பரிணாமம் தர்க்கரீதியானதா?
பரிணாமம் தர்க்கரீதியானதா?
பரிணாமக் கொள்கையை ஆதரிப்போர் அந்தக் கொள்கைதான் உண்மை என்று சொல்லிக்கொள்கின்றனர். அவர்கள் என்னதான் அடித்துக்கூறினாலும் அவை எந்தளவுக்கு நியாயமாக இருக்கின்றன? இதை கவனியுங்கள்.
மனிதன் அறிந்த மிக உறுதியான பொருட்களில் ஒன்று சிலந்தி வலை. நியூ ஸயன்டிஸ்ட் என்ற பத்திரிகை கூறுகிறபடி, “ஒவ்வொரு இழையையும் 40 சதவீதம் வரை இழுத்தாலும் எலாஸ்டிக் போன்று நீளும் தன்மையுடையது; இதே அளவுடைய ஸ்டீலை இந்த இழையோடு ஒப்பிட்டால், இது ஸ்டீலைவிட 100 மடங்கு அதிக அழுத்தத்தையும் பிய்ந்து விடாமல் தாங்கிக்கொள்ளும்.” இந்த அற்புத நூல் எவ்வாறு உருவாக்கப்படுகிறது? பிசுபிசுப்பான திரவமாகிய ஒருவகை புரோட்டீன், சிலந்தியின் உடலில் உள்ள நுண் குழாய்கள் வழியாக வெளிவருகிறது. இந்த திரவத்திலுள்ள புரோட்டீன் மூலக்கூறுகளின் அமைப்பில் சற்று மாற்றம் ஏற்படுவதால் இது திடமான நூலாகிறது என என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா விளக்குகிறது.
“சிலந்தி, எப்பேர்ப்பட்ட திறமையான வேதியியலாளர்களையும் மிஞ்சும் அளவுக்கு பரிணாம முறையில் டெக்னிக்குகளை உருவாக்கியுள்ளது” என்று நியூ ஸயன்டிஸ்ட் பத்திரிகை இறுதியாக கூறுகிறது. அப்படியானால், மனிதனால் இதுவரை புரிந்துகொள்ள முடியாத மிகவும் சிக்கலான டெக்னிக்கை சிலந்தி தானாகவே பரிணாம முறையில் உருவாக்கியுள்ளது என்ற கருத்தை நம்ப முடியுமா?
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் சட்ட பேராசிரியர் பிலிப் இ. ஜான்சன், த வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரையில், பரிணாமக் கொள்கைக்கு சரியான ஆதாரம் இல்லை எனவும், அதன் ஆதரவாளர்களோ அக்கொள்கையை சந்தேகிப்பவர்களை இப்போதுகூட கேலி செய்கிறார்கள் எனவும் குறிப்பிடுகிறார். அக்கட்டுரை மேலும் குறிப்பிடுவதாவது: “பரிணாமக் கொள்கையை ஆதாரப்பூர்வமாக விளக்குவதே பெரிய சிக்கல். ஆகவே, இக்கொள்கையை சுவடு தெரியாமல் ஆக்கிவிடுவார்களோ என்பதால் அதன் ஆதரவாளர்கள் இதைப்பற்றி நியாயமாக விவாதிக்க விரும்புவதில்லை.”
பரிணாமக் கொள்கை தர்க்கரீதியானதல்ல என்பதை நிரூபிப்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு, தாவரங்களைப் பற்றியது. மொராக்கோவில் ஆராய்ச்சி நடத்தும் விஞ்ஞானிகள் 150 ஆர்க்கியாப்டெரிஸ் புதைபடிவங்களைத் தோண்டியெடுத்துள்ளனர். இவை, “முதன் முதலாக விதைகளை உற்பத்தி செய்த தாவரங்களின் மூதாதை, இவற்றிலிருந்தே இன்றைய மரங்களில் பெரும்பாலானவை வழிவழியாய் தோன்றின” என லண்டனின் த டெய்லி டெலிகிராஃப் கூறுகிறது. இந்த தாவரத்தைக் குறித்து விஞ்ஞான செய்தியின் பதிப்பாசிரியர் செய்தித்தாளில் இவ்வாறு தெரிவிக்கிறார்: “இலைகளையும் கிளைகளையும் கண்டுபிடிப்பதன் மூலம் நவீன உலகை வடிவமைக்க இத்தாவரம் உதவியது.” “கண்டுபிடிப்பது” என்பது “சிந்தித்து வடிவமைப்பது.” சிந்திப்பதற்கும் கண்டுபிடிப்பதற்கும் ஒரு தாவரத்திற்கு ஆற்றல் உள்ளது என்பது நியாயமான விவாதமா?
அதிக ஞானமுள்ள மனிதர்களில் ஒருவரான சாலொமோன், ‘நம்முடைய சிந்திக்கும் திறமையைக் காத்துக்கொள்ளும்படி,’ அதாவது நாமே சிந்திக்கும்படி ஆலோசனை கூறுகிறார். நம்முடைய சிந்திக்கும் திறமையைக் காத்துக்கொள்வது இப்போதுதான் மிகவும் தேவை.—நீதிமொழிகள் 5:2, NW.