கொந்தளிக்கும் கடலிலிருந்து அமைதியான தண்ணீரிடம்
கொந்தளிக்கும் கடலிலிருந்து அமைதியான தண்ணீரிடம்
ஹான்ஸ் ஸ்டர்ம் சொன்னது
கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேல் மாலுமிகளாக இருந்தவர்கள் எங்கள் குடும்பத்து ஆண்கள். என் அப்பாவும் தாத்தாவைப் போல கடலில் வாழ்க்கை நடத்தியதால் என்னுடைய வாழ்க்கையிலும் அதுவே குறிக்கோளாக ஆனது.
1914-ல் முதல் உலகப்போர் ஆரம்பமானது, பால்டிக் கடலில் விரோதிகளின் குண்டுகளை அழிப்பதற்காக அனுப்பப்பட்ட கப்பலைச் செலுத்துவதற்கு ஜெர்மன் கடற்படையில் பணிபுரிய அப்பா வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டார். 1916-ல் ஒரு வியாபார கப்பலில் அவர் வேலைக்கு சேர்க்கப்பட்டார். போர் முடியும்வரை அவருடைய கப்பல் ஸ்வீடனிலிருந்து இரும்பு கனிமத்தை இறக்குமதி செய்ய பயன்படுத்தப்பட்டது. 1919-ல் அவர் மரித்தாலும் அவருடைய முன்மாதிரியால் எனக்குள் எழும்பிய விருப்பங்கள் மரிக்கவில்லை, அப்போது எனக்கு எட்டு வயது.
நான் விரும்பிய கடல் தொழிலில் முன்னேறுவதற்கு நான்கு ஆண்டுகள் நான் கடலில் வேலை செய்ய வேண்டும். அதில் 20 மாதங்கள் பாய்மர கப்பலில் பிரயாணம் செய்ய வேண்டும். அப்போதுதான் ஒரு கடற்படை கல்லூரியில் சேரமுடியும். ஆகவே எனக்கு 15 வயதானபோது போலந்தில் (இப்போது போலந்திலுள்ள Szczecin) நான் பிறந்த ஸ்டெட்டின் என்ற இடத்திலிருந்து அம்மா என்னை ஜெர்மனியிலுள்ள ஹம்பர்க்குக்கு அழைத்துச்சென்றார்கள். லிஸ் கம்பெனிக்கு சொந்தமாக பல பாய்மரக் கப்பல்கள் இருந்தன, பயிற்சிக்காக ஏதாவது ஒரு வியாபார கப்பலில் மாணவனாக சேர்ந்துகொள்ளலாம் என்று நினைத்தோம். பணம் கட்டி படிக்கும் நிலையில் நான் இல்லை. ஆனால், லிஸ் கம்பெனி என் அப்பாவை முன்னிட்டு பணமின்றி என்னைச் சேர்த்துக்கொண்டது.
1927-ல் என் முதல் கடற்பயணம் துவங்கியது. நான்கு பாய்மரங்களைக் கொண்ட அந்த எஃகு கப்பலின் பெயர் பதுவா. a அது ஹம்பர்க்கிலிருந்து சிலிக்குச் சென்று நைட்ரேட் சரக்கைக் கொண்டுவந்தது. அதில் மோட்டார் கிடையாது. பாய்மரங்கள் மட்டுமே இருந்தன. அட்லான்டிக் கடலைக் கடந்து செல்லும் அந்தப் பயணங்கள் இளவட்டங்களாகிய எங்கள் அனைவருக்கும் த்ரில்லிங்காக இருந்தன.
அனேக சமயங்களில் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும். அந்தச் சமயங்களில் பாய்மரங்களைச் சுருட்டிவிடுவோம். கப்பல் அலைக்கழிக்கப்படும்போது கயிறுகள்மீது ஏறி பாய்மரத்தை இறக்குவதென்றால் எப்படியிருக்கும் தெரியுமா? நான் பயந்து நடுங்கினது உண்மை! ஆனால் கட்டளையைக் கேட்டவுடன் பயமெல்லாம் பஞ்சாய் பறந்துவிடும், நான் ஏறி, சொன்னதைச் செய்தேன்.
என் கட்டுப்பாட்டை மீறிய சக்திகள்
அம்மா முதலில் ரோமன் கத்தோலிக்கராக இருந்தார். ஆனால் அப்பா இறந்த பிறகு அவர்கள் எர்னஸ்ட் பைபிள் ஸ்டூடன்ட்ஸ் என்ற தொகுதியோடு கூட்டுறவுகொள்ள ஆரம்பித்தார்கள். ஜெர்மனியில் அந்தச் சமயத்தில் யெகோவாவின் சாட்சிகள் எர்னஸ்ட் பைபிள் ஸ்டூடன்ட்ஸ் என்றே அழைக்கப்பட்டனர். 1923-ல் அவர்கள் முழுக்காட்டுதல் பெற்றார்கள். கத்தோலிக்க மதத்தில் எனக்கு எப்போதுமே விசேஷமாக ஒரு ஈடுபாடும் இருந்தது கிடையாது. அம்மா சொன்ன விஷயங்கள் எனக்கு நியாயமாக தோன்றியது. ஆகவே என் தங்கை மார்கொட்டும் நானும் அம்மாவுடன் பைபிள் படிப்பு கூட்டங்களுக்கு போய்வருவது பழக்கமாகிவிட்டது.
1929-ல் நான் பதுவாவை விட்டுவிட்டு அடுத்த மூன்று வருடங்களை வித்தியாசமான நீராவி கப்பல்களில் கழித்தேன். இவற்றில் வட ஐரோப்பிய துறைமுகங்களுக்கும் மத்தியதரைக் கடல் பகுதிகளுக்கும் சென்றேன். ஒரு கடற்பயணத்தில் எனக்கு உலகையே வலம் வரும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாழ்க்கை எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. அப்பாவைப் போலவே ஸ்டெட்டினில் நேவிகேஷன் கல்லூரியில் சேர்ந்துவிட வேண்டும் என்று துடியாய் துடித்தேன். 1933-ஆம் வருடம் வியாபாரக் கப்பலில் துணைக் கேப்டன் பதவிக்குத் தகுதிபெற 18 மாத பயிற்சியில் சேர்ந்தேன். ஆனால் என் கட்டுப்பாட்டை மீறிய சக்திகளால் என் எண்ணம் நிறைவேறவில்லை.
அந்த வருடத்தில்தான் ஹிட்லர் பதவிக்கு வந்திருந்தார். ஜெர்மனியில் எங்கு பார்த்தாலும் தேசப்பற்று அலை வீசியது. மாணவர்கள் “ஹேல் ஹிட்லர்!” என்று கோஷம் போடுவதில் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அம்மா எனக்கு கற்றுக்கொடுத்தபடி அதை என்னால் ஒருபோதும் செய்யமுடியாது. ஏன் முடியாது என்பதற்கு என்னிடம் விளக்கம் கேட்டார்கள். ஆனால் கொடுத்த விளக்கத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பள்ளியிலிருந்து நான் வெளியேற்றப்பட்டேன். பிரின்சிப்பால் ஒரு நல்ல மனிதர். நான் ஒரு வருடம் படித்ததற்கு அவர் ஒரு கடிதம் கொடுத்தார். என் பயிற்சியை முழுமையாக முடிக்காததால் சான்றிதழ் எதுவும் கிடைக்கவில்லை. என் கற்பனைக் கோட்டை நொறுங்கி சின்னாபின்னமானது.
அழுத்தங்கள் அதிகரிக்கின்றன
என்னுடைய நடுநிலை காரணமாக நான் இப்போது ஒதுக்கப்பட்டேன். இப்போது என்னால் எந்தக் கப்பலிலும் வேலை பார்க்க முடியாது. வேறு எந்த வேலையும் எனக்குக் கிடைக்காது. ஆகவே வீட்டிலிருந்தபடியே அம்மாவுக்கு உதவியாக இருந்துவந்தேன். வாழ்க்கை சக்கரத்தை நகர்த்துவதற்கு அம்மா சமையல் வேலை செய்தார்கள். நான் அவர்களுக்காக பாத்திரங்களைக் கழுவி காய்கறிகளை நறுக்கிக்கொடுத்து சந்தோஷமாக இருந்தேன். 1935-ல் இரண்டாம் உலகப் போர் ஆரம்பமாவதற்கு நான்கு வருடங்களுக்கு முன் என் வாழ்க்கையில் மற்றொரு திருப்பம் ஏற்பட்டது.
என்னுடைய அங்கிள் ஆஸ்கர், டான்ஸிக்கில் (இப்பொழுது Gdansk) வசித்துவந்தார். என்னுடைய கஷ்டங்களைப் பற்றி கேள்விப்பட்டு தன்னோடு வந்து அவருடைய ரெஸ்டாரன்டில் வேலைபார்க்கும்படி அழைத்தார். என்னுடைய அங்கிளும் அவருடைய மனைவி ரோஸலும் யெகோவாவின் சாட்சிகள். நான் சந்தோஷமாக அவர்கள் அழைப்பை ஏற்றுக்கொண்டேன். ஒழுங்காக அவர்களால் சம்பளம் கொடுக்க முடியாவிட்டாலும் அவர்களோடு இருப்பது எனக்கு மிகவும் பாதுகாப்பாக இருந்தது.
முதல் உலகப் போருக்குப்பின், டான்சிக் ஏறக்குறைய சுயாட்சி பெற்ற மாநிலமானது. பெரும் பரப்புள்ள இந்த மாநிலத்தை சர்வதேச சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் கண்காணித்துவந்தார். போலந்துக்கு கடலுக்குள் நுழையும் உரிமை வழங்குவதே இதன் நோக்கம். ஆனால் இந்த ஏற்பாட்டின்படி கிழக்கு ப்ரஷ்யா ஜெர்மனியிலிருந்து துண்டிக்கப்பட்டுவிட்டது. இதில் ஹிட்லருக்கு உடன்பாடு இல்லை. போலந்துமீது படையெடுத்து அதைக் கைப்பற்றியதால்தான் இரண்டாம் உலகப் போரே மூண்டது.
நான் இங்கே வந்தபிறகு, யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக இருந்த காரணத்துக்காக சித்திரவதை முகாமிலிருந்த ஒரு இளம் மனிதனை அங்கிளும் ஆண்டியும் தங்கள் வீட்டில் வைத்து கவனித்துக்கொண்டார்கள். இந்த மனிதர் தான் எத்தனை மோசமாக நடத்தப்பட்டார் என்பதையெல்லாம் என்னிடம் சொல்வார். கொஞ்ச நாட்கள் கழித்து என் அங்கிளும் ஆண்டியும் ஹேல் ஹிட்லர் என்று சொல்ல மறுத்த காரணத்துக்காக கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்கள். இந்த சமயத்தில் ஜெர்மானிய இரகசிய போலீஸ் என்னையும் விசாரித்தது, ஆனால் என்னை காவலில் வைக்கவில்லை.
இதற்கிடையில் ஸ்டெட்டினில் ஜெர்மன் படையில் வந்துசேரும்படி என்னை அழைத்த ஒரு கடிதம் அம்மாவுக்கு வந்தது. அவர்கள் உடனடியாக வடக்கு ஸ்வீடனில் இருந்த நவோமி ஆண்டியைப் போய் பார்க்கும்படி சாதுரியமாக எனக்கு கடிதம் எழுதினார்கள். எனக்கு விஷயம் புரிந்துவிட்டது—நான் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்!
நாசி துன்புறுத்தல்
நிலைமை இன்னும் மோசமானது. அங்கிளும் ஆண்டியும் மறுபடியும் கைதுசெய்யப்பட்டார்கள். இந்த முறை அவர்கள் டான்சிக்கில் இருந்து 2 மணிநேர பேருந்து பயண தூரத்தில் இருந்த ஸ்டட்ஹாஃவ் சித்திரவதை முகாமுக்கு எடுத்து செல்லப்பட்டனர். 1945-ல் போர் முடியும்வரை அவர்கள் அங்கே அடைத்துவைக்கப்பட்டார்கள். ரஷ்ய படைகள் நெருங்கியபோது அவர்களிடமிருந்து தப்பிக்க முகாமிலிருந்தவர்களை ஒரு கப்பலில் மேற்கு நோக்கி அழைத்துச் சென்றனர்; அதில் அங்கிள் இறந்து விட்டார், அங்கிள் இறந்துவிட்ட செய்தி அறிந்து நான் மிகவும் வேதனையடைந்தேன். ஆனால் ஆண்டி உயிர்பிழைத்துக் கொண்டார்கள். பின்பு அவர்கள் ஒரு
முழுநேர சுவிசேஷ ஊழியர் ஆனார்கள்.அங்கிளும் ஆண்டியும் ஸ்டட்ஹாஃவ்வுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சமயத்தில் ஸ்டெட்டினில் அம்மா கைதாகி ஏழு மாதங்கள் சிறையில் இருந்தார்கள். என்னுடைய தங்கையும் சாட்சி தம்பதிகளின் மகனைத் திருமணம் முடித்திருந்தாள். அம்மா சிறையில் இருந்த அதே சமயம் அவளும் சிறையில் இருந்தாள். அவளுடைய கணவனும் அவர்களுடைய மகளும் சித்திரவதை முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவளுடைய கணவன் அங்கே மரித்துப்போனார். அவளுடைய மகள், பெல்சன் உள்ளிட்ட மிக மோசமான சில முகாம்களில் எட்டு வருடங்கள் கழித்தாள்.
ஒரு சமயம் இராணுவத்துக்காக ஆயுதங்களை வைக்கும் பெல்டு தைக்க மறுத்த காரணத்துக்காக, நவம்பர் மாதத்தின் நடுங்கும் குளிரில் என் தங்கை மகளையும் மற்ற சாட்சிகளையும் மிகவும் மெல்லிய உடைகளோடு காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை வெளியில் நிற்க வைத்தார்கள். ஒரு துண்டு ரொட்டியும் ஒரு கூஜா தண்ணீருமே அவர்களுக்கு ஒரு நாளைக்கு கொடுத்தார்கள், மூன்று நாளுக்கு ஒரு முறை கொஞ்சம் சூடான சூப் கொடுத்தார்கள். வைக்கோல்கூட இல்லாமல் வெறும் தரையில் அவர்கள் தூங்கினார்கள். இப்படி அவர்கள் ஆறு வாரங்கள் நடத்தப்பட்டார்கள், முகாம் நிர்வாகிகளுக்கு ஒரே ஆச்சரியம், இவர்கள் இன்னும் உயிரோடிருப்பதைப் பார்த்து.
தப்பியோட்டம்—எங்கே?
அங்கிளும் ஆண்டியும் இரண்டாவது தடவை கைது செய்யப்பட்ட பின்பு, ஜெர்மானிய இரகசிய போலீஸ் என்னைத் தேடிக்கொண்டு திரும்பி வருவதற்கு முன் டான்சிக்கை விட்டு கிளம்பிவிடுவது அவசியம் என்பது புரிந்தது. அங்கிள் எனக்கு கொஞ்சம் பணம் தந்திருந்தார், அதை வைத்து இங்கிலாந்தின் கிழக்கு கரையோரத்தில் ஹல்லுக்கு செல்லும் போலந்து நாட்டு கப்பலில் செல்ல அனுமதிபெற்றேன். கரைக்கு வந்தப்பின் மூன்று மாதங்கள் இங்கே தங்குவதற்கு அனுமதிப் பெற்றேன், அந்நிய நாட்டவர் மூன்று மாதங்களே தங்குவதற்கு பொதுவாக அனுமதிக்கப்படுகிறார்.
உடனடியாக லண்டன் உவாட்ச் டவர் சொஸைட்டியின் கிளை அலுவலக முகவரியை வைத்துக்கொண்டு, அதாவது 34 கிரேவன் டெரஸுக்கு சென்றேன். அங்கே அப்போது கிளை அலுவலக கண்காணியாக இருந்த பிரைஸ் ஹ்யூஸ் என்பவரை நான் சந்தித்தேன். அவர் இங்கிலாந்தின் மேற்கு கரையில் லிவர்பூலில் வசித்துவந்த தன் உறவினர் ஸ்டான்லி ராகர்ஸ் என்பவரோடு நான் தங்குவதற்கு ஏற்பாடு செய்துகொடுத்தார். ஸ்டான்லி என்னிடம் மிகவும் அன்பாக நடந்துகொண்டார்.
1937-ன் வசந்த காலத்தில் யெகோவாவுக்கு என்னுடைய ஒப்புக்கொடுத்தலின் அடையாளமாக லிவர்பூலில் நான் முழுக்காட்டுதல் பெற்றேன். ஆனால் இன்னும் அந்தக் கடல்வாழ்க்கையே என் கனவாக இருந்தது. ஆகவே, லிவர்பூல் நேவிகேஷன் கல்லூரியில் சேர்ந்துகொண்டு இரண்டு மாதங்களுக்குப்பிறகு துணைக் கேப்டன் ஆவதற்கு தேவையான லைசென்ஸ் பெற்றுக்கொண்டேன். இங்கிலாந்தில் எனக்கு அனுமதியளிக்கப்பட்ட காலம் குறைந்துகொண்டே வந்தது, லிவர்பூலில் இருந்த என்னுடைய நண்பர்கள் தங்கள் பார்லிமென்ட் உறுப்பினரைச் சந்தித்து உதவி கேட்டார்கள், ஆகவே எனக்கு இன்னும் மூன்று மாதங்கள் அவகாசம் கிடைத்தது.
பதுவா கப்பலை ஓட்டிய அனுபவம் எனக்கு இருந்த காரணத்தால் நேவிகேஷன் கல்லூரியில் என்னுடைய ஆசிரியர் என்னைக் கொஞ்சம் விசேஷமாக கவனித்துக்கொண்டார். நான் இக்கட்டான நிலையில் இருப்பதை அறிந்த அவர் ப்ளூ ஃபன்னல் லைனை அணுகும்படி சொன்னார். அங்கே அந்தக் கம்பெனியின் டைரக்டர் லாரன்ஸ் ஹோல்ட்டை சந்தித்தேன். இரண்டு வருடங்கள் கழித்து லிவர்பூலில் கம்பெனி கப்பல் ஒன்றில் அவரை சந்தித்தபோது எனக்கு முதல் மேட் டிக்கட் கிடைத்துவிட்டதா என்று கேட்டார். இன்னும் இரண்டு வாரங்கள் கப்பலின் பிரிட்ஜில் பணிபுரியும் அனுபவம் எனக்குத் தேவை என்று நான் அவரிடம் சொன்னேன். அப்போது எகிப்தில் செட் துறைமுகத்துக்கு கப்பலை செலுத்த அவர் எனக்கு ஏற்பாடு செய்தார்.
ஜூலை 7, 1939-ல் நான் லிவர்பூலுக்கு திரும்பிவந்த போது முதல் மேட் டிக்கட் பரீட்சைக்கு போக எண்ணினேன், ஆனால் போர் எந்தச் சமயத்திலும் மூளும் ஆபத்து இருந்தபடியால் இது நடக்கவில்லை. இதற்கு பதிலாக லண்டனிலிருந்த ஒரு கப்பலுக்கு என்னை அனுப்பினார்கள். அரசாங்க அதிகாரிகள் நான் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவன் என்பதை கண்டுபிடித்துவிட்ட போது உடனடியாக எந்தக் கப்பலிலும் போகமுடியாதபடி செய்துவிட்டார்கள். நான் ஜெர்மன் நாட்டவனாக இருந்தபடியால் என்னை அவர்கள் கைதுசெய்ய விரும்பினார்கள். ஆனால் திரு ஹோல்ட் என்னைக் காப்பாற்றினார், ஆகவே என்னை லிவர்பூலில் தோட்டவேலைக்கு அனுப்பினார்கள். ஆனால் இது நீடிக்கவில்லை, மே 1940-ல் என்னை கைதுசெய்தார்கள், ஜூன் மாதம் எட்ரிக் நீராவிக் கப்பலில் என்னை கனடாவுக்கு அனுப்பிவைத்தார்கள்.
கனடாவுக்கு
எட்ரிக்-ல் சுமார் 5,000 ஜெர்மானியர்கள் இருந்தார்கள். இவர்களில் பாதிபேர் அகதிகள், பாதிபேர் போர் கைதிகள். அகதிகளில் ஒருவர் முன்னாள் ஜெர்மன் பேரரசரின் பேரன் கெளன்ட் ஃபான் லினென். எங்களுக்கு வரும் எல்லா கடிதங்களும் செக் செய்யப்பட்டன; இங்கிலாந்து அரசி மேரிக்கு முகவரியிடப்பட்டு “அன்புள்ள அத்தை மேரிக்கு” என்று ஆரம்பமான ஒரு கடிதம் ஃபான் லனெனிடமிருந்து வந்ததை இன்டலிஜன்ஸ் அதிகாரி பார்த்தபோது அதைப் பற்றி ஃபானிடம் விசாரித்தார். ஆம், ஃபான் லினென் சொன்னது சரிதான், இங்கிலாந்து அரச குடும்பமும் ஜெர்மன் அரச குடும்பமும் நெருங்கிய உறவினர்கள். என்னைப் பொருத்தவரை போர் செய்வது எத்தனை முட்டாள்த்தனம், அது எத்தனை வீணானது என்பதைத்தான் இந்த நிகழ்ச்சி காட்டியது.
முன்பு குறிப்பிடப்பட்ட ஸ்டான்லி ராகர்ஸ் என்பவர் இரண்டு உலகப் போர்களுக்கிடைப்பட்ட காலத்தில் கனடாவில் ஒரு பில்கிரிம்மாக (யெகோவாவின் சாட்சிகளுடைய
பிரயாண கண்காணிகள் அப்போது அவ்விதமாகத் தான் அழைக்கப்பட்டார்கள்) சேவை புரிந்துவந்தார். அங்கிருந்த சாட்சிகளோடு அவர் தொடர்புகொண்டார், அவர்கள் நாடு கடத்தப்பட்டிருந்த என்னோடும் டோனி ஸ்டீஃபான்ஸ் என்ற மற்றொரு சாட்சியோடும் தொடர்புகொண்டார்கள். அவர்கள் கடிதங்களையும் பார்ஸல்களையும் அனுப்பி எங்களை உற்சாகப்படுத்தினார்கள். எட்டு வித்தியாசமான முகாம்களில் நான் இரண்டரை ஆண்டுகள் கைது செய்து வைக்கப்பட்டிருந்தேன். இங்கே பெரும்பாலான சமயங்களை மர மேசைகளையும் பெஞ்சுகளையும் செய்வதில் நான் செலவிட்டேன்.மீண்டும் இங்கிலாந்துக்கு சுதந்திர பறவையாக!
இரண்டாவது உலகப் போர் முடிவுக்கு வந்தபோது, இங்கிலாந்தில் ஐல் ஆப் மேன் என்ற இடத்திலிருந்த ஒரு காவல் முகாமுக்கு என்னை அனுப்பி வைத்தார்கள். அங்கே உவாட்ச் டவர் சொஸைட்டியின் கிளை அலுவலகத்திலிருந்து ஜான் பார் என்பவர்—இப்போது யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு உறுப்பினர்—ஒரு சில உள்ளூர் சாட்சிகளோடு என்னை சந்தித்தார். 1944-ல் நான் விடுவிக்கப்பட்டு ஸ்டான்லியுடன் திரும்பவும் சேர்ந்துகொண்டேன். இதற்கிடையில் அவர் நிட்டா தாமஸை திருமணம் செய்துகொண்டு லிவர்பூலுக்கு எதிர்திசையில் மெர்ஸி நதியிலிருந்த பெர்கன்ஹெட் என்ற துறைமுகத்தில் வசித்துவந்தார். அங்குதான் நிட்டாவின் தங்கை ஆலிவ்வை சந்தித்தேன், அடுத்த வருடம் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்.
எங்களுக்கு அனுமதி கிடைத்தவுடனேயே ஆலிவ்வும் நானும் அம்மாவைப் பார்க்க ஜெர்மனிக்குச் சென்றோம். நான் நன்றாக அறிந்திருந்த அந்த நகரங்கள் எரிந்து சாம்பலாகிவிட்டதை பார்த்தபோது என் மனம் வேதனையால் துடித்துபோனது. ஹம்பர்க்கில் லிஸ் அலுவலகத்தைப் போய் பார்க்கவேண்டும் என்று என் மனம் துடித்தது. அங்கே நான் யாரை சந்தித்தேன் தெரியுமா? என்ன ஆச்சரியம்! 1928, 1929 ஆகிய வருடங்களில் என்னுடைய கடைசி கப்பல் பயணங்களின்போது பதுவாவை செலுத்திய கேப்டன் பெனின்-ஐ நான் சந்திப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை! போர் காலத்தில் அவர் பணியில் சுறுசுறுப்பாக இருந்திருக்கிறார். போரில் அவருடைய இரண்டு மகன்களும் கொல்லப்பட்டிருந்தார்கள். மனிதர் மிகவும் உடைந்துபோயிருந்தார். நான் கேட்டவையும் பார்த்தவையும் எனக்கு மிகவும் வருத்தமாயிருந்தது.
கனடாவில் நான் இருந்த சமயத்தில் தி புளூ ஃபனல் லைன் என்னை சேர்த்துக்கொள்வதில் ஆர்வம் காட்டினார்கள். திரும்பிவந்த போது அவர்கள் என்னை வேலையில் சேர்த்துக்கொண்டார்கள். 1947-ல் முதல் மேட் டிக்கட்டுக்காக நான் கடைசியில் தகுதி அடைந்து லைசன்ஸ் பெற்றேன். அதைத் தொடர்ந்து வந்த வருடத்தில் ஆலிவ் முழு நேர சுவிசேஷ வேலையை எடுத்துக்கொண்டாள்.
வாழ்க்கையில் என் நோக்கத்தைக் கண்டடைதல்
மறுபடியுமாக கடலுக்குச் சென்றேன். என் கப்பல் பயணங்களில் தூர கிழக்கு தேசங்களில் மிஷனரி சாட்சிகள் பலரை சந்தித்தேன். ஆனால் 1947-ல் லண்டனில் நடந்த ஒரு மாநாட்டை என்னால் மறக்கவே முடியாது. யெகோவாவை இப்போது முழு நேரம் சேவிக்கவேண்டும், அதுவே என் இலக்கு என்பதை தீர்மானிக்க உதவிய மாநாடு அது. என்னை வேலைக்கு எடுத்துக்கொண்டவர்களுக்கு இது மிகவும் ஏமாற்றமாக இருந்தது. ஆனால் 1952-ல் அவர்கள் எனக்கு கருணை காட்டி பகுதி நேர வேலை ஒன்றை அலுவலகத்தில் போட்டு தந்தார்கள். அதனால் இப்போது முழு நேர பிரசங்க வேலையை ஆலிவ்வோடு சேர்ந்து செய்தேன். கடல் வாழ்க்கையின் மீது எனக்கிருந்த மோகம் மாறிவிட்டது, இப்போது வேறு ஒரு ஆசை எனக்கு வந்துவிட்டது.
ஆலிவ்வும் நானும் சேர்ந்து பிரசங்கித்து அதில் அதிக மகிழ்ச்சி அடைந்தோம். அநேகர் பைபிள் சத்தியங்களைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற்றுக்கொள்ள உதவும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது. (2 கொரிந்தியர் 3:2, 3) வருடங்களினூடாக மாவட்ட மாநாடுகளிலும் வட்டார அசெம்பிளிகளிலும் கூடுதலான சிலாக்கியங்களைப் பெற்று மகிழ்ந்திருக்கிறேன். இன்று நான் பெர்கன்ஹெட் அருகில் வேரல் தீபகற்பத்தில் ஒரு மூப்பராக சேவித்துவருகிறேன்.
என் அன்பு மனைவி ஆலிவ் 1997-ல் மரித்துப்போனாள். என் வாழ்க்கையை பின்னோக்கிப் பார்க்கும்போது நான் கொந்தளிப்பான கடல்களைக் கடந்து வந்திருப்பதை காண்கிறேன். ஆனால் கடைசியாக யெகோவாவின் அன்புள்ள வழிநடத்துதலின்கீழ், என் ஆசை மனைவியோடு அமைதியான தண்ணீர்களில் 50-க்கும் மேற்பட்ட ஆண்டுகள் பயணப்பட்டு வந்திருக்கிறேன். யெகோவாவை சேவிக்கும் மிக உன்னதமான பணியில் நான் இத்தனைக் காலத்தை செலவிட்டிருக்கிறேன்.
[அடிக்குறிப்பு]
a 1946-ல், பதுவா சோவியத் யூனியனிடம் ஒப்படைக்கப்பட்டு, குருசென்ஸ்டெர்ன் என பெயர் மாற்றப்பட்டது.
[பக்கம் 18-ன் படம்]
1914-ல் என் அப்பா அம்மாவோடு
[பக்கம் 18, 19-ன் படங்கள்]
“பதுவா”வில் என்னுடைய கடற்பயணங்களைப் பதிவுசெய்த என்னுடைய ஜெர்மன் டிஸ்சார்ஜ் புத்தகம்
[பக்கம் 21-ன் படம்]
என் மனைவி ஆலிவ்வோடு, 1974-ல் லண்டன் மாநாட்டில்