Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

நீர்க்கட்டி நார்மிகு நோய் “நீர்க்கட்டி நார்மிகு நோயுடன் எதிர்நீச்சல்” (அக்டோபர் 22, 1999) என்ற கட்டுரைக்கு என் உள்ளப்பூர்வ நன்றியை சமர்ப்பிக்கிறேன். என்னுடைய கணவருக்கும் எனக்கும் கிட்டத்தட்ட ஜிம்மி காராட்ஸ்யாட்டிஸ் மற்றும் அவருடைய மனைவியின் வயதுதான். மோசமான பிரச்சினைகள் ஒருபுறம் இருந்தாலும், இப்படிப்பட்ட இளம் ஜோடிகள் விசுவாசத்தில் உறுதியாக இருப்பதை காண்பது எவ்வளவு தெம்பளிக்கிறது.

எஸ்.டி., இத்தாலி

இப்படியொரு கட்டுரை வராதா என பல வருடங்களாக காத்துக்கொண்டிருந்தேன். என்னுடைய ஆறு வயது குழந்தைக்கு நீர்க்கட்டி நார்மிகு நோய் உள்ளது. ஆகவே இக்கட்டுரையைப் பார்த்ததும் படித்தேன். ஜிம்மி காராட்ஸ்யாட்டிஸ் சுகவீனமாக இருந்தும் பிரசங்க வேலையில் காட்டிய வைராக்கியம் அபாரம். நோய்நொடி இல்லாத புதிய உலகை பற்றிய நம்பிக்கை எங்களுக்கு புத்துணர்ச்சியளிக்கிறது.

எச்.ஓ., ஐக்கிய மாகாணங்கள்

சுகவீனமாக இருந்தாலும்கூட யெகோவாவை துதிப்பதில் நிறைய சாதிக்க முடியும் என்பதை ஜிம்மியின் உதாரணம் நிரூபிக்கிறது.

பி.சி., பிரேஸில்

போதைப் பொருட்கள் “போதையில் சுழலும் உலகம்?” (நவம்பர் 8, 1999) என்ற கட்டுரைகளை பிரசுரித்ததற்காக நன்றி. நான் கொகெய்ன், கஞ்சா, ஹசீஷ் போன்ற போதைப் பொருட்களை உபயோகித்து வந்தேன். அளவுக்குமீறி மதுபானம் குடித்தேன். ஒரு நாளைக்கு நாற்பதுக்கும் அதிகமாக சிகரெட் பிடித்தேன். இப்படிப்பட்ட கெட்ட பழக்கங்களிலிருந்து விடுபடுவது முடியாத விஷயமாக இருந்தாலும், யெகோவாவுடைய பலத்தால் அவற்றை மேற்கொள்ள முடிந்தது. இப்பழக்கங்களை எல்லாம் தூக்கியெறிந்து ஒன்பது வருடங்கள் கடந்துவிட்டன. மோசமான வியாதியிலோ சிறைவாசத்திலோ சிக்கிக்கொள்ளாமல் இவ்வுலகின் கண்ணியிலிருந்து விடுபட முடிந்ததற்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். ஏனென்றால், என்னுடைய சரீரம், மனம், பொருளாதாரம் எல்லாமே போதைப்பொருள் துஷ்பிரயோகத்தால்தான் பாதிக்கப்பட்டது என்பது எனக்கு தெரியும். ஆகவே, இப்படிப்பட்ட கட்டுரைகள் இளம் தலைமுறையின் இதயத்தைத் தொடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஜி.எம்., இத்தாலி

என்னுடைய பள்ளியில் ஒரு கட்டுரை எழுதும்போது இத்தொடர் கட்டுரையில் உள்ள விஷயங்களை அதில் எழுதினேன். அக்கட்டுரைக்கு எல்லாவற்றையும்விட மிக உயர்ந்த கிரேடும் கிடைத்தது, டீச்சருடைய பாராட்டுதல்களும் கிடைத்தன. விழித்தெழு! பத்திரிகையை, அதுவும் அதில் சமீபகால பிரச்சினைகளைப் பற்றி விளக்கும் கட்டுரைகளைப் படிப்பதில் எனக்குக் கொள்ளை ஆசை. வாழ்க்கையின் உண்மை நிலையை அறியவும் இது உதவுகிறது.

ஐ.எம்., இத்தாலி

பாம் தோட்டங்கள் நான் சமீபத்தில் படித்த கட்டுரைகளில் என் மனதைப் பறிகொடுத்த ஒரு கட்டுரை “எழில் கொஞ்சும் தோட்டத்திற்கு ஓர் உலா.” (நவம்பர் 8, 1999) செடிகள்மீது அவருக்கு இருந்த கொள்ளை ஆசை என்னையே அசரவைத்தது. யெகோவாவின் அருமையான படைப்பை அவர் எவ்வளவாக மதிக்கிறார். இதே உணர்வு நம் எல்லோருக்கும் வேண்டும். அப்படிப்பட்ட அழகான தோட்டம் போடுவதற்கு திட்டமிட்டு, பரதீஸில் இருப்பது போன்று நானும் கனவு காண்கிறேன்.

எல்.கே., கனடா

சகஜமாக பழகுதல் “இளைஞர் கேட்கின்றனர் . . . என்னால் ஏன் சகஜமாக பழக முடியவில்லை?” (நவம்பர் 22, 1999) என்ற கட்டுரை என் மனதைத் தொட்டது. எனக்கு 16 வயது. மற்றவர்களோடு பழகுவது அதுவும் முக்கியமாக கிறிஸ்தவ கூட்டங்களில் மற்றவர்களோடு பழகுவது கஷ்டமாக இருக்கிறது. என்னைப் போன்ற இதே பிரச்சினைகளையுடைய இளைஞர்களை மனதில் வைத்து இக்கட்டுரையை பிரசுரித்ததற்காக நன்றி. இக்கட்டுரையில் நீங்கள் கொடுத்துள்ள நல்ல ஆலோசனைகளை பின்பற்ற முயற்சி செய்கிறேன்.

ஐ.ஏ., பிரான்ஸ்

பாடும் பறவைகள் “இனிய டூயட் பாடகர்கள்” (டிசம்பர் 8, 1999) என்ற கட்டுரைக்கு நன்றி. இப்பறவைகள் மரக்கிளையில் உட்கார்ந்து அழகாக பாடுவதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. நம்மை மகிழ்விக்கும் இப்படிப்பட்ட பறவைகளையும் விலங்கினங்களையும் படைத்ததற்காக நான் தினமும் யெகோவாவுக்கு நன்றி கூறுகிறேன்.

ஒய்.எஸ்., ஜப்பான்

சர்க்கரை வியாதி கருத்தரங்கை நடத்த வேண்டியது என் முதுநிலை பட்டப்படிப்பின் ஒரு பகுதியாகும். பரம்பரை சர்க்கரை வியாதி என்ற தலைப்பில் கருத்தரங்கை நடத்தும்படி கேட்டார்கள். அதற்கு உங்கள் கட்டுரை ரொம்ப உதவியாக இருந்தது. “உங்க மகளுக்கு சர்க்கரை வியாதி!” (செப்டம்பர் 22, 1999) என்ற கட்டுரை எளிதாகவும் அதே சமயத்தில் தெள்ளத் தெளிவாகவும் இருந்தது. தனக்கிருக்கும் நோயை எவ்வாறெல்லாம் சமாளிக்கலாம் என்பதைப் பற்றிய தெளிவான அறிவுரைகள் ஒரு நோயாளிக்கு மிகவும் அவசியம் என்பதை சோனியா ஹர்ட்-ன் அனுபவத்திலிருந்து அறிந்துகொண்டேன்.

டி.கே., பிரேஸில்