Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஜெயித்தது கிறிஸ்தவ அன்பா எரிமலையா?

ஜெயித்தது கிறிஸ்தவ அன்பா எரிமலையா?

ஜெயித்தது கிறிஸ்தவ அன்பா எரிமலையா?

காமரூனிலிருந்து விழித்தெழு! நிருபர்

மேற்கு ஆப்பிரிக்க நாடாகிய காமரூனில் சென்ற வருடம் இராட்சதனைப்போல் ஓர் எரிமலை சீரியெழுந்தது; கோபத்தில் தாண்டவமாடியது. காமரூன் சிகரம், கடல் மட்டத்திலிருந்து 4,070 மீட்டர் உயரமுள்ள பிரமாண்டமான ஓர் எரிமலையாகும். இது இந்த இருபதாம் நூற்றாண்டிலேயே ஐந்தாவது முறை வெடித்திருக்கிறது; ஆனால் முன்பு நிகழ்ந்ததைவிட இந்த வெடிப்பு அதிபயங்கரமாக இருந்ததோடு, அதிக சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த எரிமலை மார்ச் 27, 1999, சனிக்கிழமையன்று மதியம் தன் கொடூர முகத்தை காட்டத் துவங்கியது. இந்த மலையின் அடிவாரத்தில் பூயே நகரம் அழகாக வீற்றிருந்தது. அப்போது சுவர்களும், வீடுகளும், மரங்களும்கூட வெறிபிடித்ததுபோல் ஆடத்துவங்கின என அந்த சமயத்தில் அங்கிருந்த கண்கண்ட சாட்சிகள் நடுக்கத்துடன் சொன்னார்கள். அன்று சாயங்காலம், சுமார் எட்டரை மணியளவில், அந்த நடுக்கம் அப்பகுதியையே ஒரு குலுக்கு குலுக்கியது. அந்த அதிர்வு அவ்வளவு பலமாகவும், பயங்கரமாகவும் இருந்ததால், 70 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள டியோலா என்ற பகுதி வரை எட்டியது. அடுத்தநாள் செவ்வாய்கிழமை, மார்ச் 30, 1999-ம் தேதி செய்தித்தாளான ல மெசாஸே-ன் தலைப்புச் செய்தி இதுவே: “காமரூன் சிகரம் எரிமலை வெடிப்பு—நெருப்பை சந்திக்கும் 2,50,000 பேர்.” அது தொடர்ந்து இவ்வாறு சொன்னது: “இரண்டே நாட்களில் இப்பகுதி 50 முறை நடுங்கியது; இப்போதே 4 எரிமலை வாய்கள் தோன்றிவிட்டன; நூற்றுக்கணக்கான வீடுகள் அழிந்துவிட்டன; பூயே-வில் உள்ள ஜனாதிபதி மாளிகை இருந்த இடம் தெரியாத அளவிற்கு சுக்கு நூறாகிவிட்டது.”

பூயேவில் சுமார் 80 யெகோவாவின் சாட்சிகள் இருந்தனர். அநேக வீடுகள் ரிப்பேர் செய்ய முடியாத அளவிற்கு சேதமடைந்துவிட்டன. ராஜ்ய மன்றமாக, பயன்படுத்தப்பட்ட ஒரு கட்டிடமும் அவற்றுள் ஒன்று. இருப்பினும், உயிர்ச் சேதம் ஏதுமில்லை.

கிறிஸ்தவ அன்பு தலைதூக்கியது

இந்த இராட்சதனின் கட்டுக்கடங்கா கோபத்தால் விளைந்த நாசத்தை சரிப்படுத்துவதற்காக உடனே கிறிஸ்தவ அன்பு களத்தில் இறங்கியது. விரைவில் நிவாரணக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது, அந்த வேலைக்கு தேவைப்பட்ட அதிகளவான நிதிக்கு யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும்குழு ஏற்பாடு செய்தது. நூற்றுக்கணக்கான சாட்சிகளும்கூட தங்கள் நேரத்தையும் சக்தியையும் பணத்தையும், அன்பால் தூண்டப்பட்டு மனமுவந்து தியாகம் செய்தனர்.

யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகள் உடனடியாக உணவுப் பொருட்களை அந்த இடத்திற்கு அனுப்பி வைத்தன. ஒரு சாட்சி 1,000 சிமெண்ட் கற்களை நன்கொடையாக அளித்தார். மற்றொருவர் அலுமினிய மேற்கூரையை குறைந்த விலையில் வாங்குவதற்கு ஏற்பாடுகளை செய்தார். இன்னும் ஒருவர் பெரிய பெரிய மரங்களை எடுத்துவர, 16 கிலோமீட்டர் நடந்தே சென்றார். பெண் வீட்டாருக்கு, மணமகள் விலையை கொடுப்பதற்காக பணத்தை சேர்த்து வைத்திருந்த ஒரு இளம் மனிதர், தன் திருமணத்தை தள்ளிப்போட்டுவிட்டு தன்னுடைய சங்கிலி ரம்பத்தை ரிப்பேர் செய்வதற்கு அந்த பணத்தை பயன்படுத்தினார். அவர் அதை சரிசெய்துவிட்டு காட்டுக்குள் போன வேகத்தில், மூன்றே வாரத்திற்குள் ஒரு வீட்டை கட்டுவதற்கு தேவையான அவ்வளவு மரத்தையும் வெட்டிவிட்டார்! அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்திலிருந்த ஒரு இடத்திற்கு இந்த வெட்டப்பட்ட மரங்களை இளம் கிறிஸ்தவ பலசாலிகள் தங்கள் தலைமீது சுமந்து வந்தனர். அந்த இடத்திலிருந்து வண்டி ஒன்று மரங்களை எடுத்துக்கொண்டு போனது.

திரும்பக்கட்டும் இந்த பணி ஏப்ரல் 24-ம் தேதி துவங்கியது. அப்போது அந்த சேதமடைந்திருந்த இடத்தில் 60 வாலண்டியர்கள் கூடியிருந்தனர். அந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளின்போது அந்த எண்ணிக்கை 200-ஆக உயர்ந்தது. அவர்களுள் மூன்று சாட்சிகள் உலகப்பிரகாரமான முழுநேர வேலையை செய்துவந்தனர். ஒவ்வொரு நாளும் தங்கள் வேலை முடிந்த பிறகு, இங்கு வந்து நள்ளிரவு வரை கட்டுமானப் பணியில் ஈடுபட்டனர். டியோலாவைச் சேர்ந்த ஒரு சகோதரர் காலை முழுவதும் அவருடைய தொழிலை செய்தார், பிறகு 70 கிலோமீட்டர் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து இங்கு வருவார். இங்கு நள்ளிரவு வரை வேலை செய்துவிட்டு பிறகு வீடு திரும்புவார். இரண்டே மாதங்களில் ஆறு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. அந்த சமயத்தில், பூயே சபை கூட்டங்களுக்கு வந்தவர்களின் எண்ணிக்கை சபை அங்கத்தினர்களைவிட இருமடங்காக அதிகரித்திருந்தது, இருப்பினும், கூட்டங்கள் ஒரு தனி வீட்டில் தொடர்ந்து நடத்தப்பட்டன.

இந்த சமயத்தில், அசுத்தமான தண்ணீரை சுத்தப்படுத்தும் 40,000-க்கும் அதிகமான மாத்திரைகளை நிவாரணக்குழு விநியோகித்தது. அத்துடன், நச்சு கலந்த காற்றாலும் எரிமலையால் ஏற்பட்ட சாம்பலாலும் அநேகருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டது. அவ்வாறு பாதிக்கப்பட்ட பத்து போருக்கு மருத்துவ வசதிகளை செய்து கொடுத்தனர். இந்த கிறிஸ்தவ அன்பை கவனித்துக் கொண்டிருந்தவர்கள் எவ்வாறு பிரதிபலித்தனர்?

வெற்றி கிறிஸ்தவ அன்பிற்கு

அந்த மாகாணத்து வேளாண்மை துறையின் முக்கிய ஸ்தானத்திலுள்ள ஒருவர், சகோதரர்கள் கட்டிய அந்த வீட்டைப் பார்த்து இவ்வாறு சொன்னார்: “இந்த வீடே அன்பிற்கு வெளிப்படையாக சாட்சியளிக்கிறது . . . அன்பிற்கு இலக்கணம்.” “என் வாழ்க்கையில் இதுபோன்ற ஒன்றை இதுவரை பார்த்தே இல்லை. . . இது உண்மை கிறிஸ்தவத்தின் சின்னமாகும்” என்று ஓர் ஆசிரியை குறிப்பிட்டார்.

இதனால் தனிப்பட்ட விதமாக பலனடைந்த ஒவ்வொருவரும் இப்படிப்பட்ட வார்த்தைகளையே சொன்னார்கள். வியாதிப்பட்டுள்ள 65 வயதான தீமோத்தி எழுதினார்: “எங்கள் புதிய வீட்டை நாங்கள் பார்க்கும்போதெல்லாம், எங்கள் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்கிறது. எங்களுக்கு யெகோவா செய்திருக்கும் எல்லாவற்றிற்காகவும் அவருக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறோம்.” இந்த பெரும் நாசத்தில், நான்கு பிள்ளைகளையுடைய ஒரு விதவையின் வீடு நொறுங்கிச் சிதறியது. அவர் ஒரு சாட்சி அல்ல, அவரும் அவருடைய பிள்ளைகளும் அனாதையாக கைவிடப்பட்டனர். அவருடைய வீட்டை சரிசெய்வதற்கு வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள் மீதமிருந்த கூரையையும் சுருட்டிக்கொண்டு சென்றுவிட்டனர். அப்போது உதவிக்கரம் நீட்டியது நம் சாட்சி வாலண்டியர்களே. “நான் எவ்வாறு நன்றி சொல்வதென்றே எனக்கு தெரியவில்லை. என் இருதயம் சந்தோஷத்தால் நிறைந்திருக்கிறது” என அவர் சொன்னார். “யெகோவாவின் அமைப்பில் நிலவும் அன்பைப் பார்க்கும்போது நான் ரொம்ப சந்தோஷப்படுகிறேன். உண்மையிலேயே உயிருள்ள கடவுளை நாம் வணங்குகிறோம் என்பதை இது காட்டுகிறது” என ஒரு கிறிஸ்தவ மூப்பரின் மனைவி சந்தோஷம் பொங்க சொன்னார்.

எரிமலை வெடிப்பு உண்மையில் சக்தி வாய்ந்தது. ஆனால் கிறிஸ்தவ சகோதரத்துவத்தின் அன்பு அதைவிட அபார சக்தி வாய்ந்தது, எரிமலையால் அதை ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்போஸ்தலனாகிய பவுல் ஏவப்பட்டு எழுதியதுபோல, உண்மையாகவே “அன்பு ஒருக்காலும் ஒழியாது.”—1 கொரிந்தியர் 13:8.

[பக்கம் 16-ன் படங்கள்]

ஆறாய் ஓடிய லாவா பயங்கர சேதத்தை ஏற்படுத்தியது

[பக்கம் 17-ன் படம்]

நாசப்படுத்தப்பட்ட வீடுகளை திரும்பக்கட்ட தொண்டர்கள் கடுமையாக உழைத்தனர்

[பக்கம் 16, 17-ன் படம்]

காமரூன் சிகரம்