Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஓடிவிடும் அப்பாமார்—உண்மையிலேயே ஓடிவிட முடியுமா?

ஓடிவிடும் அப்பாமார்—உண்மையிலேயே ஓடிவிட முடியுமா?

இளைஞர் கேட்கின்றனர் . . .

ஓடிவிடும் அப்பாமார்—உண்மையிலேயே ஓடிவிட முடியுமா?

“‘உங்க குழந்தை என் வயித்துல வளருது’ என்று அவள் சொல்ல . . . ஒவ்வொரு வார்த்தையும் என் காதில் திராவகமாக இறங்கியது. அந்தக் குழந்தையை யார் கவனிக்கப் போகிறார்கள்? ஒரு குடும்பத்தைக் கவனிக்கும் நிலையில் நான் இல்லை. உடனே எங்கேயாவது ஓடிவிடலாம் என்று எனக்கு தோன்றியது.”—ஜிம். a

ஆலன் குட்மாக்கர் நிறுவனத்திலிருந்து வந்த ஓர் அறிக்கை இவ்வாறு சொல்கிறது: “ஒவ்வொரு ஆண்டும் பத்திலிருந்து இருபது வயதுக்குட்பட்ட பெண்களில் ஏறக்குறைய பத்து லட்சம் பேர் . . . கர்ப்பவதிகளாகிறார்கள். இவர்களில் 78% மணமாகாதவர்கள்.”

முற்காலத்தில் ஆண்கள் தங்களுக்கு பிறந்த பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். அது தங்கள் கடமையெனவும் உணர்ந்தனர். ஆனால், டீனேஜ் ஃபாதர்ஸ் என்ற புத்தகம் குறிப்பிடுவதுபோல், “மணம் செய்யாமல் முறைகேடாக கர்ப்பந்தரிப்பது, முன்போல் வெட்கத்தையும் அவமானத்தையும் தருகிறதில்லை.” சில சமுதாயங்களில், இளைஞர் பிள்ளை பெறுவதை பெருமையாக கருதலாம்! இருப்பினும், வாலிபர்கள் சிலரே தங்கள் பிள்ளைகளை வளர்ப்பதற்கான பொறுப்பை ஏற்கிறார்கள். ஆனால் முடிவில் பலர் அதை உதறிவிடுகிறார்கள். b

ஒழுக்கக்கேடான நடத்தையின் விளைவுகளிலிருந்து ஓர் இளைஞன் முழுமையாக தப்பித்துக்கொள்ள முடியுமா? முடியாது என்றே பைபிள் குறிப்பிடுகிறது. அது இவ்வாறு எச்சரிக்கிறது: “மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.” (கலாத்தியர் 6:7) நாம் காணப்போகிறபடி, பாலுறவு ஒழுக்கக்கேடு—வாலிப பெண்களுக்கும்சரி பையன்களுக்கும்சரி—வாழ்நாளெல்லாம் நீடிக்கும் விளைவுகளில்தான் முடிவடைகிறது. பாலுறவு ஒழுக்கக்கேட்டைத் தவிர்க்கும்படியான பைபிளின் தெளிவான அறிவுரைக்குச் செவிகொடுப்பதன் மூலம் இத்தகைய விளைவுகளை இளைஞர் தவிர்க்கலாம்.

உதறிவிட்டு ஓடுவது—அவ்வளவு எளிதல்ல

ஒரு பிள்ளையை வளர்ப்பது அதிக நேரத்தையும், பணத்தையும், சுதந்திரத்தையும் பேரளவாக தியாகம் செய்வதை உட்படுத்துகிறது. மணமாகாத இளம் தகப்பன்மார் (ஆங்கிலம்) என்ற புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “‘இன்னொருவரை கவனிப்பது’ பணச்செலவை அதிகரிக்கும் என்பதால் சில இளைஞர்கள் அதற்கு முன்வருவதில்லை.” எனினும் தங்கள் தன்னலத்தின் காரணமாக பலர் இக்கட்டுக்குள்ளாகிறார்கள். உதாரணமாக, தங்கள் பிள்ளைகளை ஆதரிக்கத் தவறுகிற ஆண்களை நம்பிக்கைக்கு பாத்திரமற்றவர்களாக பல நாடுகளிலுள்ள நீதிமன்றங்களும் சட்ட நிபுணர்களும் கருதுகின்றனர். தகப்பன் யாரென சட்டப்பூர்வமாய் உறுதிசெய்யப்பட்டால், ஜீவனாம்சம் கொடுக்கும்படி கட்டளையிடப்படலாம்—அதுதான் சரி. அத்தகைய கடமைகளை நிறைவேற்ற பல இளைஞர்கள் பள்ளியை விட்டு விலகுகிறார்கள், அல்லது குறைவான சம்பளம் கிடைக்கும் வேலைகளைச் செய்யும் நிலைக்கு ஆளாகிறார்கள். பள்ளி-வயது கர்ப்பந்தரிப்பும் பெற்றோர் நிலையும் என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “ஒருவன் எவ்வளவு சின்ன வயதில் தகப்பனாகிறானோ அவ்வளவு குறைவான படிப்பையே பெறுகிறான்.” செலுத்தும்படி கோர்ட் உத்தரவிட்ட ஜீவனாம்சத் தொகையை செலுத்தத் தவறினால், அந்தத் தொகை பெருகிக்கொண்டே போகும்.

நிச்சயமாகவே, எல்லா வாலிபர்களுமே, தாங்கள் பெற்ற பிள்ளைகள்மீது பாசமற்று இருப்பதில்லை. பலர் நல்ல நோக்கங்களுடன் பிள்ளையை பராமரிக்க தொடங்குகிறார்கள். ஓர் ஆராய்ச்சியின்படி, இருபது வயதுக்கு உட்பட்ட தகப்பன்மாரில் 75 சதவீதத்தினர், மருத்துவமனையில் தங்கள் பிள்ளையைச் சென்று பார்த்தார்கள். இருப்பினும் சீக்கிரத்திலேயே, பிள்ளையைக் கவனிக்கும் பொறுப்புகளை இளம் தகப்பன்மாரால் சமாளிக்க முடியாமல் போய்விடுகிறது.

நல்ல ஒரு வேலை கிடைக்குமளவுக்கு தங்களுக்குத் திறமை அல்லது அனுபவம் இல்லை என்று பலர் காண்கின்றனர். பண உதவி அளிப்பதற்குத் தாங்கள் திறமையற்றவர்களாக இருப்பதால் வெட்கமடைந்து, காலப்போக்கில் தங்கள் பொறுப்புகளை தட்டிக்கழித்து விடுகிறார்கள். இருப்பினும், வாழ்நாள் முழுவதும் அந்தத் தவறைப் பற்றிய விசாரம் இளைஞனை பாடாய்படுத்தும். ஓர் இளம் தகப்பன் இவ்வாறு ஒப்புக்கொள்கிறான்: “என் மகனுக்கு என்ன நேர்ந்ததோவென சில சமயங்களில் நான் யோசிப்பேன். . . . அவனை விட்டுவந்ததால் மனவேதனை என்னை வாட்டுகிறது. ஆனால் இப்போது அவனை இழந்துவிட்டேன். என்றாவது ஒரு நாள் அவன் என்னைத் தேடி வரலாம்.”

பிள்ளைகளுக்குச் செய்யப்பட்ட தீங்கு

பொறுப்பை விட்டோடும் தந்தையர்களும் நிம்மதியாக இருக்க முடிவதில்லை. கடும் வெட்க உணர்ச்சிகளுடன், அதாவது, தன் சொந்த பிள்ளைக்கே தீங்குசெய்த வெட்க உணர்ச்சிகளுடன் போராட வேண்டியதாக இருக்கிறது. பைபிள் குறிப்பிட்டுக் காட்டுகிறபடி, ஒரு பிள்ளைக்கு, தாய் தகப்பன் இருவருமே தேவை. (யாத்திராகமம் 20:12; நீதிமொழிகள் 1:8, 9) ஒரு மனிதன் தன் பிள்ளையைக் கைவிடுகையில், பல பிரச்சினைகளுக்கு ஆளாகும்படி அவனை பாதுகாப்பில்லாமல் விடுகிறான். ஐ.மா. சுகாதார மற்றும் மனித சேவை இலாகாவின் ஓர் அறிக்கை இவ்வாறு சொல்கிறது: “தாய் மட்டுமே இருக்கும் குடும்பங்களிலுள்ள இளம் பிள்ளைகள், பொதுவில் வாய்மொழி மற்றும் கணக்கு பரீட்சைகளில் குறைந்த மதிப்பெண்ணே பெறுகின்றனர். ஒற்றைப் பெற்றோரால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள், 7 முதல் 10 வயதுவரை குறைந்த மதிப்பெண்களையே பெறுவோராகவும், நடத்தை சம்பந்தப்பட்ட அநேக பிரச்சினைகளை எதிர்ப்படுபவர்களாகவும், உடல், மனம் சார்ந்த தீரா கோளாறுகள் அதிக அளவுக்கு உடையவர்களாகவும் இருக்கிறார்கள். தாய் மட்டும் இருக்கும் குடும்பத்தில் வளர்க்கப்பட்ட இளம், வாலிப பருவத்தினர், இருபதுக்கு உட்பட்ட வயதில் பிள்ளை பெறுவது, உயர்நிலை பள்ளியிலிருந்து விலகுவது, சிறைக்கு செல்வது, வேலை ஏதும் செய்யாமல் அல்லது பள்ளிக்கும் போகாதிருப்பது போன்ற பல ஆபத்துக்களில் உழல்கின்றனர்.”

அட்லான்டிக் மன்த்லி பத்திரிகை இவ்வாறு முடிவுசெய்கிறது: “சமூக-விஞ்ஞான சான்றின்படி, திருமண உறவுக்குள் பிறந்த பிள்ளைகளோடு ஒப்பிட, விவாகரத்தால் பிளவுற்ற குடும்பங்களில் வளரும் பிள்ளைகளும் திருமணத்திற்குப் புறம்பே பிறந்த பிள்ளைகளும் வாழ்க்கையில் பல காரியங்களில் மோசமான நிலையில் இருக்கிறார்கள். ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களிலுள்ள பிள்ளைகள் பெரும்பாலும் ஆறு மடங்கு அதிகம் ஏழ்மையில் இருக்கிறார்கள். ஒருவேளை வாழ்நாள் முழுவதும் அவர்கள் ஏழைகளாகவே இருக்கலாம்.”

இந்த அபாயக் குறிப்புகள் அனைத்தும், குறிப்பிட்ட தொகுதியினர்மீது மேற்கொண்ட புள்ளியியல் ஆய்வுகளை அடிப்படையாக கொண்டவை. எனவே, இவை தனிநபருக்கு ஒருவேளை பொருந்தாமலும் போகலாம் என்பதை மனதில் வையுங்கள். குடும்ப சூழல்கள் அனுகூலமற்றவையாக இருந்தபோதிலும், பல பிள்ளைகள், நல்ல நிதான நிலையிலுள்ள சிறந்த வாலிபர்களாகிறார்கள். என்றாலும், தன் பிள்ளையைக் கைவிட்ட ஒரு வாலிபனின் மனதை குற்ற உணர்வுகள் பெருமளவாக குடையலாம். “அவனுடைய வாழ்க்கையை நான் உண்மையில் நிரந்தரமாக குலைத்துவிட்டேனோ என வேதனைப்படுகிறேன்” என்று மணமாகாத ஒரு தகப்பன் சொல்கிறான்.—டீனேஜ் ஃபாதர்ஸ்.

ஆதரவு அளிப்பதற்குரிய சவால்

இளவயது தகப்பன்மார் எல்லாருமே பொறுப்பை விட்டோடுபவர்கள் அல்ல. மாறாக இளைஞர் சிலர், தங்கள் பிள்ளைகளை பராமரிக்கும் கடமை தங்களுக்கு இருப்பதை உணருகிறார்கள். மேலும் அவர்களை வளர்ப்பதில் உதவிசெய்ய உண்மையில் விரும்புகிறார்கள். எனினும், இது, செய்வதைப் பார்க்கிலும் சொல்வது எளிது. ஒரு காரியம் என்னவெனில், மணமாகாத தகப்பனுக்கு, சட்டப்பூர்வ உரிமைகள் வெகு சிலவே இருக்கலாம். அதாவது, தன் பிள்ளையுடன் எவ்வளவு நேரம் பாசத்தை பரிமாறிக் கொள்ளலாம் என்பதை அந்தப் பெண்ணும் அவளுடைய பெற்றோரும் கட்டுப்படுத்தும் நிலை இருக்கலாம். “பிள்ளைக்காக தீர்மானம் எடுக்கும் ஸ்தானத்தை பெற தொடர்ந்து போராட வேண்டியதாயிருக்கலாம்” என்று முன்பு குறிப்பிட்ட ஜிம் சொல்கிறான். அந்த இளம் தகப்பன் முற்றிலும் எதிர்க்கும் தீர்மானங்கள் ஒருவேளை செய்யப்படலாம். அதாவது, பிள்ளையைத் தத்துக் கொடுத்து விடுவது அல்லது கருக்கலைப்பு போன்றவையாக அவை இருக்கலாம். c “அன்னியர் எவருக்காயினும் வெறுமனே கொடுத்துவிடும்படி அவர்களை அனுமதிப்பது என்னால் ஜீரணிக்க முடியாத விஷயம். ஆனால் இதை விட்டால் எனக்கு வேறு வழி எதுவுமில்லை” என ஓர் இளம் தகப்பன் புலம்புகிறான்.

சில இளைஞர்கள், தங்கள் பிள்ளையின் தாயை மணம் செய்துகொள்ள முன்வருகின்றனர். d மணம் செய்துகொள்வது அந்தப் பெண்ணின் சங்கடத்தைச் சற்று குறைக்கும். மேலும், பிள்ளையும் தாய் தகப்பன் இருவராலும் வளர்க்கப்படுவதற்கு இடமளிக்கும். அவர்கள் தவறான நடத்தையில் ஈடுபட்டபோதிலும், அந்த இளம் தம்பதியினர் ஒருவரையொருவர் உண்மையில் நேசிப்போராகவும் இருக்கலாம். எனினும், அந்தப் பையன், அப்பாவாக ஆகக்கூடிய நிலையில் இருப்பதுதானே, அவன் கணவனாகவும் தகப்பனாகவும் இருப்பதற்கு மன ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் முதிர்ச்சியுள்ளவனாக இருக்கிறான் என்று சற்றேனும் அர்த்தப்படுகிறதில்லை. அதுமட்டுமல்ல, பொருளாதார ரீதியில் மனைவியையும் பிள்ளையையும் ஆதரிப்பதற்குத் திறமையுடையவனாக இருக்கிறான் என்றும் அர்த்தப்படுகிறதில்லை. கர்ப்பந்தரித்ததால் செய்துகொள்ளப்படும் திருமணங்கள் அதிக காலம் நீடிப்பதில்லை என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. ஆகையால் அவசரப்பட்டு கல்யாணம் செய்துகொள்வது ஞானமான தீர்வாக எப்போதும் இருப்பதில்லை.

வாலிபர் பலர், பொருளாதார ரீதியில் தங்கள் பிள்ளைகளை ஆதரிப்பதற்கு முன்வருகின்றனர். ஏற்கெனவே குறிப்பிட்டபடி, அத்தகைய ஆதரவை ஓர் இளம் தகப்பன் நெடுங்காலம், ஒருவேளை 18 ஆண்டுகளுக்கு அல்லது அதற்கு மேலும் விடாது செய்து வருவதற்கு உண்மையிலேயே திடத்தீர்மானம் தேவைப்படுகிறது! ஆனால், இவ்வாறு விடாமல் உதவிசெய்து வருவது, தாயும் பிள்ளையும் வறுமை நிறைந்த வாழ்க்கை நடத்துவதை தவிர்க்கலாம்.

அந்தப் பிள்ளையை வளர்ப்பதில் நேரடியாக பங்குகொள்வதைப் பற்றியதென்ன? இதுவுங்கூட கடினமான சவாலாக நிரூபிக்கலாம். அது மேலுமான பாலுறவில் ஈடுபட வைக்கலாம் என்று சில சமயங்களில் பெற்றோர்கள் பயப்பட்டு, அதைத் தடைசெய்ய முயற்சி செய்யக்கூடும், அல்லது ஒருவரையொருவர் பார்ப்பதையும்கூட தடுத்து நிறுத்தக்கூடும். அந்தப் பெண்தானேயும், தன் கணவனாக இராத ஒருவருடன் தன் பிள்ளை “பாசப்பிணைப்பில்” உட்பட வேண்டாமென ஒருவேளை தீர்மானிக்கலாம். எவ்வாறாயினும், அந்தத் தகப்பன் தன் பிள்ளையுடன் தொடர்ந்து தொடர்பு வைக்க அனுமதிக்கப்பட்டால், அந்தச் சந்திப்புகள் தவறான நடத்தைக்கு வழிவகுக்காதபடி குடும்பத்தார் கவனித்துக்கொள்ள வேண்டும். அதுவே ஞானமான செயல்.

மணம் செய்யாத தகப்பன்மார் சிலர், தங்கள் பிள்ளைகளுடன் நெருங்கியிருக்க விரும்பலாம். அதற்காக, பெற்றோருக்குரிய அடிப்படையான வேலைகளாகிய குளிப்பாட்டுதல், உணவூட்டுதல், அல்லது வாசித்துக் காட்டுதல் போன்றவற்றை கற்றிருக்கலாம். பைபிள் தராதரங்களை மதிக்கக் கற்றுக்கொண்ட ஒரு வாலிபன், கடவுளுடைய வார்த்தையின் நியமங்கள் சிலவற்றை தன் பிள்ளைக்குக் கற்பிக்கவும் முயற்சி செய்யலாம். (எபேசியர் 6:4) ஆனால், ஒரு தகப்பனிடமிருந்து வரும் கவனிப்பே இல்லாமற்போவதைப் பார்க்கிலும், ஓரளவு கவனிப்பு இருப்பது பிள்ளைக்கு நல்லதுதான். இருந்தாலும், ஒவ்வொரு நாளும் தகப்பன் கூடவே இருப்பதற்கு இது சற்றேனும் நிகராகாது. அந்தப் பிள்ளையின் தாய் ஒருவேளை மணம் செய்துகொண்டால், மற்றொருவர் தன் பிள்ளையை வளர்க்கும் பொறுப்பை ஏற்பதை பார்த்துக்கொண்டு சும்மாதான் இருக்க வேண்டும் அந்த வாலிப தகப்பன்.

ஆகவே, திருமண இணைப்புக்குப் புறம்பே ஒரு பிள்ளையைப் பெறுவது, பெற்றோருக்கும் அந்தப் பிள்ளைக்கும் சொல்ல முடியாத அளவு துன்பத்தை கொண்டு வருகிறது என்பது தெளிவாயுள்ளது. அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் கவலைகள் மட்டுமல்லாமல், தவறான பாலுறவைக் கண்டனம் செய்கிற யெகோவா தேவனின் தயவை இழக்கும் ஆபத்தும் உள்ளது. (1 தெசலோனிக்கேயர் 4:3) இருபதுக்கு உட்பட்ட வயதில் கர்ப்பந்தரித்து, அதனால் வரும் எல்லா சங்கடங்களையும் சமாளிக்க தன்னால் இயன்ற அனைத்தையும் ஒருவர் செய்யலாம். என்றாலும், அப்படிப்பட்ட ஒழுக்கக்கேடான நடத்தையை தவிர்ப்பதே சிறந்த போக்கு. இளைஞனான தகப்பன் ஒருவன் இவ்வாறு ஒப்புக்கொள்கிறான்: “திருமணத்திற்குப் புறம்பே ஒரு பிள்ளையை நீ பெற்ற பின், உன்னுடைய வாழ்க்கை முன்போல் ஒருபோதும் இராது.” நிச்சயமாகவே ஒரு வாலிப தகப்பன், மீதமிருக்கும் காலமெல்லாம் தன் தவறின் விளைவுகளோடுதான் வாழவேண்டும். (கலாத்தியர் 6:8) “வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்” என்ற பைபிளின் அறிவுரையே ஞானமானதாக நிரூபிக்கிறது.—1 கொரிந்தியர் 6:18.

[அடிக்குறிப்புகள்]

a சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

bஇளைஞர் கேட்கின்றனர் . . . ஆண்மகனாக நிரூபிக்க அப்பா ஆக வேண்டுமா?” என்ற கட்டுரையை ஏப்ரல் 22, 2000, விழித்தெழு! இதழில் பாருங்கள். மணமாகாத இளம் பெண்களின்மீது தாய்மை உண்டாக்கும் பாதிப்புகளைப் பற்றிய விளக்கத்திற்கு, ஜூலை 22, 1985 ஆங்கில விழித்தெழு! இதழில், “இளைஞர் கேட்கின்றனர் . . . மணமாகாமல் தாயாகிவிடும் நிலை எனக்கு ஏற்படுமா?” என்ற கட்டுரையை காண்க.

c மார்ச் 8, 1995, விழித்தெழு! இதழில், “இளைஞர் கேட்கின்றனர் . . . கருக்கலைப்பு—அதுதான் தீர்வா?” என்ற கட்டுரையைக் காண்க.

d ஒரு கன்னியைக் கற்பழித்தவன் அவளை மணம் செய்துகொள்ள வேண்டும் என்று மோசேயின் நியாயப்பிரமாணம் வலியுறுத்தியது. (உபாகமம் 22:28, 29) எனினும், மணம் செய்வதை பெண்ணின் தகப்பன் தடைசெய்யலாம் என்பதால், அது கண்டிப்பானதாக இல்லை. (யாத்திராகமம் 22:16, 17) இன்று கிறிஸ்தவர்கள் நியாயப்பிரமாணத்தின்கீழ் இல்லாவிட்டாலும், மணமாவதற்கு முன்பு பாலுறவில் ஈடுபடுவது எவ்வளவு மோசமான பாவம் என்பதை அது அறிவுறுத்துகிறது.—ஆங்கில காவற்கோபுரம், நவம்பர் 15, 1989, “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” பகுதியைக் காண்க.

[பக்கம் 15-ன் படம்]

ஒழுக்கக்கேடான நடத்தையை தவிர்ப்பதே சிறந்த போக்கு