Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எங்கள் குடும்பம் இணைந்தது எப்படி

எங்கள் குடும்பம் இணைந்தது எப்படி

எங்கள் குடும்பம் இணைந்தது எப்படி

லார்ஸ், ஜூடித் வெஸ்டர்கார்டு சொன்னது

அந்த வீடு டென்மார்க்கில் இருக்கிறது; அக்குடும்பத்தாரும் இயல்பாகவே அவ்வீட்டில் வலம் வருகின்றனர். பார்ப்பதற்கு அது ஓர் மகிழ்ச்சியான குடும்பம். அமைதியான ஒரு கிராமத்தில் வசதியான வீடு. வீட்டைச் சுற்றி அழகான தோட்டம். வீட்டின் உள்ளே சுவரில் மாட்டப்பட்டிருக்கும் அந்தப் பெரிய ஃபோட்டோவில் சிரித்த முகத்துடன் இருப்பது அவர்களுடைய முத்தான பிள்ளைகள்.

தந்தை லார்ஸ், யெகோவாவின் சாட்சிகளுடைய சபையில் ஒரு மூப்பர். அவருடைய மனைவி ஜூடித் ஒரு பயனியர் (முழு நேர ஊழியர்). அவர்கள் இருவரும் ஆதர்ச தம்பதிகள்தான். ஆனால் எப்போதுமே இப்படி இல்லை. அவர்களுடைய இல்லற வாழ்க்கையில் கசப்பான மனத்தாங்கல்கள் திருமண விலக்குக்கு வழிவகுத்தது. குடும்பம் சிதறியது. ஆனால் அவர்களுடைய குடும்பம் இப்போது ஒன்றுசேர்ந்துவிட்டது. ஏன்? என்ன நடந்தது என்பதை அவர்களையே கேட்டுப் பார்ப்போமே.

அவர்களுடைய இனிய இல்லறத்தில் புயல்வீசியது எவ்வாறு, அவர்கள் எப்படி மறுபடியும் ஒன்றுசேர்ந்தார்கள் என்பதைக் குறித்து மனம்விட்டு பேசுவதில் அவர்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. மற்றவர்களுக்கு இவர்களின் அனுபவம் உதவியாக இருக்கும் என்பது இவர்களின் நம்பிக்கை.

ஆனந்தமாகத்தான் ஆரம்பமானது

லார்ஸ்: ஏப்ரல் 1973-ல் ஆனந்தமாக ஆரம்பமானது இல்லற வாழ்க்கை. புதுமண தம்பதிகளான எங்களுக்கு வாழ்க்கை ஒளிமயமாக தோன்றியது. எங்களுக்கு அப்போது பைபிளைப் பற்றியோ, யெகோவாவின் சாட்சிகளைப் பற்றியோ ஒன்றும் தெரியாது. ஆனால் அனைவரும் ஒன்றுசேர்ந்து உழைத்தால் உலகத்தை மேம்பட்ட ஒரு இடமாக மாற்றிட முடியும் என்பது எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஆகவே பல்வேறு அரசியல் காரியங்களில் நாங்கள் ஈடுபட்டோம். மார்டின், தாமஸ், ஜோனஸ் என்ற மூன்று முத்தான பிள்ளைகள் பிறந்து எங்கள் குடும்பம் பெரிதானபோது நாங்கள் மகிழ்ச்சியில் திளைத்தோம்.

ஜூடித்: சிவில் சர்வீஸ் கிளை அலுவலகத்தில் நான் உயர் அதிகாரியாக பணிபுரிந்து வந்தேன். அதே சமயம் அரசியல் மற்றும் தொழிலாளர் சங்க நடவடிக்கைகளில் எனக்கு ஈடுபாடு அதிகமிருந்தது. படிப்படியாக முக்கிய பதவிகள் என்னைத் தேடிவந்தன.

லார்ஸ்: ஒரு பெரிய தொழிற்சங்கத்தில் எனக்கு வேலை. நான் அதில் ஒரு முக்கிய புள்ளியானேன். ஜெட் வேகத்தில் நாங்கள் பதவியில் முன்னேறிக்கொண்டே போனோம். மகிழ்ச்சி என்னும் வானில் நாங்கள் சிறகடித்து கவலையின்றி பறந்தோம்.

விரிசல்

லார்ஸ்: அவளுக்கு அவள் வேலை, எனக்கு என் வேலை என்று இருவருமே அவரவர் வேலையில் மூழ்கிப்போனோம். நாங்கள் சேர்ந்திருக்கும் நேரம் குறைந்துகொண்டே வந்தது. ஒரே அரசியல் கட்சியில்தான் இருந்தோம், ஆனால் வெவ்வேறு துறைகளில் எங்களுக்கு வேலை. எங்கள் மூன்று பிள்ளைகளையும் மற்றவர்கள் பார்த்துக்கொண்டார்கள். அவர்களை நாங்கள் பராமரிப்பு இல்லங்களில் விட்டுவிடுவோம். இருவருமே அவரவர் சொந்த விஷயங்களைப் பற்றியே அக்கறையாய் இருந்ததால், எங்கள் இல்லற வாழ்க்கையில் ஒழுங்கு இல்லை. வீட்டில் ஒரே சமயத்தில் இருவரும் இருக்க நேரிட்டால் அடிக்கடி எங்களுக்குச் சண்டை வர ஆரம்பித்தது. சப்தமாக சண்டைப்போட்டுக் கொள்ள ஆரம்பித்தோம். இதை மறப்பதற்கு நான் மதுவை நாடினேன்.

ஜூடித்: நாங்கள் ஒருவருக்கொருவரும் பிள்ளைகளிடமும் இன்னும் பிரியமாகத்தான் இருந்தோம். ஆனால் எங்கள் அன்பை நாங்கள் நல்லவிதமாக விருத்தி செய்திருக்க வேண்டும்; அதற்கு பதில் அது வாடி வதங்குவதுபோல் இருந்தது. எங்கள் உறவில் ஒரு விரிசல் ஏற்பட்டது. இதனால் கஷ்டம் பிள்ளைகளுக்குத்தான் அதிகம்.

லார்ஸ்: இந்த விரிசலை எப்படியாவது ஒட்டவைக்க வேண்டும் என்றுதான் நான் நினைத்தேன். இதற்காக, என் வேலையை விட்டுவிட முடிவுசெய்தேன். 1985-ல் நகரத்திலிருந்து வெளியேறி ஒரு கிராமத்தில் குடியேறினோம்; இப்போது அதே இடத்தில்தான் வசிக்கிறோம். நிலைமை கொஞ்சம் சகஜமானது. ஆனால் எங்களின் அக்கறை வெவ்வேறாக இருந்தது. கடைசியாக 1989 பிப்ரவரியில் 16 வருட இல்லற வாழ்க்கை திருமண விலக்கில் முடிவுக்கு வந்தது. குடும்பம் நாசமானது.

ஜூடித்: எங்கள் குடும்பம் பிரிந்து போவதையும் இது பிள்ளைகளை பாதிப்பதையும் பார்ப்பது மிகவும் வேதனையாக இருந்தது. நாங்கள் இருவரும் விரோதிகள்போல் ஆனோம். எங்கள் பிள்ளைகளை பராமரிப்பதில்கூட ஒத்துப்போக முடியவில்லை; எனவே நானே மூன்று பிள்ளைகளையும் வளர்க்கும் உரிமையை பெற்றேன்.

லார்ஸ்: நொறுங்கிக்கொண்டிருந்த எங்கள் குடும்பத்தை ஒன்றுசேர்த்து தூக்கிநிறுத்த நாங்கள் இருவரும் ஏதேதோ முயற்சிகள் எடுத்தோம். உதவிக்காக கடவுளைக்கூட வேண்டிக்கொண்டோம். ஆனால் அப்போது கடவுளைப்பற்றி எங்களுக்கு அதிகம் தெரியாது.

ஜூடித்: கடவுள் ஒன்றும் ஜெபங்களை காதுகொடுத்துக் கேட்பதில்லை என்று முடிவுசெய்தோம். ஆனால் அதன் பிறகுதான் கடவுள் ஜெபங்களைக் கேட்கிறார் என்பதே எங்களுக்குத் தெரிந்தது. அதற்காக அவருக்கு நன்றி.

லார்ஸ்: நாங்கள் முயற்சி எடுத்து மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதை புரிந்துகொள்ளாமல் இருந்தோம். ஆகவே திருமணவிலக்கு என்ற சோக கதை நிஜமானது.

லார்ஸ் குடும்பத்தில் எதிர்பாராத ஒரு திருப்பம்

லார்ஸ்: நான் தனிமையாக வாழ்ந்துகொண்டிருந்த போது சற்றும் எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்ந்தன. ஒருநாள் யெகோவாவின் சாட்சிகள் கொடுத்த இரண்டு பத்திரிகைகளை வாங்கிக்கொண்டேன். முன்பெல்லாம் சாட்சிகள் வந்தால், அவர்களை வேண்டாம் என்று அனுப்பிவிடுவதே என் பழக்கம். ஆனால் அந்தப் பத்திரிகைகளைப் புரட்டியபோதுதான் எனக்கு புரிந்தது யெகோவாவின் சாட்சிகள் உண்மையில் கடவுளையும் இயேசு கிறிஸ்துவையும் நம்புகிறவர்கள் என்பது. அது எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம். அவர்களை கிறிஸ்தவர்கள் என்றே நான் நினைத்தது கிடையாது.

அந்தச் சமயத்தில்தான் நான் சந்தித்த ஒரு பெண்ணோடு ஒரு வீட்டில் குடியேறி இருந்தேன். அவள் ஒரு சமயம் யெகோவாவின் சாட்சியாக இருந்தவள். ஆகவே நான் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தபோது, அவள் யெகோவா என்பது கடவுளுடைய பெயர் என்பதை எனக்கு பைபிளில் காட்டினாள். ஆகவே யெகோவாவின் சாட்சிகள் என்றால் “கடவுளுடைய சாட்சிகள்” என்பது அர்த்தம்.

யெகோவாவின் சாட்சிகளுடைய அசெம்பிளி மன்றத்தில் ஒரு பொது பேச்சைக் கேட்பதற்கு அந்தப் பெண் ஏற்பாடு செய்தாள். அங்கே நான் பார்த்தவை என் அக்கறையை அதிகமாக தூண்டின. இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவலில் நான் உள்ளூர் ராஜ்ய மன்றத்துக்குச் சென்றேன். ஒரு பைபிள் படிப்பு எனக்கு ஆரம்பிக்கப்பட்டது. வெகு சீக்கிரத்தில், ஒரு பெண்ணோடு இப்படி வாழும் வாழ்க்கை சரியல்ல என்பது எனக்குப் புரிந்தது. ஆகவே அவளைவிட்டு பிரிந்து என் சொந்த ஊருக்கே போய் தனியாக ஒரு வீட்டில் குடியேறினேன். முதலில் கொஞ்சம் தயங்கினேன், பின்னர் அங்கே யெகோவாவின் சாட்சிகளோடு தொடர்புகொண்டு பைபிள் படிப்பைத் தொடர்ந்தேன்.

இன்னும் எனக்கு சில சந்தேகங்கள். யெகோவாவின் சாட்சிகள் உண்மையில் கடவுளுடைய மக்களா? சிறு பிள்ளையாக இருந்தபோது நான் கற்றுக்கொண்ட அந்த எல்லா காரியங்களும் தவறா? செவன்த் டே அட்வென்டிஸ்டாக நான் வளர்க்கப்பட்டதால் இப்போது நான் ஒரு அட்வென்டிஸ்டு குருவைப் போய் பார்த்தேன். அவர் என்னோடு ஒவ்வொரு புதன்கிழமையும் பைபிளைப் படிக்க ஒப்புக்கொண்டார். யெகோவாவின் சாட்சிகள் என்னோடு ஒவ்வொரு திங்கள்கிழமையும் படித்தார்கள். இரண்டு பேரிடமிருந்தும் நான் நான்கு விஷயங்களில் தெளிவான பதிலை பெற்றுக்கொள்ள விரும்பினேன்: கிறிஸ்துவின் வருகை, உயிர்த்தெழுதல், திரித்துவக் கோட்பாடு, சபை எவ்விதமாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு சில மாதங்களில் என்னுடைய எல்லா சந்தேகங்களும் மறைந்தன. இந்த நான்கு விஷயங்களிலும் மற்ற எல்லா விஷயங்களிலும் யெகோவாவின் சாட்சிகளின் நம்பிக்கைகளுக்கு மாத்திரமே முழு பைபிள் ஆதாரமிருந்தது. பலன்? சபை நடவடிக்கைகள் எல்லாவற்றிலும் சந்தோஷமாக பங்குகொள்ள ஆரம்பித்தேன். சீக்கரத்தில் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்தேன்; மே, 1990-ல் முழுக்காட்டுதல் பெற்றேன்.

ஜூடித்தைப் பற்றி என்ன?

ஜூடித்: இல்லற வாழ்க்கை முடிவுக்கு வந்தபோது, மறுபடியுமாக சர்ச்சுக்கு நான் போக ஆரம்பித்தேன். லார்ஸ் யெகோவாவின் சாட்சியாக மாறிக்கொண்டிருக்கிறார் என்பதை நான் கேள்விப்பட்டபோது எனக்கு அது கொஞ்சம்கூட பிடிக்கவில்லை. கடைக்குட்டி, பத்து வயது ஜோனஸ் சில சமயங்களில் அவனுடைய அப்பாவைப் பார்க்க போவான். ஜோனஸை கண்டிப்பாக சாட்சிகளுடைய எந்தக் கூட்டத்துக்கும் அழைத்துச் செல்லக்கூடாது என்று நான் லார்ஸிடம் சொல்லிவிட்டேன். லார்ஸ் மேல் முறையீடு செய்தார், ஆனால் என் பக்கமே ஜெயித்தது.

என் வாழ்க்கையில் இன்னொரு மனிதர் குறுக்கிட்டார். அதுமட்டுமில்லாமல் அரசியலிலும் எல்லா வகையான சமூக சேவையிலும் இன்னும் அதிகமாக என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். ஆகவே அந்தச் சமயத்தில் யாராவது எங்கள் குடும்பம் ஒன்றுசேருவதைப் பற்றி பேசியிருந்தால் அது நடக்கவே முடியாத காரியமாக இருந்திருக்கும்.

யெகோவாவின் சாட்சிகளிடம் குற்றம் ஏதாவது கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளூர் பாதிரியாரிடம் சென்றேன். அவரோ சாட்சிகளைப்பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது, அவர்களைப்பற்றி எந்த பிரசுரமும் தன்னிடம் கிடையாது என்று உடனடியாக சொல்லிவிட்டார். அவர்களிடமிருந்து விலகியிருங்கள் என்று மட்டுமே அவர் என்னிடம் சொன்னார். யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக எனக்கிருந்த அபிப்பிராயம் ஒன்றும் இதனால் மாறிவிடவில்லை. ஆனால் நான் சற்றும் எதிர்பாராத ஒரு விதத்தில் அவர்களை சந்திக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டது.

ஸ்வீடனில் இருந்த என் சகோதரன் ஒரு யெகோவாவின் சாட்சியாக மாறிவிட்டிருந்தான். ராஜ்ய மன்றத்தில் நடைபெற்ற அவனுடைய திருமணத்துக்கு எனக்கு அழைப்பு வந்தது! அப்போதுதான் சாட்சிகளைப்பற்றி எனக்கிருந்த அபிப்பிராயம் அடியோடு மாறிவிட்டது. நான் அவர்களை சுவாரசியமே இல்லாத ஆட்களாக கற்பனை செய்து வைத்திருந்தேன். ஆனால் என்ன ஆச்சரியம்! அவர்கள் மிகவும் தயவாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தார்கள். நகைச்சுவை உணர்வு அவர்களுக்கு அதிகமிருந்ததை நான் கண்டு அசந்துபோனேன்.

இதற்கிடையில் என் முன்னாள் கணவர் லார்ஸ் அடியோடு மாறிவிட்டிருந்தார். இப்போது அவர் அதிக பொறுப்போடு நடந்துகொண்டார், பிள்ளைகளோடு நேரத்தை செலவிட்டார், தயவோடு நடந்துகொண்டார், பேச்சில் கட்டுப்பாடு தெரிந்தது, முன்பெல்லாம் செய்தது போல அவர் அளவுக்கு அதிகமாக குடிக்கவில்லை. இப்போது பார்க்கவே மிகவும் கவர்ச்சியாக இருந்தார்! அவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நான் முன்பெல்லாம் விரும்பினேன். இப்போது நான் அவருடைய மனைவி இல்லை, ஒருநாள் வேறொரு பெண் இவரை மணந்துகொள்வாள் என்ற நினைப்பே எனக்கு கசப்பாக இருந்தது!

பின்பு ஒருநாள் தந்திரமாக ஒரு திட்டம் தீட்டினேன். ஜோனஸ் அவனுடைய அப்பாவோடு தங்கியிருந்த போது, என்னுடைய இரண்டு சகோதரிகளும் ஜோனஸை பார்க்க ஆசையாக இருப்பதாக அவரிடம் கூறினேன். அவர்களோடு போய் ஒரு பூங்காவில் நாங்கள் சந்தித்துக் கொண்டோம். சித்திமார் இருவரும் ஜோனஸோடு விளையாடிக் கொண்டிருந்தபோது நானும் லார்ஸும் ஒரு பெஞ்சில் அமர்ந்து கொண்டோம்.

எங்கள் எதிர்காலத்தைப்பற்றி நான் பேச்சை எடுத்தபோது லார்ஸ் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்தார், எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதன் தலைப்பு உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல். a அவர் அந்தப் புத்தகத்தை என்னிடத்தில் கொடுத்து ஒரு குடும்பத்தில் கணவனின் பங்கு, மனைவியின் பங்கு பற்றிய அதிகாரங்களை வாசிக்கும்படி சொன்னார். முக்கியமாக வேதவசனங்களை எடுத்துப் பார்க்கும்படி அவர் என்னிடம் சொன்னார்.

கொஞ்ச நேரம் கழித்து லார்ஸும் நானும் எழுந்துகொண்டபோது அவருடைய கையை நான் பிடித்துக்கொள்ள துடித்தேன், அவர் நாசூக்காக விலகிக்கொண்டார். அவருடைய இந்தப் புதிய மதத்தை நான் ஏற்றுக்கொள்வேனா மாட்டேனா என்பதை அறிந்துகொள்ளாமல் என்னோடு எந்த புதிய உறவையும் வளர்த்துக்கொள்ளும் எண்ணம் அவருக்கில்லை. அது எனக்கு சற்று வேதனையாகவே இருந்தது, ஆனால் அவர் நினைப்பதிலும் நியாயம் இருப்பதாகவே எனக்குப்பட்டது. அப்படியே அவர் எனக்கு மறுபடியும் கணவனாகும் வாய்ப்புக் கிடைத்தாலும் இதைப் பற்றி சிந்திப்பதுதான் எனக்கு நன்மையாக இருக்கும் என்று உணர்ந்தேன்.

இதெல்லாம் நடந்ததால் யெகோவாவின் சாட்சிகளைப்பற்றி அறிய என் ஆர்வம் கூடியது. அடுத்த நாள் எனக்குத் தெரிந்த ஒரு யெகோவாவின் சாட்சியோடு நான் தொடர்புகொண்டு பேசினேன். அவர்களுடைய மதத்தைப்பற்றி நான் தெரிந்துகொள்ள விரும்பிய தகவலை அவளும் அவளுடைய கணவனும் வந்து எனக்குச் சொல்வதாக சொன்னார்கள். என்னுடைய எல்லா கேள்விகளுக்கும் அவர்கள் பைபிளிலிருந்து பதிலளித்தார்கள். அப்போதுதான் புரிந்தது யெகோவாவின் சாட்சிகள் கற்பிக்கும் அனைத்துக்கும் உறுதியான பைபிள் ஆதாரம் இருக்கிறது என்பது. ஒன்றன்பின் ஒன்றாக அவர்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்வதை ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று.

அந்தச் சமயத்தில் நான் இவான்ஜலிக்கல் லூத்தரன் சர்ச்சிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு என்னுடைய எல்லா அரசியல் நடவடிக்கைகளையும் மூட்டைக்கட்டிவிட்டேன். புகைப்பதைக்கூட விட்டுவிட்டேன். அதுதான் எனக்கு மிகவும் கடினமாக இருந்த விஷயம். ஆகஸ்ட் 1990-ல் நான் பைபிளை படிக்க ஆரம்பித்தேன், ஏப்ரல் 1991-ல் நான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருத்தியாக முழுக்காட்டுதல் பெற்றேன்.

அவர்களுடைய இரண்டாவது திருமணம்

ஜூடித்: இப்பொழுது நாங்கள் இருவருமே முழுக்காட்டப்பட்ட சாட்சிகள். இருவரும் வெவ்வேறு பாதைகளில் சென்றுவிட்டாலும் இப்போது பைபிளை படித்திருந்தோம். பைபிளின் மிகச் சிறந்த போதனைகள் எங்களை மாற்றிவிட்டது. இன்னும் நாங்கள் ஒருவரைப்பற்றி ஒருவர் அக்கறையாகவே இருந்தோம், அந்த அக்கறை இப்போது இன்னும் ஆழமாகவே இருந்தது. ஆகவே இப்போது எங்களுக்கு எந்தத் தடையுமில்லை, நாங்கள் மறுபடியும் திருமணம் செய்துகொள்வதற்கு. அதைத்தான் நாங்கள் செய்தோம். இரண்டாவது முறையாக நாங்கள் உறுதிமொழிகளைப் பரிமாறிக்கொண்டோம், ஆனால் இம்முறை யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்தில்.

லார்ஸ்: நம்பமுடியாதது நடந்துவிட்டது—எங்கள் குடும்பம் மறுபடியும் ஒன்றுசேர்ந்துவிட்டது! நாங்கள் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை!

ஜூடித்: திருமணத்துக்கு எங்கள் மகன்களும் பல உறவினர்களும் அநேக பழைய நண்பர்களும் புதிய நண்பர்களும் வந்திருந்தார்கள். அது ஆச்சரியமான ஒரு அனுபவம். விருந்தினர்களில் சிலர் எங்களுடைய முந்தின திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் மறுபடியுமாக எங்களை ஒன்றாக சேர்ந்து பார்ப்பதில் சந்தோஷமடைந்தனர், யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் இருந்த சந்தோஷம் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

பிள்ளைகள்

லார்ஸ்: நாங்கள் முழுக்காட்டுதல் எடுத்தப் பிறகு எங்களுடைய இரண்டு மகன்களும் யெகோவாவுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்த போது நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம்.

ஜூடித்: ஜோனஸ் சிறு வயதிலிருந்தே அவனுடைய அப்பாவை அடிக்கடி சந்தித்து வந்ததால் பைபிள் சத்தியத்தின்மீது பற்றுதல் இருந்துவந்தது. அப்பாவோடு நான் தங்கிவிடுகிறேன் என்று அவன் என்னிடம் சொன்னபோது அவனுக்கு வயது 10, அவன் சொன்னான், “அப்பா பைபிள் சொல்படி நடக்கிறார்” என்று. ஜோனஸ் 14 வயதாக இருக்கும்போது முழுக்காட்டுதல் பெற்றான். அவன் படித்துமுடித்துவிட்டான், இப்போது முழுநேர ஊழியனாக இருக்கிறான்.

லார்ஸ்: எங்களுடைய மூத்த மகன் மார்டினுக்கு இப்போது 27 வயதாகிறது. நாங்கள் செய்த மாற்றங்களைப் பார்த்து அவன் அதிகமாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டான். அவன் வீட்டைவிட்டு சென்று, நாட்டின் வேறொரு பகுதியில் வசித்துவந்தான். இரண்டு வருடங்களுக்கு முன்பு யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் சபையில் பைபிளை படிக்க ஆரம்பித்தான். ஐந்தே மாதங்களில் அவன் முழுக்காட்டுதலுக்கு தயாராகிவிட்டான். ஒரு கிறிஸ்தவனாக எதிர்கால வாழ்க்கைக்காக அவன் தொடர்ந்து திட்டமிட்டு வருகிறான்.

நடு பையன் தாமஸ் இன்னும் யெகோவாவின் சாட்சியாகவில்லை. இன்னும் நாங்கள் அவனை நேசிக்கவே செய்கிறோம். அவனோடு எங்களுக்கு சுமுகமான உறவு இருக்கிறது. எங்களுடைய குடும்பத்தில் ஏற்பட்ட மாற்றங்களைக் குறித்து அவனுக்கும் சந்தோஷம்தான். பைபிளிலிருந்து பெற்றோராக நாங்கள் கற்றுக்கொண்ட நேர்த்தியான நியமங்களின் காரணமாக எங்கள் குடும்பம் மறுபடியும் ஒன்றுசேர்ந்தது. அடிக்கடி பிள்ளைகளும் பெற்றோருமாக நாங்கள் ஒரே கூரையின்கீழ் ஒன்றுசேர முடிவது எங்களுக்கு எத்தனை ஆசீர்வாதமாக இருக்கிறது தெரியுமா?

இன்று எங்கள் வாழ்க்கை

லார்ஸ்: நாங்கள் பரிபூரணராகிவிட்டோம் என்று சொல்லவில்லை, ஆனால் வெற்றிகரமான திருமணத்துக்கு முக்கியமான காரணிகள் அன்பும் பரஸ்பர மரியாதையுமே என்பதை நாங்கள் கற்றுக்கொண்டோம். முதல் திருமணத்துக்கு அஸ்திவாரமாக இருந்ததும் இந்தத் திருமணத்துக்கு அஸ்திவாரமாக இருப்பதும் நேர் எதிர்மாறான விஷயங்கள். நாங்கள் இருவருமே எங்களுக்கும் மேலாக உன்னதமான ஒரு அதிகாரத்தை ஏற்றுக்கொண்டுவிட்டோம், நாங்கள் இருவருமே இப்போது யெகோவாவுக்காக வாழ்வதை புரிந்துகொண்டுவிட்டோம். நானும் ஜூடித்தும் இன்று உண்மையாகவே ஐக்கியமாகிவிட்டோம், எதிர்காலத்தை நம்பிக்கையோடு நோக்கியிருக்கிறோம்.

ஜூடித்: யெகோவாவே மிகச் சிறந்த திருமண ஆலோசகர், அவரே மிகச் சிறந்த குடும்ப ஆலோசகர் என்பதற்கு நாங்கள் உயிருள்ள சாட்சிகள்.

[அடிக்குறிப்பு]

a 1978-ல் உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் வெளியிட்டது. இப்போது அச்சில் இல்லை.

[பக்கம் 20-ன் படம்]

லார்ஸ், ஜூடித் 1973-ல் முதல் திருமணத்தின்போது

[பக்கம் 21-ன் படம்]

மூன்று பையன்களும் ஐக்கியமாக இருந்த தங்கள் குடும்பத்தை தொலைத்துவிட்டனர், மறுபடியும் கண்டுபிடித்துவிட்டனர்

[பக்கம் 23-ன் படம்]

இன்று லார்ஸ், ஜூடித்—பைபிள் நியமங்களால் ஒன்றுசேர்ந்தனர்