Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

டைகள் அன்றும் இன்றும்

டைகள் அன்றும் இன்றும்

டைகள் அன்றும் இன்றும்

கழுத்தை அலங்கரிக்கும் பழக்கம் ஆயிரக்கணக்கான வருடங்களாகவே இருந்து வருகிறது. எடுத்துக்காட்டாக சுமார் பொ.ச.மு. 1737-ல் எகிப்தின் பார்வோன், யோசேப்புக்கு பொன்னாலான நெக்லசை கொடுத்தான்.—ஆதியாகமம் 41:42.

இன்றும் அந்தப் பழக்கம் நீடித்து வருகிறது. ஆம் உலகின் பல பாகங்களில் ஆண்களின் கழுத்தில் டைகள் அழகாக அமர்ந்திருப்பதை காணலாம். 16-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் வாழ்ந்தவர்களே இன்றைய டைகளுக்கு முன்னோடிகள் என அனேக என்ஸைக்ளோபீடியாக்கள் குறிப்பிடுகின்றன. ஆண்கள் டபுலட் என்று அழைக்கப்பட்ட ஜாக்கட்டுகளை அணிந்தனர். அதின் அழகைக் கூட்டுவதற்காக விறைப்பான காலரை [ruff] அணிந்தனர். இந்த காலர் கழுத்தைச் சுற்றி பெரிய வட்டத் தகடு மாட்டியதுபோல் இருந்தது. அதிக பருமனாகவும் இருந்தது. வடிவம் சரியாக தெரிவதற்காக இந்த காலர் வெள்ளை துணியால் செய்யப்பட்டு விறைப்பாக்கப்பட்டது.

அதற்குப்பின் விறைப்பு குறைந்த காலர்கள் அறிமுகமாயின. இந்த வெள்ளை காலர் தோள்பட்டை வரை இருந்தது. இந்த காலர்கள் வன்டிக்குகள் [vandyke] என அழைக்கப்பட்டன. தீவிர சீர்திருத்தக் கிறிஸ்தவர்களும் இவற்றை அணிந்தனர்.

17-ம் நூற்றாண்டில் எப்போதும் அணியும் கோட்டுக்குள் வெயிஸ்ட்கோட்டை அணிய ஆரம்பித்தனர். இந்தச் கோட்டை அணிபவர்கள் ஸ்கார்ஃப் போன்ற துண்டை கழுத்தைச் சுற்றி அணிந்தனர். இந்தத் துண்டை கழுத்தில் இரண்டாகச் சுற்றி அதன் நுனிகள் சட்டைக்குமுன் தொங்க விட்டப்பட்டன. இவை அப்போது மிகவும் பிரபலமாக இருந்திருக்கின்றன என்பதை 17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த ஓவியங்கள் காட்டுகின்றன.

இவை மஸ்லின், லான், லேஸ் போன்றவற்றால் செய்யப்பட்டன. லேஸுகளால் செய்யப்பட்டவை அதிக விலை உயர்ந்தவை. இங்கிலாந்தைச் சேர்ந்த இரண்டாம் ஜேம்ஸ் தன்னுடைய முடிசூட்டு விழாவின்போது லேஸுகளாலான ஒன்றை வாங்குவதற்கு 36 பவுண்டுகளும் 10 ஷில்லிங்-ம் கொடுத்தார் என்பதாகச் சொல்லப்படுகிறது. அன்றைய நாளில் இது மிகப் பெரிய தொகை. அந்நாட்களில் பெரிய லேஸ் துண்டுகளும் பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. வெஸ்ட்மினிஸ்டர் அபியில் உள்ள இரண்டாம் சார்லஸின் சிலையில் அவருடைய கழுத்துத்துண்டு 15 சென்டிமீட்டர் அகலமும் 86 சென்டிமீட்டர் நீளமுமாக செதுக்கப்பட்டிருந்தது.

இந்தக் கழுத்துக்குட்டைகளை கட்டுவதற்கு பலவிதமான முடிச்சுகளை பயன்படுத்தினர். சில சமயங்களில் இவற்றை சரியான அளவில் கட்டுவதற்கு பட்டு ரிப்பன்கள் பயன்படுத்தப்பட்டன. அந்த ரிப்பனால் தாடைக்குக்கீழாக பெரிய முடிச்சு அல்லது போ போடப்பட்டது. இந்த முறையில் கழுத்தில் கட்டுவது சாலிடைர் என அழைக்கப்பட்டது. இந்த முடிச்சு நவீன நாளில் பயன்படுத்தப்படும் போ டை போலவே இருந்தது. குறைந்தபட்சம் நூறு வித்தியாசப்பட்ட முறைகளில் முடிச்சுகள் போடப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள். ஆண்களின் உடை நாகரிகத்திற்கு காரணமான போ ப்ரம்மல் என்ற ஆங்கிலேயர் தன் கழுத்துத் துண்டை சரியாகக் கட்டுவதற்கு ஒரு காலைபொழுது முழுவதையும் செலவிட்டார் என்று சொல்லப்படுகிறது.

1860-க்குள் நீளமான நுனிகளை உடைய இந்த ஸ்கார்ப்புகள் நவீன கால டைகளாக பரிணமிக்க ஆரம்பித்தன. இந்த டைகள் ஃபோர் இன் ஹேன்ட் (நான்கு கைக்குள்) என்பதாகக்கூட அழைக்கப்பட்டன. நான்கு-குதிரைகளை பூட்டிய சாரட் வண்டி ஓட்டுபவர்களால் பயன்படுத்தப்பட்ட முடிச்சிலிருந்து இப்பெயர் வந்தது. காலர்களையுடைய ஷர்ட்களை அணிவது புதுப்பாணியானது. டைகளின் முடிச்சை தாடைக்குக் கீழாக போட்டு அதன் நீளமான நுனிகள் ஷர்ட்டுக்கு முன் தொங்கவிடப்பட்டன. நவீன கால டைகள் தோன்றியது இப்படித்தான். 1890-களின்போது மற்றொரு டை, அதாவது, போ டை பிரபலமானது.

நல்ல தோற்றத்திற்கு டை அணிவது முக்கியம் என இன்று பலரும் நினைக்கிறார்கள். முன்பின் தெரியாத ஒருவரை அவர் அணிந்திருக்கும் டையை வைத்தே எப்படிப்பட்டவர் என்பதை சிலர் எடை போட்டுவிடலாம். ஆகவே உங்களுடைய ஷர்ட், பேண்ட், ஜாக்கெட்டுக்குப் பொருத்தமான வித்தியாசப்பட்ட சுத்தமான டைகளை அணிவது ஞானமானது.

எத்தகைய முடிச்சை தெரிந்தெடுத்தாலும் அதை ஒழுங்காக போட வேண்டும். சர்வ சாதாரணமாக எல்லாரும் போடுவது ஃபோர் இன் ஹேன்ட் முடிச்சாகும். (பக்கம் 14-ல் உள்ள படத்தைக் காண்க.) இந்த முடிச்சு ஒழுங்காகவும், பார்ப்பதற்கு எளிமையாகவும் இருக்கிறது. எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மற்றொரு வகை பிரபலமான முடிச்சு வின்ஸர் நாட் என்பதாகும். இது ஃபோர் இன் ஹேன்ட் முடிச்சைவிட கொஞ்சம் பெரியது. இவ்வகை முடிச்சு போடுகையில் அந்த முடிச்சிற்குக் கீழ் பள்ளம் விழுகிறது.

டை அணிவதை பல ஆண்கள் கஷ்டமாக உணருகிறார்கள். தொண்டையில் அழுத்துவதை அவர்கள் விரும்புவதில்லை. இருந்தாலும் அவர்கள் கஷ்டமாக உணருவதற்கு காரணம் என்ன என்பதை இப்பிரச்சினைகளை ஏற்கனவே எதிர்ப்பட்டவர்கள் அறிந்திருக்கிறார்கள். ஷர்ட்டின் அளவே இதற்குக் காரணம். அப்படியானால் உங்கள் ஷர்ட்டின் காலர் மிகச் சிறியதாக இருக்கிறதா என்பதை கவனியுங்கள். காலர் சரியான அளவுக்கு இருந்தால் தொண்டையில் இறுக்குவதுபோல் உணரமாட்டீர்கள். டை கட்டியிருக்கிறோம் என்ற உணர்வுகூட உங்களுக்கு இருக்காது.

அனேக நாடுகளில் அன்றாட வேலைக்கு உடை அணிந்து செல்வதில் டை முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் காரணமாகவே கிறிஸ்தவ ஆண்கள் ஊழியத்திற்குச் செல்லும்போதும் கூட்டங்களுக்குச் செல்லும்போதும் டைகளை அணிகிறார்கள். டைகள் ஒருவருக்கு கண்ணியத்தையும், மதிப்பையும் கொடுக்கின்றன. கழுத்தைச் சுற்றிக் கட்டும் இந்த துண்டு துணிக்கு இவ்வளவு மவுசு இருக்கிறது.

[பக்கம் 14-ன் படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

ஃபோர் இன் ஹேன்ட் நாட் போடுவது எப்படி a

1டையின் குறுகிய முனையிலிருந்து கிட்டத்தட்ட ஒரு அடி அளவில் அதன் அகன்ற முனை இருக்குமாறு வைத்துக்கொள்ளவும், அதை குறுகிய பகுதிக்கு மேல் குறுக்காக கீழே கொண்டு வரவும்.

2 இப்போது அகன்ற பகுதியை மறுபடியும் குறுக்காக கொண்டு வந்து லூப் வழியாக முன்னால் கொண்டு வரவும்

3 ஆள்காட்டி விரலால் முடிச்சை இறுக்காமல் பிடித்து முன்னால் உள்ள லூப் வழியாக அகன்ற பகுதியை மெதுவாக இழுக்கவும்.

4 குறுகிய பகுதியை பிடித்துக்கொண்டு முடிச்சை காலர் வரை மேல்நோக்கி இழுத்து மெதுவாக இறுக்குங்கள்.

[அடிக்குறிப்பு]

a ஷர்ட் அண்டு டை என்ற நூலிலிருந்து.

[பக்கம் -ன் படங்கள்15]

17-ம் நூற்றாண்டு முதல் இன்றுவரை வித்தியாசமான டை கட்டும் முறைகள்