Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆண்மகனாக நிரூபிக்க—அப்பா ஆகவேண்டுமா?

ஆண்மகனாக நிரூபிக்க—அப்பா ஆகவேண்டுமா?

இளைஞர் கேட்கின்றனர் . . .

ஆண்மகனாக நிரூபிக்க—அப்பா ஆகவேண்டுமா?

“என்னோட மக இங்க இருக்கா, என்னோட பையன் அங்க இருக்கான்னு பெருமையடிச்சுக்கறவங்கள எனக்கு தெரியும். ஆனா அவங்க அத பத்தி கொஞ்சங்கூட கவலைப்படற மாதிரி தெரியல.”—ஹாரோல்ட்.

ஐக்கிய மாகாணங்களில் ஒவ்வொரு வருடமும் சுமார் பத்து லட்சம் டீனேஜர்கள் கர்ப்பமாகின்றனர். இவ்வாறு பிறக்கும் குழந்தைகளுள் பெரும்பாலானவை திருமணமாகாத பெண்களுக்கே பிறப்பவை. வருத்தகரமாக, இந்த ‘சின்ன’ தாய்மார்களில் நான்கில் ஒருவர் அடுத்த இரண்டே வருடங்களில் இரண்டாவது குழந்தையை பெற்றுக்கொள்கின்றனர். “இந்நிலை இதேபோல தொடர்ந்தால், இன்று பிறக்கும் குழந்தைகளுள் பாதிகூட தன் குழந்தைப்பருவம் முழுவதிலும் தாய் தகப்பனுடன் தொடர்ந்து வாழாது. பெரும்பாலான அமெரிக்க குழந்தைகள் ஒற்றைத் தாய் குடும்பங்களில்தான் அநேக வருடங்கள் வளர வேண்டியிருக்கும்” என்கிறது அட்லான்டிக் மன்த்லி என்ற பத்திரிகை.

மற்ற வளர்ந்த நாடுகளைவிட ஐக்கிய மாகாணங்களில் அதிகளவான இளம் கருத்தரிப்புகள் இருந்து வருகிறபோதிலும், திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்றுக்கொள்வது ஒரு உலகளாவிய பிரச்சினையாகத்தான் இருக்கிறது. இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற சில ஐரோப்பிய நாடுகளிலும் இப்படிப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐக்கிய மாகாணங்களின் எண்ணிக்கைக்கு இணையாக இருக்கிறது. சில ஆப்பிரிக்க மற்றும் தென் அமெரிக்க நாடுகளில், பருவவயது பெண்கள், பிள்ளை பெற்றுக்கொள்ளும் எண்ணிக்கை ஐக்கிய மாகாணங்களின் எண்ணிக்கையைவிட ஏறக்குறைய இருமடங்கு அதிகமாக இருக்கிறது. வேகமாக பரவிவரும் இந்த பயங்கர நோய்க்கு காரணம் என்ன?

இந்த தொற்று வியாதிக்கு காரணம்

நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் ‘கொடிய காலங்களின்’ சீரழிந்திருக்கும் ஒழுக்கத்தராதரமே இந்நிலைக்கான முக்கிய காரணம். (2 தீமோத்தேயு 3:1-5) சமீப ஆண்டுகளின் விவாகரத்து எண்ணிக்கை, அதிரவைக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளது. ஒத்தப் பாலினத்தவர் புணர்ச்சி போன்ற வாழ்க்கை முறைகளெல்லாம், வாழ்க்கையில் சாதாரணமானவையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன், கடல்போல எங்கும் பரந்து விரிந்து கிடக்கும் மீடியாவிற்கு இளைஞர்களே முக்கிய இரையாக இருந்திருக்கின்றனர். வரையறையோ கட்டுப்பாடோ ஏதுமில்லாமல், யாருடன் வேண்டுமானாலும் பாலுறவு கொள்ளலாம் என்ற எண்ணத்தை முன்னேற்றுவிக்கும் சினிமா படங்கள், டிவி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள், மோசமான பத்திரிகை கட்டுரைகள், இசை வீடியோக்கள், ஒருவருடைய உணர்ச்சிகளை தூண்டிவிடும் இசை போன்றவை இன்று எங்கும் பரவியுள்ளன. அதுமட்டுமல்ல, கருச்சிதைவு வசதிகளும் கருத்தடை முறைகளும் இன்று எளிதில் கிடைப்பதால், செக்ஸால் எந்த பின்விளைவும் இருக்காது என்ற கருத்து இளைஞர்கள் மத்தியிலும் பரவலாக காணப்படுகிறது. “எந்த பொறுப்புகளும் இல்லாம நான் செக்ஸை அனுபவிக்க வேண்டும்” என திருமணமாகாத ஓர் அப்பா சொல்கிறார். “செக்ஸ்-ன்றது தமாஷ், அது ஒரு விளையாட்டு” என்கிறார் மற்றொருவர்.

இப்படிப்பட்ட எண்ணம் குறிப்பாக ஏழை இளைஞர்கள் மத்தியில் அதிகம் காணப்படலாம். ஆராய்ச்சியாளர் இலைஜா ஆண்டர்சன், இதைப் பற்றி நாகரிகமான நகரப்பகுதியில் வாழும் சில இளைஞர்களை பேட்டி கண்டார். அவர் சொல்வதை கவனியுங்கள்: “நெறைய இளைஞர்கள், சமுதாயத்தில் அந்தஸ்தோடு வாழ்வதற்கான ஒரு முக்கிய தகுதியா செக்ஸ்ஸை நெனைக்கிறாங்க; அந்த மாதிரி செக்ஸ்-ல ஈடுபட்டுட்டா ஏதோ உலகத்தையே ஜெயிச்சிட்டதா நெனைக்கிறாங்க.” அதுமட்டுமல்ல, ஒரு திருமணமாகாத தந்தை, விழித்தெழு! நிருபரிடம் செக்ஸில் வெற்றிபெறுவதை, “அலமாரிகளில் அடுக்கி வைக்கக்கூடிய அவார்டுகளாக” நினைப்பதாக சொல்கிறார். இந்த இரக்கமற்ற எண்ணத்திற்கு என்ன காரணம்? இப்படிப்பட்ட நகர்புற இளைஞர்களுக்கு பெரும்பாலும் அவர்களுடைய வாழ்க்கையிலேயே மிக முக்கியமானவர்கள் யார் தெரியுமா? “அவங்க கோஷ்டியிலேயே இருக்குற மற்ற இளைஞர்கள்தான். அவங்கதான் இந்த இளைஞனோட நடத்தைய நிர்ணயிக்கிறாங்க, அவன் எப்படி வாழனும்கிறத அவங்கதான் சொல்றாங்க, அவனை பொறுத்தவரை அவங்க சொல்றபடி வாழ்றது ரொம்ப முக்கியம்” என விளக்குகிறார் ஆண்டர்சன்.

அநேக இளைஞர்களுக்கு, செக்ஸில் வெற்றி என்பது வெறும் ஒரு விளையாட்டு, “மற்றவரை குறிப்பாக பருவவயது பெண்களை ஏமாற்றி முட்டாள் ஆக்குவதுதான் அந்த விளையாட்டின் நோக்கம்” என்கிறார் ஆண்டர்சன். “இளைஞன் தன்னை எவ்வாறு அடையாளம் காட்டுகிறான் என்பது அந்த விளையாட்டில் அடங்கியிருக்கிறது; உதாரணமாக அவனுடைய உடை, தலை அலங்காரம், தோற்றம், நடனம், பேச்சு போன்ற எல்லாம் அதில் அடங்கும்” என அவர் மேலும் சொல்கிறார். இந்த “விளையாட்டில்” அநேக வாலிபர்கள் ஜெயித்துவிடுகின்றனர். இதில் வல்லுநர்களாகவும் ஆகிவிடுகின்றனர். ஆனால் ஆண்டர்சன் சொல்கிறார்: “பெண் கருத்தரிக்கும்போது, அந்த இளைஞன் அம்போகதி என அவளை விட்டு ஒதுங்கிவிடவே நினைக்கிறான்.”—ராபர்ட் லர்மான், தியாடோரே யும்ஸ் என்போரால் தொகுக்கப்பட்ட இளம் திருமணமாகா அப்பாக்கள்—வாழ்க்கைப் பாங்கில் மாற்றங்களும் புதிய சட்டங்களும். (ஆங்கிலம்)

கடவுளின் நோக்கு

ஆனால் அப்பாவாக ஆகிவிடுவது ஒருவரை உண்மையில் ‘ஆண்மகனாக’ ஆக்கிவிடுமா? செக்ஸ் என்பது வெறும் ஒரு விளையாட்டா? நம் சிருஷ்டிகராகிய யெகோவா தேவனின் நோக்கில் நிச்சயம் அவ்வாறு இல்லை. கடவுள் தம்முடைய வார்த்தையாகிய பைபிளில், செக்ஸ்-ற்கு ஒரு உயர்ந்த நோக்கம் இருக்கிறது என்பதை தெளிவாக விளக்குகிறார். முதல் ஆண், பெண்ணின் சிருஷ்டிப்பைப் பற்றி சொன்ன பிறகு, பைபிள் சொல்கிறது, பின்பு தேவன் அவர்களை ஆசீர்வதித்த பிறகு அவர்களை நோக்கி: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்”புங்கள் என சொன்னார். (ஆதியாகமம் 1:27, 28) அப்பாக்கள் குழந்தைகளை கைவிட்டுவிட வேண்டும் என்பது ஒருபோதும் கடவுளுடைய எண்ணமில்லை. முதல் ஆண், பெண்ணை நிரந்தர கட்டாகிய திருமணத்தில் அவர் இணைத்து வைத்தார். (ஆதியாகமம் 2:24) ஆக ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தாய், ஒரு தகப்பன், இருவருமே இருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கமாக இருந்தது.

ஆனால் சிறிது காலத்திலேயே, ஆண்கள் அநேக மனைவிகளை வைத்துக்கொள்ள துவங்கினர். (ஆதியாகமம் 4:19) ஏன், தேவகுமாரர்களே “மனுஷ குமாரத்திகளைச் செளந்தரியமுள்ளவர்களென்று” கண்டார்கள் என ஆதியாகமம் 6:2 (தி.மொ.) சொல்கிறது. இந்த தேவதூதர்கள் மனுஷ ரூபம் எடுத்த பிறகு, பேராசையுடன், அந்தப் பெண்களுள் ‘தங்களுக்கு இஷ்டமானவர்களையெல்லாம்’ மனைவிகளாக கொண்டார்கள். ஆனால் நோவாவின் காலத்தில் ஏற்பட்ட வெள்ளம், இந்த பொல்லாத ஆவி சிருஷ்டிகள் மீண்டும் ஆவி மண்டலத்திற்கு திரும்பிச் செல்லும்படி செய்தது. இருப்பினும், இவர்கள் இப்போது பூமிக்கு அருகாமையில் மட்டுமே இருக்கும்படி கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதை பைபிள் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 12:9-12) சாத்தானும் அவனுடைய பொல்லாத ஆவிகளும் இன்று மக்கள்மீது மிக பலமாக செல்வாக்கு செலுத்தி வருகின்றனர். (எபேசியர் 2:2) ஆனால் அறியாமையினால், தேவையில்லாமல், அன்புகாட்டப்படாத பிள்ளைகளுக்கு அப்பாவாகும்போது இன்றைய இளைஞர்கள் இப்படிப்பட்ட தவறான செல்வாக்கிற்கு அடிபணிந்துவிடுகின்றனர்.

ஆக, சரியான காரணத்துடன்தான் பைபிள் இவ்வாறு சொல்கிறது: “நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து, தேவனை அறியாத அஞ்ஞானிகளைப் போல மோக இச்சைக்குட்படாமல், உங்களில் அவனவன் தன்தன் சரீரபாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து: இந்த விஷயத்தில் ஒருவனும் மீறாமலும் தன் சகோதரனை வஞ்சியாமலும் இருக்கவேண்டும்; முன்னமே நாங்கள் உங்களுக்குச் சொல்லி, சாட்சியாக எச்சரித்தபடியே இப்படிப்பட்ட விஷயங்களெல்லாவற்றையுங்குறித்துக் கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவராயிருக்கிறார்.”—1 தெசலோனிக்கேயர் 4:3-6.

“என்னது, ‘வேசிமார்க்கத்துக்கு விலகியிருக்க’ வேண்டுமா?” என ஒருவேளை அநேக இளைஞர்கள் கேலியாக கேட்கலாம். அவர்கள், இன்னும் இளைஞர்கள்தானே, அவர்களுடைய ஆசைகளும் பலமானவை! ஆனால் நாம் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும், வேசித்தனம் மற்றவரை வஞ்சிப்பதையும் அல்லது ‘காயப்படுத்துவதையும் மற்றவரின் உரிமைகளை அபகரிப்பதையும்’ உட்படுத்துகிறது. கணவன் துணையின்றி ஆதரவற்று ஒரு பெண்ணை குழந்தையுடன் கைவிடுவது, அந்தப் பெண்ணை காயப்படுத்துவதாக இல்லையா? அதுமட்டுமா, பாலுறவின் மூலம் அந்தப் பெண்ணிற்கு, பிறப்புறுப்பு அக்கி, மேகநோய், வெட்டைநோய், எய்ட்ஸ் போன்ற நோய்களை கடத்திவிடும் அபாயம் இருக்கிறது அல்லவா? ஒருவேளை இப்படிப்பட்ட பின்விளைவுகளை தவிர்க்க முடியும் என்பது என்னவோ உண்மைதான். இருப்பினும், திருமணத்திற்கு முன் பாலுறவுகொள்வது, அந்தப் பெண் நற்பெயரை காத்துக்கொள்ளவும் கன்னித்தன்மையுடன் திருமண பந்தத்தில் இணையவும் அவளுக்கிருக்கும் உரிமையை அநியாயமாக அபகரிப்பதாகும் அல்லவா! அப்படியானால், வேசித்தனத்திற்கு விலகியிருப்பது உண்மையில் ஞானமான காரியம், அத்துடன் முதிர்ச்சியையும் வெளிக்காட்டும் செயல். உண்மைதான், திருமணத்திற்கு முன்னான பாலுறவிலிருந்து விலகியிருப்பதன்மூலம் ‘தன்தன் சரீரபாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்வதற்கு’ தன்னடக்கமும் திடத்தீர்மானமும் தேவை. ஆனால் ஏசாயா 48:17, 18 சொல்கிற விதமாக, கடவுள் தம்முடைய வார்த்தையின் மூலம் ‘பிரயோஜனமாயிருக்கிறவற்றை நமக்கு போதிக்கிறார்.’

“புருஷராயிருங்கள்”

அப்படியானால், ஒரு வாலிபன் எவ்வாறு தன்னை நல்ல ஆண்மகனாக நிரூபிக்க முடியும்? முறைதவறிப் பிறந்த குழந்தைக்கு அப்பாவாயிருப்பதன் மூலமாக அல்ல. மாறாக, பைபிள் நம்மை இவ்வாறு உற்சாகப்படுத்துகிறது: “விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், [“தொடர்ந்து,” NW] புருஷராயிருங்கள். திடன்கொள்ளுங்கள். உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது.”—1 கொரிந்தியர் 16:13, 14.

‘தொடர்ந்து புருஷராயிருப்பது’ என்பது, கவனமாயிருப்பது, விசுவாசத்திலே உறுதியாய் இருப்பது, தைரியமாயிருப்பது, அன்பாயிருப்பது ஆகியவற்றை உட்படுத்துகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். இந்த நியமங்கள் இரு சாராருக்கும் அதாவது ஆணுக்கும் அதேபோல பெண்ணுக்கும் பொருந்தும். இப்படிப்பட்ட ஆவிக்குரிய குணநலன்களை நீங்கள் வளர்த்துக்கொண்டால், மற்றவர்கள் உங்களை ஒரு நல்ல ஆண்மகனாக மதிப்பார்கள், போற்றவும் செய்வார்கள்! எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்து ஒரு பாடத்தை கற்றுக்கொள்ளுங்கள். இயேசு துன்புறுத்தலின்போதும், ஏன் மரணத்தை எதிர்பட்ட போதிலும் ஒரு நல்ல ஆண்மகனாக, தைரியத்துடன் நடந்துகொண்டதை சற்று சிந்தித்துப் பாருங்கள். ஆனால் எதிர்பாலாருடன் இயேசு எவ்வாறு நடந்துகொண்டார்?

நிச்சயமாகவே, பெண்களுடன் நேரத்தை செலவழிக்க இயேசுவிற்கு அநேக சந்தர்ப்பங்கள் இருந்தன. அதுமட்டுமல்லாமல், “தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்துகொண்டுவந்த” அநேக பெண் சீஷர்களும் அவருக்கு இருந்தனர். (லூக்கா 8:3) குறிப்பாக அவர் லாசருவின் இரு சகோதரிகளுடன் நெருக்கமாக இருந்தார். அவர் “மார்த்தாளிடத்திலும் அவளுடைய சகோதரியினிடத்திலும்” அன்பாயிருந்தார் என்றுகூட பைபிள் சொல்கிறது. (யோவான் 11:5) அவர் ஒரு பரிபூரண மனிதராக இருந்தார். சந்தேகத்திற்கிடமின்றி நல்ல ஆண்மகனாக திகழ உதவிய அவருடைய அறிவு, அழகு, கட்டுமஸ்தான உடல்வாகு போன்றவற்றை, ஒழுக்கங்கெட்ட நடத்தை என்ற வலைக்கு இந்தப் பெண்களை கவர்ந்திழுக்க அவர் பயன்படுத்தினாரா? இல்லை, அதற்கு மாறாக, இயேசுவைப் பற்றி பைபிள் சொல்கிறது: “அவர் பாவஞ்செய்யவில்லை.” (1 பேதுரு 2:22) பாவியாக, வேசியாக அனைவராலும் கருதப்பட்ட ஒரு பெண் “அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்”தபோதுகூட அவர் நிச்சயம் தவறாக நடக்கவில்லை. (லூக்கா 7:37, 38) அந்தப் பெண் பரிதாபத்திற்குரிய நிலையில் இருந்தபோதிலும், அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள இயேசு நினைத்துக்கூட பார்க்கவில்லை! தம்முடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்தக்கூடிய திறனை அவர் அங்கு வெளிக்காட்டினார். இதுவே ஒரு நல்ல ஆண்மகனுக்குரிய அடையாளம். பெண்கள் பாலுறவுக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிற இயந்திரங்களாக அல்ல ஆனால் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய தனிநபர்களாக இயேசு அவர்களை நடத்தினார்.

நீங்கள் ஓர் இளம் கிறிஸ்தவ ஆணாக இருந்தால், உங்கள் சகாக்களின் முன்மாதிரிகளை அல்ல மாறாக கிறிஸ்துவின் முன்மாதிரியை பின்பற்றுவதன் மூலம், மற்றவரை ‘காயப்படுத்துவதையும் அவருடைய உரிமைகளை அபகரிப்பதையும்’ தவிர்க்கலாம். அத்துடன், முறை தவறிப்பிறந்த குழந்தைக்கு அப்பாவாயிருக்கும் சோக அனுபவத்திலிருந்தும் அது உங்களை காக்கும். நீங்கள் வேசித்தனத்திலிருந்து விலகியிருக்கும்போது மற்றவர்கள் உங்களை கேலி செய்வார்கள் என்பது உண்மை. ஆனால் காலப்போக்கில், கடவுளுடைய தயவை நீங்கள் பெற்றுக்கொள்வது, உங்கள் சகாக்களின் நிலையற்ற தயவைவிட அநேக நல்ல பலன்களை உங்களுக்கு வாரிவழங்கும்.—நீதிமொழிகள் 27:11.

ஆனால் ஒருவேளை, ஒரு இளைஞன், முன்பு ஒழுக்கங்கெட்ட வாழ்க்கையிலேயே உழன்றுவிட்டு, பிறகு தன்னுடைய தவறான வாழ்க்கை முறையிலிருந்து விலகி, உண்மையிலேயே தன்னுடைய முந்தைய வாழ்க்கைக்காக மனம் வருந்துகிறார் என்றால் அவரைப் பற்றி என்ன? அப்படியானால், தவறான ஒழுக்கங்கெட்ட பாலுறவில் ஈடுபட்டு பிறகு மனந்திரும்பிய அரசனாகிய தாவீதைப்போல அவரும் கடவுளுடைய மன்னிப்பை நிச்சயமாய் பெற்றுக்கொள்ளலாம். (2 சாமுவேல் 11:2-5; 12:13; சங்கீதம் 51:1, 2) ஆனால் திருமணத்திற்கு முன்பே கருத்தரித்திருந்தால், அப்போது அந்த இளம் மனிதன் முக்கியமான சில முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். அவர் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டுமா? அந்த குழந்தையினிடம் அவருக்கு ஏதேனும் பொறுப்பு இருக்கிறதா? பின்பு வரும் கட்டுரை இந்த கேள்விகளை கலந்தாலோசிக்கும்.

[பக்கம் -ன் படங்கள்15]

செக்ஸால் பின்விளைவுகள் ஏதுமில்லை என அநேக இளைஞர்கள் தவறாக நினைத்துவிடுகின்றனர்