Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுள் மாறுகிறவரா?

கடவுள் மாறுகிறவரா?

பைபிளின் கருத்து

கடவுள் மாறுகிறவரா?

மனிதவியல் நிபுணர் ஜார்ஜ் டார்ஸி, “பழைய ஏற்பாட்டின்” கடவுளை, “கொடூர கடவுள்” என விவரித்தார். அதுமட்டுமின்றி, “யாவே கடவுள் . . . முற்றிலும் அன்பற்றவர். கொள்ளைக்காரர், துன்புறுத்துவோர், போர்வீரர் ஆகியோரின் கடவுளே அவர்; வெற்றியின் கடவுளும் அவரே” என்றும் கூறினார். “பழைய ஏற்பாட்டின்” கடவுளாகிய யாவே அல்லது யெகோவாவைப் பற்றி மற்றவர்களும் இப்படித்தான் நினைக்கிறார்கள். யெகோவா என்ற இந்த குரூர கடவுள்தான் “புதிய ஏற்பாட்டின்,” அன்பே வடிவான கருணை மழை பொழியும் கடவுளாக மாறியிருக்கிறாரோ என சிலர் நினைக்கிறார்கள்.

கடவுளைப் பற்றிய இந்தக் கருத்து ஒன்றும் புதிதல்ல. இது பொ.ச. இரண்டாம் நூற்றாண்டிலேயே, மறையியல் ஞானக்கோட்பாட்டை ஆதரித்த மர்சீயன் என்பவரால் முதன்முதலில் எடுத்துரைக்கப்பட்டது. இவர், “பழைய ஏற்பாட்டின்” கடவுளை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால், இவரைப் பொறுத்தமட்டில், பழைய ஏற்பாட்டின் கடவுள் கொடூரமானவர், பழிவாங்குபவர், தம்மை வணங்குவோருக்கு மட்டும் வேண்டியதையெல்லாம் கொடுப்பார். அதே சமயத்தில் இயேசு கிறிஸ்துவாக வெளிப்பட்ட “புதிய ஏற்பாட்டின்” கடவுளோ, பரிபூரண கடவுள், உயிர்களிடம் தூய அன்பு கொண்டவர், இரக்க குணம் படைத்தவர், கிருபை பொருந்தியவர், மன்னிப்பவர்.

சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல்படுபவர்

யெகோவா என்ற பெயருக்கு, “ஆகும்படி செய்கிறவர்” என்று அர்த்தம். அதாவது, தாம் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாவற்றையும் நிறைவேற்றுவதற்கு அவரே காரணர் என்று பொருள்படுகிறது. கடவுளுடைய பெயரை மோசே கேட்டார்; அப்போது, “நான் என்னவாக நிரூபிப்பேனோ அவ்வாறே நிரூபிப்பேன்” என்று யெகோவா தம்முடைய பெயரை விளக்கினார். (யாத்திராகமம் 3:14, NW) ராதர்ஹாம் பைபிளில், இந்த வசனம், “நான் என்னவாக விரும்பினாலும் அவ்வாறாவேன்” என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

யெகோவா தம்முடைய நோக்கங்களையும் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதற்கு எப்படியெல்லாம் ஆக வேண்டுமோ அப்படியெல்லாம் ஆகிறார், அல்லது நிரூபிக்கிறார். சேனைகளின் யெகோவா, நியாயாதிபதி, உன்னத பேரரசர், எரிச்சலுள்ளவர், உன்னத கடவுள், சிருஷ்டிகர், பிதா, மகத்தான போதகர், மேய்ப்பர், ஜெபத்தைக் கேட்கிறவர், மீட்பர், நித்தியானந்த தேவன் போன்ற பல பட்டப்பெயர்களும், அவருடைய செயல்களை வருணிக்கும் காரணப்பெயர்களும் அவருக்கு சூட்டப்பட்டிருப்பதே இதற்குச் சான்றாகும். தம்முடைய அன்பான நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு இவையனைத்துமாக—இன்னுமதிகமாக—ஆக தீர்மானித்திருக்கிறார்.—யாத்திராகமம் 34:14; நியாயாதிபதிகள் 11:27; சங்கீதம் 23:1; 65:2; 73:28, NW; 89:26; ஏசாயா 8:13; 30:20, NW; 40:28; 41:14; 1 தீமோத்தேயு 1:11.

அப்படியானால், கடவுளுடைய குணங்களும் தராதரங்களும் மாறுகின்றன என்றா அர்த்தம்? இல்லவே இல்லை. ஏனெனில், “அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை” என யாக்கோபு 1:17 கூறுகிறது. ஆகவே, மாறாத கடவுளால் எவ்வாறு சூழ்நிலைக்கு தக்கவாறு செயல்பட முடியும்?

இதை விளங்கிக்கொள்ள, பிள்ளைகளின் நன்மைக்காக பெற்றோர் வகிக்கும் வித்தியாசப்பட்ட பாகங்களை எடுத்துக்கொள்ளலாம். பெற்றோர் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பாகங்களை வகிக்கின்றனர். அதாவது, சமையல் செய்பவர், வீட்டைப் பராமரிப்பவர், எலக்ட்ரிஷியன், நர்ஸ், நண்பர், ஆலோசகர், டீச்சர், கண்டிப்பவர் போன்ற பாகங்களையும், இன்னும் பல பாகங்களையும் வகிக்கலாம். இப்படிப்பட்ட வித்தியாசமான பாகங்களை வகிக்கையில் பெற்றோரின் குணங்கள் மாறுவதில்லை. தேவைகளுக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். யெகோவாவின் விஷயத்திலும் இதுதான் உண்மை. ஆனால் அவர் இதை பெரிய அளவில் நிறைவேற்றுகிறார். சிருஷ்டிகளின் நன்மைக்காக தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு எவ்விதத்திலும் அவரால் தம்மை மாற்றி அமைத்துக்கொள்ள முடியும்.ரோமர் 11:33.

உதாரணமாக எபிரெய, கிரேக்க வேதாகமங்கள், யெகோவாவை அன்பே வடிவான, கருணை மழை பொழியும் கடவுளாக சித்தரிக்கின்றன. பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த மீகா தீர்க்கதரிசி யெகோவாவைப் பற்றி கேட்டார்: “தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபைசெய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்.” (மீகா 7:18) அவ்வாறே அப்போஸ்தலன் யோவானும், “தேவன் அன்பாகவே இருக்கிறார்” என்ற உலகறிந்த வார்த்தைகளை எழுதினார்.—1 யோவான் 4:8.

மறுபட்சத்தில், கல்நெஞ்சத்துடன் வேண்டுமென்றே திரும்பத் திரும்ப அவருடைய சட்டங்களை மீறுபவர்களுக்கும், பிறருக்கு தீங்கு செய்பவர்களுக்கும் எதிராக யெகோவா நீதியுள்ள நியாயாதிபதியாக இருப்பதாக பைபிளின் இரண்டு பாகங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. “துன்மார்க்கர் யாவரையும் [யெகோவா] அழிப்பார்,” என சங்கீதக்காரன் கூறினார். (சங்கீதம் 145:20) யோவான் 3:36 குறிப்பிடுவதாவது: “குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும்.”

மாறாத குணங்கள்

யெகோவாவின் இயல்பும் மாறவில்லை; அவருக்கே உரிய முக்கிய பண்புகளான அன்பு, ஞானம், நீதி, வல்லமை ஆகியவையும் மாறவில்லை. ஏனெனில், “நான் கர்த்தர், நான் மாறாதவர்” என அவரே இஸ்ரவேல் ஜனங்களிடம் சொன்னார். (மல்கியா 3:6) மனிதரைப் படைத்து சுமார் 3,500 வருடங்களுக்குப்பின் சொன்ன வார்த்தை இது. இதுபோன்று முழு பைபிளையும் அலசி ஆராய்ந்தோமானால் கடவுள் தம்முடைய தராதரங்களிலும் குணங்களிலும் மாறாதவர் என்பதையே நாம் காண்போம். காலம் செல்லச்செல்ல யெகோவா தம்முடைய குணங்களில் முன்னேற்றம் அடைந்ததைப் பற்றிய பதிவும் இல்லை; அதற்கான அவசியமுமில்லை.

ஏதேன் தோட்டத்திலிருந்த முதல் மனித ஜோடியிடம் ஆரம்பித்து இன்றுவரை, கடவுள் நடந்துகொண்ட விதத்தை கவனிக்கையில் நீதி சம்பந்தப்பட்ட விஷயத்தில் அவரது உறுதி குறையவுமில்லை, அன்பு அதிகரிக்கவுமில்லை. இதையே பைபிள் தெளிவாக படம்பிடித்துக் காட்டுகிறது. பைபிளின் பல்வேறு இடங்களில் கடவுளுடைய குணங்கள் வித்தியாசமாக இருப்பதுபோல் தோன்றலாம். ஆனால் உண்மையில் அவருடைய மாறா பண்புகளின் வித்தியாசப்பட்ட அம்சங்களே அவை. வித்தியாசப்பட்ட சூழ்நிலைகளையும் ஆட்களையும் பொறுத்து இவை மாறுபடுகின்றன. இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் வித்தியாசமான மனநிலைகளை காண்பிக்க வேண்டியிருக்கிறது, அல்லது வித்தியாசமாக நடந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

ஆகவே, நூற்றாண்டுகளாக கடவுளுடைய தனிப்பண்புகள் மாறவும் இல்லை, மாறப்போவதும் இல்லை என்பதை பைபிள் தெளிவாக காண்பிக்கிறது. யெகோவா ஒருபோதும் மாறாதவர், நிலையானவர். அவர் எல்லா சமயத்திலும் நம்பிக்கைக்குப் பாத்திரர். நாம் காலமெல்லாம் அவரையே அண்டி இருக்கலாம்.

[பக்கம் -ன் படங்கள்16]

சோதோம் கொமோராவை அழித்த கடவுள் . . .

. . . நீதியுள்ள புதிய உலகம் உருவாக வழிவகுப்பார்