Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மௌனம் ‘பேசுகிறது’

மௌனம் ‘பேசுகிறது’

மௌனம் ‘பேசுகிறது’

லோய்டாவின் தாய் சொன்னபடி

சாதாரணமாக எல்லா கர்ப்பிணிகளுக்கும் வரும் அதே திகில், பயம், எனக்குள்ளும் லேசாக துளிர்விட்டது. எனக்கு பிறக்கப்போகும் குழந்தை ஏதாவது குறைபாடுடன் பிறந்துவிடுமோ என்ற கலக்கம். ஆனால் அந்த பயம் நிஜமாகும் என நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. என் மூன்றாவது பெண் குழந்தை லோய்டா பிறந்தபோது நடந்த சம்பவம் அது. இவ்வுலகத்தில் அவள் பிரவேசித்தவுடன் அழத்துவங்கினாள். ஆனால் அது சாதாரணமாக குழந்தைகள் பிறந்தவுடன் அழுவதுபோன்று இருக்கவில்லை. அவளுடைய கதறலை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் காரணம் தெரிந்ததும் துடித்துப்போனோம். பிரசவத்தின்போது டாக்டர் தன் கையிலிருந்த குறடுபோன்ற கருவியால் அசம்பாவிதமாக, லோய்டாவின் காறை எலும்பை [collarbone] உடைத்துவிட்டார். உடைந்ததை சரிசெய்வதற்காக அறுவை சிகிச்சை நடந்தது. சில வாரங்களில் லோய்டா எங்கள் வீட்டில் குடிபுகுந்தாள். அவளைக் கண்டு நாங்கள் எல்லாரும் மகிழ்ச்சியடைந்தோம். இருப்பினும் அந்த மகிழ்ச்சி கொஞ்ச நாட்களில் மேகமாய் கலைந்தது.

சில மாதங்களுக்குப் பிறகு லோய்டாவிடம் சில வித்தியாசங்களை பார்த்தோம். அவளுக்கு ஏதோ பிரச்சினை இருப்பது எங்களுக்கு தெளிவாக விளங்கியது. லோய்டாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால் ஒரு பலனும் இல்லை. அந்த சிகிச்சையால் அவளுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வலிப்பு போன்ற பின்விளைவுகள் வந்ததுதான் மிச்சம். இந்த வியாதிகளுக்கு வைத்தியம் பார்க்க பார்க்க, அவளுடைய நிலைமை இன்னும் மோசமாகிக் கொண்டே போவது போல் தெரிந்தது. விரைவிலேயே லோய்டாவின் உடல் கட்டுக்கடங்காமல் நடுங்க ஆரம்பித்தது. பிறகுதான் லோய்டாவுக்கு மூளைசார்ந்த முடக்கு வாதம் இருக்கிறது என்ற கசப்பான உண்மையை டாக்டர் எங்களுக்கு தெரிவித்தார். அவளால் இனிமேல் நடக்கவோ, பேசவோ, நாங்கள் சொல்வதை புரிந்துகொள்ளவோ முடியாது என டாக்டர்கள் கைவிரித்துவிட்டார்கள். எனக்கு நெஞ்சே வெடித்துவிடும்போல் இருந்தது!

பேசுவதற்கு ஆரம்ப முயற்சி

அவளுடைய இந்நிலை முன்னேறுமா முன்னேறாதா என்று நிச்சயமற்று இருந்தபோதிலும், லோய்டாவால் நிறைய விஷயங்களை புரிந்துகொள்ள முடியும் என எனக்கு தோன்றியது. அதனால் சாதாரணமாக குழந்தைகளால் எளிதில் புரிந்துகொள்ள முடிந்த சிறிய புத்தகங்களை அவளுக்கு வாசித்து காட்ட துவங்கினேன், அத்துடன் எழுத்துக்களையும் கற்றுக்கொடுக்க முயற்சிசெய்தேன். ஆனால் லோய்டாவால் பேசவும் முடியவில்லை, நான் சொல்வதை புரிந்துகொள்கிறாளா இல்லையா என்பதைக்கூட வெளிப்படுத்த முடியவில்லை. அவளுக்கு புரியும் விதத்தில் எந்த வழியிலாவது பேச முடியுமா என தெரிந்துகொள்ள தவியாய் தவித்தேன்.

காலங்கள் உருண்டோடின, நானோ லோய்டாவிற்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தேன். அவளுக்கு புத்தகங்களை வாசித்து காட்ட அநேக மணிநேரம் செலவிட்டேன். குடும்ப பைபிள் படிப்பில் எங்கள் கடைசி மகளாகிய நோயிமியுடன் லோய்டாவையும் உட்கார வைத்தோம். குடும்ப படிப்பில் பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல், என்னுடைய பைபிள் கதை புத்தகம் ஆகியவற்றை படித்தோம். a இந்த புத்தகங்களிலிருந்து அநேக பாடங்களை திரும்பத் திரும்ப வாசித்தும் காட்டினேன். ஆனால் எந்த பலனுமில்லை. என் முயற்சியால் எந்த பிரயோஜனமும் இல்லாததுபோல தோன்றியது.

பெற்ற தாய் தன் சொந்த மகளுடன் பேச முடியவில்லை என்றால், அது எவ்வளவு வேதனையாக இருக்கும்! அது சித்திரவதையைவிட கொடுமையானது. நான் எப்போதெல்லாம் பார்க்கிற்கு கூட்டிச்செல்கிறேனோ, அப்போதெல்லாம் அழத் துவங்கிவிடுவாள். அவளை சமாதானப்படுத்தவே முடியாது. மற்ற பிள்ளைகளைப் போல தன்னால் ஓடமுடியவில்லை, விளையாட முடியவில்லை என்பதை நினைத்து வேதனைப்படுகிறாள், அதனால்தான் அழுகிறாள் என எனக்கு தோன்றியது. ஒரு சமயம், என்னுடைய இன்னொரு மகள் என்னிடம் தன் பள்ளிப் புத்தகத்திலிருந்து எதையோ வாசித்தபோது லோய்டா திடீரென அழத் துவங்கிவிட்டாள். அவளுடைய மனதில் ஏதோ இருக்கிறது, அதை சொல்ல முடியாமல் தவிக்கிறாள் என்பது எனக்கு நன்றாகவே விளங்கியது. ஆனால் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நானும் மனதுக்குள் புழுங்கினேன். அவளுக்கு சாப்பாடு வேண்டும், தண்ணீர் வேண்டும் என்றாலோ, படுக்கைக்கோ, கழிவறைக்கோ செல்ல வேண்டும் என்றாலோ அதற்கு மட்டும் குறிப்பிட்ட சின்ன சின்ன தெளிவற்ற ஓசையை எழுப்புவாள்.

அவளுக்கு ஒன்பது வயதாயிருக்கையில், அவளை பள்ளியில் சேர்த்தேன். அது விசேஷ கவனம் செலுத்தப்பட வேண்டிய இவளைப்போன்ற பிள்ளைகளுக்காக நடத்தப்படும் பள்ளி. ஆனால் அங்கு சென்ற மூன்று வருடங்களில் அவள் நிலைமை இன்னும் மோசமாகியது. மற்றவர்களின் உதவியில்லாமல் ஒருசில அடிகளை எடுத்துவைத்து நடக்கக்கூட பயப்பட்டாள். அவள் சுத்தமாக சப்தம் எழுப்புவதையே நிறுத்திவிட்டாள் என சொல்லலாம். அதனால் லோய்டாவுக்கு வீட்டிலேயே சொல்லிக்கொடுப்பது நல்லது என என் கணவரும் நானும் முடிவு செய்தோம்.

அடுத்த ஆறு வருடங்கள், விடாமுயற்சியுடன் என்னால் முடிந்தளவுக்கு லோய்டாவுக்கு சொல்லிக் கொடுத்தேன். ஒரு கரும்பலகையில் சில வார்த்தைகளை எழுதி, லோய்டா அவற்றைப் பார்த்து தானாகவே எழுதுவாள் என எதிர்பார்த்தேன். ஆனால் மிஞ்சியது ஏமாற்றமே. அவள் பிரச்சினைதான் என்ன, அவளால் நான் சொல்வதை புரிந்துகொள்ள முடியவில்லையா? அல்லது தன்னுடைய கை அசைவை கட்டுப்படுத்த முடியாததால்தான் அவளால் எழுத முடியவில்லையா?

லோய்டா 18 வயதாயிருக்கையில், அவள் நிலை சமாளிக்கவே முடியாத அளவுக்கு மோசமாகியது. அதனால் என் மகளுடன் நான் எப்படியாவது பேச உதவும்படி யெகோவாவிடம் உருக்கமாக ஜெபித்தேன். கடைசியில், நான் செய்த ஜெபம் வீண்போகவில்லை. நாங்கள் கொஞ்சமும் எதிர்பாராத, வழக்கத்திற்கு மாறான வழியில் எங்களுக்கு பதில் கிடைத்தது.

மௌனத்திலிருந்து விடுதலை

அந்தப் பொன்னான நாளை என்னால் மறக்கவே முடியாது. அந்த நாள், லோய்டாவின் வாழ்க்கையில் வெளிச்சம் மின்னத் துவங்கிய நாள். அன்று என் மகள்கள் படுக்கையறையை புதுப்பித்துக்கொண்டு அலங்கரித்துக்கொண்டு இருந்தனர். அப்போது சுவரிலிருந்த அந்த பழைய வால்பேப்பரை பிய்த்துவிட்டு புதியதை ஒட்டுவது எங்கள் திட்டம். ஆனால் அந்த பழைய வால்பேப்பரை பிய்த்து போடுவதற்கு முன்பு, நோயிமி சுவரில் சில பெயர்களை எழுதினாள். பைபிளிலிருந்து சில பெயர்களையும், நண்பர்களுடைய சில பெயர்களையும், குடும்பத்திலிருந்தவர்களின் பெயர்களையும் அவள் எழுதினாள். சரி, என்னதான் செய்கிறாள் பார்ப்போமே என்ற எண்ணத்தில் என்னுடைய இன்னொரு மகளான ரூட் லோய்டாவிடம் “யெகோவா” என்ற பெயர் இதில் எங்கே எழுதியிருக்கிறது தெரியுமாவென கேட்டாள். கொஞ்சமும் எதிர்பாராத விதத்தில், கடவுளுடைய பெயர் எங்கு எழுதப்பட்டிருந்ததோ லோய்டா அங்கு சென்று அதற்கு பக்கத்தில் சாய்ந்துகொண்டாள். ரூட்டிற்கு ஒரே ஆச்சரியம், லோய்டாவால் மற்ற பெயர்களையும் கண்டுபிடிக்க முடிகிறதா என தெரிந்துகொள்வதற்காக, அவள் மீண்டும் மற்ற பெயர்களை கேட்டாள். ரூட் ஒருகணம் திகைத்துப்போனாள், லோய்டாவால் எல்லோருடைய பெயர்களையும் சரியாக கண்டுபிடிக்க முடிந்தது. அதிலும் அவற்றிலிருந்த சில பெயர்களை லோய்டா இதுவரை உச்சரித்ததுகூட கிடையாது! நாங்கள் எல்லோரும் இந்த அதிசயத்தைப் பார்ப்பதற்காக எங்கள் எல்லோரையும் ரூட் அழைத்தாள். என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை, உண்மையாகவே லோய்டாவால் வாசிக்க முடிகிறது!

இப்போது லோய்டாவால் வாசிக்க முடியும் என்பது தெரிந்துவிட்டது, அதனால் அடுத்து அவளுடன் பேசுவதற்கான வழியை கண்டுபிடிக்க வேண்டும் என நினைத்தோம். ஓர் அருமையான ஐடியா உதித்தது. சிறிய, கையளவு பலகையை அவளிடம் கொடுத்து, அதிலுள்ள சிறிய சிறிய எழுத்துக்களை சுட்டிக்காட்டி எங்களிடம் பேசும்படி சொல்ல முடியாது, ஏனென்றால் அந்தளவிற்கு அவளால் தன் கை அசைவை கட்டுப்படுத்த முடியாது. ஆகவே, எங்கள் பெரிய ஹால் சுவரில், பெரிய பெரிய எழுத்துகளை மாட்டி தொங்கவிட்டோம். லோய்டா எங்களிடம் என்ன ‘பேச’ விரும்புகிறாளோ, அதை, சுவரில் தொங்கவிடப்பட்டிருக்கும் ஒவ்வொரு எழுத்தினிடமும் நடந்துசென்று சுட்டிக்காட்டி, வார்த்தைகளை அமைத்து சொல்லவந்ததை சொல்வாள். இது எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என சற்று கற்பனை செய்து பாருங்கள். உதாரணத்திற்கு, ஒரு பக்கம் அளவிற்கு விஷயத்தை சொல்ல வேண்டுமானால், லோய்டா எத்தனை கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டியிருக்கும், அத்துடன் எத்தனை மணிநேரம் எடுக்கும்!

இருப்பினும், லோய்டா அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. எங்களுடன் மௌன மொழியில் “பேச” அதிக சந்தோஷப்பட்டாள். அவள் எங்களிடம் சொன்ன முதல் வாக்கியம்: “எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த விதத்திலாவது உங்களோடு பேச முடிகிறதே! இதற்கு காரணமே யெகோவாதான், அவருக்கு ரொம்ப ரொம்ப நன்றி.” ஆச்சரியத்துடன் லோய்டாவிடம் இவ்வாறு கேட்டோம்: “நீ இதற்கு முன்பு நாள் முழுவதும் இங்கு உட்கார்ந்திருந்த போது என்ன செய்துகொண்டிருந்தாய்?” எங்களிடம் என்ன சொல்லலாம் என தன் மனதில் யோசித்துக் கொண்டிருந்ததாக லோய்டா சொன்னாள். அதுமட்டுமல்ல, எங்களுடன் எப்படியாவது பேச வேண்டுமென்று கடந்த 18 வருடங்கள் ஏங்கியதாக லோய்டா சொன்னாள். “ரூட் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்த பிறகு, நானாகவே அந்த பள்ளி புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தேன். என் வாயை அசைத்து சில ஓசையை எழுப்பி உங்களுடன் பேச முயற்சித்தேன், ஆனால் நான் சொல்வதை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதனால்தான் எனக்கு அடிக்கடி அழுகை அழுகையாய் வந்தது” என தன் சோகத்தை கொட்டினாள்.

இதைக் கேட்டு என் கண்களில் பெருக்கெடுத்த கண்ணீருக்கு என்னால் அணைபோட முடியவில்லை. நான் இதுவரை அவளை சரியாக புரிந்துகொள்ளாததற்காக மன்னிப்பு கேட்டேன். அதற்கு லோய்டா சொன்ன பதில் என்னை மெய்சிலிர்க்க வைத்தது: “நீங்க நல்ல அம்மா, என்ன இந்தளவுக்கு கவனிக்காம விட்டிருந்தா எனக்கு என்ன ஆயிருக்கும்! உங்ககூட இருக்கும்போதெல்லாம் ரொம்ப சந்தோஷப்பட்டேன். நான் உங்கமேல உயிரையே வெச்சிருக்கேன். நீங்க இனி அழவே கூடாது, சரியா?”

ஆவிக்குரிய முன்னேற்றம்

பைபிளைப் பற்றிய அநேக விஷயங்களை அவள் ஏற்கெனவே அறிந்திருந்தாள், சில பைபிள் வசனங்களை மனப்பாடம்கூட செய்திருந்தாள். பிறகு, அவள் மனதிலிருந்த மற்றொரு ஆசையை வெளிப்படுத்தினாள், வாரா வாரம், கேள்வி பதில் மூலம் நடத்தப்படும் பைபிள் கலந்தாலோசிப்பான சபை காவற்கோபுர படிப்பில் தான் பதில் சொல்ல வேண்டும் என்பதே அவளுடைய ஆசை. இதை எப்படி செய்வாள்? நாங்கள் யாராவது அவளுக்கு முதலில் முழு கட்டுரையையும் படித்து காண்பிப்போம். பிறகு எந்த கேள்விக்கு பதில் சொல்வது என அவளே தேர்ந்தெடுப்பாள். தன் பதிலை அவள் ஒவ்வொரு எழுத்தாக சுட்டிக்காட்ட, நாங்கள் அதை ஒரு தாளில் எழுதிக்கொள்வோம். பிறகு கூட்டத்தில், லோய்டாவின் பதிலை அவளுக்காக நாங்கள் யாராவது வாசிப்போம். “கூட்டங்களில் நான் பங்கு கொள்வதைக் குறித்து எவ்வளவு சந்தோஷமாயிருக்கிறது தெரியுமா! அவ்வாறு செய்யும்போது என்னையும் இந்த சபையின் பாகமாக உணரச் செய்கிறது” என லோய்டா ஒருமுறை கூறினாள்.

லோய்டா 20 வயதாயிருக்கையில், முழுக்காட்டுதல் எடுக்க வேண்டும் என்ற அடுத்த விருப்பத்தை வெளிப்படுத்தினாள். ஆனால் ஒருவர் முழுக்காட்டுதல் எடுக்க வேண்டுமானால் முதலில் யெகோவாவுக்கு தன்னை ஒப்புக்கொடுக்க வேண்டும், அதைப் பற்றி உனக்கு தெரியுமா என கேட்டோம். அதற்கு தான் அதை அநேக ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது தான் 13 வயதாயிருக்கும்போதே செய்துவிட்டதாக கூறியது வியப்பாய் இருந்தது. “நான் யெகோவாவிடம் ஜெபித்து, என் வாழ்நாள் முழுக்க அவருக்கு சேவை செய்ய விரும்புவதாக சொன்னேன்” என்றாள். ஆகஸ்ட் 2, 1997-ம் ஆண்டு லோய்டா யெகோவாவுக்கு தான் செய்த ஒப்புக்கொடுத்தலை, தண்ணீர் முழுக்காட்டுதல் மூலம் அடையாளப்படுத்தினாள். பின்பு லோய்டா சொன்னாள், “யெகோவாவின் உதவியால் என் நெடுநாள் ஆசை நிறைவேறியது!”

இப்போது லோய்டா, கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி உறவினர்களிடமும் அயலகத்தாரிடமும் பேசுவதில் அதிக சந்தோஷப்படுகிறாள். சில சமயங்களில் நாங்கள் தெரு ஊழியம் செய்யும்போது அவளும் எங்களுடன் சேர்ந்துகொள்கிறாள். வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், கதவருகில் வைப்பதற்காக ஒரு சிறிய கடிதத்தையும் அவளே தயாரித்திருக்கிறாள். வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்களைப் பார்த்துவிட்டால்போதும் அவ்வளவுதான், என்னவோ தெரியவில்லை அவளுக்கு அவர்கள்மீது அவ்வளவு அக்கறை. உதாரணமாக, எங்கள் சபையில் ஒரு சகோதரி இருக்கிறார், அவருடைய கால் துண்டிக்கப்பட்டுள்ளது. அவரிடம் லோய்டா, “ஒருவரால் நடக்க முடியவில்லையென்றால் எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என எனக்கு தெரியும்” என கூறினாள், அத்துடன் அந்த சகோதரியை உற்சாகப்படுத்தும் விதத்தில் ஒரு கடிதத்தையும் தயாரித்தாள். மற்றொரு சபையிலுள்ள இளம் பையனாகிய ஹைரோ-வையும் லோய்டாவுக்கு தெரியும், இவனுக்கு தலைக்கு கீழே எல்லா பாகங்களுமே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு செயலிழந்துவிட்டன. இந்த பையனுடைய நிலையைக் குறித்து லோய்டா கேள்விப்பட்டவுடன் அவனுக்கு ஒரு கடிதத்தை எழுதினாள். அந்தக் கடிதத்தின் ஒரு பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தாள்: “சீக்கிரத்தில் யெகோவா நம் எல்லோரையும் குணப்படுத்திவிடுவார். பரதீஸில் எந்த கஷ்டமுமே இருக்காது. அப்போது நான் ஓட்டப்பந்தயத்தில் உன்னுடன் போட்டி போட்டு ஓடுவேன். அந்த சமயத்தில் இருக்கப்போகும் சந்தோஷத்தை நினைத்து பார்க்கும்போது எனக்கு இப்போதே சந்தோஷமாக இருக்கிறது. யெகோவா நம்மை சிருஷ்டித்ததைப் போலவே நாம் எந்த வியாதியுமின்றி வாழப்போகிறோம், . . . அந்த நிலை எவ்வளவு அற்புதமாக இருக்கும்!”

சகித்திருக்க உதவி

முன்பு லோய்டாவின் சில செயல்கள் எனக்கு எரிச்சலூட்டும், ஒன்றுமே புரியாது, ஆனால் இப்போது அநேக விஷயங்களை புரிந்துகொள்கிறேன். உதாரணமாக, தன்னுடைய சிறுவயதில், தான் வெறுப்படைந்திருந்ததால், யாரும் அவளை தழுவுவதை, அணைப்பதை அவள் விரும்பவில்லை என இப்போது சொல்கிறாள். “என்னுடைய சகோதரிகளால் பேச முடிகிறது, புரிந்துகொள்ள முடிகிறது ஆனால் என்னால் முடியவில்லையே என நினைக்கும்போது அது அநியாயமாக இருந்தது” என்கிறாள். “எனக்கு கோபம் கோபமாக வந்தது. நான் செத்துவிட்டால் நல்லது என்றுகூட சில சமயம் நினைத்திருக்கிறேன்.”

எங்களுடன் பேசும் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறபோதிலும், லோய்டா அநேக கஷ்டங்களை எதிர்ப்படுகிறாள். உதாரணத்திற்கு, ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியான வலிப்புகள் ஏற்படுகின்றன, அந்த சமயங்களில், அவளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது, அவளுடைய கை, கால்கள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அசைகின்றன. அத்துடன், என்ன வியாதியாக இருந்தாலும், ஒருவேளை ஜலதோஷமாக இருந்தால்கூட அவள் அதிகளவில் வலுவிழந்துவிடுகிறாள். அடிக்கடி தன் நிலையைக் குறித்து லோய்டா சோர்ந்துபோகிறாள். இருப்பினும் அவள் சகித்திருக்க எது உதவியிருக்கிறது? அவளே இதை சொல்லட்டுமே:

“ஜெபம் எனக்கு மிகப் பெரிய உதவியாக இருந்திருக்கிறது. நான் யெகோவாவுடன் பேசவும் அவருடன் நெருக்கமாக உணரவும் இது உதவியிருக்கிறது. ராஜ்ய மன்றத்தில் மற்றவர்கள் என்னை அன்போடு கவனித்துக்கொள்கிறார்கள், அதை பாராட்ட வார்த்தைகளே இல்லை. எனக்கு இருக்கும் அநேக சரீர பிரச்சினைகளின் மத்தியிலும், என்மீது அன்பையும் பாசத்தையும் தாராளமாக பொழிந்து என்னை வளர்த்த என் பெற்றோருக்காக நான் கொடுத்துவைத்திருக்க வேண்டும். என் சகோதரிகள் எனக்கு செய்திருக்கும் எல்லா நன்மைகளையும் என்னால் மறக்கவே முடியாது. அந்த பழைய சுவரில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகள்தான் என் வாழ்க்கையின் மிகப் பெரிய திருப்பு முனை. யெகோவாவின் அன்பும், குடும்பத்தினரின் அன்பும் இல்லையென்றால், என் வாழ்க்கையே அர்த்தமற்றதாகிவிட்டிருக்கும்.”

[அடிக்குறிப்பு]

a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டவை.

[பக்கம் 24-ன் படம்]

லோய்டாவும் அவள் குடும்பமும்