Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உண்மையிலேயே அவ்வளவு கெடுதியா?

உண்மையிலேயே அவ்வளவு கெடுதியா?

உண்மையிலேயே அவ்வளவு கெடுதியா?

ஆபாசத்தை இன்டர்நெட்டில் பெரியவர்களும் சிறுவர்களும் எளிதில் பார்க்க முடிகிறது என்பதை நாம் பார்த்தோம். இதைக் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டுமா? அது உண்மையிலேயே அவ்வளவு கெடுதியா?

ஆபாசமான படங்களை எப்பொழுதாவது பார்த்தால் எந்தக் கெடுதியும் இல்லை என்பது அநேகரின் கருத்து. ஆனால் உண்மைகளோ வேறுவிதமாக இருக்கின்றன. ஒரு தம்பதியினரின் விஷயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இலட்சியத் தம்பதியைப் போல தோன்றிய அவர்களுக்கு பணத்துக்கு பஞ்சமே இல்லை. பிரயாணம் செய்வதென்றால் அவர்களுக்கு கொள்ளைப் பிரியம். எத்தனை நெருக்கமாக, பாசமாக, பற்றுதலாக இருக்கின்றனர் என்று அவர்களுடைய நண்பர்கள் நினைப்பார்கள். பலவிதங்களில் அப்படித்தான் அவர்கள் இருந்தார்கள்.

ஆனால் கணவன் எப்போது ஆபாசத்தை ஆராதிக்க ஆரம்பித்தாரோ அப்போதே பிரச்சினைகள் தலைகாட்ட தொடங்கின. பத்திரிகையில் பதிலளித்த ஒரு பிரபல ஆலோசகரிடம் அவருடைய மனைவி தன் கவலையை வெளிப்படுத்தி இவ்வாறு எழுதினாள்: “என்னுடைய கணவன் நடுஜாமத்திலும் அதிகாலையிலும் அதிகமான நேரத்தை கம்ப்யூட்டரில் செலவழிக்க ஆரம்பித்தபோது தான் ஏதோ ‘ஆராய்ச்சி’ செய்வதாக சொன்னார். ஒருநாள் திடீரென்று அவருடைய அறைக்குள் நான் நுழைந்தபோது, அவர் ஆபாசத்தை பார்த்துக்கொண்டிருப்பதை கண்டுபிடித்துவிட்டேன் . . . ‘என்னன்னு தெரிஞ்சிக்கலாமேன்னுதான் . . . வேறொன்னுமில்ல’ என்று அவர் மழுப்பினார். சற்று அருகில்போய் பார்த்தபோது எனக்கு மிகவும் அருவருப்பாக இருந்தது. அவருக்கே சங்கடமாகிவிட்டது. ‘இனிமே இப்படியெல்லாம் பார்க்கமாட்டேன்’ என்று என்னிடம் கூறினார். அவரை நான் அப்படியே நம்பினேன். அவர் எப்போதும் மிகவும் கெளரவமாக நடந்துகொள்பவர்—வார்த்தை தவறாத மனிதர் அவர்.”

இந்த மனிதரைப் போலவே அநேகர் அதில் என்னதான் இருக்கிறது, பார்த்து விடுவோமே என்ற ஒரு ஆவலில்தான் அதை பார்க்க ஆரம்பிக்கிறார்கள். யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக பிந்திய இரவில் அல்லது அதிகாலையில் இன்டர்நெட்டில் நுழைகிறார்கள். யாராவது கண்டுபிடித்துவிட்டால் இந்த மனிதர் செய்தது போல பொய் சொல்லி மழுப்பிவிடுகிறார்கள். ‘வார்த்தை தவறாத ஒரு மனிதர்’ நடுஜாமத்தில் திருட்டுத்தனமாக எழுந்துபோய் பார்க்கவும் தன் மேல் உயிரையே வைத்திருக்கும் மனைவியிடம் பொய் சொல்லவும் வைக்கும் ஒரு “பொழுதுபோக்கில்” எந்தக் கெடுதியும் இல்லை என்று ஒருவர் சொல்ல முடியுமா?

இந்தப் பழக்கத்தினால் தனிநபருக்கும் குடும்பத்துக்கும் மோசமான பிரச்சினைகள் ஏற்படலாம். ஆபாசத்தைப் பார்க்கிறவர்களால் மற்றவர்களோடு நெருக்கமான உறவுகளை வளர்த்துக்கொள்ள முடிவதில்லை என்பதை சிலர் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ஆபாசத்தின்மீது இவர்களுக்கு இருக்கும் வெறியினால் யாரும் அருகில் இருப்பதை இவர்கள் விரும்புவதில்லை. ஆபாசத்தைப் பார்க்கையில் அவர்கள் பொதுவாக கற்பனை உலகில் மிதக்கிறார்கள். கற்பனை உலகில் மிதப்பது பலமான உறவுகளை வளர்த்துக்கொள்ளவோ அல்லது நிஜ வாழ்க்கையில் எதார்த்தமாக வாழவோ உதவாது. தங்கள் மீது அதிக அக்கறை வைத்திருக்கும் ஆட்களிடமிருந்து விலகிபோகச் செய்யும் ஒரு பொழுதுபோக்கு உண்மையில் தீங்கு விளைவிக்காமல் இருக்குமா?

ஆபாசமான படங்களை பார்க்கிற அல்லது ஆபாசமான விஷயங்களைப் படிக்கிற சிலரால் தங்களுடைய சொந்த துணைவர்களோடு இயல்பான உடலுறவை அனுபவிக்க முடிவதில்லை. ஏன் என்பதைப் புரிந்துகொள்ள திருமணமான ஆட்களுக்கு கடவுளுடைய ஆதி நோக்கம் என்ன என்பதை சிந்தித்துப் பாருங்கள். கணவனும் மனைவியும் கனத்துக்குரிய பாலுறவில் ஈடுபட்டு ஒருவர்மேல் ஒருவர் வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் திறமையை கடவுள் அவர்களுக்கு அன்பாக அருளினார். இவை இன்பம் தருவதாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புவதை நீதிமொழிகள் 5:18, 19 காட்டுகிறது: ‘உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு. . . . அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னை திருப்தி செய்வதாக; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக.’

நேசம் அல்லது அன்புதான் பாலுறவுக்கு அடிப்படை என்பதை கவனியுங்கள். ஆபாசத்தைப் பார்க்கிறவர் அன்பும் நெருக்கமுமான ஒரு உறவை வளர்த்துக்கொள்கிறாரா? இல்லை, அவர் தன் சொந்த பாலியல் ஆசைகளை, பெரும்பாலும் தனிமையில் திருப்தி செய்துகொள்கிறார். ஆபாசத்தை பார்க்கிற ஒருவர் தன் மனைவியை அனுபவிப்பதற்காக படைக்கப்பட்ட ஒரு போகப் பொருளாக மாத்திரமே பார்ப்பார். ஆண்கள் பெண்களுக்கு மரியாதையையும் கனத்தையும் கொடுக்கும்படி படைப்பாளர் எதிர்பார்க்கிறார்; இப்படிப்பட்ட நபர் அப்படிப்பட்ட கனத்தை எப்படிக் கொடுப்பார்? (1 பேதுரு 3:7) திருமண உறவுக்கே உரிய ஒரு அந்தரங்கமான விஷயத்தோடு குறுக்கிடும் ஒரு பழக்கம் விரும்பத்தக்கதாக இருக்க முடியுமா?

அது மட்டுமல்ல, எப்போதாவது செய்யும் ஒரு பழக்கம் அடிமைப்படுத்தும் ஒன்றாக மாறிவிடலாம். “போதை பழக்கத்துக்கு அடிமையாகிவிட்ட ஒருவனுக்கு போகப்போக அதிக வீரியமிக்க போதை தேவைப்படுவது போல, ஆபாசத்தைப் பார்ப்பவர்களுக்கும்கூட முன் ஏற்பட்டது போன்ற இன்ப உணர்வுகள் ஏற்படுவதற்கு இன்னும் அதிக அளவில் அது தேவைப்படும்.”

இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட அந்தக் கணவனுக்கும் இதுதான் ஏற்பட்டது. ஆபாசத்தை இனி பார்ப்பதில்லை என்று கணவன் தனக்கு உறுதியளித்து பல மாதங்கள் சென்றபின் ஒரு நாள் மாலையில் வீடு திரும்பிய மனைவி, கம்ப்யூட்டரில் கணவன் அமர்ந்திருப்பதைக் கண்டாள். அவர் நடந்துகொண்ட விதத்திலிருந்து எதையோ அவர் மறைப்பது தெரிந்தது. “அவர் நடுக்கமாகவும் அமைதி இழந்தும் காணப்பட்டார்,” என்று அவள் எழுதினாள். “கம்ப்யூட்டரை நான் பார்த்தேன். நம்பமுடியாத அளவுக்கு மிகவும் மோசமான ஆபாசப் படத்தை அவர் பார்த்துக்கொண்டிருப்பது எனக்குத் தெரிந்தது. இனி பார்ப்பதில்லை என்று அவர் கூறியபோது உண்மையில் அப்படித்தான் அவர் முடிவு செய்திருந்தாராம். ஆனால் அவரால் தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை.”

ஆபாசம் ஆபத்தானது, ஆனால் இது எங்கும் எளிதில் கிடைக்கிறது என்பதை எண்ணிப்பார்க்கும் போது இதைக் குறித்து கவலைப்படுவதில் நியாயம் இருக்கிறது. உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் இதிலிருந்து எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம்? இத்தொடரின் கடைசி கட்டுரையில் இந்தக் கேள்விக்கு பதிலை காண்போம்.

[பக்கம் 6-ன் படம்]

ஆபாசம் ஒழுக்கத்தை சிதைத்துவிடும்