Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

திருமண துணையை தெரிவு செய்தல் இளைஞரான எங்கள்மீது நீங்கள் காட்டிய தகப்பன்போன்ற அக்கறைக்கு மிக்க நன்றி. “பைபிளின் கருத்து: மனம்போல் மணத்துணை அமைய” (அக்டோபர் 8, 1999) என்ற கட்டுரை பற்றித்தான் குறிப்பிடுகிறேன். அநேக இளைஞர் அனுபவம் இல்லாத காரணத்தாலேயே அவசரப்பட்டு திருமணம் செய்கின்றனர். மோகத்திற்கும் உண்மையான அன்பிற்கும் உள்ள வித்தியாசம் அவர்களுக்கு தெரிவதில்லை. எனக்கு பொருந்தாத ஒருவரை திருமணம் செய்துகொள்வதைவிட தனியாக இருப்பதையே விரும்புகிறேன்.

எஸ். ஆர்.எம்., பிரேஸில்

எனக்கு இப்போது 40 வயது. ஆனால் இன்னமும் திருமணமே செய்துகொள்ளவில்லை. ஒரு துணையை கண்டுபிடிக்க உதவும்படி நான் யெகோவாவிடம் தினமும் ஜெபிக்கிறேன். அதேசமயம், திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக்க உதவும் குணங்களை வளர்க்கவும் கடினமாக முயலுகிறேன். அதே இலக்குகளை உடைய, கடவுளுடைய ஆவியின் கனிகளை தன் வாழ்க்கையில் வளர்க்க கடினமாய் உழைக்கும் ஆவிக்குரிய பலமுள்ள நபரை தேடுவதே சிறந்தது போன்ற ஆலோசனைகளை வாசித்தபோது அதிக உற்சாகமூட்டியது. யெகோவாமீதே சார்ந்திருக்க வேண்டும் என்ற என் தீர்மானத்தை உறுதிப்படுத்தியதற்கு நன்றி, நன்றி, நன்றி!

ஈ.எஃப்., ஐக்கிய மாகாணங்கள்

ஸ்விப்ட்கள் எங்கள் வீட்டு பால்கனியிலிருந்து ஐரோப்பிய ஸ்விப்ட்கள் கூடு கட்டுவதை பல வருடங்கள் பார்த்திருக்கிறேன். அவை மே மாதத்தில் வந்து பிறகு திடீரென்று ஆகஸ்ட் மாதத்தில் காணாமல் போய்விடும். “பெயரும் ஸ்விப்ட்—பறப்பதும் ஸ்விப்ட்” (அக்டோபர் 8, 1999) என்ற கட்டுரையின் காரணமாக வியக்கத்தக்க இந்த பறவைகள் பற்றி இப்போது அதிகத்தைக் கற்றுக்கொண்டேன்.

ஏ.டீ., ஜெர்மனி

வாழ்க்கை சரிதை சுமார் பத்து வருடங்களாக நான் முழுநேர ஊழியத்தில் இருந்து வருகிறேன். நீங்கள் பிரசுரிக்கும் அருமையான கட்டுரைகளுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று அநேக சமயங்களில் நினைத்திருக்கிறேன். மிஷனரிகள் பற்றிய அருமையான அனுபவங்களே எனக்கு அதிக உதவியாக இருந்துள்ளன. ஒரு மிஷனரியாக இருக்க வேண்டும் என்பதே என் நெடுநாளைய ஆசை. வில்லியம் மற்றும் கெரே பான் சாலின் அனுபவங்கள் (“என் எதிர்பார்ப்புகளை மிஞ்சியது எதார்த்தம்,” அக்டோபர் 8, 1999), வெளிநாட்டில் சேவை செய்ய வேண்டும் என்ற என் ஆசை கொழுந்துவிட்டு எரிய உதவியாக இருந்தன.

பீ.கே., ஐக்கிய மாகாணங்கள்

மிகவும் உற்சாகமிழந்த ஒரு சமயத்தில் அந்தக் கட்டுரையை வாசித்தேன். நான் வைக்கும் ஆவிக்குரிய இலக்குகளை என்னால் அடையவே முடியாது என்று சில சமயங்களில் உணருவேன். முழுநேர ஊழியத்தில் இருந்தபோதிலும் சாதகமான மனநிலையை காத்துக்கொள்வது கடினமாக இருந்தது. வில்லியம் மற்றும் கெரே அநேக இடையூறுகளை எதிர்ப்பட்ட போதிலும் சாதகமான மனநிலையை வெளிக்காட்டினர், யெகோவாவும் அவர்களை ஆசீர்வதித்தார். நானும் என் விசுவாசத்தை பலமாக வைத்துக்கொண்டால் என்னுடைய இலக்குகளை அடைய யெகோவா உதவுவார் என்ற நம்பிக்கையை பலப்படுத்தியது.

கே.சீ., ஐக்கிய மாகாணங்கள்

பழகுதல் “இளைஞர் கேட்கின்றனர் . . . என்னால் ஏன் சகஜமாக பழக முடியவில்லை?” (அக்டோபர் 22, 1999) என்ற கட்டுரைக்கு மிக்க நன்றி. எனக்கு 17 வயதாகிறது, அந்தக் கட்டுரையை வாசித்தபோது அது எனக்காகவே எழுதப்பட்டிருப்பதை போல உணர்ந்தேன். என் இதயத்தில் இருக்கிற உணர்ச்சிகளை அப்படியே எழுதியிருந்ததுபோல் தோன்றியது. எனக்கு கர்வம் ஜாஸ்தி என்று அநேகர் கூறியிருக்கிறார்கள். ஆனால், ஒருவர் மற்றவர்களைப்போல சகஜமாக பழகவில்லை என்பதற்காக அவரை குறைகூற முடியாது என்பது முற்றிலும் உண்மை.

ஆர்.ஆர்., ஜெர்மனி

நான் குழந்தையாக இருந்தபோது அடிக்கடி நோய்வாய்ப்பட்டேன். அதன் காரணமாக மற்றவர்களிடமிருந்து ஒதுக்கப்பட்டதாக உணர்ந்தேன். ஆனால், என்னுடைய உணர்ச்சிகளை புரிந்துகொண்டு அவற்றை மேற்கொள்ள இந்தக் கட்டுரை எனக்கு உதவியது. இனி, எங்கள் சபையில் நண்பர்களை உருவாக்க முயலுவேன்.

ஜே.எஃப்.எஃப்., பிரேஸில்

ராங் நம்பர்! நான் எப்போதுமே உங்கள் பத்திரிகையை வாசித்து மகிழ்வேன். அவை அநேகமாக துல்லியமாய் இருக்கும். ஆனால், “உலகை கவனித்தல்” பகுதியில் “கார் பைத்தியம்” (செப்டம்பர் 8, 1999) என்ற பகுதி இவ்வாறு கூறியது: “ஐக்கிய மாகாணங்களில் சுமார் 4 கோடி வாகனங்கள் தற்போது புழக்கத்தில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.” உண்மையான எண்ணிக்கையோ அதைவிட மிகவும் அதிகமாகும்.

ஆர். கே., ஐக்கிய மாகாணங்கள்

தவறான ஒரு புள்ளிவிவரத்தை தவறுதலாக பிரசுரித்தமைக்கு வருந்துகிறோம். ஐக்கிய மாகாணங்களில் தற்போது சுமார் 13 கோடி கார்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.—ED.