Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

அவர்களால் சமுதாயத்திற்கு நன்மையே!

“அவர்கள் மதுபான துர்ப்பிரயோகம் செய்வதில்லை, புகை பிடிப்பதில்லை, சொல் தவறுவதில்லை, பொய் சாட்சி சொல்வதில்லை, பண ஆசை பிடித்து அலைவதில்லை . . . அத்துடன் அவர்களுடைய அமைப்பு மர்மமான ஒன்றல்ல, ஆனால் அவர்கள் சட்டத்திற்கு கட்டுப்படும் நல்ல குடிமக்கள்.” அதுமட்டுமல்ல, “அவர்கள் மதிப்புடையவர்கள், சந்தோஷமானவர்கள், வரலாறு, இலக்கியம், கலை என்று வாழ்க்கையின் எல்லா துறைகளிலும் ஆர்வமுடைய மக்கள்.” இப்படி வாய்நிறைய பாராட்டினார் பேராசிரியர் அனெடோலி பி. ஸில்பர். அவர் பாராட்டியது யெகோவாவின் சாட்சிகளை. ரஷ்யா, கேரலியாவிலுள்ள குடியரசு மருத்துவமனை மற்றும் பீட்ரோஸவோட்ஸ்க் பல்கலைக்கழகத்தின் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் அனஸ்தீஸிய இலாக்காவின் தலைவராக பணியாற்றும் அவர், சாட்சிகளால் இரத்தமில்லா அறுவை சிகிச்சையில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களையும் பட்டியலிட்டு சொன்னார். அதன்பின், “வால்டேயர் எழுதியதை சற்று திருத்தி சொல்ல வேண்டுமானால், யெகோவாவின் சாட்சிகள் இல்லையெனில், அவர்களை உருவாக்க வேண்டும்” என்றார்.

காலை வாரும் ஃபேஷன்

“ஃபேஷன் ஃபேஷன் என அலையும் இளவட்டங்கள் பிளாட்ஃபார்ம் ஷூக்கள்/ஹை ஹீல்ஸ் ஷூக்கள் இல்லாமல் வெளியே காலெடுத்து வைப்பதில்லை.” ஆனால் இப்படிப்பட்ட ஷூக்களால் பிரிட்டனில் ஆண்டுக்கு சுமார் 10,000 காயங்கள் ஏற்படுகின்றன என்கிறது லண்டன் செய்தித்தாளான த டைம்ஸ். “பொதுவாக கணுக்கால் சுளுக்கிக்கொள்ளும், முறுக்கிக்கொள்ளும் அல்லது கால் உடையும். முக்கியமாக இளம் பெண்களுக்கு முதுகில் தொந்தரவுகள் ஏற்படும், ஏனென்றால் அவர்கள் இன்னும் வளர்ந்துவருகிறார்கள்” என்கிறார் பிரிட்டன் தராதர நிறுவனத்தின் பிரதிநிதியான ஸ்டீவ் டைலெர். ஜப்பானில், கடந்த சில மாதங்களில், பிளாட்ஃபார்ம் ஷூக்களால் இரு பெண்கள் உயிரையே இழந்துவிட்டனர். நர்சரி பள்ளியில் வேலை செய்த 25 வயது பெண், ஐந்து அங்குல உயரத்திற்கு பிளாட்ஃபார்ம் செருப்பை அணிந்திருந்தாள். திடீரென அவளது காலணியே காலை வாரிவிட, மண்டை உடைந்து இறந்துபோனாள். மற்றொரு பெண் ஆறு அங்குல உயரத்திற்கு பிளாட்ஃபார்ம் ஹீல் அணிந்துகொண்டு கார் ஓட்டிச் சென்றாள். அதனால் பிரேக் பிடிக்க முடியாமல்போகவே, கார் அங்கிருந்த ஒரு கான்கிரீட் கம்பத்தில் இடித்தது. உள்ளேயிருந்த மற்றொரு இளம் பெண் உயிரிழந்தாள். இந்த காலணிகளை தயாரிப்பவர்களோ, சட்டத்திலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக அந்த ஷூக்களில் எச்சரிப்பு லேபில்களை போட ஆரம்பித்துவிட்டனர்.

மழலைகளுக்கு வேலை வாய்ப்பு

“இன்று அதிக பிஸியாக இருக்கும் பெற்றோர், பிள்ளைகளுக்கு வீட்டு வேலைகளை கொடுப்பதில் அதிக கவனம் செலுத்துவது கிடையாது” என அறிக்கை செய்கிறது த டோரன்டோ ஸ்டார் செய்தித்தாள். இப்படிப்பட்ட வேலைகளை “பிள்ளைகள் அதிமுக்கியமானதாக கருத மாட்டார்கள் என்றாலும், இவை, அவர்கள் சொந்த காலில் நிற்பதற்கும் சுயமரியாதையை வளர்த்துக்கொள்ளவும் உதவுகின்றன” என்கிறார் சரியான நல்லொழுக்கம் என்ற புத்தகத்தின் நூலாசிரியர் ஜேன் நெல்சன். குழந்தை என்ற பத்திரிகையில் வெளிவந்த ஒரு அறிக்கைபடி, இரண்டு முதல் மூன்று வயது குழந்தைகளுக்கு அவர்களால் செய்ய முடிந்த சின்ன சின்ன வேலைகளை கொடுக்கலாம். உதாரணமாக பொம்மைகளை எடுத்து வைப்பது, அழுக்கு துணிகளை கூடையில் போடுவது போன்றவை. மூன்று முதல் ஐந்து வயது பிள்ளைகள் டேபிளை ரெடி செய்யலாம், பாத்திரங்களை கழுவப் போடலாம், விளையாடும் இடங்களை சுத்தம் செய்யலாம். 5 முதல் 9 வயது பிள்ளைகள் தங்கள் படுக்கையை சரிசெய்யலாம், இலை தழைகளையெல்லாம் கூட்டி சுத்தம் செய்யலாம், களைகளை பிடுங்கலாம். 9 முதல் 12 வயது பிள்ளைகள் பாத்திரங்களை கழுவி துடைத்து வைக்கலாம், குப்பைகளை எடுத்துச்சென்று கொட்டலாம், புல்லை வெட்டி கார்டனை அழகாக்கலாம், வாக்யூம் க்ளீனிங் செய்யலாம். “எந்த நேரத்திற்குள் வேலையை முடிக்க வேண்டும் என்று சொல்வது அநேக நன்மைகளை கொடுக்கும்” என்று சொல்கிறார் நெல்சன்.

குற்றப்பிடியில் இளைஞர்கள்

ஸ்காட்லாந்தில் 14, 15 வயதுக்குட்பட்ட 85 சதவீத பையன்களும் 67 சதவீத சிறுமிகளும், கடந்த வருடம் குறைந்தது ஒரு குற்றத்தையாவது செய்ததாக ஒப்புக்கொண்டார்கள் என்பதை ஸ்காட்லாந்தின் ஓர் உயர் அதிகார சுற்றாய்வு காண்பிக்கிறது. கணக்கெடுக்கப்பட்ட ஆறு பள்ளிகளைச் சேர்ந்த 1,000 மாணவ மாணவிகளில் வெறும் 12 சதவீதத்தினர் மட்டுமே தாங்கள் இதுவரை எந்த குற்றமும் செய்யவில்லை என சொன்னதாக க்ளாஸ்கோ செய்தித்தாள் த ஹெரால்ட் அறிக்கை செய்கிறது. குற்றம் செய்ததாக ஒத்துக்கொண்ட 69 சதவீத மாணவர்களும் 56 சதவீத மாணவிகளும் பொருளுடைமைகளை நாசப்படுத்தியாக சொன்னார்கள். 66 சதவீத மாணவர்களும் 53 சதவீத மாணவிகளும் கடைகளிலிருந்து திருடியிருக்கின்றனர். அத்துடன் மாணவ மாணவியரில் பாதி சதவீதத்தினர் பள்ளியிலிருந்தே திருடியிருக்கிறார்கள். தீ வைப்பது, ஆயுதத்தைக் கொண்டு மற்றவரை காயப்படுத்துவது போன்றவையும் அவர்கள் செய்த குற்றங்களில் உட்படும். இந்த வயதைச் சேர்ந்த இளம் பிள்ளைகள் தாங்கள் இவ்வாறு குற்றங்களை செய்ததற்கான முக்கியமான காரணம் நண்பர்களே என்கின்றனர். 15 வயதைத் தாண்டியவர்கள், போதைப் பழக்கத்திற்கு தேவையான பணத்தை பெறவே பெரும்பாலும் இவ்வாறு குற்றங்களை செய்கின்றனர்.

லூட்டியடிக்கும் பிள்ளைகள்

முன்பெல்லாம் ஜப்பானில் பிள்ளைகள் அடங்கி ஒடுங்கி இருப்பார்கள். இப்போதோ பிள்ளைகளுக்கு வால் அதிகமாகிவிட்டதால் அமைதியையும் ஒழுங்கையும் கட்டிக்காப்பது கடினமாகிக் கொண்டே வருகிறது என அந்த நாடு முழுவதிலுமுள்ள ஆசிரியர்கள் அறிவிக்கின்றனர். மற்றவர்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்வதற்காக 9, 11, 14 வயது பிள்ளைகளிடம் டோக்கியோ நகர்ப்புற அரசாங்கம் சில கேள்விகளை கேட்டது. த டெய்லி யோமியுரி-ன் பிரகாரம், 65 சதவீதத்தினர் தங்கள் நண்பர்களாலும், 60 சதவீதத்தினர் தங்கள் பெற்றோர்களாலும், 50 சதவீதத்தினர் தங்கள் ஆசிரியர்களாலும் எரிச்சலூட்டப்படுவதால் அவர்கள் மீது கடுப்பாகிவிடுவதாக சொன்னார்கள். 40 சதவீதத்தினர் தங்களுடைய கோபத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை என சொன்னார்கள். 5-ல் ஒருவர் என்ற வீதத்தினர், பொருட்களை அடித்து நொறுக்கி கோபத்தை தீர்த்துக்கொள்வதாக சொல்கின்றனர்.

“மர்ம வைரஸ்”

“இப்போது உலகம் முழுவதிலும் விநியோகிக்கப்படும் இரத்தத்தை ஒருவகை வைரஸ் மாசுபடுத்திவருகிறது” என்கிறது நியூ சையண்டிஸ்ட் பத்திரிகை. “இந்த ‘TT’ வைரஸ் ஆபத்தானதா இல்லையா என்று யாருக்கும் தெரியாது, ஆனால் இது ஈரல் வியாதிகளை ஏற்படுத்தக்கூடும் என்ற பயம் நிலவிவருகிறது.” முதல் முதலாக ஒரு ஜப்பானிய நோயாளியின் இரத்தத்திலேயே இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது, அதனால்தான் அவருடைய பெயரின் முதலெழுத்துகளாகிய TT, இந்த வைரஸுக்கு சூட்டப்பட்டது. “இரத்ததானம் செய்பவர்களிலும், இரத்தமேற்றிக்கொள்ளும் ஈரல் வியாதியுடைய நோயாளிகளிலும்” இந்த வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் இரத்ததானம் செய்த 102 பேரில் 8 பேருக்கு இந்த வைரஸ் இருக்கிறது என்று ஒரு ஆய்வு காண்பிக்கிறது. இவர்களை சோதனை செய்தபோது, இவர்களுடைய இரத்தத்தில் ஹெச்ஐவி, ஹெப்படைட்டஸ்-பி, சி போன்ற எந்த வைரஸும் இல்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம். பிரிட்டனில் இந்த நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கை 2 சதவீதம், பிரான்ஸில் 4 முதல் 6 சதவீதம், ஐக்கிய மாகாணங்களில் 8 முதல் 10 சதவீதம், ஜப்பானில் 13 சதவீதமாகும். “இந்த TT வைரஸைப் பற்றி ஆராய்ந்து வருபவர்கள், இது மக்களிடையே பீதியை கிளப்பிவிடக்கூடாது என விரும்புகின்றனர்.” ஆனால் அந்த கட்டுரை தொடர்கிற வண்ணமாக அவர்கள் “இந்த வைரஸ் உடலுக்கு தீங்கானதா இல்லையா என்பதை கண்டுபிடிக்க விரும்புகின்றனர்.”

உயிர்காக்கும் கழுத்துப்பட்டை

தென் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் கால்நடை பண்ணைக்காரர்களுக்கு பெரும் அடி. ஒவ்வொரு பருவ காலத்தின்போதும் அவர்களுடைய பண்ணையில் பிறந்த 40 சதவீத குட்டிகள் நரிகளால் கொல்லப்பட்டுவந்தன. இதனால் பொருளாதார ரீதியில் நஷ்டம் ஏற்பட்டதோடு, நரியின் எண்ணிக்கையும் பெருமளவில் அதிகரித்தது. நரிகளை அந்த இடத்தைவிட்டே ‘காலி’ பண்ண வேண்டும் என்று எடுக்கப்பட்ட எல்லா முயற்சிகளிலும் தோல்வியே, அதுமட்டமல்ல அந்த முயற்சிகளால் மற்ற மிருகங்கள்தான் ஆபத்திற்குள்ளாயின. இருப்பினும், இப்போது சமீப ஆண்டுகளில் இதற்கு ஒரு அருமையான தீர்வு கண்டுபிடிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆட்டின் கழுத்தில் வளைந்துகொடுக்கும் ஒரு பட்டையை பயன்படுத்தும் முறைதான் அது. இந்த பட்டையை தேவைக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக்கொள்ள முடியும், அதை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும், ஆட்டின் நடமாட்டத்திற்கு இது எந்த விதத்திலும் தடையாய் இருப்பதில்லை, இது நரியையும் காயப்படுத்துவதில்லை. ஆட்டை நரி சாகும் அளவிற்கு கடித்துவிடாமலிருக்க இந்த பட்டை உதவுகிறது. நெட்டல் விட்னஸ் செய்தித்தாள் பிரகாரம், நரியின் கொலை வெறியை இந்த கழுத்துப்பட்டை உடனடியாகவும் நிரந்தரமாகவும் அடக்கிவிட்டது என அதைப் பயன்படுத்திய பண்ணைக்காரர்கள் அறிக்கை செய்தனர். இதன் காரணமாக நரிகள் அவற்றின் இயற்கை உணவுகளாகிய பூச்சிகளையும் எலிகளையும் அழுகிய பிணங்களையும் சாப்பிட வேண்டியுள்ளதால் அவற்றின் எண்ணிக்கை குறைந்துகொண்டிருக்கிறது.

எக்ஸ்பர்ட் தச்சன்

இகினியூமான் என்ற ஒருவகை குளவிக்கு முட்டையிடுவதற்காக கொடுக்கு போன்ற ஒரு மெல்லிய குழாய் பின்புறமாக அமைந்துள்ளது. அது “மாங்கனீஸ் அயனியாலும் துத்தநாகத்தாலும் ஆன கடினமான” அமைப்பு என நேஷனல் ஜியோகிராஃபிக் பத்திரிகை அறிவிக்கிறது. சாதாரணமாக மரங்களுக்கு உள்ளே மற்ற பூச்சிகளின் லார்வாக்கள் இருக்கும். மரத்தை அரிக்கும் இந்த லார்வாக்களின் மேலே அல்லது அவற்றின் உடலைத் துளைத்து இந்த குளவி முட்டையிடும். இப்படி முட்டையிடுவதற்கு முதலாவதாக மரத்தில் ஆழமான ஓட்டைகளை போட வேண்டும். இப்படி ஓட்டை போடுவதற்கு குளவி தன் உடலிலேயே அமைந்த இந்த “உலோக கருவியை” பயன்படுத்துகிறது. “சில சமயம் பலமான மரத்தில்கூட சுமார் 7.5 சென்டிமீட்டர் அளவிற்கு ஆழமாக இதனால் ஓட்டை போட முடியும்” என்கிறார் பிரிட்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த டொனால்ட் க்விக். குளவிக் குஞ்சுகள் பொறித்தவுடன் அந்த லார்வாக்களை சாப்பிடுகின்றன. லார்வாக்களிலுள்ள தாதுப் பொருட்களால் இவற்றின் வாய் கொஞ்சம் கடினமாகிவிடுகிறது; இதனைக் கொண்டு இவை மரத்தை அரித்துக்கொண்டு வெளியேறுகின்றன.

இந்தியாவின் “மௌன அபாயம்”

“கடந்த சில வருடங்களுள் இந்தியாவில் உடல் ஆரோக்கியம்அநேக விதங்களில் முன்னேறியிருக்கிற போதிலும், ஊட்டச்சத்து குறைவு ‘மௌன அபாயமாக’ இருந்துவருகிறது” என அறிவிக்கிறது த டைம்ஸ் ஆஃப் இண்டியா. இந்தியாவில் ஊட்டச்சத்து குறைவு காரணமாக, உடல்நல மேம்பாட்டிற்கான செலவும் உற்பத்தி வீத இழப்பும் சேர்ந்து 1,000 கோடி ரூபாய் ஆகியிருக்கிறது. அந்த அறிக்கைப்படி இந்தியாவிலுள்ள நான்கு வயதிற்குட்பட்ட 50 சதவீதத்திற்கும் அதிகமான பிள்ளைகள் ஊட்டச்சத்து குறைவால் அவதிப்படுகின்றனர், 30 சதவீத குழந்தைகள் “குறைவான எடையில்” பிறக்கின்றன, 60 சதவீத பெண்களுக்கு இரத்த சோகையுள்ளது. உலக வங்கியின் சமூக வளர்ச்சி நிபுணர் மீரா சட்டர்ஜி சொல்வதை கொஞ்சம் கேளுங்கள்: “ஊட்டச்சத்து குறைவு அநேக குடும்பங்களையும் தனி நபர்களின் வாழ்க்கையையும் சீரழித்துவிடுகிறது. அது மட்டுமல்லாமல், கல்விக்கு செய்யப்படும் செலவுகளுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பலன்களை குறைத்து விடுகிறது. அதோடு சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான தடையாக இருக்கிறது.”

சந்தோஷமற்ற பாதிரிகள்?

பாதிரிமார்களைக் குறித்து பிரெஞ்சு சமுதாயம் எவ்வாறு உணர்கிறது என்பதை தெரிந்துகொள்ள கடந்த ஆறு வருடங்களில் மூன்று முறை சுற்றாய்வுகள் நடத்தப்பட்டன. 45 சதவீத பிரெஞ்சு மக்கள் பாதிரிகளை சந்தோஷமானவர்களாகவோ திருப்தியானவர்களாகவோ கருதுவதில்லை என்பதை அந்த சுற்றாய்வு காட்டுகிறது என கத்தோலிக்க செய்தித்தாளான லா க்ர்வா-வில் வெளியிடப்பட்டிருந்தது. இருப்பினும், பொதுவாக மக்கள் இன்னும் பாதிரிகளை நட்புறவானவர்கள் என்றும் செவிகொடுத்து கேட்பவர்கள் என்றும்தான் கருதுகிறார்கள். ஆனால் இந்த பாதிரிகள் “சமுதாயத்திற்கு தேவையானவர்கள் என வெகு சிலரே நினைக்கின்றனர்,” அத்துடன் 56 சதவீதத்தினர் மட்டுமே இவர்களை “பூமியிலுள்ள கடவுளுடைய சாட்சிகள்” என கருதுகிறார்கள். பொது மக்களை எடுத்துக்கொண்டால் மூன்றுக்கு ஒருவர் என்ற வீதத்திற்கும் குறைவானவர்களும், சர்ச்சுக்கு ஒழுங்காக செல்பவர்களில் 51 சதவீதத்தினரும்தான் தங்கள் மகனையோ உறவினரையோ பாதிரியாகும்படி உற்சாகப்படுத்துகின்றனர்.