயில் என்ற செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. கோபம் என்பது “மிகவும் தீங்கான உணர்வாகும்,” அது வெகுகாலத்திற்கு தீயாய் எரிந்துகொண்டிருந்தால் வலிப்பு, மாரடைப்பு போன்ற மோசமான விளைவுகள் ஏற்படலாம் என்று க்லோரிக் எச்சரிக்கிறார். ஊழியர்கள் தங்களுக்கு வரும் வெறுப்புணர்வை சகிக்க கற்றுக்கொள்ளவும், முதலாளிகளுடன் உட்கார்ந்து உண்மையில் அவர்களால் எவ்வளவு வேலை செய்ய முடியும் என நிதானமாக கோபப்படாமல் பேசவும் அவர் உற்சாகப்படுத்துகிறார். அதே சமயத்தில் முதலாளிகளும், துவண்டுபோய் கடும் சோர்வுற்றவர்களாக காணப்படும் ஊழியக்காரர்களை கவனத்தில் வைக்கும்படி க்லோரிக் உற்சாகப்படுத்துகிறார். அப்படிப்பட்ட ஊழியர்களுக்கு கூடுதல் உதவி கொடுக்கலாம், அவர்களுடைய அழுத்தத்திலிருந்து கொஞ்சம் விடுவிக்கலாம் அல்லது ஏதாவதொரு நாள் விடுமுறை எடுத்துக்கொள்ளும்படி சொல்லலாம் என அவர் அறிவுறுத்துகிறார்.

பாடல் ஒருவரின் மூடையும் மாற்றும்

உங்களை சந்தோஷமாகவும் ரிலாக்ஸாகவும் உணரவைக்கும் ஒருவகை இரசாயனம் உங்கள் மூளையில் நீங்கள் பாடும்போது வெளியாகிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக ஜெர்மனியின் செய்தித்தாள் ஸ்டுட்கோர்டா நோக்ரிக்டான் அறிவிக்கிறது. மூளையில் ‘உணர்ச்சிக்குரிய அணுக்களை’ பாடல் கவர்ந்திழுக்கிறது என ஆராய்ச்சிகள் காண்பிக்கின்றன. ஆகவே, “பாடல் நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்காக மட்டுமல்ல ஆனால் அவற்றை உருவாக்கவும் உதவுகின்றன” என்கிறது அந்த அறிக்கை. இன்று அநேகர் பாடல் பாடுவதெல்லாம் “பழைய ஃபாஷன்” என்று நினைக்கின்றனர் அல்லது தாங்கள் பாடினால் காக்கை கறைவதுபோல இருக்கும் என நினைத்து, பாடுவது இசைப்பது போன்ற வேலையை எல்லாம் பொழுதுபோக்கு மீடியாக்களிடம் விட்டுவிடுகின்றனர் என சில இசை பயிற்சி ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இருப்பினும், பாடுவதால் அநேக நல்ல பலன்களை அவர்கள்தாமே பெற்றுக்கொள்கின்றனர் என்பதை இந்த ஆராய்ச்சி காண்பிக்கிறது.

பயிர் திருட்டு

ஜெர்மன் கூட்டாட்சியின் பல பகுதிகளில், பயிர் திருட்டு அதிகரித்து வருவதாக விவசாயிகள் புகார் செய்கின்றனர் என அறிவிக்கிறது சீகானா ட்சீடங் என்ற செய்தித்தாள். திருடர்கள் கூடை கூடையாக வெள்ளரிக்காய்களையும், வண்டி நிறைய கீரைகளையும் அள்ளிக்கொண்டு மாயமாகிவிடுகின்றனர். ஒருமுறை, திருடர்கள் 7,000 ஸ்ட்ராபெர்ரி செடிகளை திருடிச் சென்றனர். சிலர் தங்களுடைய மோசமான பொருளாதார நிலையின் காரணமாக இவ்வாறு உணவுகளை திருடுகிறபோதிலும், சிலர் இதை பொழுதுபோக்காக அல்லது தங்கள் விருப்பவேலையாக செய்கின்றனர். திருடப்பட்ட நிலத்திற்கு அருகில் “எல்லா வகை கார்களையும்” பார்ப்பதாக விவசாயிகள் சொல்கின்றனர். இந்நிலங்களுடைய சொந்தக்காரர்களின் வீடுகள் பொதுவாக நிலத்திலிருந்து வெகுதொலைவில் உள்ளதால் திருடர்கள் இன்னும் தைரியமாக செயல்படுகின்றனர். திருடர்கள் உள்ளே வருவதை குறைப்பதற்காக விவசாயிகள் தங்கள் பயிர்களின்மீது உரங்களை போடும்படி ஆலோசனை கொடுக்கிறார் ஒரு அறிவுரையாளர்.

நீண்டகாலம் வாழ . . .

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தால் எடுக்கப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, சர்ச், ஹோட்டல், விளையாட்டு நிகழ்ச்சி, சினிமா போன்ற பொதுவான காரியங்களில் அதிகம் கலந்துகொள்ளும் முதியவர்கள் இவற்றில் குறைவாக கலந்துகொள்பவர்களைவிட சராசரியாக இரண்டரை ஆண்டுகள் அதிகம் உயிர் வாழ்கின்றனர். இந்நிகழ்ச்சிகளின் நிமித்தம் தீவிரமாக வேலை செய்வதால்தான் அவர்கள் ஆரோக்கியமாக இருக்கின்றனர் என வெகுகாலமாக நினைத்து வந்ததாக இந்த ஆய்வை நடத்திய ஹார்வார்ட்டைச் சேர்ந்த தாமஸ் க்லாஸ் சொன்னார். இருப்பினும், அவர் இவ்வாறு தொடர்கிறார், “வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் அர்த்தமுள்ள நோக்கத்துடன் வாழ்வது வாழ்நாட்காலத்தை நீடிக்க செய்யும் என்பதற்கு இதுவரை இல்லாத மிக பலமான சூழ்நிலை ஆதாரத்தை” இந்த ஆய்வு கொடுத்திருக்கிறது. என்ன செய்கிறோம் என்பதை பொருத்தல்ல ஆனால் அதிகத்தை செய்தால் பெரும்பாலும் அனைவருடைய வாழ்க்கையும் நீடிக்கும் என க்லாஸ் குறிப்பிடுகிறார்.

உலகிலேயே பழைமையான கப்பற்சேதம்

பொ.ச.மு. 750-ல் சேதமடைந்து மூழ்கிய இரு ஃபொனோசிய படகுகளை கடலியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் என அறிவிக்கிறது பிரான்ஸ் நாட்டு பத்திரிகை சயன்ஸ் ய அவெனர். முறையே 15, 18 மீட்டர் நீளமுள்ள இப்படகுகள், இஸ்ரேலிய கடற்கரைக்கு அருகில் சுமார் 500 மீட்டர் ஆழத்தில் இருக்கின்றன. கடலில் கண்டுபிடிக்கப்பட்ட படகுகளிலேயே மிகப் பழைமையானவை இவை. இப்படகுகள், தீரு துறைமுகத்திலிருந்து மண்னால் செய்யப்பட்ட ஒயின் ஜாடிகளைச் சுமந்துகொண்டு புறப்பட்டன. இவை எகிப்திற்கு அல்லது வடக்கு ஆப்பிரிக்காவிலுள்ள கார்த்தேஜிற்கு புறப்பட்டிருக்கலாம். இன்டர்நேஷனல் ஹெரல்ட் ட்ரிப்யூன்-ல் கொடுக்கப்பட்ட பிரகாரம், இப்படகுகளை கண்டுபிடித்த ரோபர்ட் பேலர்ட் இவ்வாறு சொன்னார்: “கடல்களிள் ஆழமான பகுதிகளும், சூரிய வெளிச்சம் இல்லாமையும், அழுத்தமும், நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக காலம் வரலாற்றை பாதுகாக்கின்றன.” இந்த கண்டுபிடிப்பு, இப்படிப்பட்ட பழங்காலத்து கடலியல் கலாச்சாரத்தைப் பற்றிய “ஓர் புதிய அத்தியாயத்தையே துவக்கிவைக்கலாம்” என ஆராய்ச்சியாளர்கள் சொன்னார்கள்.

ரிலாக்ஸ் ஆக்கும் இசை

சமீபத்திய ஓர் ஆய்வில், 30 வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த 1,000 நபர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அது, அவர் டென்ஷனாக இருக்கும்போது அதைக் குறைப்பதற்கு அல்லது அதிலிருந்து விடுபடுவதற்கு என்ன செய்ய விரும்புகிறார் என்பதே. உலகமுழுவதும் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில் 56 சதவீதத்தினர் இசையே தங்கள் முதல் விருப்பம் என சொன்னதாக அறிவிக்கிறது ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம். வட அமெரிக்காவில் 64 சதவீதத்தினரும், வளர்ச்சியடைந்த ஆசியாவில் 46 சதவீதத்தினரும் இசையையே முதலாவது சொன்னார்கள். அதற்கு அடுத்த இரண்டாவது இடத்தை டிவி பிடிக்கிறது, அதற்கு அடுத்து குளியல். ரோபர் ஸ்டார்ச் உவர்ல்ட்வைட் என்ற நிறுவனம் நடத்திய ஓர் ஆய்வின் இயக்குநரான டாம் மில்லர் இவ்வாறு சொன்னார்: “இசை குறைந்த விலையில் கிடைப்பதாலும், ரேடியோ, டிவி, சிடி ப்ளேயர், இன்டர்நெட், அநேக புதிய வழிகளில் இவை எளிதில் கிடைப்பதாலும், ரிலாக்ஸ் ஆவதற்கு இவ்வுலகத்தில் பாதிக்கும் அதிகமானோர் இசையை கேட்பது ஆச்சரியமாய் இல்லை.”

வறுமை—ஓர் உலகளாவிய பிரச்சினை

உலக வங்கியின் தலைவரான ஜேம்ஸ் டி. வால்ஃபன்சன், மோசமாகிவரும் உலக வறுமை நிலையைக் குறித்து சமீபத்தில் குரல் எழுப்பினார். உலகிலுள்ள 600 கோடி மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இன்னும் கடுமையான வறுமையில்தான் வாழ்கின்றனர் என அவர் குறிப்பிட்டதாக மெக்ஸிகோ நகரத்து செய்தித்தாளான லோ ஹார்நோடோ அறிவிக்கிறது. இவ்வுலகத்திலுள்ளவர்களுள் பாதிபேர் ஒரு நாளைக்கு 86 ரூபாய்க்கும் குறைவான பணத்தைக் கொண்டும், 100 கோடி மக்கள் 43 ரூபாய்க்கும் குறைவான பணத்தைக் கொண்டுதான் உயிர்வாழ்கின்றனர் என அவர் தொடர்ந்து சொன்னார். வறுமையை எதிர்த்து உலக வங்கி செய்திருக்கும் முன்னேற்றத்தைக் குறித்து அவர் பெருமையாக சொன்னபோதிலும், இப்பிரச்சினை மிகப் பெரிய அளவிளானது, மேற்கொள்வதற்கு கடினமானது என்பதை காட்டும் புள்ளிவிவரங்களை வால்ஃபன்சன் கொடுத்தார். அவர் சொன்னார்: “வறுமை ஓர் உலகளாவிய பிரச்சினை என்பதை நாம் உணரவேண்டும்.”

சந்தேகமா எறிந்துவிடுங்கள்

புளூ சீஸ் போன்றவற்றில் காணப்படும் பூசணத்தால் எந்த பாதிப்பும் இல்லை, அவை நன்மையானவை. ஆனால் மற்றவையோ ஆபத்தானவை, முக்கியமாக பலவீனமானவர்களை அவை எளிதில் தாக்கலாம் என எச்சரிக்கிறது யூஸி பெர்க்லி வெல்னஸ் லெட்டர். ரொட்டியிலும், தானியத்தால் செய்யப்படும் பொருட்களிலும் வரும் பூசணம்தான் இருப்பதிலேயே அதிக நச்சுத்தன்மையுடையவை. கண்களால் பார்க்க முடிந்த அளவிலுள்ள பூசணத்தின் நுண்ணிய வேர்களைப் போன்ற நூல்கள், பெரும்பாலும் ரொட்டியில் பூசணம் இல்லாத இடங்களுக்கும் சென்றிருக்கும். அத்துடன், இந்த பூசணத்தின் நச்சை சமைத்தாலும்கூட அகற்ற முடியாது. வெல்னஸ் லெட்டர் இவ்வாறு பரிந்துரை செய்கிறது:

பொருட்களை முடிந்தால் ஃபிரிட்ஜில் வைத்து, அவற்றில் பூசணம் வருவதற்குள் பயன்படுத்திவிடவும்.

பெர்ரி என்ற செந்நிற பழம் அல்லது திராட்சை போன்ற சிறுபழங்களில் பூசணம் வந்துவிட்டால் அல்லது வருவதுபோன்று தோன்றினால் அவற்றை தூக்கியெறிந்துவிடவும். ஈரத்தன்மை பூசணம் வருவதற்கான காரணங்களுள் ஒன்றாக இருப்பதால், பழங்களை சாப்பிடுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு கழுவவும்.

பெரிய கடினமான பழங்களான ஆப்பிள், உருளை, காலிஃப்ளவர் அல்லது வெங்காயம் போன்றவற்றில் பூசணம் வந்துவிட்டால், அந்த பகுதியை கவனமாக வெட்டிவிடவும். பீச் பழங்கள், தர்பூசணி போன்ற மென்மையான பழங்களில் பூசணம் வந்துவிட்டால் அவற்றை தூக்கியெறிந்துவிட வேண்டும்.

கெட்டியான சீஸில் பூசணம் வந்துவிட்டால், அந்த பூசணம் இருக்கும் பகுதியிலிருந்து சுமார் இரண்டிலிருந்து மூன்று சென்டிமீட்டர் வரை வெட்டி எறிந்துவிட்டு, மீதத்தை பயன்படுத்தலாம். மென்மையான சீஸ், தயிர், ரொட்டி, மாமிசம், மீதமான உணவு, கடலை, பீனட் பட்டர் (வேர்க்கடலை வெண்ணெய்), சிரப் அல்லது பதப்படுத்த பயன்படுத்தப்படும் பொருட்கள் போன்றவற்றில் பூசணம் வந்துவிட்டால் அவற்றை தூக்கியெறிவிடவும்.

சரியான கிரில்லிங்

“உணவுப் பாதுகாப்பைக் கருதி, சமைக்கும்போது இறைச்சியை நன்றாக வேக வைக்கிறோம். ஆனால் சமீப ஆண்டுகளில் அதை கருக்கிவிடுவதும் ஆபத்து என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோழி, மீன் போன்றவற்றின் இறைச்சியை கருக்கிவிடுவது வெகுநாட்களுக்கு நீடிக்கும் உடல்நலக் கோளாறுகளுக்கு வழிநடத்தும்” என கனடாவின் செய்தித்தாளான நேஷனல் போஸ்ட் கூறுகிறது. இறைச்சி அதிகமான சூட்டில் சமைக்கப்படும்போது, ஹெட்ரோசைக்லிக் அமின்ஸ் (HCA) என அழைக்கப்படும் புற்றுநோய் உண்டாக்கும் சேர்மங்கள் உருவாகின்றன. அதனால், எலுமிச்சைச் சாறு, ஆரஞ்சு சாறு அல்லது வினிகர் போன்ற அமிலத்தன்மையுள்ள ஒரு சாதாரண சாஸில் இறைச்சியை ஊறவைப்பதன்மூலம் இறைச்சியை பாதுகாப்பாக கிரில்லிங் முறையில் சரியாக வறுக்கலாம் என அந்த அறிக்கை சொல்கிறது. புற்றுநோய் ஆராய்ச்சிக்கான அமெரிக்க நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர்கள் இதை திரும்பத் திரும்ப செய்துபார்த்தபோது ஒரு விஷயத்தை தெரிந்துகொண்டனர். அது “இவற்றில் ஊறவைக்காமல் சமைத்த உணவுகளில் இருந்த HCA-க்களைவிட ஊறவைத்த பிறகு சமைத்த உணவில் 92 முதல் 99 சதவீத HCA-க்கள் குறைவாக இருந்தன. அத்துடன் இறைச்சியை 40 நிமிடங்கள் ஊறவைத்தாலும்சரி, இரண்டு நாட்கள் ஊறவைத்தாலும்சரி, வித்தியாசம் அதிகமில்லை.”