Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

துன்பத்தின் மத்தியிலும் உயிருள்ள விசுவாசம்

துன்பத்தின் மத்தியிலும் உயிருள்ள விசுவாசம்

துன்பத்தின் மத்தியிலும் உயிருள்ள விசுவாசம்

சு மார் 60 வருடங்களுக்கு முன், மைனா யெஷ் என்பவருக்கு அவருடைய கணவரிடமிருந்து ஒரு போஸ்ட் கார்ட் வந்தது. அதில் எழுதியிருந்த செய்தி சுருக்கமாகவும் தெளிவற்றதாகவும் இருந்தது. இருந்தாலும் அவர் தன் மனதைத் தேற்றி அதை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டார். மைனாவின் கணவர் புக்கென்வல்ட் சித்திரவதை முகாமில் கைதியாக இருந்தார். யெகோவாவின் சாட்சியாக இருந்ததால் நாசி அரசாங்கம் அவரை அங்கு அனுப்பியது. போஸ்ட் கார்டின் பின்புறத்தில் எழுதப்பட்டிருந்த சுருக்கமான அறிவிப்பானது: “கைதி இன்னும் பிடிவாதமாக பைபிள் மாணாக்கராக [யெகோவாவின் சாட்சிகள் அப்போது அவ்வாறே அறியப்பட்டனர்] இருக்கிறார். . . . இந்த காரணத்திற்காகவே சாதாரணமாக கடிதம் எழுதும் பாக்கியம்கூட அவருக்கு மறுக்கப்பட்டது.” இந்த செய்தியின்மூலம், பீட்டர் இன்னும் தன்னுடைய விசுவாசத்தில் உறுதியாக இருக்கிறார் என்பதை மைனா தெரிந்து கொண்டார்.

அந்த போஸ்ட் கார்ட் இப்போது பழுப்படைந்து கிழிந்துவிடும் நிலையில் இருக்கிறது. நியூ யார்க் நகரின் பாட்டெரி பார்க்கில் அமைந்துள்ள மியூஸியம் ஆஃப் ஜூயிஷ் ஹெரிட்டேஜ்—படுகொலையின் உயிருள்ள நினைவுச் சின்னத்திற்கு இந்த கார்டு இரவலாக கொடுக்கப்பட்டுள்ளது. பீட்டர் யெஷ்-ன் போட்டோவுடன் வைக்கப்பட்டிருக்கும் அந்த போஸ்ட் கார்ட், மாபெரும் மனித துயரத்தின் அதாவது படுகொலையின் ஒரு சிறிய பாகமே என்பதற்குச் சான்று பகருகிறது. அச்சமயத்தில் 60 லட்சம் யூதர்கள் அழிக்கப்பட்டனர். அந்த மியூஸியத்தின் முக்கிய பகுதியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பவற்றில் 2,000 புகைப்படங்களும் 800 சரித்திர, கலாச்சார கலைப்பொருட்களும் அடங்கும். அவை நாசி படுகொலை உட்பட 1880-களிலிருந்து இன்று வரையாக யூத சமுதாயம் எதிர்ப்பட்ட சம்பவங்களை சித்தரித்துக் காட்டுகின்றன. பீட்டர் யெஷ்-ன் கடிதத்தை காட்சிக்கு வைப்பதற்கு மியூஸியம் ஆஃப் ஜூயிஷ் ஹெரிட்டேஜ் ஏற்ற இடமாக இருப்பது ஏன்?

“யூத சரித்திரத்தை நுட்பமாக விளக்கிக் காட்டுவதே அந்த மியூஸியத்தின் முக்கிய பொறுப்பு” என்பதாக விளக்கினார் சரித்திராசிரியர் டாக்டர் ஜூட் நியூபார்ன். “அவர்கள் யெகோவாவின் சாட்சிகளாக இருந்ததன் காரணமாகவே துன்புறுத்தப்பட்டார்கள். மிக முக்கியமாக தங்களுடைய மத நம்பிக்கையின் காரணமாகவும், இன பாகுபாடுகளுக்கு ஒத்துபோகாததன் காரணமாகவும் தீய காரியங்களுக்கும், உலக சர்வாதிகாரிகளுக்கும் ஆதரவளிக்காததன் காரணமாகவும் சாட்சிகள் துன்புறுத்தப்பட்டார்கள். [ஹிட்லருடைய] போரில் பங்கேற்க மறுத்துவிட்டார்கள். . . . கடுமையான எதிர்ப்பின் மத்தியிலும் யூதர்கள் தங்கள் கொள்கைகளையும் விசுவாசத்தையும் காத்துக் கொள்வதற்காக எதிர்த்துப் போராடினார்கள். இந்த மியூஸியம் அவர்களுடைய ஆவிக்குரிய உறுதியை யாவரும் அறியும்படி செய்கிறது. இந்தக் காரணத்திற்காகவே நாசி ஆட்சியின்போது யெகோவாவின் சாட்சிகள் காண்பித்த விசுவாசத்தையும் இந்த நிறுவனம் ஏற்றுக்கொண்டு வியந்து பாராட்டுகிறது.”

மியூஸியம் ஆஃப் ஜூயிஷ் ஹெரிட்டேஜின் தற்காலிக கட்டிடத்தில் யெகோவாவிடம் காட்டிய உண்மை பற்றுறுதி பரீட்சைக்குட்படுத்தப்பட்ட ஒருவரின் கடும் போராட்டத்தைப்பற்றி ஓர் எளிய கடிதம் சித்தரித்துக் காட்டுகிறது. பீட்டர் எஷ் நாசி முகாமின் கடுஞ்சோதனையை மேற்கொண்டார். அவருடைய விசுவாசமோ சேதமடையவில்லை.

[பக்கம் 31-ன் படம்]

நியூ யார்க் நகரத்திலுள்ள மியூஸியம் ஆஃப் ஜூயிஷ் ஹெரிட்டேஜ்

[பக்கம் 31-ன் படங்கள்]

யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரான யெஷ் தன்னுடைய நம்பிக்கைகளை விட்டுக்கொடுக்க மறுத்ததால் 1938 முதல் 1945 வரை சிறைப்படுத்தப்பட்டார்