Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நிலா உங்கள் வாழ்வை வசப்படுத்துகிறதா?

நிலா உங்கள் வாழ்வை வசப்படுத்துகிறதா?

நிலா உங்கள் வாழ்வை வசப்படுத்துகிறதா?

நிலா பூமியிலுள்ள உயிரினங்களின் வாழ்க்கையை கட்டுப்படுத்துகிறது என ஆயிரக்கணக்கான வருடங்களாகவே மனிதர் நம்பினர். சந்திரனின் பிறை மாற்றங்கள் தாவரங்களையும், விலங்குகளையும், மனிதரையும்கூட பாதிக்கிறது என்பதாக கருதப்பட்டது. ஆண்டாண்டு காலமாக நம்பப்பட்ட சில கருத்துக்களை நவீன விஞ்ஞான ஆராய்ச்சி தவறென நிரூபித்திருப்பினும், சில நம்பிக்கைகள் இப்போதும் இருந்து வருகின்றன. அப்படியானால் உண்மைகள் காட்டுவதென்ன?

நிலவின் பிறை மாற்றங்களுக்கும் தாவரங்களின் வளர்ச்சிக்கும் தொடர்பு இருக்கிறது என்பதாக சிலர் நம்புகிறார்கள். அதன் காரணமாக, எப்பொழுது பூஞ்செடிகளை நடுவது, உரமிடுவது, திராட்சமதுவை குப்பிகளில் அடைப்பது அல்லது பதப்படுத்துவது போன்றவற்றை தீர்மானிப்பதற்கு அவர்கள் காலண்டர்களையும் பஞ்சாங்கத்தையும் புரட்டிப்பார்க்கிறார்கள். தவறான பிறை மாற்றங்களின்போது இவை செய்யப்பட்டால் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போய்விடும் என்பதாக நம்புகின்றனர். இதை நம்பும் ஒருவர் தோட்டப் பணியாளர்களுக்கு இவ்வாறு ஆலோசனை கூறுகிறார்: “பொதுவாக வளர்பிறையின்போது பறிக்கப்படும் காய்கறிகளைத்தான் பச்சையாக உண்ண வேண்டும். அதேபோல் காய்கறிகளை பதப்படுத்த வேண்டுமெனில் தேய்பிறையில் பறிக்க வேண்டும்.” இந்தப் பழக்கத்திற்கு அறிவியல்பூர்வ ஆதாரம் ஏதும் உண்டா?

சில ஆராய்ச்சிகள் தாவரங்களின் வளர்ச்சியை நிலவின் சுழற்சியால் ஏற்படும் மாற்றங்களோடு இணைப்பதாக தோன்றுகிறது. இருந்தாலும், விஞ்ஞானிகள் பலர் இதை முற்றிலுமாக ஏற்பதில்லை. நிலவின் சுழற்சியால் ஏற்படும் மாற்றங்கள் சிக்கலானவை, அவை முற்றிலும் ஒழுங்கானவை என்று சொல்ல முடியாது, எனவே அவற்றின் விளைவுகளை பற்றி திட்டமாக கூற முடியாது என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். ஆகவே, எதன் அடிப்படையில் ஆய்வுகள் நடத்தப்பட்டதோ அதே சோதனை முறைகளை மறுபடியும் தொடர்வது முடியாத விஷயம்.

இருந்தாலும், நிலவினால் ஏற்படும் சில விளைவுகள் உண்மையென நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, அநேக உயிரினங்களின் செயல்கள், உணவு, இனப்பெருக்கம், உயிரியல் சுழற்சி ஆகியவற்றிற்கும் கடல் ஓதங்களுக்கும் தொடர்பு இருக்கிறது. இந்த கடல் ஓதங்கள் நிலவின் நேரடி ஈர்ப்பு விசையால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

சந்திரன் கடல் ஓதங்களை கட்டுப்படுத்துகிறது என்றால், அது மனிதரையும் பாதிக்க வேண்டும் என்று சிலர் சொல்கின்றனர். ஏனெனில் மனித உடலில் 80 சதவீதமும் தண்ணீர்தான். அப்படியானால், சந்திரனின் பிறை மாற்றங்களுடன், மனக்கோளாறுகளுக்கும், ஒருவர் பிறந்த நேரத்திற்கும் தொடர்பு இருப்பதாக சொல்லப்படுவதை பற்றி என்ன சொல்லலாம்? மாதவிடாய் சுழற்சியின் காலம் ஏறத்தாழ சந்திர மாதத்தின் காலத்திற்கு ஒத்திருக்கிறது, எனவே இதற்கும் சந்திரனுடைய பிறைக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா?

இந்த விஷயங்களின் பேரில் உண்மையைக் கண்டறிய மனநோய் மருத்துவம், உளவியல், பெண் நோயியல் மருத்துவம் போன்ற துறைகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அதன் முடிவுகள் தெளிவாக இல்லை. சில ஆராய்ச்சியாளர்கள், மனிதனின் செயல்களுக்கும் சந்திர சுழற்சிக்கும் சிறு அளவில் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்ததாக கூறுகிறார்கள், ஆனால் மற்றவர்களோ எந்த தொடர்பும் இல்லை என மறுக்கிறார்கள். சந்திரனின் சுழற்சி, மனித பிறப்பில் குறிப்பிடத்தக்க பாகத்தை வகிக்கிறது என்றால் அந்தத் தொடர்பு வெகு காலத்திற்கு முன்பே மெய்ப்பித்துக் காட்டப்பட்டிருக்கும் என்பதாக அவர்கள் விவாதிக்கிறார்கள். முக்கியமாக, மனிதர்களின் மீது சந்திரனின் தாக்கம் இருப்பதாக சொல்லப்படும் எந்த கோட்பாடும் பொதுவாக விஞ்ஞானிகளால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. a

பூமியிலுள்ள பல்வேறுபட்ட உயிரின வகைகளில் நிலவின் பாதிப்பு சிறிதளவு இருப்பதை விஞ்ஞானம் மெய்ப்பித்து காட்டியபோதிலும், எந்தளவுக்கு பாதிக்கிறது என்பதை அவ்வளவு சுலபமாக தீர்மானிக்க முடியாது. நாம் பார்க்கும் இந்தப் பிரபஞ்சம் மிகவும் சிக்கலானது. அதை இயக்கும் அநேக அற்புதகரமான செயல் நுட்பங்கள் இன்னும் நம் அறிவுக்கு எட்டாமல் இருக்கின்றன.

[அடிக்குறிப்பு]

a இப்படிப்பட்ட கோட்பாடுகளில் நிலவொளி, ஈர்ப்புவிசை, காந்தவிசைகள், மின்காந்த சக்தி போன்றவையும் அடங்கும்.

[பக்கம் 19-ன் படம்]

பூர்வ கிரேக்கர்களும் ரோமர்களும் நிலாவை குறித்துக்காட்டும் செலீன் தேவதையை வணங்கினர்

[படத்திற்கான நன்றி]

Musei Capitolini, Roma