Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“லிட்டில் பிரதர்” வீடு திரும்பும்போது

“லிட்டில் பிரதர்” வீடு திரும்பும்போது

“லிட்டில் பிரதர்” வீடு திரும்பும்போது

கனடாவிலிருந்து விழித்தெழு! நிருபர்

நமது “லிட்டில் பிரதர்” ஏழெட்டு மாத நாடோடி வாழ்க்கைக்குப் பிறகு ஒவ்வொரு வசந்தத்திற்கும் ஆர்க்டிக் கரைகளில் அமைந்துள்ள தன் வீட்டை நோக்கி பயணம் செய்கிறார். இது அவர் ஜோடி சேரும் காலம். அதனால் ‘டிப்டாப்பாக’ மாப்பிள்ளை போல வருகிறார். அவர் யார்? அவர்தான் பஃபின். அவருடைய பட்டுப்போன்ற பாதங்கள் பளபளக்கும் ஆரஞ்சு நிறத்திற்கு மாறிவிட்டன, அலகுகளின் மேல் புறத்தில் வண்ண நிறத்தில் ஒரு வளர்ச்சி ஏற்படுகிறது, இவ்வாறு வளர்ந்த அலகு பிற்பாடு விழுந்துவிடும். எடுப்பாக தெரியும் ‘பிளாக்-அண்டு-வொய்ட்’ இறகுகள் ஆண்டு முழுவதும் அப்படியே இருக்கும். இது, பஃபினுக்கு பாதிரியார் வேஷத்தை தருகிறது. அட்லாண்டிக் பஃபினுக்கு பிராடர்குலா ஆர்க்டிகா என்ற விஞ்ஞான பெயர் சூட்டப்பட்டதற்குரிய காரணத்தை இது புரியவைக்கலாம்; இப்பெயர் “வடக்கே வாழும் சின்ன துறவி, அல்லது லிட்டில் பிரதர்” என அர்த்தப்படுத்துகிறது. a

செங்குத்தான மலைப்பகுதிகளிலுள்ள கூடுகளை நோக்கி சிறுசிறு கூட்டங்களாக சிறகடித்துப் பறந்து வருகின்றன இந்த பஃபின்கள்; ஒவ்வொரு கூட்டத்திலும் சுமார் 20 அல்லது 30 பறவைகள் இருக்கும். பயணம் செய்யும்போதோ கூடுகளை சென்றடையும்போதோ பஃபின்கள் தங்களுடைய துணையையே தேடிச் செல்லும். அநேக பஃபின்கள் அதனதன் கூடுகளுக்கே திரும்புவது அக்கறைக்குரிய விஷயம்—அதோடு, வருஷாவருஷம் அதே துணையையே அண்டி வருகின்றன.

பஃபின்களால் பறக்க முடியும், ஆனால் அவை உலகின் மிகச் சிறந்த பெரிய “வானூர்திகள்” அல்ல. சொல்லப்போனால், கரையில் அவை தரையிறங்குவது சேதமடைந்த விமானம் இறங்குவதுபோல இருக்கின்றன! அதோடு, பஃபின்கள் மேலெழும்புவதும் சற்று ஏடாகூடமாகத்தான் இருக்கும். சிலசமயங்களில், அந்தப் பறவையின் பெருத்த உடலை இறக்கைகள் தாங்க முடிவதில்லை போல் தெரிகிறது. தண்ணீரிலிருந்து வெளியே வருவதற்கும்கூட சில பஃபின்கள் தத்தளிக்கின்றன. ஆனால், அதன் இறக்கைகளை படபடவென்று அடிக்க ஆரம்பித்துவிட்டால்—நிமிடத்திற்கு 400 தடவை என்ற வேகத்தில் அடிக்கலாம்—மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் பறக்க முடியும்.

கரை வாழ்வைவிட கடல் வாழ்க்கையே அவற்றிற்கு அதிக சொகுசான வாழ்க்கை. ஆனால் கரைக்கும் வரவேண்டும், ஏனெனில் பஃபின் தம்பதியினர் தங்களுடைய பிள்ளை குட்டிகளை சீராட்டிப் பாராட்டி வளர்க்க “வீடு” கட்ட வேண்டுமே! கரையை வந்தடைந்ததும் ஒரு ஜோடி அதன் வீட்டை சுத்தம் செய்யும். ஆமாம், வீடு எவ்வளவு பெரியது தெரியுமா? அது 50 சென்டிமீட்டர் நீளத்தில் ஆரம்பித்து கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகமாகவும் இருக்கும். புல்கள், கிளைகள், இறகுகள் ஆகியவற்றால் வீட்டில் மெத்தென்று படுக்கை அமைக்கும். சில பஃபின்களுக்கு கரடுமுரடான பாறை இடுக்குகள்தான் வீடு. எப்படி மண்ணை ஒதுக்கித் தள்ளும் என்றா நினைக்கிறீர்கள்? அதன் அலகுதான் அதற்கு மண்வெட்டி, சவ்வு போன்ற பாதங்கள்தான் மண்வாரி.

பஃபின்கள் தண்ணீரில் இருக்கும்போது உறவு கொள்கின்றன, இந்த சமயத்தில் தலையை கோதிவிடுதல், நெஞ்சை நிமிர்த்திக் காட்டுதல், இறக்கையை படபடவென அடித்துக்கொள்ளுதல், அலகால் இடித்துக்கொள்ளுதல் போன்ற “சில்மிஷங்கள்” நடக்கின்றன. கடைசி “சில்மிஷம்” அலகால் இடித்துக்கொள்ளுதல், இது உடலுறவுக்குப் பின்பும் தொடருகிறது. இது, அந்த ஜோடியின் பரஸ்பர பந்தத்தை உறுதிப்படுத்துவதுபோல அமைகிறது.

ஒரு முட்டையிட்ட பிறகு, அதை எடுத்து செட்டைகளுக்குள் வைத்துக்கொள்கின்றன—தாயும் தகப்பனும் பொறுப்பை பகிர்ந்துகொள்கின்றன. ஆறு வாரங்களுக்குப்பின் வெளிவருகிறது குட்டி பஃபின். அப்பொழுதுதான் உண்மையிலேயே பெற்றோருக்கு வேலை ஆரம்பிக்கிறது. பார்ப்பதற்கு அவன் சாம்பல் கலந்த கருமைநிறத்தில் பஞ்சுபோல மென்மையாக இருக்கிறான். தன் உடல் உஷ்ணத்தை காத்துக்கொள்ள பெற்றோரின் அணைப்பிலேயே ஒரு வாரத்தைக் கதகதப்பில் கழிக்கிறான். தன் பிள்ளையின் பசியாற்ற போதுமான உணவுக்காக அந்தப் பஃபின்கள் சளைக்காமல் பல தடவை கடலுக்கு செல்கின்றன. மீன்பிடி தொழில் ஒன்றும் அதற்கு அவ்வளவு ஆபத்தானதல்ல, ஏனெனில் பல பஃபின்கள் கடலுக்கு சென்று பத்திரமாக வீடு திரும்புகின்றன. எல்லா பறவைகளும் படுசூட்டிப்போடு செயல்படுவதால் கல்ஸ் பறவைகள் மற்றும் கொன்று தின்னும் பிற விலங்குகளின் பிடியில் அவை சிக்குவதில்லை போலும்!

பஃபின்கள் நீச்சலடிப்பதிலும் மூழ்குவதிலும் கில்லாடிகள். சவ்வு போன்ற பாதங்களை சுக்கானாகவும் இறக்கைகளை துடுப்புகளாகவும் பயன்படுத்தி, தண்ணீருக்குள் 30 நொடிகளுக்கும் மேல் ‘தம்கட்டி’ இருக்க முடியும்; சுமார் 30 மீட்டர் ஆழத்திற்கும் செல்ல முடியும். ஓரிரண்டு சிறிய மீன்களை—கேப்லின்ஸ் அல்லது சேன்டு லேன்ஸஸ் மீன்களை—அலாக்காக அலகில் கொத்திக்கொண்டு ஜிவ்வென பறந்து வருகிறது தன் “வீட்டிற்கு.” எந்தளவுக்கு மீன் சிறியதாக இருக்கிறதோ அந்தளவுக்கு அதனுடைய அலகால் நிறைய மீன்களை வாரிக்கொண்டு வரமுடியும். ஒருசமயம் ஒரே பஃபின் 60-க்கும் அதிக மீன்களை கவ்வி வந்ததாம்! அதன் வாயில் பின்னோக்கி அமைந்த சிறிய முட்கள் அல்லது கொக்கிகள் இருக்கின்றன; அவை மீன்களை பிடித்துப்பிடித்து வாயில் வைத்துக்கொண்டே இன்னும் நிறைய மீன்களை பிடிப்பதற்கு அந்த பஃபினுக்கு உதவுகின்றன. இது ஒருவிதத்தில் அதிக சௌகரியம், ஏனெனில் ஒரு நாளைக்கு ஒரு ‘பேபி’ பஃபின் 50 மீன்களை சாப்பிட்டுவிடும்.

சுமார் ஆறு வாரங்களுக்குப்பின், பஃபின் தம்பதியினர் மீண்டும் கடலுக்குத் திரும்புகின்றனர். தன்னந்தனிமையில் விடப்பட்ட அந்தக் குட்டி பஃபின் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு உடலை மெலிய வைக்கிறது. மாலை வேளைகள்தான் இறக்கைகளுக்கு உடற்பயிற்சி அளிக்கும் சமயங்கள். கடைசியாக, இருள் சூழ்ந்திருக்கும் வேளையில், அந்த பஃபின் கடலுக்கு வேகமாக ஓடிவந்து தீவிரமாக துடுப்பு வலிக்கிறது.

குட்டி பஃபின் மீண்டும் தன் பிறப்பிடத்திற்கு திரும்பி வருவதற்கு இரண்டு, மூன்று ஆண்டுகள் ஆகின்றன. அது இணை சேருவதற்கு முன்பு நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் செல்கின்றன. பருவமடைந்த பஃபின் சுமார் 490 கிராம் எடையுடன் இருக்கும், ஏறக்குறைய 30 சென்டிமீட்டர் உயரம்தான் இருக்கும். பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும், ஆரோக்கியமான பஃபின் சுமார் 25 ஆண்டுகள் வாழ்ந்து வெள்ளி விழா கொண்டாடிவிடும். அட்லாண்டிக் பஃபின் ஒன்று 39 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தது!

அட்லாண்டிக் பஃபினின் ஜனத்தொகை இரண்டு கோடி என நிபுணர்கள் கணிக்கிறார்கள். பார்ப்பதற்கு இந்தப் பறவைகள் படுகவர்ச்சியானவை. “சாதாரண விஷயங்களிலும்கூட இந்தப் பஃபின் மகிழ்வூட்டுகிறது” என தி அட்லாண்டிக் பஃபின் புத்தகத்தில் எழுதினார்கள் டேவிட் போயக் மற்றும் மைக் அலெக்ஸாண்டர். அட்லாண்டிக் அல்லது பசிபிக்கின் வடகரைகளில் நீங்கள் வாழ்ந்தால், ஒருவேளை இதை நீங்கள் பார்க்கலாம். எப்படியிருந்தாலும்சரி, ஒரு விஷயம் நிச்சயம்—ஒவ்வொரு வசந்தத்திலும் “வடக்கே வாழும் லிட்டில் பிரதர்” வீடு திரும்புவார், கரிய நிறமான இறக்கைகள் கொண்ட ஒரு புதிய தலைமுறை பொரிக்கும்.

[அடிக்குறிப்பு]

a தண்ணீரிலிருந்து மேலெழும்பும்போது பஃபின் தன்னுடைய சவ்வு போன்ற பாதங்களை ஒன்றாக சேர்த்துக்கொள்கிறது, அது ஜெபிப்பது போன்ற தோற்றத்தை அளிக்கிறது. இதைத்தான் அந்தப் பெயர் மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறது.

[பக்கம் 15-ன் படம்]

நியூ பௌன்ட்லேண்ட், விட்டில்ஸ் வளைகுடாவில் பஃபின்கள்

[படத்திற்கான நன்றி]

நன்றி: Tourism, Newfoundland and Labrador; photographer: Barrett and Mackay

[பக்கம் 14-ல் உள்ள படத்திற்கான நன்றி]

நன்றி: Tourism, Newfoundland and Labrador

[பக்கம் 15-ல் உள்ள படத்திற்கான நன்றி]

Tom Veso/Cornell Laboratory of Ornithology