Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சிறைப் பறவையிடம் சிறைக் கைதிகள் கற்கும் பாடம்!

சிறைப் பறவையிடம் சிறைக் கைதிகள் கற்கும் பாடம்!

சிறைப் பறவையிடம் சிறைக் கைதிகள் கற்கும் பாடம்!

தென் ஆப்பிரிக்காவிலுள்ள விழித்தெழு! நிருபர்

போல்முர் சிறைக் கைதிகளின் கல்நெஞ்சை கனிய வைக்கும் ஒரு திட்டத்தைப் பற்றி தென் ஆப்பிரிக்காவில் டர்பனிலிருந்து வெளிவரும் ஸண்டே ட்ரிப்யூன் என்ற செய்தித்தாள் கூறியது. அங்குள்ள 14 குற்றவாளிகள் காக்கடைல் என்ற ஆஸ்திரேலிய கிளிகளையும், லவ்பர்ட்ஸ் என்ற சிறு கிளிகளையும் சிறைக்குள் வளர்ப்பதே அத்திட்டம்.

அத்திட்டம் எவ்வாறு செயல்படுகிறது? ஒவ்வொருவருடைய சிறை அறையிலும் குஞ்சு பொரிக்கும் இயந்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து பொரிந்து வரும் குஞ்சை அந்தக் கைதியே கவனித்துக் கொள்கிறார். தாயில்லா இந்தச் சின்னஞ்சிறு குஞ்சுக்கு அடிக்கொருதரம் உணவளித்து, இரவு பகலாக கண்விழித்து சுமார் ஐந்து வாரங்களுக்கு கவனித்துக்கொள்கிறார். ஐந்து வாரங்களுக்குப்பின் அந்தப் பறவையை ஒரு கூண்டுக்குள் வைத்து, சிறைக் கைதியிடமே கொடுக்கிறார்கள். அப்பறவை வளர்ந்தவுடன், சிறைக் கைதியிடமிருந்து பிரித்து, பொது மக்களுக்கு விற்றுவிடுகிறார்கள். பாசத்தையெல்லாம் கொட்டி வளர்த்த கைதிகள், பறவைகளின் பிரிவு தாளாமல் கண் கலங்குகிறார்கள்.

சில பயங்கர கேடிகள்கூட இப்பறவைகளோடு தினமும் கொஞ்சி பழகியதால் தங்களுடைய அடாவடித்தனத்தைவிட்டு அன்பானவர்களாய், அமைதியானவர்களாய் மாறியிருக்கிறார்கள். ஒரு கைதி இவ்வாறு சொன்னார்: “நான் பறவைகளை அடக்கினேன், அவை என்னை அடக்கின.” பறவைகளிடமிருந்து பொறுமையையும் தன்னடக்கத்தையும் கற்றுக்கொண்டதாக மற்றொருவர் சொல்கிறார். ஒரு தகப்பனாக இருப்பது “பொறுப்புமிக்கது” என்பதை பறவை வளர்ப்பு உணர்த்தியதாக திருடனாக இருந்த மற்றொரு கைதி கூறினார். இவர் சிறை வாழ்வுக்கு முன்பு தகப்பன் என்ற பொறுப்பை தட்டிக்கழித்தவர்.

பறவை வளர்ப்பால் கைதிகளுக்கு மற்றொரு நன்மையும் கிடைத்திருக்கிறது. இத்திட்டத்தை உருவாக்கிய வைக்கஸ் க்ரெஸ்ஸி இவ்வாறு கூறினார்: “இங்கு கற்ற பறவை வளர்ப்பு கலையால், சிறையிலிருந்து விடுதலையான பின்பு பறவை வளர்ப்பவர்களிடம் அல்லது கால்நடை மருத்துவர்களிடம் வேலை கிடைக்கலாம்.”