Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகட்டான பாய்மரக் கப்பல் கண்காட்சி

பகட்டான பாய்மரக் கப்பல் கண்காட்சி

பகட்டான பாய்மரக் கப்பல் கண்காட்சி

பிரான்ஸிலுள்ள விழித்தெழு! நிருபர்

லக அழகிகள் என்ற பட்டப்பெயர் பெற்ற பாய்மரக் கப்பல்கள் ஜூலை 1999-ல் வட பிரான்ஸிலுள்ள ரூயன் எனும் இடத்தில் சந்தித்தன. இந்த நூற்றாண்டின் அர்மடா என அழைக்கப்படும் டாம்பீகமான நிகழ்ச்சிக்காக இவை சங்கமம் ஆயின. இந்நிகழ்ச்சியை எதிர்பார்த்து களைகட்டிய இந்தக் கப்பல் துறைமுகத்தில் முப்பது பெரிய பாய்மரக் கப்பல்கள் ஏழு கிலோமீட்டர் தூரத்திற்கு ஒயிலாக அணிவகுத்து நின்றன. 

“இந்த ஆயிரத்தாண்டின் பகட்டான பாய்மரக் கப்பல் கண்காட்சி” என இந்நிகழ்ச்சி விளம்பரம் செய்யப்பட்டது. இசை கச்சேரிகள், வாணவேடிக்கைகள், கடல்சார்ந்த ஓவியங்கள் மற்றும் புகைப்பட கண்காட்சிகள் ஆகியவை இந்த நிகழ்ச்சியில் இடம்பிடித்திருந்தன.

ஜூலை 9, வெள்ளிக்கிழமை பாய்மரக் கப்பல்களின் வருகை கோலாகலமாக இருந்தது. அடுத்த பத்து நாட்களுக்கு பிரான்ஸிலிருந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் இந்தக் கப்பல் துறைமுகத்திற்கு லட்சக்கணக்கானோர் வந்தவண்ணம் இருந்தனர்!

சில கப்பல்களின்—அதாவது டார் ம்வாஸிஸி (போலந்து), கெர்சான்ஸ் (உக்ரேன்), ஸ்டேட்ஸ்ராட் லெம்கூல் (நார்வே), லிபர்டாடு (அர்ஜன்டினா) ஆகியவற்றின்—நீளம் 100 மீட்டர், பாய்மரத்தின் உயரம் 50 மீட்டர் என இந்த ராட்சஷ பாய்மரக் கப்பல்கள் கடலில் சலனமின்றி நீந்திக்கொண்டிருந்தன.

அயர்லாந்து, உருகுவே, பெல்ஜியம், போர்த்துகல், ரஷ்யா, வெனிசுவேலா, ஜெர்மனி ஆகிய நாடுகள் உட்பட, 16 நாடுகளிலிருந்து வந்திருந்த உயரமான கப்பல்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டன. நெதர்லாந்துதான் சிறப்பு விருந்தினராக இடம்பெற்ற நாடு—ஆறு கப்பல்கள் ஆஜராகியிருந்தன. இவற்றில் மூன்று பாய்மரம் கொண்ட யூரோப்பா என்ற அழகிய கப்பலும், 1918-ல் முதல் கடற்பயண வாழ்வில் ஈடுபட்ட உயரமான மூன்று-பாய்மரம் கொண்ட வயதான ஊஸ்டர்ஷெல்டு என்ற கப்பலும் அடக்கம். இது விறகுகள், பதனிடப்பட்ட ஹெர்ரிங் மீன்கள், களிமண், தானியங்கள், வைக்கோல், பழங்கள் ஆகியவற்றை ஆப்பிரிக்காவிற்கும் மத்தியதரை கடல் பகுதிக்கும் வட ஐரோப்பாவிற்கும் கொண்டுசெல்ல பயன்படுத்தப்பட்டது.

அர்மடா—பார்வையாளர்களுடைய ஆர்வப் பசியை திருப்திசெய்வதற்கு நடத்தப்பட்ட விசேஷித்த நிகழ்ச்சி. நகரும் பாலம் போடப்பட்டது, இதனால் எல்லாரும் கப்பல் தளத்திற்குள் எளிதாக சென்று வரமுடிந்தது—அதுவும் இலவசமாக.

சில கப்பல்கள் திரைப்படங்களில் வந்து கண்ணுக்கு விருந்து படைத்திருக்கின்றன. உதாரணமாக, நார்வே நாட்டு கப்பல் கிரிஸ்டியன் ராடிக் 1958-ல் வெளிவந்த வின்ட்ஜாமெர் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறது. காஸ்க்லாட் (டேனிஷ் மொழியில் “ஸ்பெர்ம் திமிங்கலம்”) என்ற பாய்மரக் கப்பல் அநேக திரைப்படங்களில் வலம் வந்திருக்கிறது; ‘ரீமேக்’ செய்யப்பட்ட டிரெஷர் ஐலண்ட் என்ற படத்திலும் பியமார்கெய்ஸ் லென்ஸோலன் என்ற பிரெஞ்சு படத்திலும் இது பவனிவந்திருக்கிறது.

மூன்று பாய்மரங்களைக் கொண்ட எஸ்கரா என்ற போலிஷ் நாட்டு கப்பல் தனிச்சிறப்பு வாய்ந்தது; இந்த மூன்று பாய்மரத்திலும் பயன்படுத்தப்பட்ட சங்கிலிகள், துணிகள் விதவிதமாக இருந்தன. முன்பக்கத்திலுள்ள பாய்மர துணி சதுர சதுரமாக இருக்கிறது, மத்திப பாய்மர துணி நீள் சதுரமாக இருக்கிறது. கடைசி பாய்மர துணியோ முக்கோண வடிவில் இருக்கிறது.

ரூயன் துறைமுகத்தில் காட்சிக்கு வந்திருந்த பழைய கப்பல்களில் சில கடல் கல்லறையிலிருந்து காப்பாற்றப்பட்டவை. உதாரணமாக, கம்பீர தோற்றமுடைய கேப்டன் மிரன்டா என்ற உருகுவே நாட்டு கப்பலை நெஞ்சுரமிக்க ஆர்வலர்கள் மீட்டார்கள். பிரிட்டனிலுள்ள டுவாரன்நெஸ் துறைமுகத்தில் 1980-களின் ஆரம்பத்தில் மூழ்கிய ஆட்வால் மோலன் என்ற கப்பல் மீண்டும் மிதக்க விடப்பட்டது; அன்பான கவனிப்பால் அதற்கு உயிர்பிச்சை போடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், மிர் என்ற கப்பலுக்கும் விண்வெளியில் சுற்றிவரும் மிர் என்ற ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கும் வானொலி இணைப்பை ஏற்படுத்த வானொலி இயக்குநர்களின் உள்ளூர் சங்கம் தீர்மானித்தது. கடைசியாக, ஜூலை 17 இரவு 10:27 மணிக்கு, மூன்று பாய்மரங்களை கொண்ட மிர் கப்பலுக்கும் அதே பெயரைக் கொண்ட விண்வெளி கப்பலுக்கும் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. சுமார் 350 கிலோமீட்டர் உயரத்தில் மிதக்கும் விண்வெளி கூடத்திலுள்ள கமாண்டர் ஆஃபானசிவ் என்பவருடன் கேப்டன் ஷோர்கோவ் பேச முடிந்தது.

ஜூலை 18 ஞாயிறு அன்று அர்மடா உச்சக்கட்டத்தை அடைந்தது. ரூயனிலிருந்து சீயன் நதி வழியாக அவை கடலுக்குள் அணிவகுத்துச் சென்றன. இந்தப் பயணத்தில் பழைய நார்மான் கிராமங்களை, சந்நியாசி மடங்களை, அரண்மனைகளை கடந்துசென்றபோது, 120 கிலோமீட்டர் தூரம் வரை நின்றுகொண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் கப்பல்களிலுள்ள மாலுமிகளைப் பார்த்து கைகாட்டினார்கள்.

பிற்பாடு, வேறு இடங்களில் நடக்கும் போட்டி, திரைப்படம் அல்லது வேறு துறைமுகங்களில் நடக்கும் கண்காட்சியில் கலந்துகொள்ள இந்த அழகிய பாய்மர கப்பல்கள் நீந்திச் சென்றன. அந்தத் துறைமுகம் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது. ஆனால் ரூயன் குறைந்தபட்சம் பத்து நாட்களுக்காவது கப்பல்களுக்கு முக்கிய மையமாக விளங்கியதை எப்போதும் நினைவுகூரும்.

[பக்கம் 10-ன் தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

ஹான்ஃபிளர்

சீயன்

ரூயன்

[படத்திற்கான நன்றி]

பக்கங்கள் 10, 17, 31-ல் உள்ள வரைபடங்கள்: Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.

[பக்கம் 10-ன் படம்]

மூன்று பாய்மரம் கொண்ட மெக்ஸிக “குவாத்மோக்”

[பக்கம் 10-ன் படம்]

கடல் கல்லறையிலிருந்து காப்பாற்றப்பட்ட அழகிய “ஆட்வால் மோலன்”

[படத்திற்கான நன்றி]

© GAUTHIER MARINES/Photo Jo Gauthier

[பக்கம் 10-ன் படம்]

1855-ல் இருந்த ரூயன் துறைமுகத்தின் ஓவியம், பாய்மரக் கப்பல்கள் சீயனில் நீந்தும் காட்சி

[படத்திற்கான நன்றி]

Charles-Louis Mozin, Port de Rouen, vue générale © Rouen, Musée des Beaux-Arts

[பக்கம் 11-ன் படம்]

“ஊசிகோபுரங்களின் நகரமான” ரூயனில் எங்கு பார்த்தாலும் பாய்மரங்கள்

[படத்திற்கான நன்றி]

© GAUTHIER MARINES/Photo Jo Gauthier