எமது வாசகரிடமிருந்து
எமது வாசகரிடமிருந்து
போதைப் பொருள் “போதையில் சுழலும் உலகம்” (நவம்பர் 8, 1999) என்ற தலைப்பு கட்டுரையில் நன்கு ஆராய்ச்சி செய்த தகவல்கள் நிறைந்திருந்தன. நான் ஒரு போதைத்தடுப்பு அதிகாரி. என் கண்காணிப்பில் உள்ள ஏரியாவில், நிறைய இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி கிடக்கிறார்கள். இந்த பழக்கத்திலிருந்து விடுபட பலருக்கு இந்த விழித்தெழு! கண்டிப்பாக உதவும்.
ஜே.டி., ஜெர்மனி
இந்தக் கட்டுரையில் பேத்ரூவையும் அவருடைய மனைவி ஆனாவையும் பற்றி படித்தபோது எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. நானும் ஆறு வருடங்களாக போதைக்கு அடிமையாக இருந்து, வாழ்க்கையை சீரழித்துக்கொண்டிருந்தேன். நான் பைபிள் படித்து, படித்த விஷயங்களை மற்றவர்களுக்கு சொல்லச்சொல்ல, ஆன்மீகத்தில் வளர்ந்தேன். அந்த வளர்ச்சியே போதைப் பழக்கத்தை விட உதவியது.
டி.ஜே., அமெரிக்கா
நான் பள்ளியில் உடல்நலத்தைப் பற்றி கடந்த 15 வருடங்களாக பாடம் நடத்துகிறேன். இப்போது, மதுபானம், போதைப்பொருள், வண்டியோட்டுதல் போன்ற தலைப்புகளில் பாடங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. விழித்தெழு!-வின் இந்த இதழ் சரியான நேரத்தில் என் கையில் கிடைத்துள்ளது. இதிலுள்ள தகவல்களை கண்டிப்பாக பயன்படுத்துவேன்!
சி.ஜே., அமெரிக்கா
டாகுவா 1954 முதல் நான் உங்களுடைய பத்திரிகையின் வாசகி. யெகோவா தேவனின் படைப்பையும், அதன் பல்வேறு பயன்களையும் சுட்டிக்காட்டும் கட்டுரைகளை படிக்கும்போது எனக்கு வியப்பாக இருக்கும். “டாகுவா—யானையின் உயிர்த்தோழனா?” என்ற கட்டுரையும் இந்த வகை கட்டுரையே. (நவம்பர் 8, 1999) அதிசயத்தில் ஆழ்த்தும் தேவனின் ஞானத்தை எங்களுக்கு மேலும் மேலும் சுட்டிக்காட்டி, அதை மதிக்க கற்றுத்தரும் உங்களுக்கு எவ்வளவு நன்றிசொன்னாலும் தகும்!
டி.ஹெச்., அமெரிக்கா
பில்லி சூனியம் “பில்லி சூனியத்தின் திரைக்குப் பின்னால்” என்ற உங்களது கட்டுரைக்கு நன்றி. (நவம்பர் 8, 1999) சூனியக்காரிகள் என்றதும் பலருடைய மனத்திரையில் கோர முகத்தையுடைய கிழவிகளே தோன்றி மறைகிறார்கள். ஆனால் இன்று, விக்கா என்ற சூனியக்காரர்களுடைய இயக்கம் நிறைய இளம் பெண்களையும் ஆண்களையும் கவர்ந்திழுக்கிறது. என்னுடைய மகள்கூட இதில் கொஞ்சம் ஆர்வம் காட்ட தொடங்கினாள். அவள் தனக்கும் விழித்தெழு! சந்தா வேண்டும் என்றாள். அவளுக்காகவும் சந்தா எடுத்தோம். சரியான நேரத்தில் பத்திரிகை அவள் கைக்கு வந்தது. அவள் பெற்றுக்கொண்ட முதல் இதழிலேயே இந்தக் கட்டுரை வந்தது உண்மையிலேயே ஒரு இன்ப அதிர்ச்சி!
பி.ஹெச்., அமெரிக்கா
தேவதைகள் “தேவதைகள் Vs உண்மைகள்” என்ற தலைப்பு கட்டுரைக்காக உங்களை மனமார பாராட்டுகிறேன். (நவம்பர் 22, 1999) தேவதைகளை பற்றி தவறான கருத்துக்களாலும், நம்பிக்கைகளாலும் என்ன அபாயங்கள் என்பதை ஒளிவுமறைவின்றி, அதேசமயத்தில் யாரையும் புண்படுத்தாமல் எழுதிய உங்கள் தைரியத்திற்கு சபாஷ்! இன்று நாம், தேவதூதர்களை போற்றி புகழ்ந்தாலும், அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை என்பதை சித்தரித்துக் காட்டிய 9-ம் பக்கத்திலுள்ள படம் எனக்கு பிடித்திருந்தது.
ஜே.எல்.ஏ.ஹெச்., பிரேஸில்
நோயும் வேதனையும் “கஷ்டத்திலும் கடவுளையே அண்டியிருக்க கற்றுக்கொண்டோம்” என்ற கட்டுரையில் மேஜர் குடும்பத்தினரின் அனுபத்தை படித்தது எனக்கு ஆறுதலாக இருந்தது. (நவம்பர் 22, 1999) என்னுடைய மகனுக்கும் இருதயத்தில் ஏதோ கோளாறுகள் இருந்ததால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. ‘உங்கள் மகனுக்கு ரத்தம் ஏற்றவில்லையென்றால், பிழைக்க மாட்டான்’ என்று டாக்டர்கள் எங்களிடம் கூறினார்கள். என்னையும் என் கணவரையும் தனித்தனியே அழைத்துப்போய், என் மகனுக்கு ரத்தம் ஏற்ற சம்மதிக்கும்படி வற்புறுத்தினார்கள். மேஜர் குடும்பத்தினர் போலவே, நாங்களும் கடவுளிடம் ஜெபம் செய்து, சோதனையை தாங்க பலத்தையும், மனதைரியத்தையும் தரும்படி கேட்டோம். என் மகன் ஆப்ரேஷனில் பிழைத்துக்கொண்டான். இப்போது நன்றாக இருக்கிறான். அவனும் ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆகவேண்டும் என்பதற்காக முழுக்காட்டுதல் எடுத்துக்கொள்ள ஆசைப்படுகிறான்.
பி.சி., அமெரிக்கா
என் கணவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கே அவர் பல மாதங்கள் தங்க வேண்டியிருக்கும் என்று டாக்டர்கள் சொன்னார்கள். மூன்று பிள்ளைகளையும் கவனித்துக்கொண்டு, தினம் தினம் மருத்துவமனைக்கு போய் கணவரையும் கவனித்துக்கொண்டு மிகவும் கஷ்டப்பட்டேன். அந்தச் சமயத்தில் எனக்கும் பிள்ளைகளுக்கும் நம் கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் செய்த உதவிகளை என்னால் மறக்கவே முடியாது! என்னால் இதற்குமேல் சமாளிக்க முடியாது என்ற கட்டத்திற்கு நான் வந்தபோது, என் கணவர் வீடு திரும்பினார். இந்தக் கட்டுரையில் மேஜர் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட சோதனைகளையும் வேதனைகளையும் படித்தபோது அவர்களுக்காக மிகவும் பரிதாபப்பட்டேன். என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை. அவர்கள் யெகோவாவை முழுமையாக நம்பியிருந்ததை நினைத்து சந்தோஷப்பட்டேன்.
ஜே.ஏ., அமெரிக்கா