மரபணு மாற்றப்பட்ட உணவு—உடலுக்கு நல்லதா?
மரபணு மாற்றப்பட்ட உணவு—உடலுக்கு நல்லதா?
நீங்கள் எங்கு வாழ்கிறீர்கள் என்பதை பொருத்து, மரபணு மாற்றியமைக்கப்பட்ட (genetically modified [GM]) ஏதாவது ஒருவகை உணவை இன்று காலையோ, மதியமோ, இரவோ நீங்கள் சாப்பிட்டிருப்பீர்கள். அது ஒருவேளை பூச்சிகள் ஏதும் அண்டவிடாமல் துரத்தும் சக்தியை தன்னில்தானே கொண்ட உருளைக்கிழங்காக இருக்கலாம், அல்லது கொழகொழவென ஆகிவிடாமல் வெகுநேரம் கெட்டியாகவே இருக்கும் தன்மையுடைய தக்காளியாக இருக்கலாம். அதில், GM உணவு என ஒருவேளை குறிப்பிடப்படாமல் இருக்கலாம், எனவே இயற்கையான உணவிலிருந்து இது மாறுபட்டது என்பதை உங்கள் நாவாலும் கண்டுபிடிக்க முடியாது.
இதை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அர்ஜன்டினா, பிரேஸில், கனடா, சீனா, மெக்ஸிகோ, ஐக்கிய மாகாணங்கள் போன்ற நாடுகளில் சோயாபீன்ஸ், சோளம், ரேப்சீட், உருளைக்கிழங்கு போன்றவை GM முறையில் வளர்க்கப்பட்டு வருகின்றன. “ஐக்கிய மாகாணங்களில், 1998-ம் ஆண்டு வளர்க்கப்பட்ட பயிர்களுள், 25 சதவீத சோளம், 38 சதவீத சோயாபீன்ஸ், 45 சதவீத பருத்தி போன்றவை மரபணு மாற்றியமைக்கப்பட்டு வளர்க்கப்பட்டவையாகும். பயிர்களை பாழாக்கும் பூச்சிகளிடமிருந்து பயிர்களை காப்பாற்றுவதற்காகவோ தன்னில்தானே பூச்சிக்கொல்லியை உண்டாக்குவதற்காகவோ இவ்வாறு செய்யப்பட்டது” என்கிறது ஒரு அறிக்கை. 1999-ம் ஆண்டின் முடிவில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் பிரகாரம், உலகம் முழுவதுமான வாணிகப் பயிர்களுள், சுமார் பத்து கோடி ஏக்கர் நிலப்பரப்பில் வளர்க்கப்பட்ட பயிர்கள் GM முறையில் வளர்க்கப்பட்டவை. ஆனால், இவை அனைத்தும் உணவு பயிர் வகைகள் அல்ல.
இவ்வாறு மரபணு மாற்றியமைக்கப்பட்ட பயிரிலிருந்து வரும் உணவு உங்கள் உடலுக்கு நல்லதா அல்லது கேடு விளைவிக்குமா? GM பயிர்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் விஞ்ஞான தொழில்நுட்பங்கள் நம் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானவையா? ஐரோப்பாவில் இந்த GM உணவைப் பற்றிய விவாதம் இப்போது சூடுபிடிக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களுள் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர் இவ்வாறு சொன்னார்: “இந்த மரபணு மாற்றியமைக்கப்பட்ட உணவை நான் எதிர்ப்பதற்கான ஒரே காரணம் அது பாதுகாப்பற்றது, தேவையற்றது, வெட்டிவேலை.”
மரபணு முறையில் எவ்வாறு உணவு மாற்றியமைக்கப்படுகிறது?
இந்த GM முறையில் உணவை தயாரிக்க பயன்படுத்தப்படும் அறிவியல், உணவு உயிரியத் தொழில்நுட்பம் என அழைக்கப்படுகிறது. அதாவது உணவு தயாரிப்பிற்காக தாவரங்கள், மிருகங்கள் மற்றும் நுண்ம உயிரினங்களில் நவீன மரபியலை பயன்படுத்தி திருத்தங்கள் செய்யும் முறையே இது. இவ்வுலகத்தில் விவசாயம் எப்போது துவங்கியதோ அப்போதே உயிரினங்களில் மாற்றங்களை செய்யும் இந்த முறை துவங்கிவிட்டது; இது நம் முன்னோர்களிடமிருந்தே வழிவழியாக வந்துள்ள ஒரு சொத்தாகும். உதாரணமாக முதன்முறையாக ஒரு
விவசாயி தன் மாட்டு மந்தையில் எது வேண்டுமானால் எதனுடன் வேண்டுமானாலும் சேர்ந்து இனப்பெருக்கம் செய்யட்டும் என விட்டுவிடாமல், தன்னிடமுள்ள எருதுகளிலேயே சிறந்த எருதை தெரிந்தெடுத்து ஒரு சிறந்த பசுவுடன் இணைத்து இனப்பெருக்கம் செய்திருப்பார். அவர் அப்போதே துவக்கநிலை உயிரியத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினார் என சொல்லலாம். அதேபோல, ரொட்டியை தயாரிக்க யார் முதலில் ஈஸ்ட்டை பயன்படுத்தினாரோ அப்போதே தரமான பொருளை தயாரிக்க ஒருவகை உயிரினத்தை பயன்படுத்தும் முறை தோன்றிவிட்டது. இவ்வாறு காலங்காலமாக வந்துள்ள இந்த உத்திகள் எல்லாவற்றிலுமே இருக்கும் ஒரு ஒற்றுமை என்னவெனில், வித்தியாசமான உணவுகளை தயாரிக்க, இயற்கையான வழிமுறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.அதேபோல இக்காலத்து உயிரியல் தொழில்நுட்பமும், சில பொருட்களை மாற்றியமைக்க உயிரினங்களையே பயன்படுத்துகிறது. ஆனால் அப்போதிருந்த தொழில்நுட்பத்தைப் போல் இல்லாமல், இன்றைய நவீன உயிரியத் தொழில்நுட்பம் நாம் விரும்பும் விதத்தில் சரியாக மாற்றுவதற்கு, உயிரினங்களின் மரபணுக்களிலேயே நேரடியாக மாற்றங்களைச் செய்ய வழியை திறந்திருக்கிறது. ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத உயிரினங்களிலுள்ள ஜீன்களை இடமாற்றம் செய்து, வழக்கமான முறையில் ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லாதபடி இது செய்துவிடுகிறது. இதனால், ஒருவர் மற்ற உயிரினங்களிலிருந்து சில குறிப்பிட்ட குணாதிசயங்களை எடுத்து, செடியின் ஜீனோமில் வைத்துவிட முடியும். உதாரணமாக, சில மீன்களிலுள்ள குளிரை தாக்குப்பிடிக்கும் சக்தி, வைரஸில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி, மண் பாக்டீரியாவிலுள்ள பூச்சி எதிர்ப்பு சக்தி போன்றவற்றை இவ்வாறு உபயோகிக்கலாம்.
சாதாரணமாக, உருளைக்கிழங்கையோ ஆப்பிளையோ வெட்டிவைத்தால் அல்லது அது அடிபட்டுவிட்டால் சிறிது நேரத்திற்கெல்லாம் பழுப்பு நிறத்திற்கு மாறிவிடுகிறது. ஆனால் அவ்வாறு நிறம் மாறக்கூடாது என ஒரு விவசாயி விரும்பினால், அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற ஆராய்ச்சியாளர்கள் உதவுகின்றனர். அந்தப் பழங்கள் நிறம் மாறுவதற்கு காரணமாயிருக்கும் மரபனுக்களை எடுத்துவிட்டு, நிறம் மாறாதபடி பார்த்துக்கொள்ளும் மாற்றீடு மரபனுக்களை அவற்றில் செலுத்திவிடுகின்றனர். அதேபோல, பீட்ரூட்டை வளர்க்கும் ஒரு விவசாயி, இந்த சமயம் அதிக மகசூலை எடுக்க சீசனுக்கு முன்னதாகவே அவற்றை நட விரும்புகிறார் என வைத்துக்கொள்வோம். சாதாரணமாக அவர் அவ்வாறு செய்ய முடியாது, ஏனெனில் குளிர் காலத்தில் இவை விறைத்து செத்துவிடும். ஆனால் அந்த விவசாயிக்கு உதவ இப்போது உயிரியத் தொழில்நுட்பம் முன்வருகிறது. குளிர்ந்த தண்ணீரிலும் சந்தோஷமாக உயிர்வாழும் மீன்களிலிருந்து அதற்கு காரணமான மரபனுவை எடுத்து இந்த தாவரத்திற்குள் செலுத்துகின்றனர். அதன் விளைவு செழிப்பான GM பீட்ரூட் வளர்கிறது. இப்போது இதனால் மைனஸ் 6.5 டிகிரி செல்ஸியஸுக்கும் குறைவான சீதோஷணத்தை அதாவது சாதாரண பீட்ரூட்டால்
எந்த அளவிற்கு குளிரை தாங்க முடியுமோ அதைவிட இருமடங்கு குளிரையும் தாக்குப்பிடிக்கும்.இந்த அதிசயங்களெல்லாம் ஒரேயொரு ஜீன் மாற்றத்தாலேயே ஏற்படுகின்றன, இருப்பினும் இவற்றின் திறன் மட்டுப்பட்டவையே. வளர்ச்சியின் வேகம், வறண்ட காலத்தை தாக்குப்பிடிப்பது போன்றவை இன்னும் சிக்கலானது. அதனால் இன்றைய நவீன விஞ்ஞானத்தால் ஜீன்களின் முழு தொகுதிகளை மாற்றுவது என்பது கூடாத காரியமாகவே இருந்துவருகிறது. இன்னும் சொல்ல வேண்டுமானால், இந்த ஜீன்களுள் பெரும்பாலானவை இன்னும் கண்டுபிடிக்கப்படவே இல்லை.
புதிய பசுமை புரட்சியா?
பயிர்களில் மரபணு மாற்றங்களை செய்வது என்னவோ மட்டுப்படுத்தப்பட்டிருக்கிற போதிலும் இது செய்திருக்கும் அதிசயங்கள், இவற்றை ஆதரிப்பவர்களிடையே நம்பிக்கையான மனநிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த GM பயிர்கள் ஒரு புதிய பசுமை புரட்சிக்கு வழி திறந்திருக்கிறது என்று அவர்கள் சொல்கின்றனர். ஒவ்வொரு நாளும் 2,30,000 பேர் என்ற கணக்கில் அதிகரித்துவரும் இவ்வுலக ஜனத்தொகைக்கு தேவையான “அதிகளவான உணவை கொடுப்பதற்கு இது ஒரு சிறந்த கருவி” என இந்த மரபணு பொறியியலைப் பற்றி உயிரியல் தொழில்நுட்பத் துறையில் முன்னோடியாக விளங்கும் ஒரு நிறுவனம் அறிவித்தது.
ஏற்கெனவே இந்த பயிர்கள், உணவு தயாரிப்பிற்கு ஆகும் செலவுகளை குறைப்பதற்கு பெருமளவில் உதவியிருக்கின்றன. உணவு கொடுக்கும் தாவரங்கள், இயற்கை பூச்சிக்கொல்லியை தயாரிக்கும் மரபணுவால் பலப்படுத்தப்பட்டுள்ளன. இது ஏக்கர்கணக்காக வளரும் பயிர்களுக்கு அதிகளவான நச்சுத்தன்மையுடைய இரசாயனங்களை தெளிக்க வேண்டிய அவசியமில்லாமல் செய்துவிடுகிறது. பீன்ஸ், தானியங்கள் ஆகியவை வளர்க்கப்படும் மாற்றப்பட்ட பயிர்களில் உள்ளடங்கும். இவற்றில் அதிகளவான புரதச்சத்து இருக்கிறது, இவை உலகத்திலுள்ள ஏழ்மையான பகுதிகளில் அநேக குறிப்பிடத்தக்க பலன்களை அளிக்கின்றன. இப்படிப்பட்ட “சூப்பர் செடிகள்” அவற்றின் புதிய பயனுள்ள ஜீன்களையும் அதிலுள்ள தனித்தன்மைமிக்க அம்சங்களையும் அவற்றின் சந்ததிக்கும் கடத்தலாம். இதனால் அதிக ஜனத்தொகையுள்ள நாடுகளிலும் ஏழை நாடுகளிலும் குறைந்த விலையில் அதிக விளைச்சலை பெறலாம்.
“இவ்வுலகத்திலுள்ள விவசாயிகளின் வாழ்க்கையை முன்னேற்றுவிக்க வேண்டும் என்பதே நம் எல்லோருடைய விருப்பம்” என்றார் உயிரியத் தொழில்நுட்பத் துறையில் முன்னோடியாக விளங்கும் ஒரு நிறுவனத்தின் தலைவர். அவர் தொடர்கிறார் “நாம் நிச்சயம் அவ்வாறு செய்வோம். தாவரங்களை வளர்த்தவர்கள் நூற்றாண்டுகளினூடே ‘செடிகளை’ சேர்த்து அதாவது செடியோடு செடியை சேர்த்து இனப்பெருக்கம் செய்துள்ளனர், அதேபோல இப்போது மூலக்கூறு, ஒரு ஜீன் முறைகளில் உயிரியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதை சாதிப்போம். நம்முடைய தேவைகளுக்கேற்ப முன்பு இருந்ததைவிட வேகமாக சிறந்தவற்றை தயாரிப்போம்.”
இருப்பினும், வேளாண்மை விஞ்ஞானிகளுடைய கூற்றின்படி, இவ்வுலகத்திலுள்ள உணவு தட்டுப்பாட்டிற்கு மரபணு தொழில்நுட்பமே தீர்வு என அவசரப்பட்டு அதை ஆதரித்து அதிகரிப்பது, இப்போது செய்துவரப்படும் பயிர்களைப் பற்றிய ஆராய்ச்சிகளின் மதிப்பை குறைத்துவிடுகிறது அல்லது முக்கியமற்றதாக்கிவிடுகிறது. இந்த ஆராய்ச்சிகள் மரபணு தொழில்நுட்பத்தைப்போல ஆச்சரியத்திற்குரிவை அல்ல என்றாலும் அதிக சக்திவாய்ந்தவை; உலகிலுள்ள ஏழை நாடுகளுக்கு அநேக பலன்களை அளிக்கும். “உணவு தட்டுப்பாட்டை ஒழிக்க இன்னும் மற்ற அநேக நல்ல வழிகள் இருக்க, இன்னும் நிரூபிக்கப்படாத தொழில்நுட்பத்தை நம்பி ஏமாறக்கூடாது” என்கிறார் பயிர் நோய்களை தவிர்க்கும் வல்லுநரான ஹான்ஸ் ஹெர்ரன்.
கேள்விக்கிடமான நெறிமுறை
பயிர்களிலும் மற்ற உயிரினங்களிலும் மரபணு மாற்றங்களைச் செய்வது பொதுமக்களின் உடல்நலத்தையும் சுற்றுச்சூழலையும் ஆபத்திற்குள்ளாக்கும் வாய்ப்பு இருக்கிறது, ஆனால் அதற்கும் மேலாக, ஒழுக்கம் மற்றும் நெறிமுறை சார்ந்த விஷயங்களை கேள்விக்கிடமாக்குகிறது என சிலர் கருதுகின்றனர். விஞ்ஞானியும் புரட்சியாளருமான டக்லஸ் ஃபார் சொன்னார்: “கிரகத்தையே மாற்றிவிட, உயிரின் இயற்கையையே மாற்றிவிட இந்த மரபணு தொழில்நுட்பம் மனிதனுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது.” த பையோடெக் சென்சுரி என்ற புத்தகத்தின் நூலாசிரியரான ஜெரிமி ரிஃப்கின் இவ்வாறு எழுதினார்: “எப்போது நீங்கள் உயிரியலிலுள்ள எல்லைகளையெல்லாம் தாண்டுகிறீர்களோ, அப்போது எல்லா உயிரினத்தையும், எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளக்கூடிய வெறும் தகவல்களடங்கிய மரபணுக்களாகவே பார்ப்பீர்கள். அவ்வாறு இருந்தால் இயற்கையுடன் நமக்கிருக்கும் தொடர்பை மட்டுமல்ல ஆனால் அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைப் பற்றிய நம்முடைய கருத்தையும் மாற்றிவிடும்.” அதனால் அவர் இவ்வாறு கேட்கிறார்: “உயிரை மதிக்கிறோமா அல்லது வெறும் இயந்திரத்தைப் போல் உபயோகிக்கிறோமா? வருங்கால சந்ததிக்கான நம்முடைய கடமை என்ன? நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த உலகத்திலுள்ள மற்ற உயிரினங்களிடம் நமக்கிருக்கும் பொறுப்பை நாம் எவ்வாறு கருதுகிறோம்?”
இங்கிலாந்தைச் சேர்ந்த இளவரசர் சார்லஸ் உட்பட மற்றவர்கள், கொஞ்சம்கூட சம்பந்தமே இல்லாத உயிரினங்களிடையே இவ்வாறு மரபணுக்களை மாற்றுவது “கடவுளுக்கு சொந்தமான, கடவுளுக்கு மட்டுமே சொந்தமான அதிகாரத்தில் நாம் தலையிடுவதாகும்” என வாதிடுகின்றனர். கடவுள்தான் “ஜீவஊற்று” என பைபிள் மாணாக்கர்கள் உறுதியாக நம்புகின்றனர். (சங்கீதம் 36:9) இருப்பினும், நம் கிரகத்தில் வாழ்ந்துவந்துள்ள கோடிக்கணக்கானோருக்கு அதிக உதவிகளை செய்துள்ள முறையான, மிருகங்களிலும் செடிகளிலும் தெரிந்தெடுத்து சேர்த்து இனப்பெருக்கம் செய்யும் முறையை கடவுள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்த நவீன உயிரியல் தொழில்நுட்பம் மனிதர்களையும் சுற்றுச்சூழலையும் பாதிக்குமா என்பதை காலமே பதில் சொல்லும். ஆனால் அவ்வாறு உண்மையிலேயே இந்த உயிரியல் தொழில்நுட்பம் “கடவுளுக்கு சொந்தமான அதிகாரத்தை” அபகரிக்க முயற்சித்தால், அப்போது மனிதர்கள்மீது கடவுளுக்கிருக்கும் அன்பு மற்றும் அக்கறையின் காரணமாக இப்படிப்பட்ட முன்னேற்றங்களை தலைகீழாகக்கூட அவரால் மாற்றக்கூடும்.
[பக்கம் -ன் பெட்டி26]
ஆபத்தாகும் சாத்தியங்கள்
உயிரியத் தொழில்நுட்பம், கொஞ்ச காலத்திலேயே மின்னல் வேகத்தில் முன்னேறியிருக்கிறது. அதனால் சட்டத்தாலோ, கட்டுப்படுத்தும் நிறுவனங்களாலோ இதற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. அதுமட்டுமல்ல இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தால் என்ன பின்விளைவுகள் வரும் என்பதை ஆராய்ச்சியாளர்களால் முன்கூட்டியே அறிந்து, அவற்றை தடுக்கவும் முடியவில்லை. விவசாயிகளின் பொருளாதார நலிவு, சுற்றுச்சூழல் நாசம், மனிதர்களின் உடல்நலக் கேடு போன்ற எதிர்பாராத பின்விளைவுகளை இது ஏற்படுத்தலாம் என்பதே அநேகரின் ஒருமித்த கருத்து. GM உணவில் எந்த ஆபத்துமில்லை என நிரூபிப்பதற்கு எந்த ஒரு பெரிய அளவிலான, நீண்ட காலத்திற்குரிய ஆராய்ச்சியும் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். அவ்வாறு ஆபத்துகளை ஏற்படுத்த சாத்தியங்கள் இருக்கும் சில குறிப்புகளை கவனியுங்கள்:
● அலர்ஜி. உதாரணமாக, ஏதாவது அலர்ஜிக்கு வழிநடத்தும் புரதத்தை உண்டாக்கும் ஒருவகை ஜீன், தானியத்தில் மாற்றப்பட்டிருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். ஒருசில உணவுவகை ஒத்துக்கொள்ளாததால் அலர்ஜியில் அவதிப்படும் ஒருவர் அதை சாப்பிட்டால் அவருடைய உயிருக்கே அது ஆபத்தை விளைவிக்கலாம். அவ்வாறு மாற்றீடு செய்யப்பட்ட உணவுவகையில் அலர்ஜி ஏற்படுத்தும் புரதம் ஏதும் இருந்தால், உணவு கட்டுப்பாட்டு நிறுவனங்களுக்கு அதை அறிவிக்க வேண்டும் என்பது என்னவோ உண்மைதான், ஆனால் சில மறைமுகமான அலர்ஜென்கள் சோதனைகளை எல்லாம் ஏமாற்றிவிட்டு உணவில் கலந்துவிடலாம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் பயப்படுகின்றனர்.
● நச்சுத்தன்மை அதிகரிப்பு. இயற்கையாகவே சில செடிகளிலிருக்கும் நச்சுத்தன்மையை இந்த மரபணு மாற்றம் ஏதிர்பாராதவிதமாக அதிகரிக்கச் செய்துவிடலாம் என சில வல்லுநர்கள் நம்புகின்றனர். ஒரு ஜீன் செடிக்குள் செலுத்தப்பட்ட பிறகு, அது நல்ல விளைவுகளை ஏற்படுத்துவதோடுகூட, இயற்கையான நச்சை அதிகரிக்கவும் செய்யக்கூடும்.
●நோய் எதிர்ப்பு சக்திக்கு எதிர்ப்பு. தாவரங்களில் மரபணு மாற்றத்தின் ஒரு பாகமாக, தாங்கள் விரும்பிய ஜீன் வெற்றிகரமாக சென்று செயல்படுகிறதா என உறுதிப்படுத்திக்கொள்வதற்காக மார்க்கர் ஜீன் என அழைக்கப்படுவதை விஞ்ஞானிகள் பயன்படுத்துகின்றனர். இந்த மார்க்கர் ஜீன்களுள் பெரும்பாலானவை நுண்ணுயிர்க் கொல்லிகளை எதிர்க்கும் சக்தியை அளிப்பதால், நுண்ணுயிர் கொல்லியை எதிர்க்கும் திறன் என்ற நாளுக்குநாள் அதிகரித்துவரும் பிரச்சினைக்கு இதுவும் ஒரு முக்கியமான காரணமாக ஆகிவிடும் என சிலர் பயப்படுகின்றனர். இருப்பினும், இப்படிப்பட்ட மார்க்கர் ஜீன்கள் உயிரியலில் பயன்படுத்துவதற்கு முன்பே சேதமடைந்தவை, அதனால் இதில் ஆபத்து அதிகம் இல்லை என மற்ற சில விஞ்ஞானிகள் வாதிடுகின்றனர்.
●“சூப்பர் களைகளின்” அதிகரிப்பு. இருப்பதிலேயே அதிக பயத்திற்குரிய விஷயம் என்னவெனில், இவை மாற்றீடு செய்யப்பட்ட பிறகு, விதைகள் மற்றும் மகரந்தத்தின் மூலமாக ஜீன்கள் வெளியேறுகின்றன. இவை தன் இனத்தைச் சேர்ந்த மற்ற களைகளை சென்றடைகின்றன. இதனால் அவை “சூப்பர் களைகள்” உண்டாக்குகின்றன. இவை, களைக்கொல்லிகளை எதிர்க்கக்கூடும்.
● மற்ற உயிரினங்களுக்கு ஆபத்து. GM முறையில் வளர்க்கப்பட்ட தானியங்களின் மகரந்தம் படிந்திருந்த இலைகளை சாப்பிட்ட மோனார்க் வண்ணத்துப்பூச்சியின் கம்பளிப் புழுக்கள், வியாதிப்பட்டு இறந்துவிட்டன என கோர்னெல் பல்கலைக்கழகத்திலிருந்து ஆராய்ச்சியாளர்கள் மே 1999-ம் தேதி அறிக்கை செய்தனர். இந்த ஆராய்ச்சியின் உண்மைகளை நம்பாத அநேகர் இருக்கின்றனர். ஆனால் இதுவரை சோதனை செய்யப்படாத மற்ற உயிரின வகைகளை இது பாதிக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.
● பாதுகாப்பான பூச்சிக்கொல்லிகளுக்கு முடிவு. அதிக வெற்றிகளைக் கண்டுள்ள GM தாவரங்களில், பூச்சிகளை துரத்துவதற்கான ஒருவித புரத நச்சுடைய ஜீனைக்கொண்ட தாவரங்களும் சில இருக்கின்றன. எப்படியிருந்தாலும், தீங்கான பூச்சிகளை இப்படிப்பட்ட ஜீன்கள் தயாரிக்கும் நச்சுக்கு முன்பாக கொண்டுவருவதால் அந்த பூச்சிகள் உறுதித்தன்மையை வளர்த்துக்கொள்ள உதவி செய்து, பூச்சிக்கொல்லியை உபயோகமற்றதாக ஆக்கிவிடும் என உயிரியல் நிபுணர்கள் எச்சரித்திருக்கின்றனர்.