மனமுறிவைச் சமாளிப்பது எப்படி?
பைபிளின் கருத்து
மனமுறிவைச் சமாளிப்பது எப்படி?
சிறிதளவேனும் மனமுறிவு ஏற்படாதவர்கள் யாருமே இல்லை என்றே சொல்லலாம். என்றாலும், இப்படிப்பட்ட மனச்சோர்வுகளை தாங்கிக்கொள்ள இயலாதவர்கள் சாவதே மேல் என சிலர் நினைக்கிறார்கள்.
மனமுறிவு உண்டாக்கும் பிரச்சினைகள், அழுத்தங்களுக்கு கடவுளுடைய உண்மை ஊழியர்களும்கூட விதிவிலக்கல்ல என பைபிள் காட்டுகிறது. உதாரணமாக, எலியாவையும், யோபுவையும் எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் இருவரும் கடவுளுடன் நல்ல உறவை அனுபவித்து வந்தவர்களே. பொல்லாத அரசி யேசபேலிடமிருந்து தன் உயிரைக் காத்துக்கொள்ள அங்கிருந்து ஓடியபின், எலியா “தான் சாகவேண்டும்” என யெகோவாவிடம் கேட்க ஆரம்பித்தார். (1 இராஜாக்கள் 19:1-4) நீதிமானாகிய யோபு ஒன்றன்பின் ஒன்றாக அருவருப்பான வியாதி, பத்து குழந்தைகளின் மரணம் உட்பட பல அவல நிகழ்ச்சிகளை சந்தித்தார். (யோபு 1:13-19; 2:7, 8) அவருக்கு ஏற்பட்ட மனமுறிவால் அவர் இவ்விதம் சொன்னார்: “எனக்கு இருக்கும் வேதனைகளைவிட சாவதையே தேர்ந்தெடுக்க விரும்புகிறேன்” (யோபு 7:15, த நியூ இங்லீஷ் பைபிள்) கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்களுக்கு உணர்ச்சிமிக்க ஏக்கமே உச்ச அளவில் இருந்திருக்கிறது என்பது தெளிவாகிறது.
இன்று சிலருக்கு முதுமையின் வேதனையான பாதிப்புகள், மணத்துணையின் மரணம், அல்லது மிக மோசமான பண நெருக்கடிகள் போன்றவை மனமுறிவுக்கு மூலகாரணமாக இருக்கலாம். மற்றவர்களுக்கோ கடுமையான அழுத்தம், சுற்றிச்சுற்றி தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் வேதனையான சம்பவங்களின் பாதிப்புகள் அல்லது குடும்பப் பிரச்சினைகள், போன்றவை நடுக்கடலில் மாட்டிக்கொண்டு கரைசேர முடியாமல் தத்தளிக்கவைக்கும் ஒவ்வொரு அலையைப் போன்று உணரச் செய்கின்றன. ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “செத்தால்கூட யாரும் கண்டுகொள்ளப்போவதில்லை என்ற அளவிற்கு அருகதையற்றவர்களாக நீங்கள் உணருகிறீர்கள். தனிமை உணர்வை சிலசமயங்களில் தாங்கிக்கொள்ளவே முடியாது.”
சிலருடைய விஷயத்தில் கடும் அழுத்தத்திலிருந்து விடுபட சூழ்நிலைகள் அவர்களுக்கு உதவுகின்றன. ஆனால் நம்முடைய சூழ்நிலைகள் மாறாது என்றால் அப்போது என்ன? மனமுறிவை முறியடிக்க பைபிள் எவ்வாறு நமக்கு உதவ முடியும்?
பைபிள் உதவுகிறது
எலியாவுக்கும் யோபுவுக்கும் அவர்களுடைய துன்பங்களின்போது அவர்களைத் தாங்கி ஆதரிக்க யெகோவாவுக்கு 1 இராஜாக்கள் 19:10-12; யோபு 42:1-6) இன்று இதை உணர்ந்து கொள்வது நமக்கு எப்பேர்ப்பட்ட ஆறுதலை தருகிறது! பைபிள் இவ்வாறு குறிப்பிடுகிறது: “தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.” (சங்கீதம் 46:1; 55:22) இப்படிப்பட்ட மனமுறிவின் உணர்வுகள் நம்மை மூழ்கடித்துவிடுவதாக தோன்றினாலும் யெகோவா நம்மை பலப்படுத்தி அவருடைய நீதியின் வலது கரத்தால் நம்மை தாங்குவதாக வாக்கு கொடுக்கிறார். (ஏசாயா 41:10) இந்த உதவியை நாம் எவ்விதமாக பயன்படுத்திக் கொள்ளலாம்?
திறமையும் வல்லமையும் இருந்தது. (பைபிள் விளக்குகிறபடி ஜெபத்தின் மூலமாக, “எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் [நம்முடைய] இருதயங்களையும் [நம்முடைய] சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக் கொள்ளும்.” (பிலிப்பியர் 4:6, 7) மனவேதனையின் காரணமாக மீளுவதற்கு வழியேயில்லை என நமக்குத் தோன்றலாம். என்றாலும், ‘ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருக்கையில்’ யெகோவா நம்முடைய மனங்களையும் இருதயங்களையும் காத்து சகித்துக் கொள்வதற்கான பலத்தையும் அருளுகிறார்.—ரோமர் 12:12; ஏசாயா 40:28-31; 2 கொரிந்தியர் 1:3, 4; பிலிப்பியர் 4:13.
நம்முடைய பிரச்சினைகளை ஜெபத்தில் திட்டவட்டமாகக் குறிப்பிடுவதன்மூலம் நாம் நன்மையடைவோம். நம்முடைய எண்ணங்களை தெரியப்படுத்துவது கடினமாக இருந்தாலும் இந்த பிரச்சினையைக் குறித்து நாம் என்ன உணருகிறோம், இதற்குக் காரணம் என்னவாக இருக்கலாம் என்பதை யெகோவாவிடம் மனம்விட்டுப் பேச வேண்டும். ஒவ்வொரு நாளும் நம்மை ஆதரித்து பலப்படுத்தும்படி மன்றாடுவது அவசியம். அவர் நமக்கு இவ்வாறு உறுதியளித்திருக்கிறார்: “அவர் [யெகோவா] தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார்.”—சங்கீதம் 145:19.
ஜெபம் செய்வதோடு மட்டுமல்லாமல் தனிமையைத் தவிர்க்க வேண்டும். (நீதிமொழிகள் 18:1) சிலர் தங்களுடைய நேரத்தையும் சக்தியையும் மற்றவர்களுக்கு உதவுவதற்கு செலவழிப்பதன் மூலம் பலப்படுத்தப்பட்டனர். (நீதிமொழிகள் 19:17; லூக்கா 6:38) மரியா என்ற பெண்ணை எடுத்துக்கொள்ளுங்கள், a அவர்கள் புற்று நோயால் போராடிக்கொண்டிருந்தது மட்டுமல்லாமல் ஒரு வருடத்திற்குள்ளாக தன்னுடைய எட்டு குடும்ப அங்கத்தினர்களையும் இழந்தார்கள். மரியா வலுக்கட்டாயமாக தன்னுடைய படுக்கையை விட்டெழுந்து அன்றாட வேலைக்குச் செல்ல வேண்டியிருந்தது. கூடியமட்டும் எல்லா நாட்களிலும் பைபிளைப் பற்றி மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கச் செல்வார்கள். கிறிஸ்தவ கூட்டங்களையும் தவற விடுவதில்லை. வீட்டுக்குத் திரும்பினால் பழையபடி எல்லா வேதனைகளும் மரியாவை நெருக்க ஆரம்பித்துவிடும். என்றாலும், மற்றவர்களுக்கு எப்படி உதவலாம் என்பதிலேயே குறியாக இருப்பதன்மூலம், மரியாவால் சகித்திருக்க முடிகிறது.
ஒருவேளை நமக்கு ஜெபம் செய்வது கஷ்டமாக இருந்தால் அல்லது நாம் தனிமையை தவிர்க்க முடியவில்லையென்றால், என்ன செய்வது? அப்போது நாம் கண்டிப்பாக உதவியை நாடியே ஆக வேண்டும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ‘சபையின் மூப்பர்களிடம்’ உதவியை நாட பைபிள் நம்மை ஊக்குவிக்கிறது. (யாக்கோபு 5:13-16) கடும் மன உளைச்சலால் அவதியுறும் ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “உங்களுக்கு நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் பேசுவது மனதை சொஸ்தப்படுத்துவதற்கும், மன கொந்தளிப்பை அமைதிப்படுத்துவதற்கும் உதவுகிறது. அதன்மூலம் அறிவுப்பூர்வமான சிந்தனை மேம்படுகிறது.” (நீதிமொழிகள் 17:17) ஆகவே, ஒரேயடியாக மனதுயரத்தில் ஆழ்ந்துவிட்டு அதனால் வியாதிப்பட்டால் தகுந்த மருத்துவ உதவியும்கூட தேவைப்படலாம். b—மத்தேயு 9:12.
பிரச்சினைகளிலிருந்து எளிதில் விடுபட முடியாவிட்டாலும் நாம் அப்பிரச்சினைகளை சமாளிக்க உதவுவதற்கு கடவுளுக்கு இருக்கும் திறமையை குறைவாக எடைபோடக்கூடாது. (2 கொரிந்தியர் 4:8) விடாது ஜெபம் செய்வது, தனிமையைத் தவிர்ப்பது, தகுதிவாய்ந்தவர்களிடம் உதவியை நாடுவது போன்றவை சமநிலையை மீண்டும் பெற நமக்கு உதவும். தாங்கமுடியாத மனமுறிவுக்குக் காரணமான அனைத்தையும் கடவுள் முடிவுக்கு கொண்டுவருவார் என பைபிள் வாக்குறுதியளிக்கிறது. ‘முந்தினவைகள் இனி நினைக்கப்படாத’ அந்த நாளுக்காக கிறிஸ்தவர்கள் காத்திருப்பதோடு அவரில் நம்பிக்கை வைக்கவும் தீர்மானிக்கிறார்கள்.—ஏசாயா 65:17; வெளிப்படுத்துதல் 21:4.
[அடிக்குறிப்புகள்]
a பெயர் மாற்றப்பட்டுள்ளது.
b விழித்தெழு! எந்த குறிப்பிட்ட சிகிச்சை முறையையும் பரிந்துரை செய்கிறதில்லை. எந்த சிகிச்சை முறையாக இருந்தாலும்சரி, அது பைபிள் நியமங்களுக்கு எதிராக இல்லாதவாறு கிறிஸ்தவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலுமான தகவல்களுக்கு காவற்கோபுரம் (ஆங்கிலம்) அக்டோபர் 15, 1988, பக்கங்கள் 25-9-ஐக் காண்க.