Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாரீர்! வாரீர்!! கண்டிப்பாக வாரீர்!!!

வாரீர்! வாரீர்!! கண்டிப்பாக வாரீர்!!!

வாரீர்! வாரீர்!! கண்டிப்பாக வாரீர்!!!

எங்கே? யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாட்டிற்கு! “கடவுளுடைய வார்த்தையின்படி நடப்போர்” என்ற இந்த மாநாடு மே மாதம் ஐக்கிய நாடுகளில் ஆரம்பமாகும். அதைத் தொடர்ந்து வரும் மாதங்களில் உலகம் முழுவதிலுமுள்ள நூற்றுக்கணக்கான நகரங்களில் நடைபெறும். நிகழ்ச்சிநிரல் வெள்ளிக்கிழமை காலை 9:30 மணிக்கு இன்னிசையுடன் இனிதே ஆரம்பிக்கும்.

கடவுளுடைய வார்த்தையின்படி நடப்பதற்கு உற்சாகப்படுத்தியபின், “யெகோவாவின் நற்குணத்தில் பூரிப்படையுங்கள்,” “காணமுடியாதவரை காண்பதுபோல் தொடர்ந்து உறுதியாக இருங்கள்” போன்ற பேச்சுக்களுடன் நிகழ்ச்சிநிரல் தொடரும். “ஆச்சரியமானவற்றை செய்யும் யெகோவாவை துதியுங்கள்” என்ற முக்கிய பேச்சுடன் காலை நிகழ்ச்சி முடிவடையும்.

பிற்பகல் நிகழ்ச்சிநிரல், “நன்மை செய்வதில் தளராதிருங்கள்” என்ற பேச்சுடன் ஆரம்பிக்கும். அதைத் தொடர்ந்து, மணத் துணையைத் தெரிந்தெடுப்பது எப்படி, ஆவிக்குரிய விதத்தில் பலமான குடும்பத்தைக் கட்டுதல், யெகோவாவை நேசிக்க பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுத்தல் போன்ற மூன்று பாகங்களைக் கொண்ட தொடர் பேச்சு இருக்கும். அந்நாளின் இறுதி சொற்பொழிவு: “யெகோவாவின் அமைப்போடு முன்னேறுதல்.” கடவுளுடைய நோக்கங்கள் நவீன நாட்களில் எந்தளவுக்கு மேன்மேலும் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது என்பது அந்தப் பேச்சில் மறுபார்வை செய்யப்படும்.

சனிக்கிழமை காலை நிகழ்ச்சிநிரலில், “கடவுளுடைய வார்த்தையின் ஊழியர்கள்” என்ற தலைப்பில் மூன்று பகுதிகளைக் கொண்ட இரண்டாவது தொடர் பேச்சு அளிக்கப்படும். அப்பேச்சில் நம்முடைய சீஷராக்கும் வேலையைச் செய்து முடிப்பது எப்படி என்பதன் பேரில் ஆலோசனைகள் வழங்கப்படும். அதைத் தொடர்ந்து வருவது “கடவுளை அவமதிக்காதிருத்தல்” என்ற உற்சாகமூட்டும் பேச்சு. அதற்கு அடுத்ததாக முழுக்காட்டுதல் பேச்சு கொடுக்கப்படும், தகுதிபெற்றவர்களுக்கு முழுக்காட்டுதல் தரப்படும்.

அன்று பிற்பகல், மூன்று பகுதிகளைக் கொண்ட மூன்றாவது தொடர் பேச்சு, “ஆன்மீகத்தை வளர்க்க கடினமாக உழையுங்கள்” என்ற பொருளை சிறப்பித்துக் காட்டும். அந்தப் பேச்சில் உண்மையான ஆன்மீகத்தை வளர்ப்பது எப்படி என்பதைக் குறித்து நடைமுறையான ஆலோசனைகள் வழங்கப்படும். பிற்பகல் நிகழ்ச்சி “படிப்படியாக வெளிப்படும் கடவுளுடைய வார்த்தையின் வெளிச்சத்தில் நடத்தல்” என்ற அறிவொளியூட்டும் பேச்சுடன் முடிவடையும். இப்பேச்சில் ஏசாயா 25, 26 அதிகாரங்கள் கலந்தாலோசிக்கப்படும். மனதைக் கவரும் இந்த பைபிள் புத்தகத்தை நன்கு புரிந்து கொள்வது எப்படி என்பதும் இந்தப் பேச்சில் விவரிக்கப்படும்.

“கடவுளின் சித்தத்தை செய்வோருக்கு செப்பனியாவின் அர்த்தமுள்ள தீர்க்கதரிசனம்” என்ற தலைப்பின்கீழ் மூன்று பகுதிகளையுடைய கடைசி தொடர் பேச்சும் ஞாயிற்றுக்கிழமை காலை நிகழ்ச்சி நிரலில் அடங்கும். பூர்வ காலங்களில் யூதா தேசத்தினருக்கு இத்தீர்க்கதரிசனம் எவ்வாறு பொருந்தியது, நம்முடைய நாளுக்கு, குறிப்பாக இன்றைய உலகின் மதங்களுக்கு எப்படி பொருந்துகிறது என்பது இப்பேச்சில் விளக்கப்படும். அதற்குப்பின், “நம்மை எச்சரிக்கும் உதாரணங்கள்” என்ற தலைப்பில் அரங்கேற்றப்படும் நாடகத்தை அனுபவித்து மகிழுவீர்கள். வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைவதற்குமுன் இஸ்ரவேல் ஆண்கள் செய்த ஒழுக்கக்கேட்டை இந்த நாடகம் விளக்குகிறது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மாநாட்டின் உச்சக்கட்டமாக, “கடவுளின் ஆச்சரியமான செயல்களை ஏன் கூர்ந்து கவனிக்க வேண்டும்” என்ற பொதுப் பேச்சு அளிக்கப்படும்.

மூன்று நாள் நிகழ்ச்சிநிரலிலும் கலந்துகொள்வதற்கு இப்போதே திட்டமிடுங்கள். உங்கள் வீட்டிற்கு அருகே நடைபெறும் மாநாட்டின் இடத்தை அறிய யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் ராஜ்ய மன்றத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். அல்லது இப்பத்திரிகையை பிரசுரிப்போருக்கு எழுதுங்கள்.