Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மத சகிப்பின்மை இப்போது ஒப்புக்கொள்ளப்பட்டது

மத சகிப்பின்மை இப்போது ஒப்புக்கொள்ளப்பட்டது

மத சகிப்பின்மை இப்போது ஒப்புக்கொள்ளப்பட்டது

பிரிட்டனிலிருந்து விழித்தெழு! நிருபர்

“குயின் மேரியின் ‘பயங்கர குற்றச்செயல்கள்’—பிஷப்புகள் வருத்தம்.” இதுவே டிசம்பர் 11, 1998-ல் பிரிட்டனில் வெளிவந்த கேத்தலிக் ஹெரால்டு செய்தித்தாளின் தலைப்புச் செய்தி. “கத்தோலிக்க மதத்தின் பெயரில் பயங்கர கொடுமைகள் இழைக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, கிரேட் பிரிட்டனில் மத சீர்திருத்தத்தின்போது புராட்டஸ்டன்டினருக்கு விரோதமாக கொடுமைகள் இழைக்கப்பட்டிருக்கின்றன” என்பதை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ரோமன் கத்தோலிக்க பிஷப்புகள் ஒப்புக்கொண்டனர். குயின் மேரி யார்? இப்படி பகிரங்கமாக ஒப்புக்கொள்ள தூண்டும் அளவுக்கு அவர் இழைத்த கொடுமைகள் என்ன? இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பிஷப்புகள் தங்களுடைய அறிக்கையை இச்சந்தர்ப்பத்தில் வெளியிட காரணம் என்ன?

1516-ல், மேரி டியூடர் இங்கிலாந்தில் ரோம கத்தோலிக்கராக பிறந்தார். அரசனாகிய எட்டாம் ஹென்றியின் முதல் மனைவியின் பெயர் கேத்தரின்; இவர் ஆரிகனைச் சேர்ந்தவர்; இவருக்குப் பிறந்த பிள்ளைகளில் தப்பிப்பிழைத்த ஒரே பிள்ளைதான் இந்த மேரி டியூடர். மேரியை இவருடைய தாயார் கத்தோலிக்க மதப்பற்றுள்ளவராக வளர்த்தார். இவருடைய தந்தை ஆண் வாரிசுக்காக ஏங்கினார், ஆனால் கேத்தரினுக்கு ஓர் ஆண் வாரிசுகூட பிறக்கவில்லை. கேத்தரினுக்கும் இவருக்கும் இருந்த திருமண பந்தத்தை முறிப்பதற்கு போப் மறுத்துவிட்டார். அதனால் ஹென்றி சுயமாக செயல்பட்டு, இங்கிலாந்தில் புராட்டஸ்டன்ட் சீர்திருத்தத்திற்கு வழிவகுத்தார். 1533-ல், ஹென்றியின் முதல் திருமணம் செல்லுபடியாகாது என கான்டர்பரியைச் சேர்ந்த தலைமை பிஷப் தாமஸ் கிரேன்மர் அறிவிப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு ஆனி போலின் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இதற்கு அடுத்த ஆண்டு, எதிர்க்கும் குணம்படைத்த ஹென்றி ரோமில் இருந்த கத்தோலிக்க சர்ச்சுடன் வைத்திருந்த எல்லா உறவுகளையும் துண்டித்துக்கொண்டார். அதன் பின்பு, சர்ச் ஆஃப் இங்லண்டின் முதன்மை தலைவராக நியமிக்கப்பட்டார். மேரியின் தாய் கேத்தரின் பொது வாழ்விலிருந்து விலகி கடைசி வருடங்களை தனிமையில் கழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்; ஆகவே, முறைகேடாக பிறந்த குழந்தை என இப்பொழுது கருதப்பட்ட மேரி தன்னுடைய தாயாரை மறுபடியும் ஒருபோதும் பார்க்கவில்லை.

புராட்டஸ்டன்டின் சகிப்பின்மை

அடுத்து வந்த 13 வருட காலத்தில், சர்ச் தலைவராக ஹென்றியை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அல்லது இன்னும் போப்பின் அதிகாரத்தையே விரும்பியவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். 1547-ல் ஹென்றி இறந்துவிட்டதால், ஒன்பது வயது எட்வர்டு அரியணைக்கு ஏறினார். ஹென்றியின் ஆறு மனைவிகளில் மூன்றாவது மனைவிக்குப் பிறந்த சட்டப்பூர்வமான ஒரே மகன்தான் இவர். எட்வர்டும் அவருடைய ஆலோசகர்களும் இங்கிலாந்தை புராட்டஸ்டன்ட் நாடாக மாற்ற முயன்றனர். இதனால் ரோமன் கத்தோலிக்கர்கள் துன்புறுத்தப்பட்டனர், சர்ச்சுகளிலுள்ள சிலைகளும் பீடங்களும் தகர்த்தெறியப்பட்டன.

பைபிளை ஆங்கிலத்தில் அச்சடிப்பது, வாசிப்பது ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகள் விரைவில் நீக்கப்பட்டன; சர்ச் ஆராதனைகளில் பைபிள் வாசிப்பு லத்தீனுக்குப் பதிலாக ஆங்கிலத்தில் கொண்டுவரப்பட்டன. ஆனால் 1553-ல், காசநோயினால் 15 வயதிலேயே எட்வர்டு இறந்துவிட்டார். மேரியே சரியான வாரிசு என்று கருதப்பட்டதால், அவர் இங்கிலாந்தின் ராணியானார்.

கத்தோலிக்க சகிப்பின்மை

முதலில், 37 வயது மேரியை மக்கள் ஆரவாரத்தோடு வரவேற்றனர், ஆனால் விரைவிலேயே வெறுப்புக்குள்ளானார். அவருடைய பிரஜைகள் புராட்டஸ்டன்ட் மதத்திற்கு மாறியிருந்தனர்; ஆனால் மேரியோ இப்பொழுது அந்நாட்டை மீண்டும் ரோமன் கத்தோலிக்க நாடாக மாற்ற உறுதிபூண்டார். குறுகிய காலத்திலேயே, எட்வர்டு போட்ட மத சட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. மேரி அத்தேசத்தின் சார்பாக போப்பின் மன்னிப்பை நாடினார். மறுபடியும், இங்கிலாந்து ரோமன் கத்தோலிக்க நாடாக மாறியது.

ரோமுடன் ஒப்புரவானதால் இப்பொழுது புராட்டஸ்டன்டினருக்கு எதிராக புதிய துன்புறுத்துதல் அலை வீச ஆரம்பித்தது. முழு சரீரத்தையும் பாதிப்பதற்கு முன்பு வெட்டப்பட வேண்டிய கொடிய கொப்புளங்களாக இவர்கள் கருதப்பட்டார்கள். ரோமன் கத்தோலிக்க சர்ச் போதனைகளை ஏற்றுக்கொள்ள மறுத்த அநேகர் கழுமரத்தில் உயிரோடு எரிக்கப்பட்டார்கள்.

சமய பேதமுள்ளவர்கள் தண்டிக்கப்படுதல்

மேரியின் ஆட்சியில் முதலில் இறந்தவர் ஜான் ரோகர்ஸ். மத்தேயுவின் பைபிள் என அறியப்பட்ட வேதாகமத்தை இவர் தொகுத்திருந்தார், இதுவே கிங் ஜேம்ஸ் வர்ஷனுக்கு ஆதாரமாக விளங்கியது. “தொல்லைப்படுத்தும் போப் ஆதிக்கம், விக்கிரகாராதனை, மூடநம்பிக்கை” ஆகியவற்றை எச்சரித்து, ரோமன் கத்தோலிக்க எதிர்ப்பு பிரசங்கத்தை பிரச்சாரம் செய்ததால், ஓர் ஆண்டுக்கு சிறையில் வைக்கப்பட்டார்; பின்பு பிப்ரவரி 1555-ல், சமய பேதமுள்ளவராக முத்திரை குத்தப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்டார்.

கிலவ்செஸ்டர் மற்றும் வோர்செஸ்டரைச் சேர்ந்த பிஷப் ஜான் ஹூப்பரும் சமய பேதமுள்ளவராக அறிவிக்கப்பட்டார். பாதிரியார் மணமுடிப்பதும் விபச்சாரத்தின் அடிப்படையில் மணவிலக்கு செய்வதும் சட்டப்பூர்வமானது என அவர் அறிவித்தார். புதுநன்மையின்போது கிறிஸ்து சரீரத்தில் பிரசன்னமாகிறார் என்பதையும் இவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஹூப்பர் உயிரோடு தீயில் வாட்டப்பட்டார்; தாங்கமுடியாத அவருடைய மரண வேதனை கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் நீடித்தது. 70 வயதுடைய புராட்டஸ்டன்ட் பிரசங்கியார் ஹியூ லட்டிமர் எரிக்கப்பட்டபோது, சக சீர்திருத்தவாதியும் சக பலியாளுமாகிய நிக்கோலஸ் ரிட்லி என்பவரிடம் இந்த வார்த்தைகளை சொல்லி உற்சாகப்படுத்தினார்: “ஆறுதலுடனிரு, ஆண்மகனாயிரு, மாஸ்டர் ரிட்லி. இங்கிலாந்தில் கடவுளுடைய கிருபையால் இந்நாளில் இப்படியொரு மெழுகுவர்த்தியை பற்ற வைக்கிறோம், இதை ஒருபோதும் அணைக்க முடியாது என்று நம்புகிறேன்.”

ஹென்றி மற்றும் எட்வர்டு ராஜாக்களிடம் பணியாற்றிய கான்டர்பரியின் முதல் புராட்டஸ்டன்ட் தலைமை பிஷப் தாமஸ் கிரேன்மர் என்பவர் சமய பேதமுள்ளவராக தீர்ப்பளிக்கப்பட்டார். தன்னுடைய புராட்டஸ்டன்ட் நம்பிக்கைகளை கைவிட்டபோதிலும், கடைசி தருணத்தில் தன்னுடைய கருத்தை மாற்றிக்கொண்டு, போப்பை கிறிஸ்துவின் விரோதியாக கண்டனம் செய்தார். தன்னுடைய நம்பிக்கையை மறுதலித்து ஆவணத்தில் கையெழுத்திட்ட குற்றத்திற்காக முதலில் தன்னுடைய கை கருகும்படி வலது கையை நெருப்பில் நீட்டினார்.

பாதுகாப்பை தேடி செல்வமிகுந்த 800 புராட்டஸ்டன்டினர் வெளிநாடுகளுக்கு ஓடிச் சென்றனர். என்றபோதிலும், அடுத்து வந்த மூன்று வருடம் ஒன்பது மாதங்களில், மேரியின் மரணம் வரை, இங்கிலாந்தில் குறைந்தபட்சம் 277 பேர் கழுமரத்தில் எரிக்கப்பட்டனர். எதை நம்ப வேண்டும் என்பதைக் குறித்து முற்றிலும் குழப்பமடைந்திருந்த பாமர மக்களே இதற்கு பலியானவர்களில் பெரும்பாலானோர். சிறியவர்களாக இருந்தபோது போப்பை வெளிப்படையாக கண்டனம் செய்வதை கேட்டே வளர்ந்த இளைஞர்கள் இப்போது அவருக்கு விரோதமாக பேசியதற்காக தண்டிக்கப்பட்டனர். மற்றவர்கள் தாங்களாகவே பைபிளை வாசித்து தங்களுக்கென்று மத கருத்துக்களை உருவாக்கிக் கொண்டனர்.

ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் அனைவரும் கழுமரத்தில் எரிக்கப்பட்டு மெதுமெதுவாக கொல்லப்பட்டது அநேகரை திகைக்க வைத்தது. சரித்திராசிரியர் கரோலி எரிக்ஸன் இந்தக் காட்சியில் ஒன்றை இவ்வாறு வர்ணிக்கிறார்: “பெரும்பாலும் எரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட விறகுகள் பச்சையாகவே இருந்தன, அல்லது நெருப்பை பற்ற வைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பிரம்புகள் எளிதில் நெருப்பு பிடிக்க முடியாத அளவுக்கு அதிக ஈரமாக இருந்தன. பலியானவர்கள் வேதனைப்படும் நேரத்தை குறைப்பதற்காக அவர்களுடைய உடலோடு கட்டப்பட்ட வெடிமருந்து பைகள் தீப்பிடிக்கவில்லை, அல்லது கொலை செய்யாமல் ஊனப்படுத்தின.” எரிக்கப்படுகிறவர்களுடைய வாய் கட்டப்படவில்லை, அதனால் “உயிர் போகும் வரை அவர்களுடைய கூக்குரலும் ஜெபங்களும் கேட்டுக்கொண்டே இருந்தன.”

தன்னுடைய போதனைகளை அமல்படுத்துவதற்கு ஆட்களை கழுமரத்தில் எரித்த ஒரு மதத்தைப் பற்றி அநேக ஜனங்கள் சந்தேகிக்க ஆரம்பித்தனர். பலியானவர்களுக்காக அனுதாப அலை வீசத் தொடங்கியது; இது, புராட்டஸ்டன்ட் உயிர்த் தியாகிகளைப் பற்றி நாட்டுப்புற பாடல்கள் பாடுகிறவர்கள் பாடல்கள் இயற்றுவதற்கு வழிவகுத்தது. தியாகிகளின் நூல் (ஆங்கிலம்) என்பதை ஜான் ஃபாக்ஸ் தொகுக்க ஆரம்பித்தார்; இது, ஏறக்குறைய பைபிளை போலவே புராட்டஸ்டன்ட் சீர்திருத்தவாதிகள் மத்தியில் அதிக செல்வாக்கு பெற்றது. மேரியின் ஆரம்பகால ஆட்சியில் ரோமன் கத்தோலிக்கர்களாக இருந்தவர்களில் அநேகர் கடைசியில் புராட்டஸ்டன்டினராக மாறினார்கள்.

மேரி விட்டுச்சென்ற சாசனம்

ராணியான பிறகு, ஸ்பானிய நாட்டு அரியணைக்கு வாரிசாக தன்னுடைய உறவினராகிய பிலிப்புவை மணமுடிக்கப் போவதாக மேரி சொன்னார். அவர் அந்நிய நாட்டு அரசராகவும் தீவிர ரோமன் கத்தோலிக்கராகவும் இருந்தார், ஆனால் ஆங்கிலேயர் பலர் இதை விரும்பவில்லை. இந்தத் திருமணத்தை எதிர்த்து புராட்டஸ்டன்டினர் செய்த கிளர்ச்சி தோல்வி கண்டது, கலகக்காரர்கள் 100 பேர் கொல்லப்பட்டனர். பிலிப்பும் மேரியும் ஜூலை 25, 1554-ல் திருமணம் செய்துகொண்டனர். ஆனால் பிலிப்பு ஒருபோதும் முடிசூடவில்லை. என்றபோதிலும், பிள்ளையில்லாத அவர்களுடைய திருமணம், ரோமன் கத்தோலிக்க வாரிசை வாஞ்சித்த மேரிக்கு துன்பத்தின் ஊற்றாக அமைந்தது.

மேரியின் உடல்நிலை மோசமானது, ஐந்தாண்டு குறுகியகால ஆட்சிக்குப் பிறகு, 42 வயதில் அவர் காலமானார். வேதனையோடு கல்லறைக்கு சென்றாள். அவளால் அவளுடைய கணவரும் சோர்ந்துபோனார், அவளுடைய பிரஜைகள் பெரும்பாலானோர் அவளை வெறுத்தனர். லண்டனில் வசித்த அநேகர் அவள் இறந்த சமயத்தில் வீதிகளில் விருந்தளித்து கொண்டாடினர். ரோமன் கத்தோலிக்க மதத்தை மீண்டும் ஸ்தாபிப்பதற்குப் பதிலாக, அவளுடைய மதவெறி புராட்டஸ்டன்ட் மதம் செழிக்கவே உதவியது. அவளுக்கு சூடப்பட்ட பெயரையே, அதாவது இரத்தவெறி பிடித்த மேரி என்ற பெயரையே அவள் சாசனமாக விட்டுச்சென்றாள்.

தவறாக உந்துவிக்கப்பட்ட மனசாட்சி

ஏன் அநேகரை எரித்துக் கொல்வதற்கு மேரி கட்டளை பிறப்பித்தாள்? சமய பேதமுள்ளவர்கள் கடவுளின் துரோகிகள் என அவருக்கு கற்பிக்கப்பட்டிருந்தது, அவர்களுடைய செல்வாக்கு முழு தேசத்தையும் தொற்றிக்கொள்வதற்கு முன்பு அவர்களை பூண்டோடு அழிப்பதே தன்னுடைய கடமை என கருதினாள். தன்னுடைய மனசாட்சிக்கு கட்டுப்பட்டாள், ஆனால் மற்றொரு திசையில் வழிநடத்தப்பட்ட மனசாட்சிக்காரர்களுடைய உரிமைகளை அசட்டை செய்தாள்.

இதேபோல புராட்டஸ்டன்டினரும் சகிப்புத்தன்மையற்றவர்களாக இருந்தனர். எட்வர்டு மற்றும் ஹென்றியின் வழிநடத்துதலில், மக்கள் தங்களுடைய மத நம்பிக்கைகளுக்காக உயிரோடு எரிக்கப்பட்டனர். மேரிக்கு பிறகு அரியணைக்கு வந்த புராட்டஸ்டன்ட் வாரிசாகிய முதலாம் எலிசபெத், ரோமன் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுவதை ராஜதுரோக குற்றமாக கருதினார். தன்னுடைய ஆட்சியில் 180-க்கும் அதிகமான ஆங்கிலேய ரோமன் கத்தோலிக்க மதத்தவர்கள் கொலை செய்யப்பட்டனர். அடுத்த நூற்றாண்டில், நூற்றுக்கணக்கானோர் தங்களுடைய மத கருத்துக்களுக்காக மாண்டனர்.

ஏன் இப்பொழுது மன்னிப்பு?

டிசம்பர் 10, 1998-ம் ஆண்டு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளின் சர்வதேச உறுதிமொழிக்கு 50-ம் ஆண்டு நிறைவு. அந்த அறிக்கையில் பிரிவு 18, “கருத்துக்கும் மனசாட்சிக்கும் மதத்திற்கும் சுதந்திரமளிக்கும் உரிமையை” அங்கீகரிக்கிறது. ஒருவர் தன்னுடைய மதத்தை மாற்றிக்கொள்ளவும் அதைப் பின்பற்றவும் மற்றவருக்கு போதிக்கவும் சுதந்திரம் அளித்தது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ரோமன் கத்தோலிக்க பிஷப்புகள், “இந்த விஷயங்களில் தங்களுடைய மனசாட்சியை பரிசீலனை செய்துபார்ப்பதற்கும்” குறிப்பாக மேரி டியூடர் காலத்தில் இழைக்கப்பட்ட “பயங்கர கொடுமைகளை” ஒப்புக்கொள்வதற்கும் “கத்தோலிக்கர்களுக்கு இது தகுந்த சமயமாக” இந்த 50-ம் ஆண்டை தேர்ந்தெடுத்தனர்.

சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த மத சகிப்பின்மைக்குரிய செயல்களுக்காக இப்பொழுது வருத்தப்பட்டாலும், உண்மையில் ஏதாவது மாறியிருக்கிறதா? மக்கள் தற்போது கழுமரத்தில் எரிக்கப்படுவதில்லை, ஆனால் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் பிற மதத்தவரை கற்பழித்துக்கொண்டும் கொலை செய்துகொண்டும்தான் இருக்கின்றனர். இப்படிப்பட்ட சகிப்பின்மை கடவுளை பிரியப்படுத்தாது. கடவுளுடைய ஆள்தன்மையை பூரணமாக பிரதிபலிக்கும் இயேசு கிறிஸ்து இவ்வாறு அறிவித்தார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.”—யோவான் 13:35.

[பக்கம் 12-ன் படம்]

குயின் மேரி

[படத்திற்கான நன்றி]

From the book A Short History of the English People

[பக்கம் 13-ன் படம்]

லாட்டிமரும் ரிட்லியும் கழுமரத்தில் எரிக்கப்பட்டனர்

[படத்திற்கான நன்றி]

From the book Foxe’s Book of Martyrs

[பக்கம் 13-ன் படம்]

கிரேன்மர் தன்னுடைய வலது கையை முதலில் வாட்டுகிறார்

[படத்திற்கான நன்றி]

From the book The History of England (Vol. 1)

[பக்கம் 12-ல் உள்ள படத்திற்கான நன்றி]

Border: 200 Decorative Title-Pages/Alexander Nesbitt/Dover Publications, Inc.