Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அனகொண்டா—கக்கும் சில ரகசியங்கள்

அனகொண்டா—கக்கும் சில ரகசியங்கள்

அனகொண்டா—கக்கும் சில ரகசியங்கள்

விழித்தெழு! நிருபர்

நீங்கள் எப்படியோ! அது எனக்குத் தெரியாது. ஆனால், சில விலங்குகள் உங்கள் மனதை கவருவதைப் போலவே இராட்சஷ பாம்புகளும் என் மனதை ஈர்க்கின்றன. இங்கு இராட்சஷ பாம்புகள் என குறிப்பிடுவது போய்டி (Boidae) இனத்தைச் சேர்ந்த அனகொண்டாக்களே. மலைபோன்ற இந்தப் பாம்புகளைப் பற்றி இதுவரையில் கடுகளவே அறியப்பட்டிருப்பதுதான் வியப்பிலும் வியப்பு.

1992-ல் ஜேசுஸ் ஏ. ரிவாஸ் என்ற உயிரியலாளரும் நியூ யார்க்கைச் சேர்ந்த வனவிலங்கு பாதுகாப்பு சங்கத்தின் (WCS) ஆராய்ச்சியாளர்களும் இந்த ‘இராட்சஷர்களை’ முதன்முறையாக மனிதர்கள் வசிக்காத காட்டுப் பகுதியில் ஆய்வு செய்ய ஆரம்பித்தனர். a அவர்கள் தேர்ந்தெடுத்த இடமோ வெனிசுவேலா. அங்குள்ள சதுப்பு நிலப்பகுதியில் ஆறுவருட ஆய்வில், சில புதிய உண்மைகளை கண்டுபிடித்ததாக நான் கேள்விப்பட்டபோது எனக்கு ஒரே ஆச்சரியம். அந்த உண்மைகள் யாவை என்பதை இன்று நான் பார்க்கப் போகிறேன்.

பெயர், இன ஆய்வு

அன்று மதியம் நான் புரூக்ளின் அலுவலகத்தைவிட்டு நியூ யார்க் நகரில் இருக்கும் பிரான்ங்ஸ் மிருகக்காட்சி சாலையில் அமைந்துள்ள வனவிலங்கு பாதுகாப்பு சங்கத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றேன். அனகொண்டாக்களைப் பற்றிய சில உண்மைகளை அறிவதற்கு நான் ஏற்கெனவே சில ஆராய்ச்சிகளை செய்திருக்கிறேன்.

அனகொண்டா என்ற இந்தப் பெயர் அதன் பூர்வீகமான தென் அமெரிக்காவில் தோன்றியிருக்காது என்று குறிப்பிடுவது அதிசயமாக இருக்கிறது. சிலர் அனகொண்டா என்ற வார்த்தை “ஆனை,” “கொல்றா” அதாவது கொலையாளி போன்ற தமிழ் வார்த்தைகளிலிருந்து வருவதாக கூறுகிறார்கள். மற்றவர்கள் ஹெனகாத்தயா என்ற (ஹெனா என்பதற்கு “மின்னல்” என்றும் காத்த என்பதற்கு “தண்டு” என்றும் அர்த்தம்) சிங்கள வார்த்தையிலிருந்து வருவதாக நினைக்கிறார்கள். இந்த சிங்கள வார்த்தைகள் இலங்கையிலுள்ள மலைப் பாம்புகளுக்குத்தான் முதன்முதலில் பயன்படுத்தினார்களாம். ஆசியாவில் கற்றறிந்த இந்த வார்த்தைகளை போர்ச்சுகீசியர் தென் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தினதாகவும் தோன்றுகிறது.

மேலே சொன்ன பெயர் காரணங்கள் யாவும் தவறென்று சொன்னால் அனகொண்டாவின் யுனக்டஸ் முரினஸ் என்ற அறிவியல் பெயரும் முற்றிலும் சரி என்று சொல்ல முடியாது. நன்கு நீச்சல் தெரிந்த அனகொண்டாவிற்கு யுனக்டஸ் என்ற பெயர் பொருத்தமே. ஏனெனில் இதன் அர்த்தம் “நன்கு நீந்துபவன்.” ஆனால் கரும் பச்சை நிறம் உடைய இப்பாம்பிற்கு “சுண்டெலி நிறம்” என அர்த்தம் தரும் முரினஸ் என்ற பெயர் “சுத்தமாக பொருந்தவில்லை” என ஒரு குறிப்பேடு குறிப்பிடுகிறது.

பாம்பின் அறிவியல் பெயர்களையும், வகைகளையும் பற்றி ஏன் குறிப்பிடுகிறோமென்றால், அனகொண்டாவைப் பற்றிய புத்தகங்கள் இரண்டு வகை அனகொண்டாக்களை குறிப்பிடுகின்றன. அதில் ஒன்று—முக்கியமாக அமேசான் சதுப்பு நிலப்பகுதிகளிலும், ஒரினாகோ நீர்த்தேக்கங்களிலும் கயானாவிலும் காணப்படும் பச்சை அனகொண்டா அல்லது வாட்டர் போவா. இதுவே இக்கட்டுரையில் கலந்தாராயப்படுகிறது. மற்றொரு வகை சிறிய மஞ்சள் அனகொண்டா (E. notaeus). இவை பராகுவே, தென் பிரேஸில், வட அர்ஜன்டினா போன்ற நாடுகளில் வாழ்கின்றன.

வல்லுநரோடு சந்திப்பு

இப்போது நான் பிரான்ங்ஸ் மிருகக்காட்சி சாலைக்கு வந்துவிட்டேன். மரங்கள் அடர்ந்த இந்த வனவிலங்கு பூங்கா 265 ஏக்கர் பரப்பளவு உடையது. இது கிட்டத்தட்ட ஒரு டஜன் அனகொண்டாக்கள் உட்பட சுமார் 4,000 விலங்குகளின் ‘குடியிருப்பாக’ திகழ்கிறது. வனவிலங்கு பாதுகாப்பு சங்கத்தின் ஹெர்பட்டாலஜி (ஊர்வன பற்றியது) துறையைச் சேர்ந்த காக்கி உடையணிந்த வில்லியம் ஹோம்ஸ்ட்ராம் என்பவர் என்னை சந்திப்பதற்காக மிருகக்காட்சி சாலையின் வாசலில் நிற்கிறார். நியூ யார்க்கைச் சேர்ந்த ஹோம்ஸ்ட்ராமுக்கு 51 வயது. அவருடைய காக்கி உடையையும் கண்ணாடியையும் பெரிய மீசையையும் பார்த்தாலே நல்ல அனுபவசாலி என டக்கென்று புரியும். இவர் மிருகக்காட்சி சாலையின் ஊர்வன துறையில் விலங்கினங்களை வாங்கும் மேலாளராவார். வெனிசுவேலாவில் அனகொண்டாவைப் பற்றிய ஆராய்ச்சியில் பங்கேற்றவர். வடகிழக்கு பிரேஸிலிலும் பிரெஞ்சு கயானாவின் கடலோரப் பகுதியிலும் மூன்றாம் வகை அனகொண்டா (E. deschauenseei) இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள் என்ற லேட்டஸ்ட் தகவலை தெரிவித்தார். b இன்று மதியம் ஹோம்ஸ்ட்ராம் தான் எனக்கு வழிகாட்டி.

நாய்களையும் கிளிகளையும் மற்றவர்கள் விரும்புவது போலவே என்னுடைய வழிகாட்டிக்கும் பாம்புகள் என்றால் அலாதி பிரியம். சிறுவனாக இருந்தபோது அவருடைய வீடு சலமான்டர், தவளைப் போன்ற பிராணிகளுக்கு புகலிடமாக இருந்தது என அவர் என்னிடம் கூறுகிறார். “அப்பாவுக்கு அவை ரொம்ப பிடிக்கும். அம்மா வேறு வழியின்றி சகித்துக்கொண்டார்.” ஹோம்ஸ்ட்ராம் அவருடைய அப்பாவை போல.

சைசுல ‘மலை’ தினுசுல பல

100 வருட பழமையான அப்பூங்காவில் நுழைந்து, ஊரும் பிராணிகளின் குடியிருப்புக்கு வந்து, அனகொண்டாவின் வீட்டிற்கு முன் நின்றோம். நான் காண துடித்த காட்சியை கண்டபோது ஆவென்று வாய்பிளந்து நின்றேன். அதன் மெகா சைஸையும் அசரவைக்கும் லுக்கையும் கண்டு அசந்துபோனேன். மழுங்கிய மூக்கையுடைய அதன் தலை மனிதனின் கையைவிட பெரிது. ஆனால் அதனுடைய பருத்த உடலுக்கு ஒப்பிட யானைக்கு பூனைத் தலைபோல இருந்தது. ஐந்து மீட்டர் நீளமும் சுமார் 80 கிலோகிராம் எடையும் உள்ள அட்டகாசமான லேடி அனகொண்டாவை எனது வழிகாட்டி அறிமுகப்படுத்தினார். அதன் உடல் டெலிபோன் கம்பத்தைப்போன்று பருமனாக இருந்தாலும், 1960-ல் பிடித்த மெகா சைஸ் பெண் அனகொண்டாவுடன் ஒப்பிட இது வெறும் தூசியே. உலக புள்ளிவிவர அறிக்கையில் இடம் பெற்ற அதன் எடையோ கிட்டத்தட்ட 227 கிலோகிராம்!

எந்தவொரு ஆண் அனகொண்டாவும் பெண் அனகொண்டாவின் அளவை எட்டிப்பிடிப்பது கனவிலும் முடியாத விஷயம். ஆண் அனகொண்டாக்கள் பெண் அனகொண்டாக்களைவிட சிறியவை என்பதை ஊர்வனவற்றை ஆய்வு செய்பவர்கள் (herpetologists) அறிந்திருந்தார்கள். ஆனால் அவை பெண் அனகொண்டாக்களைவிட மிக மிகச் சிறியவை என்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. சராசரியான பெண் அனகொண்டாக்கள் ஆணைவிட ஏறக்குறைய ஐந்து மடங்கு பெரியவை. இப்படி மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் ஏமாற வைக்கும் என்று உயிரியலாளர் ஜேசுஸ் ரிவாஸ் கூறினார். அவர் ஒரு குட்டி அனகொண்டாவை வளர்த்து வந்தார். ஆனால் இந்தக் குட்டி ஏன் எப்போதும் அவரை கடித்துக் கொண்டிருக்கிறது என்று அவர் நினைத்ததுண்டு. ஆனால் அவருடைய ஆய்வின்போதுதான், அவர் செல்லமாக கொஞ்சி வளர்த்தது ‘குட்டி’ அல்ல முழு வளர்ச்சியடைந்த கோபக்கார ஆண் அனகொண்டா என்பதை புரிந்துகொண்டார்!

கண்டுபிடி—பரிசு!

அனகொண்டாவின் அசாதாரண பருத்த உடல் மட்டுமல்ல அதன் நீளமும்கூட மலைக்க வைக்கிறது. ஒரு ஹாலிவுட் திரைப்படத்தில் அனகொண்டாவை 12 மீட்டர் நீளத்தில் பிரமாண்டமாக காட்டினார்கள். ஆனால் உண்மையில் பெரிய அனகொண்டாவின் அதிகபட்ச நீளம் ஒன்பது மீட்டரே, ஆனால் அதுவும் மலைக்க வைக்கும் நீளமே!

அவ்வளவு பெரிய அனகொண்டாக்கள் மிக அபூர்வமாகவே காணப்படுகின்றன. ஆய்வின்போது பிடிபட்ட பெண் அனகொண்டாக்கள் 90 கிலோகிராம் எடையும் சுமார் 5 மீட்டர் நீளமும் இருந்தன. இவற்றைவிட பெரியவற்றை கண்டுபிடிப்பது கடினம். அதனால்தான் சுமார் 90 வருடங்களுக்கு முன்பு நியூ யார்க் விலங்கியல் சங்கம் (வனவிலங்கு பாதுகாப்பு சங்கத்தின் முன்னோடி) 9.2 மீட்டருக்கும் அதிக நீளமுள்ள பாம்பை உயிருடன் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு 1,000 டாலர் பரிசு கொடுக்க முன்வந்தது. ஆனால் இன்று வரையிலும் பரிசுபெற யாரும் முன்வரவில்லை. “இப்போதும்கூட இந்தப் பரிசை பெறுவதற்காக தென் அமெரிக்க மக்களிடமிருந்து ஆண்டுக்கு இரண்டோ மூன்றோ தொலைபேசி அழைப்புகள்தான் வருகின்றன. ஆனால் நாங்கள் அங்கு செல்வதற்கு முன் அது அனகொண்டா தானா என்பதை உறுதி செய்வதற்கு அவர்கள் அதைப் பிடித்ததற்கான ஆதாரத்தை அனுப்பும்படி கேட்டால் எந்த பதிலும் வராது” என ஹோம்ஸ்ட்ராம் கூறுகிறார். 9.2 மீட்டர் பாம்புக்குரிய பரிசு இப்போது 50,000 டாலரில் வந்து நிற்கிறது!

குளோசப் பார்வை

என்னுடைய வழிகாட்டியும் நானும் ஊரும் பிராணிகள் இருந்த இரண்டாம் தளத்திற்குச் செல்கிறோம். அது சுற்றிலும் அடைக்கப்பட்டு இனப்பெருக்கத்திற்கு ஏற்ற இடமாக உள்ளது. இந்த இடம் கதகதப்பாகவும், ஈரப்பதமாகவும் இருக்கிறது. அனகொண்டாவை பார்க்க வேண்டுமென்ற என் ஆவலை அறிந்து, அதை குளோசப்பில் எந்த தடையுமின்றி பார்ப்பதற்காக ஒரு பெரிய பெண் அனகொண்டா இருந்த அறையின் கதவை ஹோம்ஸ்ட்ராம் திறக்கிறார்.

அச்சமயம் எங்களுக்கும் அந்த அனகொண்டாவுக்கும் இடையே வெறும் இரண்டு மீட்டர் இடைவெளிதான் இருந்தது. எங்களை கவனித்துவிட்ட அந்த அனகொண்டா மெதுவாக தலை உயர்த்தி எங்களை நோக்கி நேராக நகர்ந்து வந்தது. இதோ! இதோ! . . . அது பக்கத்தில் வந்து விட்டது. ஒரே ஒரு மீட்டர் இடைவெளிதான்!

அது மெதுவாக வர வர “அது உணவைத் தேடி வருகிறது, நாம் திரும்பிவிடுவது மேல்” என்று ஹோம்ஸ்ட்ராம் ‘ஒளிவு மறைவின்றி’ கூற, நான் உடனடியாக சம்மதித்தேன். அவர் அடைப்பின் கதவை மூட அது தலையை மெதுவாக பின்நோக்கி இழுத்து உடலை சங்கு சக்கரம் போல சுருட்டி தலையை அந்த சுருளின் நடுவே புதைத்தது.

அனகொண்டாவின் திகிலூட்டும் பார்வையைக் கண்டு பயத்தால் ஆடிவிடாமல் அதன் தலையை உங்களால் பார்க்க முடிந்தால் அதில் வியப்பூட்டும் விஷயங்களை கவனிக்க முடியும். சிவப்பு வரிகளுள்ள அதன் தலையை உற்று பாருங்கள். அனகொண்டாவின் கண்களும் மூக்குத் துவாரங்களும் தலையின் உச்சியில் அமைந்திருப்பதே சிறப்பு அம்சம். ஆகவே முதலைகளை போல தண்ணீருக்குள் அவற்றின் உடலும் தலையும் மூழ்கினாலும் கண்களும் மூக்குத் துளைகளும் நீர்மட்டத்திற்கு மேல் இருக்கும். இதிலிருந்து இந்தப் பாம்பு தன் உருவத்தை வெளிக்காட்டாமலேயே எப்படி இரை பிடிக்கிறது என்பது புரிகிறது.

இறுக்கமான சுருள்கள் இறுக்கமற்ற தாடைகள்

அனகொண்டா விஷமற்றது. ஆனால் அகப்பட்ட இரையை தன்னுடைய உடலால் சுற்றி வளைத்து இறுக்குகிறது. இருந்தாலும் இரையை நொறுக்கிவிடுவதில்லை. அதேசமயம் மாட்டிக்கொண்ட அந்த விலங்கு ஒவ்வொரு முறையும் மூச்சுவிடுகையில் பாம்பு அதன் பிடியை இறுக்குகிறது. அது மூச்சு திணறி சாகும்வரை அதன் இறுக்கம் தளராது. அகப்பட்டது சின்ன வாத்தாக இருந்தாலும் சரி பெரிய மானாக இருந்தாலும் சரி கொஞ்சம் கொஞ்சமாக சாகடிக்கிறது. நீங்கள் பயப்பட வேண்டாம்! அனகொண்டாக்கள் மனிதரை சாப்பிடுவது அபூர்வமே என்பதாக நம்பத்தக்க அறிக்கைகள் காண்பிக்கின்றன.

பாம்புகளால் உணவை மெல்லவோ அல்லது துண்டு துண்டாக கடித்து சாப்பிடவோ இயலாது. எனவே இரை, பாம்பைவிட பெரியதாக இருந்தாலும் அதை முழுசாக அப்படியே விழுங்குகிறது. சொல்லப்போனால் அனகொண்டாவுக்கு இருக்கும் சக்தி உங்களுக்கு இருந்தால் முழுத் தேங்காயைக்கூட நிலக்கடலையை விழுங்குவதுபோல் விழுங்க முடியும். அது சரி, அனகொண்டா எப்படி விழுங்குகிறது?

“இது இரையின்மீது தன் தலையால் நடக்கிறது” என்று ஹோம்ஸ்ட்ராம் கூறுகிறார். அது எப்படி என்பதை அவரே விளக்குகிறார். அனகொண்டாவின் தாடைகள் அதன் தலையுடன் நெகிழ்வாக எப்படி வேண்டுமானாலும் அசைக்கும் வண்ணம் பொருத்தப்பட்டுள்ளது. பெரிய இரையை அதன் பற்களால் கவ்வுவதற்கு முன்பு அது தன் கீழ்த்தாடையை கீழே இறக்கி விரிக்கிறது. அப்புறமாக அனகொண்டா அதன் கீழ்த்தாடையின் ஒரு பாதியை முன்நோக்கித் தள்ளி பின்புறமாக வளைந்திருக்கும் பற்களால் இரையைப் பிடிக்கிறது; பிறகு அப்பாதி தாடையை பின்நோக்கி இழுத்து இரையை வாய்க்குள் கொண்டு செல்கிறது. அடுத்து இதே விதமாக கீழ்த்தாடையின் மறு பாதியை பயன்படுத்தி இரையை வாய்க்குள் கொண்டு செல்கிறது. இதற்கு மேல் தாடையும் ஓரளவு உதவுகிறது. இவ்வாறு தாடை முன்னும் பின்னும் மாறிமாறி அசைவது இரையின்மீது நடப்பது போல் இருக்கிறது. இரையை விழுங்க பலமணி நேரம் எடுக்கலாம். இரையை விழுங்கியபின் ஒருசில தடவை கொட்டாவி விடுகிறது. அதன்பிறகு சுலபமாக இசைந்துகொடுக்கும் அதன் தலை பழைய நிலைமைக்கு வந்துவிடுகிறது.

அனகொண்டா மூச்சு திணறாமல் உண்பதற்கு எது உதவுகிறது? அதன் வாயின் அடிப்பாகத்தில் அமைந்திருக்கும் நீண்ட காற்றுக் குழாய் அதற்கு உதவுகிறது. உணவை உள்ளே தள்ளும் சமயத்தில் இந்த சுவாசக் குழாய் வெளியே நீள்கிறது. நீருக்கு அடியில் மூழ்கி நீந்துபவர்கள் பயன்படுத்தும் வளைந்த ஸ்நார்க்கள் குழாயைப் போல் இந்த காற்றுக் குழாய் காற்றை உள்ளிழுத்து மூச்சுத் திணறாமல் சாப்பிடுவதற்கு உதவுகிறது.

அடையாளம் என்ன?

இப்போது என் வழிகாட்டி ஒரு கண்ணாடி கூண்டின் மூடியைத் திறக்கிறார். உள்ளே பார்த்தால் இரண்டு அனகொண்டா குட்டிகள். ஒன்றுக்கொன்று வித்தியாசம் தெரியவில்லை. ஆனால் வெனிசுவேலா ஆய்வில், அந்த ஆராய்ச்சியாளர்கள் நூற்றுக்கணக்கான காட்டு அனகொண்டாக்களை எப்படித்தான் வித்தியாசம் கண்டுபிடித்தார்களோ!

அவற்றை அடையாளம் கண்டுகொள்ளும் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு சிறிய பேப்பர் கிளிப்புகளை சூடுபோடும் கருவிகளாகப் பயன்படுத்தினர் என்று ஹோம்ஸ்ட்ராம் விளக்குகிறார். இந்த “சூடுபோடும் கருவிகளை” சூடாக்கி அனகொண்டாக்களின் தலைமீது சிறிய எண்களை குறித்தார்கள். இவ்விதம், பாம்புகள் அதன் தோலை—அதன் எண்களோடுகூட—உரிக்கும் வரை அவர்களால் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. இருந்தாலும் ஒவ்வொரு அனகொண்டாவுக்கும் அதற்கே உரிய அடையாளக்குறி இருக்கிறதா என்பதை ஆய்வாளர்கள் கவனித்து வந்தார்கள். அப்பொழுது ஒவ்வொரு பாம்புக்கும் அதன் வாலின் மஞ்சள் நிற அடிப்பாகத்தின் கரும் புள்ளிகளில் வித்தியாசம் இருந்தது. மனிதரின் கைரேகை ஆளுக்கு ஆள் வேறுபடுவதுபோல் இப்புள்ளிகளும் பாம்புக்கு பாம்பு வேறுபடுவதுதான் தனி சிறப்பு. “அதன் தோலில் 15 செதில்கள் நீளத்தில் காணப்படும் அடையாளங்களை வரைந்தாலே போதும், எக்கச்சக்கமான வித்தியாசம் தெரியும். அதனால் 800 பாம்புகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம் எளிதில் காண முடிந்தது.”

வேகமா, வீரியமா, பலமா?

ஹோம்ஸ்ட்ராம் அவர்களின் அலுவலகத்தில் எங்கள் பேட்டியை முடிக்கையில், அவர் வெனிசுவேலாவில் எடுத்த ஒரு கண்கவரும் படத்தைக் காட்டினார். அது ஒரு பெண் அனகொண்டாவை பல ஆண் அனகொண்டாக்கள் ஒன்றுக்கொன்று சுற்றி சுருண்டு கிடக்கும் படம். அனகொண்டாக்களின் இப்படி பின்னிப்பிணைந்த முடிச்சை இனப்பெருக்க முடிச்சு என அழைப்பதாக அவர் கூறினார். (பக்கம் 26-ல் உள்ள படத்தைக் காண்க.) “இப்பந்தின் உள்ளே எங்கேயோ பெண் அனகொண்டா உள்ளது. ஒரு சமயம் ஒரு பெண் அனகொண்டாவை 13 ஆண் அனகொண்டாக்கள் சுற்றிக்கொண்டிருப்பதைக் கண்டோம். உண்மையிலேயே இது விநோதம்!”

ஆண் அனகொண்டாக்கள் ஒன்றுக்கொன்று சண்டையிடுகிறதா? இவை நிதானமாக ஒன்றுக்கொன்று எதிர்த்துப் போட்டியிடுகின்றன. ஒவ்வொரு ஆண் அனகொண்டாவும் மற்றதை நெரித்துத் தள்ளி பெண் அனகொண்டாவுடன் இணை சேர முயற்சிக்கிறது. இந்தப் போட்டி இரண்டு முதல் நான்கு வாரங்களுக்கு நீடிக்கிறது. கடைசியில் வெற்றி பெறுவது எது? வேகமானவையா (பெண் அனகொண்டாவை முதலில் கண்டுபிடிக்கும் ஆண் அனகொண்டா), வீரியம் மிக்கவையா (அதிக விந்துவை உருவாக்குபவை), பலமானவையா (போட்டியில் வெல்லும் ஆண் அனகொண்டா)? சீக்கிரத்தில் இதற்கும் விடை கிடைக்கும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.

மனதைக் கவரும் இந்த சுற்றுப் பயணம் மாலை முடிந்தது. எனக்கு வழிகாட்டியாக இருந்த ஹோம்ஸ்ட்ராமுக்கு நன்றிகூறி விடை பெற்றேன். என்னுடைய அலுவலகத்திற்குத் திரும்பும் வழியிலும் நான் பார்த்ததையும் கற்றதையும் அசை போட்டுக்கொண்டிருந்தேன். அப்போது, “அனகொண்டாக்கள் சாதுவானவை” என்ற உயிரியலாளர் ஜேசுஸ் ரிவாஸின் கருத்தை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. எது எப்படியோ அனகொண்டாக்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். காட்டில் உள்ள இராட்சஷ அனகொண்டாக்களை ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆராய, அவை இன்னும் பிரமிப்பூட்டும் இரகசியங்களை கக்கலாம், அவற்றை கற்பதில் நமக்கோ இன்பம்.

[அடிக்குறிப்புகள்]

a வெனிசுவேலா வனவிலங்கு துறையும் மறைந்துவரும் காட்டுத் தாவர மற்றும் விலங்கின சர்வதேச வாணிகம் பற்றிய மாநாட்டில் பங்கேற்பவர்களும் இந்த ஆராய்ச்சிக்கு நிதி உதவி அளித்தனர்.

b ஜர்னல் ஆஃப் ஹெர்பட்டாலஜி, எண் 4, 1997, பக்கங்கள் 607-9, நீர்-நில வாழ்வன மற்றும் ஊர்வன ஆய்வுக்கு இந்த சங்கத்தால் வெளியிடப்பட்டது.

[பக்கம் 24-ன் படம்]

வெனிசுவேலாவில் அனகொண்டா ஆய்வு

[பக்கம் 25-ன் படம்]

வில்லியம் ஹோம்ஸ்ட்ராம்

[பக்கம் 26-ன் படம்]

அனகொண்டா இனப்பெருக்க முடிச்சு