Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

பிள்ளைகளின் தெய்வ பக்தி

“பிள்ளைகள் மத ஆராதனைகளில் கலந்துகொள்கின்றனரா?” கனடியன் சோஷியல் டிரென்ட்ஸ் என்ற பிரசுரத்தின் சமீபத்திய பதிப்பு இக்கேள்வியைக் கேட்கிறது. ஸ்டாட்டிஸ்டிக்ஸ் கனடா ஆய்வுப்படி அதற்கான பதில்: “12 வயதுக்குட்பட்ட கனடா நாட்டுப் பிள்ளைகளில் மூன்றில் ஒரு பாகத்தினர், அதாவது 36 சதவீதத்தினர், மாதமொரு முறையாவது மத ஆராதனைகளில் கலந்துகொண்டனர், பெரும்பான்மையர் வாரத்துக்கு ஒரு முறை சென்றனர். இன்னும் 22 சதவீதத்தினர் குறைந்த தடவையே சென்றனர், ஆனால் வருடத்தில் ஒரு முறையாவது சென்றனர்.” அந்தக் கட்டுரை மேலும் இவ்வாறு சொன்னது: “பிள்ளைகள் தவறாமல் மத ஆராதனைகளில் கலந்துகொள்கிறார்களா இல்லையா என்பது அவர்கள் எந்த மத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பொருத்திருந்தது. . . . பிரபலமான மதமாக அநேகர் கருதும் ஆங்கலிக்கன், யுனைட்டட் சர்ச்சுகளுக்கு வாரா வாரம் செல்லும் பிள்ளைகளின் விகிதம் மிகக் குறைவு (18 சதம்).” ரோமன் கத்தோலிக்க பிள்ளைகள் ஓரளவுக்குப் பரவாயில்லை. வாரந்தோறும் 22 சதவீதத்தினர் செல்கின்றனர். முஸ்லீம் பிள்ளைகளில் 44 சதவீதத்தினர் வாரந்தவறாமல் தொழுகைக்காக செல்கின்றனர். இது பரவாயில்லை. ஆனால் “சுற்றாய்வு எடுப்பதற்கு முந்தின ஆண்டு ஆராதனையில் கலந்துகொள்ளாதவர்களின் எண்ணிக்கை (39%) அதிகம்” என்பதாக இப்பதிவுகள் காட்டுகின்றன.

நடைவண்டி—ஜாக்கிரதை!

நடைவண்டியை பயன்படுத்துவது குழந்தைகளின் சரீர வளர்ச்சியையும் அறிவு வளர்ச்சியையும் பாதிக்கலாம் என்கிறது லண்டனில் வெளியாகும் இன்டிப்பென்டன்ட் என்ற செய்தித்தாள். பிடித்துக்கொள்வதற்காக முன்னால் அகலமான மரச்சட்டம் இருப்பதால் குழந்தைகளால் தங்கள் கால்களைப் பார்க்க முடிவதில்லை. ஆகவே அவை தங்களைச் சுற்றியுள்ள பொருட்களை தொட்டுப் பார்க்க முடியாது என்பதை ஸ்டேட் யுனிவர்சிட்டி ஆஃப் நியூ யார்க்கின் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். நடைவண்டி பயன்படுத்தாத பிள்ளைகளோடு இந்தப் பிள்ளைகளை ஒப்பிட்டால், அவை ஐந்துக்கும் அதிகமான வாரங்கள் கழித்தே நிமிர்ந்து உட்காருகின்றன, தவழுகின்றன, நடக்கின்றன. மேலும் ஒவ்வொரு வருடமும், நடைவண்டியை பயன்படுத்தும் குழந்தைகளில் 50 சதவீதம் படிக்கட்டுகளில் தவறி விழுந்துவிடுவது, நெருப்பில் விழுந்துவிடுவது அல்லது தடுமாறி அப்படியே குப்புற விழுவது போன்ற விபத்துக்களால் காயமடைவதாக ஆய்வு வெளிப்படுத்தியது. பிரிட்டனின் நாட்டிங்ஹாம் யுனிவர்சிட்டி மெடிக்கல் ஸ்கூலை சேர்ந்த டாக்டர் டென்னிஸ் கெண்டிரிக் இவ்வாறு கூறுகிறார்: “நடைவண்டி ஆபத்தானது. பிள்ளைகள் இதை வைத்து விளையாடுவதால் பெற்றோருக்கு வேண்டுமானால் பாரம் குறையலாம். ஒருவேளை அவர்களுக்கு நன்மையாக இருக்கலாம், ஆனால் பிள்ளைகளுக்கோ அதனால் தீமையே மிஞ்சுகிறது.”

கிருமிகளை கொல்லும் மசாலா

1996-ல் பிரிட்டனில் 18 பேர் உயிரிழந்தனர். உலகிலேயே படுமோசமான உணவு நஞ்சினால் மரித்தவர்கள் இவர்கள். கெட்டுப்போன இறைச்சியில் இருந்த E. கோலை 0157 என்ற கிருமியே இதற்குக் காரணம். சுத்தம் பண்ணப்படாத ஆப்பிள் ஜுஸில் இலவங்கப் பட்டையை சேர்த்தால் மூன்றே நாட்களில் 99.5 சதவீத கிருமிகள் அழிந்துவிடுவதை ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்திருப்பதாக லண்டனில் வெளியாகும் தி இன்டிப்பென்டன்ட் கூறுகிறது. மற்றொரு சமயம் விஞ்ஞானிகள் பச்சையான மாட்டிறைச்சி, சாசேஜ் ஆகியவற்றோடு மசாலாவை சேர்த்தனர். அதிலுள்ள இலவங்கப்பட்டை, இலவங்கம், பூண்டு ஆகியவை E. கோலை 0157-ஐ மிக சீக்கிரமாக அழித்துவிடுவதைக் கண்டனர். சால்மோனெல்லா, கேம்பிலோபேக்டர் உள்ளிட்ட மற்ற கிருமிகளை அழிப்பதிலும் இந்த மசாலா பொருட்கள் கைகொடுத்து உதவும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

கடனில் மூழ்கும் பிரிட்டன்

தனிநபர் வாங்கிய கடன், கிரெடிட் கார்டுகள், பொருட்களை தவணை முறையில் வாங்குதல் ஆகியவற்றின் மூலமாக பிரிட்டன் நாட்டவர் மொத்தமாக செலுத்த வேண்டிய கடன்தொகை 17,000 கோடி டாலராகும். இவர்கள் ஒவ்வொரு வருடமும் செலுத்தும் வட்டி 550 கோடி டாலர். இது மக்கள் வங்கி பிரசுரித்திருக்கும் கணக்கு விவரம் என்று லண்டனில் வெளியாகும் த டைம்ஸ் அறிவிப்பு செய்கிறது. மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதிக்கும் அதிகமானவர்கள் பிணையங்களற்ற கடனைப் பெற்றிருக்கின்றனர். இது சராசரியாக ஒரு நபருக்கு 10,400 டாலராகும். பிரிட்டனில், மூன்று வருடத்திற்குள் கிரெடிட் கார்டு உபயோகம் இரண்டு மடங்குக்கும் அதிகமாகிவிட்டது. 1998-ல் கடன் தொகை 11,500 கோடியை எட்டியது. கடன் கைமீறி போய்விடுமோ என்ற கவலை 13 சதவீதத்தினருக்கு மாத்திரமே இருப்பதை சுற்றாய்வு கண்டுபிடித்தது. ஐந்து பேரில் ஒருவர் “தங்கள் வாழ்க்கைத் தரத்தைக் காத்துக்கொள்ள” கடன்வாங்கியதை ஒப்புக்கொண்டார்கள் என்கிறது மக்கள் வங்கி.

“ஊமையாக்கப்படும்” பெண் இனம்

304 இளம் பெண்களை வைத்து ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் கிட்டத்தட்ட கால்வாசிப்பேர் அவர்களுடைய விருப்பத்துக்கு எதிராக ஏதோவொரு வகை பாலின நடத்தைக்கு கட்டாயப்படுத்தப்பட்டதாக ஜெர்மானிய பத்திரிகை ப்சூக்கோலாஜீ ஹாஸ்டா கூறியது. மேலுமாக ஆண்கள் தங்கள் மிருகத்தனமான காமவெறியைத் தீர்த்துக்கொள்ள போதைப் பொருட்களையும் மதுவையும் கொடுத்ததாக அந்த அபலைப் பெண்களில் கால் பகுதிக்கும் அதிகமானோர் கூறினதாக அறிக்கை சொல்கிறது. “மன அழுத்தம் ஏற்படுத்தி, போதைப் பொருட்களையும், மதுபானத்தையும் கொடுத்து பெண்களின் எதிர்ப்பை அடக்கிவிட ஆண்கள் செய்யும் இந்த தந்திரங்களை பார்த்தால், 17 முதல் 20-க்குட்பட்ட குமரிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் இவர்களின் வலைக்குள் சுலபமாக விழுந்துவிடுவர் என்று தெரிகிறது.”

முதல் கும்மிருட்டு ஆகாய பூங்கா

“கண்ணைக் கூசவைக்கும் நகரின் ஒளி வெள்ளத்தினாலும் மாசுபட்ட காற்றாலும் மங்கலாகி மறைக்கப்பட்டிருக்கும் இரவுநேர ஆகாயத்தின் அந்த வெல்வட் அழகை அநேகர் இப்போது பார்ப்பதே கிடையாது” என்கிறது கனடாவில் வெளியாகும் த குளோப் அண்டு மெயில். வானசாஸ்திர எழுத்தாளர் டெரன்ஸ் டிக்கின்சன் இவ்வாறு சொல்லி வருத்தப்படுகிறார்: “இரவு நேர வானின் சொக்க வைக்கும் அழகை மக்கள் பார்க்காமலே பெரியவர்களாக வளர்ந்துவிடுகிறார்கள்.” அதற்கு அவர் கொடுக்கும் ஒரு உதாரணம்: ஒரு சில வருடங்களுக்கு முன்பு கலிபோர்னியாவில் சில இடங்களில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு அனைத்தும் ஸ்தம்பித்து போனபோது அங்கே வசித்துவந்த சிலர் தாங்கள் “இதுவரை பார்த்திராத நட்சத்திரங்களும் மங்கலான ஏதோவொன்றும்” ஆகாயத்தில் தெரிவதாக போலீஸுக்கு ஃபோன் செய்தார்கள். கனடாவின் வானோக்கிகள், ஒளியோ வேறெந்த தடையோ இல்லாமல் இரவுநேர ஆகாயத்தை பார்த்து ரசிப்பதற்காக டோரன்டோவுக்கு வடக்கே முஸ்கோக்கா லேக்ஸ் மாவட்டத்தில் 4,900 ஏக்கர் பொதுவிடம் ஒன்றிற்கு “இருட்டு ஆகாய காப்பிடம்” என்று பெயரிடப்பட்டுள்ளனர். டாரன்ஸ் பேரன்ஸ் கன்ஸர்வேஷன் ரிசர்வ் என்றழைக்கப்படும் இது உலகிலேயே முதல் கும்மிருட்டு ஆகாய பூங்காவாகும்.

அப்பாக்களும் மகள்களும்

ஹெல்த் கனடா என்ற பிரசுரம் 2,500 பருவ வயதினரை வைத்து சமீபத்தில் ஒரு சுற்றாய்வு நடத்தியது. அதில் அப்பாக்களுக்கும் பிள்ளைகளுக்கும், அதிலும் முக்கியமாக மகள்களுக்கும் இடையில் பேச்சுத்தொடர்பு குறைவுபடுவதாக கனடாவின் செய்தித்தாள் குளோப் அண்டு மெயில் அறிவிக்கிறது. 15, 16 வயதிலுள்ள 51 சதவீத பையன்களோடு ஒப்பிட 33 சதவீத பெண் பிள்ளைகள் மாத்திரமே “தங்களைக் குடைந்துகொண்டிருக்கும் விஷயங்களைப்பற்றி தங்கள் அப்பாக்களிடம் சுலபமாக அல்லது ஃப்ரீயாக பேசுவதாக காண்கிறார்கள்.” ஆனாலும் “மகள்கள்தான் தங்கள் அப்பாக்களை வெகு உயர்வாக மதிக்கின்றனர், அப்பாக்களின் துணை அவசியம் என்கின்றனர்” என்று அறிக்கை கூறுகிறது. குயின்ஸ் யுனிவர்சிட்டியைச் சேர்ந்த பேராசிரியர் ஆலன் கிங் என்பவர், “பிள்ளைகளிடம் அதுவும் குறிப்பாக உணர்ச்சிக் கொந்தளிப்பான வளரிளமை பருவத்தின் ஆரம்பத்தில் இருக்கும் பிள்ளைகளிடத்தில் பேசுவது அப்பாக்களுக்கும் கடினமாக இருக்கிறது” என்று ஒப்புக்கொள்கிறார். இந்தச் சமயத்தில்தான் அநேக அப்பாக்கள் பாலின விஷயங்களையும் ஆபத்தான நடத்தைகளையும் குறித்து பிள்ளைகளுக்குச் சொல்லி கொடுக்காமல் அசட்டையாக இருந்துவிடுகின்றனர். ஆனால் முன்னிருந்ததைவிட இப்போதெல்லாம் அம்மாக்களுக்கு பிள்ளைகளோடு செலவழிக்க நேரமே இல்லாததால் இந்தச் சவாலை சந்திக்க தயாராகும்படி அப்பாக்களுக்கு அவர் அழைப்புவிடுக்கிறார்.

‘டிவிதான் என் உயிர் மூச்சு!’

தன்னந்தனியான ஒரு தீவில் கொஞ்ச நேரம் நீங்கள் இருக்க வேண்டியிருந்தால் உங்களோடு எதை எடுத்துச் செல்வீர்கள்? ஜெர்மனியில் 2,000 வாலிபர்களிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. இவர்களில் பெரும்பான்மையோர் எடுத்துச் செல்ல விரும்பிய பொருட்களை வெஸ்ட்ஃபேலிஷா ருன்ட்ஷாவ் என்ற செய்தித்தாள் இவ்வாறு பட்டியலிட்டது: டிவி, ரேடியோ, CDக்கள், காஸட்டுகளே மிக முக்கியமானவை. உணவு, பானங்களுக்கு பட்டியலில் இரண்டாவது இடம். குடும்ப அங்கத்தினர்களுக்கும் நண்பர்களுக்கும் மூன்றாவது இடம். 13 வயது இளைஞனின் விருப்பத்தைச் சற்று கேளுங்கள்: “டிவிதான் என் உயிர் மூச்சு!” கேள்விக்குப் பதிலளித்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மாத்திரமே கத்திகள், மண்வெட்டிகள், ரம்பங்கள் போன்ற உபயோகமான கருவிகளை தங்களுடன் எடுத்துச் செல்வோம் என்று கூறினர். 0.3 சதவீதத்தினர் மாத்திரமே பைபிளை எடுத்துச் செல்வோம் என்றனர். இதில் கலந்துகொண்ட ஏழு வயது சிறுமி என்ன சொன்னாள் தெரியுமா? “நான் என் அம்மாவை மாத்திரம் கூட்டிக்கிட்டு போவேன். அம்மா எங்கூட இருந்தா நான் பத்திரமா இருப்பேன், எனக்கு எதுவும் ஆகாது.”

சூப்பர் சுமோ மல்யுத்த வீரர்கள்

உலகிலேயே பெருத்த இடுப்புக்குப் பெயர்போன சுமோ மல்யுத்த வீரர்களின் பாரத்தை தாங்கும் பலம் அவர்களுடைய கால்களுக்கு இல்லாமல் போவதாக ஜப்பானிய விளையாட்டு உடலியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இரண்டு டாப் சுமோ பிரிவுகளுக்கிடையே கடந்த ஐந்தாண்டுகளில் நடைபெற்ற மல்யுத்த போட்டிகளில் ஏற்பட்ட காயங்கள் இரண்டு மடங்காகிவிட்டதாக நியூ சையன்டிஸ்டு பத்திரிகை அறிக்கை செய்கிறது. இதனால் உடலியல் வல்லுநர்களின் ஒரு குழு, 50 மல்யுத்த வீரர்களின் உடலின் சதைப்பற்றையும் காலின் பலத்தையும் ஒப்பிட தீர்மானித்தது. “நான்கில் ஒருவருக்கு அவருடைய பருமனை தாங்குவதற்குத் தேவைப்படும் போதுமான சக்தி கால்தசைகளுக்கு இல்லை” என்று அறிக்கை கூறுகிறது. 1974-ல் டாப் சுமோ மல்யுத்த வீரனின் சராசரி எடை 126 கிலோவாக இருந்தது; ஆனால் 1999-ல் அது 156 கிலோவாக உயர்ந்தது. “பொதுவாக ஜப்பானியரின் சராசரி பருமன் அதிகரித்திருப்பதே இதற்கு ஓரளவு காரணம்” என்கிறார் சுமோ வர்ணனையாளர் டோரீன் சிம்மன்ஸ். ஆனால் எடை அதிகமாக இருந்தால் பெரும் சாதனை படைக்க முடியும் என்று சொல்வதற்கில்லை. “பேரிக்காய் வடிவமே மிகச் சிறந்தது” என்கிறார் சிம்மன்ஸ். “சிறுத்த இடுப்பு, மிகப் பெரிய தொடை, சிந்தூர மரம் போல கெண்டைக்கால் சதை.”

மடியும் மழலைகள்

சிறுவர்களுக்குப் பேராபத்து! உலகிலேயே அங்கோலா, சியர்ரா லியோன், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில்தான் இந்த நிலை உச்சக்கட்டத்தில் உள்ளது. ‘பிறந்து 18 வயதுவரை உயிர் பிழைத்துவிட்டால் அபூர்வம்தான்’ என்கிறது ஐநா குழந்தைகள் நல அமைப்பு (யுனிசெஃப்). போர்கள், நீங்காத வறுமை, பரவிவரும் எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் ஆகியவை சிறுவர்களின் உயிரைக் குடிக்கின்றன; பத்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இந்நிலை இந்தளவுக்கு இல்லை. ஆனால் இன்று இந்த ஆபத்து எந்தளவுக்கு அதிகமாய் உள்ளது என்பதை யுனிசெஃப் கணக்கிடுகிறது. அதாவது, 1 முதல் 100 வரை எண்கள் கொண்ட அளவுகோலை பயன்படுத்தி “பிள்ளைகளது ஆபத்தின் அளவை” கணக்கிடுகிறது. இதன்படி, அங்கோலாவிலுள்ள சிறுவர்களுக்கு நேரிடும் ஆபத்தின் அளவு 96, சியர்ரா லியோனில் 95, ஆப்கானிஸ்தானில் 94. ஆனால், இதற்கு நேர்மாறாக, ஐரோப்பாவிலுள்ள சிறுவர்களுக்கு ஏற்படும் ஆபத்தின் சராசரி அளவு 6 தான் என லண்டனின் த டைம்ஸ் செய்தித்தாள் அறிவிக்கிறது.