உலகை கவனித்தல்
உலகை கவனித்தல்
பூமிக்கு நிகர் பூமியே
புதிய புதிய கிரகங்களை கண்டுபிடித்தவண்ணம் இருப்பதாக வான்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இவை வெகுதூரத்திலுள்ள நட்சத்திரத்தை சுற்றி வரும் கிரகங்கள். ஆனாலும், இக்கிரகங்கள் சுற்றுப்பாதையில் சுற்றிவரும்போது, அவற்றின் ஈர்ப்பு சக்தியால், நட்சத்திரம் இலேசாக அதிர்வதை வைத்து, விஞ்ஞானிகள் இவற்றை கண்டுபிடித்துவிடுகிறார்கள். இவ்வாறு 1999-க்குள் 28 புதிய கிரகங்களை கண்டுபிடித்திருப்பதாக சொல்கிறார்கள். இவை நம் சூரிய குடும்பத்திற்கு வெளியே இருப்பவை. இப்புதிய கிரகங்கள் ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட வியாழன் கிரகத்தின் (ஜூப்பிட்டர்) அளவிலும், அதைவிட பெரிய அளவிலும் உள்ளன. வியாழனின் எடை நம் பூமியின் எடையைவிட 318 மடங்கு அதிகம். வியாழன் கிரகத்தைப் போலவே இந்தக் கிரகங்களும் ஹீலியத்தாலும் ஹைட்ரஜனாலும் ஆனவை என கருதப்படுகிறது. இந்தக் கிரகங்களின் சுற்றுப் பாதைகளின் தூரம் மிக அதிகம். அதனால் இவற்றிற்கு அருகில் பூமி அளவுள்ள கோள்கள் எதுவும் இருக்க வாய்ப்பே இல்லை. அதோடு நமது பூமி சுற்றுவதோ வட்டப்பாதையில். அதன் தூரம் 15 கோடி கிலோமீட்டரே. ஆனால் இந்தக் கிரகங்கள் நீள்வட்டப் பாதையில் சுற்றுகின்றன. ஒரு நீள்வட்டப் பாதை சுமார் 5.8 கோடி கிலோமீட்டர் முதல் 34.4 கோடி கிலோமீட்டர் வரை உள்ளது. ஆகவே அவை சுற்றும் நட்சத்திரத்தைவிட்டு வெகுதூரம் செல்கின்றன. “நம் சூரிய குடும்பத்தில்தான் கிரகங்கள் ஒவ்வொன்றும் வட்டப் பாதையில், அதன் அதன் இடத்தில் சுற்றிவருகின்றன. இதற்கு நிகராக வேறொன்று இல்லை என்பது மேலும் தெளிவாகிறது” என்கிறார் ஒரு வான்வெளி ஆராய்ச்சியாளர்.
பிள்ளைகளின் தூக்கம்
“பள்ளிக்குப் போகும் பிள்ளைகள் இத்தனை மணிக்குள் தூங்க வேண்டும் என்று பெற்றோர்கள் கண்டித்தால் மட்டும் போதாது. அவர்கள் தூங்க போகும் முன் என்ன செய்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். டிவி பார்ப்பது, கம்ப்யூட்டர், வீடியோ கேம்ஸ் விளையாடுவது, இன்டர்நெட்டில் நோட்டம் விடுவது போன்றவை மூளையை சுறுசுறுப்பாக்கிவிடும். அதனால் பிள்ளைகளுக்கு தூக்கம்வர நேரமாகும். பள்ளியிலிருந்து வந்ததும் நிறைய நேரம் விளையாடினால் வீட்டுப்பாடங்களை அவசர அவசரமாக முடிக்க வேண்டியிருக்கும்” என்கிறது பெற்றோர் என்ற ஆங்கில பத்திரிகை. பெரியவர்கள் சரிவர தூங்கவில்லை என்றால், ஒன்று தூங்கி தூங்கி வழிவார்கள் அல்லது அமைதியாக இருப்பார்கள். ஆனால் சிறு பிள்ளைகள் சரிவர தூங்கவில்லை என்றால் துருதுருவென்று, கட்டுக்கடங்காமல் இருப்பார்கள் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. அதோடு, பிள்ளைகளால் பள்ளியில் கவனம் செலுத்த முடிவதில்லை. படிப்பதும் மனதில் பதிவதில்லை. தப்பும் தவறுமாக கணக்கு போடுகிறார்கள். ஆகவே பிள்ளைகள் ஓடியாடி ஒரேயடியாக களைத்து போவதற்கு முன், இந்த நேரத்திற்குள் தூங்கப்போக வேண்டும் என்பதில் பெற்றோர் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.
விசில்-மொழி
கானரித் தீவுக்கூட்டத்தில் கோமேரா தீவும் ஒன்று. பல நூற்றாண்டுகளாக விசில் மொழியை ஆடுமாடு மேய்ப்பவர்கள் பேசிவந்தார்கள். இப்போது இங்குள்ள பள்ளியில் ஸ்பானிய மொழி பயிலும் பிள்ளைகளுக்கு விசில் மொழியையும் கற்றுத்தருவதாக லண்டனின் தி டைம்ஸ் அறிவிக்கிறது. கோமேராவில், மலைப் பள்ளத்தாக்கின் ஒரு பக்கத்தில் உள்ளவர் அடுத்த பக்கத்தில் உள்ளவருடன் விசிலால் பேசியதே சில்போ என்ற இந்த விசில் மொழி. வாயில் விரல்கள் வைத்து, பல்வேறு ஏற்ற இறக்கங்களோடு விசில் அடிப்பார்கள். கைகளை குவித்து வைத்து விசில் அடிப்பதால் மூன்று கிலோமீட்டர் வரை கேட்கும். 1960-களில் கிட்டத்தட்ட அழியும் நிலையிலிருந்த சில்போ இன்று மறுபடியும் பிரபலமாகி வருகிறது. இப்போது இத்தீவில் விசில் மொழிக்கு ஆண்டுவிழாவே எடுக்குகிறார்கள். இம்மொழிக்கும் சில குறைகள் இருக்கத்தான் செய்கிறது. “விசிலடித்து பேசலாம். ஆனால் நினைத்ததையெல்லாம் பேச முடியாது” என்கிறார் உள்ளூரைச் சேர்ந்த கல்வித்துறை இயக்குநர் குவான் ஈவாரிஸ்டோ.
எய்ட்ஸின் பிடியில் உலகம்
ஐக்கிய நாடுகளின் புதிய அறிக்கையின்படி உலகில் “ஐந்து கோடிக்கும் அதிகமான மக்களுக்கு [கிட்டத்தட்ட யுனைட்டட் கிங்டத்தின் மக்கள் தொகைக்கு சமம்] ஹெச்ஐவி எனப்படும் எய்ட்ஸ் நோய் உள்ளது. 1.6 கோடி மக்கள் எய்ட்ஸால் இறந்துவிட்டார்கள். இப்போது இந்நோய் ஆண்களைவிட பெண்களுக்கு 20 சதம் அதிகமாக வந்துள்ளது. டீன் ஏஜ் பையன்களைவிட டீன் ஏஜ் பெண்களுக்கு இந்த ஹெச்ஐவி-எய்ட்ஸ் வரும் அபாயம் ஐந்து மடங்கு அதிகம். இந்த உண்மை ஆப்பிரிக்காவில் ஒன்பது நாடுகளில் நடத்தப்பட்ட சுற்றாய்வில் தெரியவந்தது” என்கிறது கனடாவிலிருந்து வெளிவரும் தி குளோப் அண்ட் மெயில். கிழக்கு ஐரோப்பாவில் இந்நோய் “திடீரென்று” வேகமாக பரவிவருவதாக கூறுகிறார் பீட்டர் பையோ. இவர் இணை ஐக்கிய நாட்டு ஹெச்ஐவி/எய்ட்ஸ் திட்டத்தின் இயக்குநர். “முன்னாள் சோவியத் யூனியனில் கடந்த இரண்டே வருடங்களில் இந்நோய் தாக்கியவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. உலகிலேயே இங்குதான் இந்நோய் ஒரே சீராக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது” என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இப்போது இந்நாட்டில் நரம்பில் போதை மருந்துகளை ஏற்றுக்கொள்ளும் பழக்கம் அதிகரித்திருப்பதால் எய்ட்ஸும் அதேபோல் அதிகரித்துள்ளது என்கிறார்கள் நிபுணர்கள். உலகில் எய்ட்ஸ் நோயாளிகளில் பாதிக்குமேல், “25 வயதுக்குள் இந்நோய் வந்து, 35 வயதுக்குள் இறந்துவிடுகிறார்கள்.”
சன்-ஸ்கிரீன் கிரீமும், புற்று நோயும்
“அதிக பாதுகாப்பான சன்-ஸ்கிரீன் கிரீமை சருமத்தில் பூசிக்கொண்டால் வெயில் ஒன்றும் செய்யாது என்று மக்கள் நினைக்கிறார்கள். அதனால் வெயிலில் அதிக நேரம் இருக்கிறார்கள், சூரிய கதிர்களும் சுட்டுப் பொசுக்குகிறது. ஆகவே தோல் புற்றுநோய் வரும் வாய்ப்பும் அதிகரிக்கலாம்” என்கிறது லண்டனின் தி டைம்ஸ். பாதுகாப்பு எண் 10 உள்ள கிரீமை பூசிக்கொள்வோரைவிட, பாதுகாப்பு எண் 30 உள்ள கிரீமை பூசிக்கொள்வோர் 25 சதவிகிதம் அதிகமாக வெயிலில் இருக்கிறார்கள் என்பதை இத்தாலியில் மில்லன் என்னுமிடத்தில் அமைந்திருக்கும் ஐரோப்பிய புற்று நோய் ஆராய்ச்சி கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த ஆய்வின் தலைமை அதிகாரி பிலிப் ஆடியே இவ்வாறு கூறுகிறார்: “சன்-ஸ்கிரீன் கிரீமை பூசுவதால் எவ்வளவு தூரத்திற்கு சரும பாதுகாப்பு கிடைக்கிறது, குறிப்பாக தோல் புற்றுநோயை தடுக்கிறது என்பது பொது மக்களிடம் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் பொழுதுபோக்கிற்காக வெயிலில் அதிக நேரம் இருந்தால், புற்று நோய் வரும் என்பதற்கு நிறையவே சான்றுகள் உள்ளன.” கிரீம் எவ்வளவு பாதுகாப்பு கொடுத்தாலும், வெயிலில் போவதை கணிசமாக குறைக்கும்படி உடல் நல மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். பிரிட்டனின் ஹெல்த் எஜுகேஷன் அத்தாரிட்டியின் புற்றுநோய் பிரச்சார அதிகாரி கிரிஸ்டோஃபர் நியு தரும் அறிவுரை: “சன்-ஸ்கிரீன் கிரீம் பூசுவதை நிறுத்தாதீர்கள், ஆனால் அதை பூசுக்கொண்டு அதிக நேரம் சன்பாத் (சூரிய குளியல்) எடுக்காதீர்கள்.”
காப்பீட்டுக்கே கவலை!
1999-ம் வருடம் “இன்சூரன்ஸ் கம்பெனிக்கு ‘சாப’ வருடம்” என்றது பிரெஞ்சு நாளிதழ் லா மாண்ட். 1998-ல் ஏற்பட்ட இயற்கை சேதத்தால், 9,000 கோடி டாலர் நஷ்டம் ஏற்பட்டது. அதில் 1,500 கோடி டாலரை இன்சூரன்ஸ் கம்பெனிகள் திருப்பிக்கொடுத்தன. ஆனால் 1999-ல் துருக்கியிலும், தைவானிலும் வந்த பூமியதிர்ச்சி, ஜப்பானில் வந்த சூறாவளி, இந்தியாவிலும், வியட்நாமிலும் வந்த புயல் வெள்ளம், இன்னும் பல இயற்கை சேதங்களால் ஏற்பட்ட நஷ்டங்களை இன்சூரன்ஸ் கம்பெனிகள் ஈடுசெய்தாக வேண்டும். மக்கள் தொகை நெரிசலாக இருக்கும் இடங்களில் இன்னும் பெரிய இயற்கை சேதங்கள் தாக்குமோ என்ற கவலை இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு வந்துள்ளது. பூமி உஷ்ணம் அடைந்து வருவதன் “பயங்கரமான விளைவுகளைக் குறித்தும், மனிதர்களால் சீதோஷணநிலையில் ஏற்பட்டுள்ள மாறுபாடுகளை குறித்தும்” உலகின் முன்னணி இன்சூரன்ஸ் கம்பெனி எச்சரிக்கிறது.
தபால் துறைக்கு ஆயுசு கெட்டி
இன்றுவரை “தகவல் தொழில்நுட்பத்தில் என்னதான் அதிரடி முன்னேற்றம் ஏற்பட்டாலும், தபால் துறையின் பணியை குறைக்க முடியவில்லை” என்கிறது லா ஃபிகாரோ என்ற செய்தித்தாள். 1999-ல் பிரான்ஸ் தபால் துறை 2,500 கோடி லெட்டர்களை பட்டுவாட செய்தது. இவற்றில் 90 சதவிகிதம் தொழில் சம்பந்தமானவை. 10 சதவிகிதம் மாத்திரம் தனிப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டவை. இத்தபால்களில் பாதிக்குமேல், விளம்பரங்கள் அடங்கியவை. இவற்றையும் 98 சதவிகித மக்கள் கவனமாக படிப்பதாக கூறினார்கள். பிரான்ஸ் தபால் துறையில் 90,000 தபால் வினியோகிக்கும் ஊழியர்களில் 40 சதவிகிதம் பெண்கள். தினம் ஆறு கோடிக்கு மேல் வந்து குவியும் தபால்களை பட்டுவாட செய்ய இவர்கள் 72,000 முறை ஏரியாவை சுற்றிவர வேண்டும்.
சவாரிக்கு ஏற்ற வண்டி
இந்தியாவில் பல பத்தாண்டுகளாகவே ரிக்ஷா சவாரி உண்டு. இத்தனை வருடங்கள் ஆகியும் வண்டியில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. “அதே கனமான மரச்சட்டம், அதற்கு ஒரு இரும்பு கூரை, கோணலான இருக்கைகள். வண்டிக்கு கியரும் கிடையாது” என்கிறது அவுட்லுக் பத்திரிகை. மனிதனை மனிதன் இழுப்பது கொடுமை! அதிலும் வறுமையால் வயிறு ஒட்டிய வயதானவர்கள் இழுப்பது கொடுமையிலும் கொடுமை என்று சொல்லி, சமீப காலங்களில் ரிக்ஷாவுக்கு நிறைய எதிர்ப்புகள் கிளம்பின. இப்போது, வாகனங்களால் இந்தியாவில் காற்று கெட்டுப்போவதால், மீண்டும் ரிக்ஷா சவாரி ஜோராக வலம்வரப்போகிறது. பழைய மாடல் ரிக்ஷாவை புது மாடலாக மாற்ற டெல்லியில் ஒரு நிறுவனம் முன்வந்துள்ளது. புது மாடல் ரிக்ஷாவுக்கு காற்றை கிழித்துக்கொண்டு சல்லென்று போக வசதியாக இலேசான சட்டம் அமைந்திருக்கும். கியர் சிஸ்டம் பொருத்துவதால் இலேசாக மிதித்தாலே போதும். வண்டியின் இருக்கையும், ஹாண்டில் பார்களும் ரிக்ஷாக்காரருக்கு வசதியாக பொருத்தப்படுவதால் அவருக்கு மணிக்கட்டில் வலி எடுக்காது. பயணிகளின் இருக்கையும் இன்னும் பல வசதிகளோடு, பெரியதாக சொகுசு செய்து தரப்படும். “மனித உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்று கோஷங்கள் போடும் இன்றைய அரசியல் மற்றும் சமுதாய சூழலுக்கு இதுதான் ஏற்ற சவாரி” என்கிறார் இத்திட்டத்தின் தலைவர் டி. வினீத். அவுட்லுக் இவ்வாறு கூறுகிறது: “இந்த சாதாரண ரிக்ஷா 21-ம் நூற்றாண்டில் முதல் இடத்தைப் பிடிக்கலாம்.”
வளரும்-எவரெஸ்ட் சிகரம்
“உலகின் மிக உயரமான மலை சிகரம் எவரெஸ்ட். இது முன்பு விஞ்ஞானிகள் நினைத்திருந்ததைவிட உயரமாக வளர்ந்துவிட்டது. இன்னும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. நுட்பமான நவீன சாட்டிலைட் மூலம் எவரெஸ்ட்டை அளந்தபோது, 8,850 மீட்டர், அதாவது சுமார் 8.9 கிலோமீட்டர் உள்ளது. . . இது முந்தைய அளவைவிட இரண்டு மீட்டர் அதிகம். 1954-ல் அளந்தபோது 8,848 மீட்டரே இருந்தது” என்கிறது ராய்டர்ஸ் செய்தி நிறுவனம். சிகரத்தில் பனியின் அளவு அதிகரித்து உள்ளதால் இந்த உயர்வு. பனிக்குள் மறைந்திருக்கும் பாறை மலையின் உயரம் இதுவரை தெரியவில்லை. நேஷனல் ஜியோகரஃபிக் சொஸைட்டி தன்னுடைய வரைபடத்தில் சிகரத்தின் புதிய அளவை சேர்த்துள்ளது. இமய மலை மேல்நோக்கி மட்டும் வளரவில்லை, வடகிழக்கில் உள்ள சீனாவை நோக்கி, ஒவ்வொரு வருடமும் 1/16 இன்ச் முதல் 1/4 இன்ச் வரை நீண்டுகொண்டே போகிறது.