Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குடும்பத்தில் ஒருவருக்கு தீராத வியாதி வந்துவிட்டால்

குடும்பத்தில் ஒருவருக்கு தீராத வியாதி வந்துவிட்டால்

குடும்பத்தில் ஒருவருக்கு தீராத வியாதி வந்துவிட்டால்

டிடாயின் குடும்பத்தில் எப்போதும் குதூகலம்தான். அவர்களிடம் பழகினால் அந்த மகிழ்ச்சி நம்மையும் தொற்றிக்கொண்டுவிடும். அவர்கள் ஒருவரோடொருவர் அன்பாக பழகுவதைப் பார்ப்பதே ஆனந்தம். அவர்களும் வாழ்க்கையில் பல இடிகளை தாங்கிய இடிதாங்கிகள் என்று சொன்னால் நீங்கள் துளிகூட நம்ப மாட்டீர்கள்.

பிராம், ஆன் இவர்களுடைய முதல் குழந்தை மிஷைலுக்கு தசைகளை பலவீனமாக்கும் தீராத ஒரு பரம்பரை நோய் இருப்பதை அவர்கள் தெரிந்துகொண்டபோது அந்த அரும்புக்கு வயது இரண்டு.

“உடலை ஊனமாக்கிவிடும் தீராத வியாதியை நாங்கள் சமாளிக்க கற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் திடீரென்று ஏற்பட்டது. குடும்ப வாழ்க்கை எப்போதும் போல் இருக்க போவதில்லை என்பது மட்டும் எங்களுக்கு புரிந்தது” என்பதாக ஆன் விளக்குகிறாள்.

ஆனால் அதற்குப்பின் மற்றொரு மகளும் மகனும் பிறந்தபோது குடும்பத்தின்மீது மற்றொரு இடி விழுந்தது. மூன்று பிள்ளைகளும் ஒருநாள் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்கள். இரண்டு பெண்பிள்ளைகள் ஓடிவந்து “அம்மா, அம்மா சீக்கிரமா ஓடி வாங்க, நீலுக்கு என்னவோ ஆயிடிச்சு!” என்று ஒரே கூச்சல் போட்டார்கள்.

வெளியே ஓடோடி வந்த ஆன் மூன்று வயது நீலின் தலை ஒரு பக்கமாக தொங்கிக் கிடப்பதைப் பார்த்து அதிர்ந்துபோனாள். அவனால் தலையை நேராக நிமிர்த்தவே முடியவில்லை.

“இந்த அதிர்ச்சியை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால், அதன் காரணம் என்ன என்பது உடனடியாக புரிந்துவிட்டது. ஓடி ஆடிக்கொண்டிருந்த இந்தச் சின்னஞ்சிறு அரும்புக்கு அவனுடைய அக்காவுக்கு இருக்கும் அதே நோய்” என நினைவுபடுத்தி சொல்கிறாள் ஆன்.

“ஆரோக்கியமான ஒரு குடும்ப வாழ்க்கையில் மண்ணை வாரிப்போட்டது போல மிகப் பெரிய பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து எங்களைத் திணற வைத்துவிட்டன” என்கிறார் தந்தை பிராம்.

கடைசியில் ஆஸ்பத்திரியில் வைத்து மிகச் சிறந்த முறையில் மருத்துவம் பார்த்தும் நோயினால் மிஷைல் இறந்துபோனாள். அப்போது அவளுக்கு 14 வயது. நீல் இன்னும் நோயினால் பல கஷ்டங்களைச் சகித்துக்கொண்டு உயிரோடுதான் இருக்கிறான்.

ஆகவே, டி டாயின் குடும்பத்தைப் போன்று தீராத வியாதியுள்ளவர் ஒரு குடும்பத்தில் இருந்தால் அவர்கள் எப்படி சவால்களை சமாளிக்கிறார்கள் என்ற கேள்வி எழும்புகிறது. அந்தக் கேள்விக்குப் பதிலளிக்க தீராத வியாதி வந்தால் குடும்பத்தில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை நாம் அலசிப் பார்ப்போம்.