Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தீராத வியாதி குடும்பங்கள் எப்படி சமாளிக்கின்றன?

தீராத வியாதி குடும்பங்கள் எப்படி சமாளிக்கின்றன?

தீராத வியாதி குடும்பங்கள் எப்படி சமாளிக்கின்றன?

சமாளிப்பது என்பது “ஒருவர் அனுபவிக்கும் அழுத்தங்களை சாமர்த்தியமாக கையாளும் திறமை” என ஒரு மருத்துவ அகராதி (Taber’s Cyclopedic Medical Dictionary) விளக்குகிறது. அப்படியென்றால், தீராத வியாதியின் பிரச்சினைகளை ஓரளவு கட்டுப்பாடோடும் மன அமைதியோடும் எதிர்ப்பட வேண்டும். தீராத வியாதி ஒரு குடும்ப விஷயமாக இருப்பதால், அந்தக் குடும்பம் இதை வெற்றிகரமாக சமாளிப்பதற்கு குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் அன்பாக எல்லா சமயத்திலும் ஆதரவு நல்குவது அவசியம். குடும்பங்கள் தீராத வியாதியை எப்படி சமாளிக்கின்றன என்பதை இப்போது சிந்திப்போம்.

அறிவு மதிப்புள்ளது

உடல் ஊனத்தைக் குணப்படுத்த முடியாமல் இருக்கலாம். ஆனால் இதை எவ்வாறு சமாளிப்பது என்று அறிந்திருந்தால் மனதளவிலும் உணர்ச்சிப்பூர்வமாகவும் ஏற்படும் தாக்கத்தை குறைக்க முடியும். இது பண்டைய ஒரு நீதிமொழிக்கு இசைவாக உள்ளது: “அறிவுள்ளவன் தன் வல்லமையை அதிகரிக்கப்பண்ணுகிறான்.” (நீதிமொழிகள் 24:5, NW) எப்படி சமாளிப்பது என்ற அறிவை ஒரு குடும்பம் எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும்?

நன்றாக பேசுகிற, உதவி செய்ய விருப்பமுள்ள ஒரு மருத்துவரை முதலாவது கண்டுபிடிக்க வேண்டும். இவர் நோயாளிக்கும் குடும்பத்தினருக்கும் எல்லாவற்றையும் கவனமாக விளக்கிச் சொல்ல நேரத்தைச் செலவிட மனமுள்ளவராக இருக்க வேண்டும். “ஒரு நல்ல டாக்டர், முழு குடும்பத்தையும் பற்றி அக்கறையுள்ளவராக இருப்பார், அதேசமயம் அவசியமான எல்லா மருத்துவ திறமைகளையும் பெற்றிருப்பார்” என்கிறது நோயுற்ற பிள்ளையை வளர்த்தல் என்ற புத்தகம்.

இரண்டாவதாக நிலைமையை முடிந்தளவு நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளும் வரை கேள்விகளை அவரிடம் பயப்படாமல் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால் மருத்துவரோடு இருக்கையில் ஒருவித அச்சத்தினால் குழம்பிப்போய் கேட்க விரும்பியவற்றை மறந்துபோவது எளிது. முன்கூட்டியே அவரிடம் கேட்க விரும்பும் கேள்விகளை எழுதி வைத்துக் கொள்வது உதவியாக இருக்கும். குறிப்பாக, சிகிச்சையையும் நோயையும் குறித்ததில் என்ன எதிர்பார்க்கலாம், மேலும் அதைக் குறித்து என்ன செய்யலாம் என்பதைப் பற்றி நீங்கள் அறிய விரும்பலாம்.—“டாக்டரிடம் குடும்பத்தார் கேட்க வேண்டிய கேள்விகள்” என்ற பெட்டியைக் காண்க.

தீராத வியாதியுள்ள பிள்ளையைப் பற்றி குடும்பத்திலுள்ள மற்ற பிள்ளைகளுக்கு போதுமான தகவல் கொடுப்பது முக்கியம். “ஆரம்பத்திலிருந்தே அந்தப் பிள்ளைக்கு என்ன வியாதி என்பதை விளக்குங்கள். என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளாவிட்டால் குடும்பத்திலிருந்து விலக்கிவைக்கப்பட்டது போல உணருவது சுலபம்” என்பதாக ஒரு தாய் சிபாரிசு செய்கிறார்.

உள்ளூர் நூலகத்தில், புத்தக கடையில் அல்லது இன்டர்நெட்டில் ஆராய்ச்சி செய்து சில குடும்பங்கள் பயனுள்ள தகவலைப் பெற்றிருக்கின்றன. குறிப்பிட்ட நோய் பற்றி அவர்கள் நுட்பமான விவரங்களோடு தகவலைப் பெற்றிருக்கின்றனர்.

ஓரளவு தரமான வாழ்க்கையைக் காத்துக்கொள்ளுதல்

நோயாளிக்கு ஓரளவு தரமான வாழ்க்கை தொடர்ந்து கிடைக்கும்படி குடும்பத்தினர் விரும்புவது இயற்கையே. முதல் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட நீல் டி டாயின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த நோயினால் வரும் தளர்ச்சி இன்னும் இவரை விரக்தியடையவே செய்கிறது. ஆனாலும் அவர் மிகவும் விரும்பி செய்யும் பிரசங்க வேலையில் மாதத்திற்கு 70 மணிநேரத்தை செலவழிக்கிறார், பைபிள் அடிப்படையில் தனக்கிருக்கும் நம்பிக்கையைப் பற்றி அவர் வாழுமிடத்திலுள்ள மக்களிடம் பேசுகிறார். “பைபிள் அறிவுரைகளை சபையில் எடுத்துச் சொல்வது எனக்கு ஆத்ம திருப்தியை தருகிறது” என்று அவர் கூறுகிறார்.

தரமுள்ள வாழ்க்கை என்பது அன்பைக் காட்டுவதையும் அதைப் பெற்றுக்கொள்வதையும், மகிழ்ச்சிதரும் செயல்களில் ஈடுபடுவதையும், நம்பிக்கையைக் காத்துக்கொள்வதையும்கூட உட்படுத்துகிறது. அவர்களுடைய நோயும் சிகிச்சையும் அனுமதிக்கிற அளவு வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்று நோயாளிகள் இன்னும் விரும்பவே செய்வார்கள். 25 வருடங்களுக்கும் அதிகமாக நோயைச் சமாளித்திருக்கும் ஒரு குடும்பத்தில் தகப்பன் இவ்வாறு விளக்குகிறார்: “வெளியில் போவதென்றால் எங்களுக்கு அவ்வளவு ஆசை, ஆனால் என்னுடைய மகனுக்கு முடியாததால் வாக்கிங் போக முடிவதில்லை. ஆனாலும் உடலுக்கு கஷ்டங்கொடுக்காத விதமாக வெளியே சென்று உல்லாசமாக பொழுதைக் கழிக்கிறோம்.”

ஆம், நோயாளிக்கு வாழ்க்கையில் ஓரளவு திருப்தியைப் பெற்றுக்கொள்ள உதவும் திறமைகள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன. நோயின் தன்மையை பொருத்து, அநேகரால் இன்னும் அழகான காட்சிகளையும் ஓசைகளையும் மகிழ்ந்து அனுபவிக்க முடிகிறது. வாழ்க்கையின் பல்வேறு அம்சங்கள் இன்னும் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதை அவர்கள் அதிகமதிகமாக புரிந்துகொள்ளும்போது, வாழ்க்கையில் அதிகமதிகமாக திருப்தி ஏற்பட வாய்ப்புண்டு.

வேண்டாத உணர்ச்சிகளைக் கையாளுதல்

பிரச்சினைகளை சமாளிப்பதற்கு தீங்கிழைக்கும் உணர்ச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதைக் கற்றுக்கொள்வது மிகவும் முக்கியம். இதில் ஒன்று கோபம். ஒருவர் நிலைகுலைந்து போய்விடுவதற்கு காரணமிருக்கலாம் என்பதை பைபிள் ஒப்புக்கொள்கிறது. இருந்தாலும், “கோபிக்கிறதற்குத் தாமதமாக” இருக்கும்படியும் பைபிள் நம்மை உந்துவிக்கிறது. (நீதிமொழிகள் 14:29, NW) அப்படிச் செய்வது ஏன் ஞானமுள்ள காரியம்? ஒரு புத்தகத்தின்படி, கோபம் “படிப்படியாக அழித்துவிடும், மனக்கசப்பை ஏற்படுத்திவிடும் அல்லது பின்னால் மனஸ்தாபப்படும் வகையில் நோகடிக்கும் காரியங்களைச் சொல்லிவிட வழிநடத்திவிடும்.” ஒரே ஒரு முறை கட்டுப்படுத்தாமல் வெளிப்படுத்தப்படும் கோபாவேசமும்கூட அதிக தீங்கைச் செய்துவிடலாம். இதைச் சரிசெய்வதற்கு நீண்ட காலமெடுக்கலாம்.

“சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்பாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது” என்று பைபிள் சிபாரிசு செய்கிறது. (எபேசியர் 4:26) சூரியன் அஸ்தமிப்பதை தாமதிக்கச் செய்ய நம்மால் முடியாது. ஆனால் நம்முடைய “எரிச்சல்” தணிவதற்கு நாம் துரிதமாக நடவடிக்கை எடுக்க முடியும். அப்படிச் செய்தால் நமக்கும் மற்றவர்களுக்கும் தொடர்ந்து தீங்கு செய்துகொண்டிருக்க மாட்டோம். உங்கள் கோபம் தணிந்து நீங்கள் அமைதியாகிவிட்டால் ஒரு நிலைமையை நல்ல முறையில் உங்களால் கையாள முடியும்.

மற்ற எந்தக் குடும்பத்திலும் இருப்பது போலவே உங்களுடைய குடும்பத்திலும் இன்பதுன்பங்களை அனுபவிப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசும்போது அல்லது இரக்கமாயும் அனுதாபத்தோடும் இருக்கும் வேறு ஒருவரிடம் மனம்விட்டு பேசும்போது அநேகரால் இதை நல்ல விதமாக சமாளிக்க முடிகிறது. கேத்லீனின் அனுபவமும் இதுதான். முதலில் புற்றுநோயாளியாக இருந்த தன் தாயை கவனித்துக்கொண்டாள், பின்னர் தீராத மனச்சோர்வினாலும் அதைத் தொடர்ந்து அல்ஸைமர் நோயினாலும் அவதிப்பட்ட தன் கணவனை கவனித்துக்கொண்டாள். “புரிந்துகொள்கிற நண்பர்களோடு பேசமுடிந்த போது நிம்மதியாயும் ஆறுதலாயும் இருந்தது” என்று அவள் ஒப்புக்கொள்கிறாள். இரண்டு வருடங்கள் தன் அம்மாவைக் கவனித்துக்கொண்ட ரோஸ்மேரி “ஒரு நல்ல நண்பரோடு மனம்விட்டு பேசியதால் மனதளவிலும் உணர்ச்சிப்பூர்வமாகவும் நான் உடைந்துபோகாமல் இருக்க அது உதவியது” என்று சொல்கிறாள்.

இவ்வாறு யாரிடமாவது பேசும்போது உங்களால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் போனால் ஆச்சரியப்பட வேண்டாம். “அழுவது பதற்றத்தையும் துயரத்தையும் நீக்கி உங்கள் துக்கத்தை மேற்கொள்ள உதவுகிறது” என்கிறது நோயுற்ற பிள்ளையை வளர்த்தல் புத்தகம். a

நம்பிக்கையான மனநிலையைக் காத்துக்கொள்ளுங்கள்

‘வாழ வேண்டும் என்ற ஆசை வியாதியாயிருக்கையில் உங்களைத் தாங்கும்’ என்று ஞானமுள்ள சாலொமோன் அரசன் எழுதினார். (நீதிமொழிகள் 18:14, டுடேய்ஸ் இங்லீஷ் வர்ஷன்) நோயாளியின் மனநிலை—எதிர்மறையானதோ நம்பிக்கையானதோ—அதைப் பொருத்து சிகிச்சையினால் கிடைக்கும் பலன் பாதிக்கப்படுகிறது என்பதாக நவீன ஆய்வாளர்கள் கவனித்திருக்கின்றனர். நாள்பட்ட நோய் இருக்கையில் ஒரு குடும்பம் எவ்வாறு நல்லது நடக்கும் என்று நம்பிக்கையைக் காத்துக்கொள்ள முடியும்?

நோயை அசட்டை செய்ய முடியாதுதான். ஆனால் குடும்பங்கள் இன்னும் தங்களால் செய்ய முடிந்த காரியங்களில் கவனத்தை வைத்தால் அவர்களால் இதைச் சமாளிக்க முடியும். “ஒன்றுமே செய்யமுடியாது என்ற நிலைமை இருக்கலாம்” என்று ஒரு தகப்பன் ஒப்புக்கொள்கிறார். “ஆனால் இன்னும் உங்களுக்கு எவ்வளவோ இருப்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்களுக்கு இன்னும் உயிர் இருக்கிறது, குடும்ப அங்கத்தினர் இருக்கின்றனர், நண்பர்களும் இருக்கின்றனர்.”

தீராத நோய் பற்றி அஜாக்கிரதையாக இருக்கக்கூடாதென்றாலும் ஆரோக்கியமான நகைச்சுவை உணர்வு இருந்ததென்றால் சோகத்தை ஓரளவிற்கு தவிர்க்க முடியும். டி டாயின் குடும்பத்தின் நகைச்சுவை உணர்வு இதை உறுதிசெய்கிறது. நீல் டி டாயின் இளைய சகோதரி கோலட் இவ்வாறு விளக்கம் தருகிறாள்: “ஒரு சில சூழ்நிலைமைகளை எவ்வாறு கையாளுவது என்பதை நாங்கள் கற்றுக்கொண்டுவிட்டோம். ஆகவே மற்றவர்கள் நிலைகுலைந்து போகும் அதே சூழ்நிலைகளை நாங்கள் சிரித்தே சமாளித்துவிடுகிறோம். அப்படிச் செய்வது உண்மையில் பதற்றத்தைக் குறைக்கிறது.” “மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்” என்று பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது.—நீதிமொழிகள் 17:22.

அதிமுக்கியமான ஆன்மீக மதிப்பீடுகள்

உண்மை கிறிஸ்தவர்களின் ஆவிக்குரிய நலனுக்கு முக்கியமானது “விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடேகூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துவதே.” இதற்கு என்ன பலன் கிடைக்கும் என்பது பைபிளில் உறுதியாக சொல்லப்பட்டுள்ளது: “எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.” (பிலிப்பியர் 4:6, 7) 30 வருடங்களாக தீராத வியாதியுள்ள இரண்டு பிள்ளைகளைக் கவனித்துக்கொண்டிருந்த ஒரு தாய் இவ்வாறு கூறுகிறாள்: “யெகோவா சமாளிப்பதற்கு நிச்சயமாகவே உதவிசெய்கிறார் என்பதை நாங்கள் கற்றுக்கொண்டோம். அவர் உண்மையில் நமக்கு ஆதாரமாக இருக்கிறார்.”

மேலுமாக இன்னும் அநேகர் வேதனையும் துன்பமுமில்லாத பரதீஸிய பூமியைப் பற்றி பைபிள் அளிக்கும் வாக்குறுதியினால் பலப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 21:3, 4) “தீராத நோயை எங்கள் குடும்பம் அனுபவித்திருப்பதால், ‘முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்’ என்ற கடவுளுடைய வாக்குறுதியை நாங்கள் மிகவும் அர்த்தமுள்ளதாக காண்கிறோம்” என்று பிராம் கூறுகிறார். அநேகரைப் போலவே டி டாயின் குடும்பத்தினரும் பரதீஸில் ‘வியாதிப்பட்டிருக்கிறேன் என்று சொல்ல’ அவசியமே இல்லாத அந்தக் காலத்துக்காக மிகவும் ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.—ஏசாயா 33:24; 35:6.

கலங்க வேண்டாம். மனிதகுலத்தை அமிழ்த்திக்கொண்டிருக்கும் துயரமும் வேதனையும்தானே மேம்பட்ட நிலைமைகள் சீக்கிரத்தில் வரவிருப்பதற்கான அத்தாட்சியை அளிக்கிறது. (லூக்கா 21:7, 10, 11) ஆனால் இதற்கு இடைப்பட்ட காலத்தில் அநேக தீராத நோயாளிகளும் நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் பலரும் யெகோவா உண்மையிலேயே “இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனு”மாயிருக்கிறார் என்பதற்கு சாட்சி கொடுக்க முடியும்.—2 கொரிந்தியர் 1:3, 4.

[அடிக்குறிப்பு]

a நோயின் உணர்ச்சிப்பூர்வமான தாக்கத்தை எவ்வாறு சமாளிப்பது என்பதன்பேரில் அதிகமான விளக்கங்களுக்கு 1997, பிப்ரவரி 8, விழித்தெழு!-வில் “பராமரிக்கும் சவால்” என்ற கட்டுரையை பக்கங்கள் 3-13-ல் காண்க.

[பக்கம் 8-ன் பெட்டி/படம்]

டாக்டரிடம் குடும்பத்தார் கேட்க வேண்டிய கேள்விகள்

• நோய் எவ்வாறு அதிகமாகும், என்ன பாதிப்புகள் ஏற்படும்?

• நோய்க்குறிகள் என்ன, அவற்றை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

• என்னென்ன மாற்று சிகிச்சை முறைகள் இருக்கின்றன?

• வித்தியாசமான சிகிச்சைகளின் பக்கபாதிப்புகள், ஆபத்துகள், நன்மைகள் ஆகியவை யாவை?

• நிலைமையைச் சரிசெய்ய என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது?

[பக்கம் 11-ன் பெட்டி/படம்]

நீங்கள் எப்படி ஆதரவாக இருக்க முடியும்

சிலர் நோயாளியைப் பார்க்க போகமாட்டார்கள் அல்லது உதவி செய்யவும் முன்வர மாட்டார்கள். கேட்டால் என்ன சொல்வது அல்லது என்ன செய்வது என்பது தங்களுக்குத் தெரியாது என்று சொல்வார்கள். இன்னும் சிலரோ அளவுக்கு அதிகமாக தலையிட்டு உதவி செய்தே ஆவேன் என்று ஒற்றைக் காலில் நின்று குடும்பத்திலுள்ளவர்களுக்கு உபத்திரவமாக இருப்பார்கள். அப்படியானால் குடும்பத்தின் தனிமையில் குறுக்கிடாமல், தீராத வியாதியுள்ள ஒருவரைக் கொண்ட குடும்பத்துக்கு எப்படி ஆதரவாக இருக்க முடியும்?

அனுதாபத்தோடு காதுகொடுத்துக் கேளுங்கள். “கேட்கிறதற்குத் தீவிரமாய்” இருங்கள் என்று யாக்கோபு 1:19 கூறுகிறது. நன்றாக காதுகொடுத்துக் கேட்பதன் மூலம் அக்கறை காட்டுங்கள். குடும்ப அங்கத்தினர்கள் மனபாரம் குறைவதற்காக எல்லாவற்றையும் உங்களிடம் கொட்டித்தீர்க்க விரும்பினால் அதை அவர்கள் செய்யட்டும். உங்களுக்கு ‘அனுதாபம்’ இருப்பதை அவர்கள் புரிந்துகொண்டால் அதைச் செய்ய விரும்புவார்கள். (1 பேதுரு 3:8) தீராத வியாதியை எந்த இரண்டு பேரோ அல்லது இரண்டு குடும்பங்களோ ஒரே விதமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை நினைவில் வையுங்கள். ஆகவே “நோயை அல்லது சூழ்நிலையைப் பற்றி உங்களுக்கு எல்லாம் நன்றாக தெரிந்திருந்தாலொழிய ஆலோசனை சொல்லாதீர்கள்” என்கிறார் முதலில் அம்மாவையும் பின்னால் தீராத வியாதியிலிருந்த தன் கணவனையும் கவனித்துக்கொண்ட கேத்லீன். (நீதிமொழிகள் 10:19) இந்த விஷயத்தில் உங்களுக்கு ஏதாவது தெரிந்திருந்தால்கூட நோயாளியும் குடும்பத்தாரும் உங்கள் ஆலோசனையைக் கேட்க விருப்பமில்லாமல் இருக்கலாம்.

நடைமுறையான உதவியளியுங்கள். குடும்பத்தினர் தனிமையில் இருக்க விரும்புகையில் தொல்லை கொடுக்கக் கூடாது. அதே சமயத்தில் உங்கள் உதவியை அவர்கள் உண்மையில் விரும்பும்போது நீங்கள் அங்கே இருக்க வேண்டும். (1 கொரிந்தியர் 10:24) இந்தத் தொடர் கட்டுரை முழுவதிலும் பேசப்படும் பிராம் என்பவர் இவ்வாறு கூறுகிறார்: “எங்கள் கிறிஸ்தவ நண்பர்கள் பேருதவியாக இருந்தார்கள். மிஷைலின் நிலைமை கவலைக்கிடமானபோது நாங்கள் ஆஸ்பத்திரியிலேயே தங்கிவிட வேண்டியிருந்தது. நாங்கள் களைப்படைந்து தூங்கிவிட்டால் இரவு முழுவதும் ஐந்தாறு நண்பர்கள் அங்கே தங்கியிருந்து எங்களுக்கு உதவியாக இருந்தார்கள்.” பிராமின் மனைவி ஆன் மேலும் கூறுகிறாள்: “கடுங்குளிரான சமயம் அது. இரண்டு வாரங்களுக்கு இவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சூப் கொண்டுவந்து கொடுத்தார்கள். சூடான சூப்பும், பஞ்சமே இல்லாத அன்பும் எங்களுக்குப் போஷாக்காக இருந்தன.”

அவர்களோடு ஜெபியுங்கள். சில சமயங்களில் நடைமுறையில் சிறிதளவே உதவி செய்ய முடியும், அல்லது ஒன்றுமே செய்ய முடியாது. என்றாலும், பைபிளிலுள்ள கட்டியெழுப்பும் ஒரு குறிப்பை நோயாளியோடும் குடும்பத்தோடும் பகிர்ந்துகொள்வதும் இருதயப்பூர்வமாக அவர்களோடு ஜெபிப்பதும் நாம் செய்யக்கூடிய மிகப் பெரிய உதவியாக இருக்கும். (யாக்கோபு 5:16) “தீராத வியாதியுள்ளவரோடும் அவருடைய குடும்பத்தோடும் சேர்ந்து அவர்களுக்காக ஜெபிப்பது எத்தனை வல்லமையுள்ளது என்பதை ஒருபோதும் குறைவாக மதிப்பிட்டுவிடாதீர்கள்” என்று தீராத மனச்சோர்வினால் கஷ்டப்படும் தாயை உடைய 18 வயது நிக்கோலஸ் சொல்கிறார்.

ஆம், புரிந்துகொண்டு செய்யும் உதவியினால் தீராத நோயின் அழுத்தத்தை குடும்பங்கள் சமாளிக்க முடியும். பைபிள் அதை இவ்வாறு சொல்கிறது: “சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.”—நீதிமொழிகள் 17:17.

[பக்கம் 12-ன் பெட்டி/படம்]

சாவுக்கேதுவான நோயாக இருந்தால்

சாவுக்கேதுவான நோயுடைய அன்பானவருக்கு வரப்போகும் மரணத்தைக் குறித்து மற்றவர்களோடு பேசவே சில குடும்பத்தினர் தயங்கலாம். ஆனால் பாராமரிப்பு—எவ்வாறு சமாளிப்பது என்ற ஆங்கில புத்தகம், “என்ன எதிர்பார்க்கலாம், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ஓரளவுக்கு உங்களுக்குத் தெரிந்திருந்தால் திகில் உணர்ச்சிகள் கொஞ்சம் தணிந்துவிடும்” என்று கூறுகிறது. திட்டவட்டமாக என்ன நடவடிக்கைகள் எடுப்பது என்பது உள்ளூர் சட்டங்களையும் பழக்கங்களையும் பொருத்து இருக்கும். சாவுக்கேதுவான நோயுள்ள அன்பான ஒருவரை வீட்டில் வைத்துக் கவனித்துக்கொள்ளும்போது, குடும்பம் இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில ஆலோசனைகளுக்கு கவனம் செலுத்த ஒருவேளை விரும்பலாம்.

முன்கூட்டியே என்ன செய்ய வேண்டும்

1. கடைசி நாட்களிலும் கடைசி மணிநேரத்திலும் என்ன நடக்கும், மரணம் இரவில் சம்பவித்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை டாக்டரிடம் கேளுங்கள்.

2. மரண செய்தியை யாருக்கெல்லாம் சொல்லியனுப்ப வேண்டும் என்பதை பட்டியல் போடுங்கள்.

3. சவ அடக்க விருப்பங்கள்:

• நோயாளியின் விருப்பங்கள் யாவை?

• அடக்கம் செய்யப்படுவதா அல்லது எரிக்கப்படுவதா? பல்வேறு சவ அடக்க செலவுகளையும் கணக்கிட்டுப் பாருங்கள்.

• சவ அடக்க நிகழ்ச்சி எப்போது நடத்தப்படும்? தூர இடங்களில் இருப்பவர்கள் வந்துசேர நேரம் அனுமதியுங்கள்.

• சவ அடக்க நிகழ்ச்சியை யார் நடத்துவார்?

• அது எங்கே நடத்தப்படும்?

4. தூக்க மருந்து கொடுத்திருந்தாலும் தன்னை சுற்றி என்ன நடக்கிறது, என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதெல்லாம் நோயாளிக்குத் தெரியும். அவருக்குத் தெரியக் கூடாதென்று நீங்கள் நினைக்கும் விஷயங்களை அவர்முன் பேசாதபடி ஜாக்கிரதையாயிருங்கள். அமைதியாக அவருடன் பேசுங்கள். அவருடைய கைகளைப் பிடித்துக்கொண்டு உங்கள் அன்பை அவருக்கு உறுதிப்படுத்துங்கள்.

அன்பானவர் மரித்துப்போகையில்

மற்றவர்கள் உதவிசெய்ய இதோ சில விஷயங்கள்:

1. இந்த இழப்பை ஜீரணிப்பதற்கு மரித்தவரோடு குடும்பம் தனியாக கொஞ்ச நேரத்தை செலவிட அனுமதியுங்கள்.

2. அந்தக் குடும்பத்தோடு ஜெபியுங்கள்.

3. குடும்பத்தாருக்கு அந்த இழப்பைத் தாங்கும் சக்தி கிடைத்தவுடன் பின்வரும் விஷயங்களில் உதவி கிடைத்தால் அவர்கள் பெரிதும் போற்றுவர்:

• மரணத்தை உறுதிசெய்து இறப்பு சான்றிதழைப் பெற்றுக்கொள்ள மருத்துவரை நாடுதல்.

• உடலை வைத்து என்ன செய்வது என்ற சூழ்நிலையில், சவ அடக்க அதிகாரியை அணுகுதல், சவக் கிடங்குக்கோ மின்சார தகனத்துக்கோ ஏற்பாடு செய்தல்.

• உறவினர்களும் நண்பர்களும். (இதுபோன்று யோசித்து கூறலாம்: “இவர் [நோயாளியின் பெயரைக் குறிப்பிடுங்கள்] விஷயமாக ஃபோன் செய்கிறேன். வருத்தமான ஒரு செய்தி. கொஞ்ச காலமாக அவர் நோயோடு [நோயின் பெயரை குறிப்பிடுங்கள்] கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அவர் இறந்துவிட்டார் [எங்கே, எப்போது என்பதைக் குறிப்பிடவும்].)

• மரணத்தை செய்தித்தாளில் அறிவிக்க விரும்பினால் செய்தித்தாள் அலுவலகத்திற்குத் தெரிவியுங்கள்.

4. முடிவான சவ அடக்க ஏற்பாடுகளை செய்வதில் உதவிக்கு யாரையாவது அழைத்துச் செல்ல குடும்பத்தினர் விரும்பலாம்.

[பக்கம் 9-ன் படம்]

ஓரளவு தரமுள்ள வாழ்க்கையைக் காத்துக்கொள்ள குடும்பத்திலுள்ளவர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு பிரயாசப்பட வேண்டும்

[பக்கம் 10-ன் படம்]

குடும்பத்தோடு ஜெபம்செய்வது சமாளிக்க உதவிசெய்யும்