ஓசி சவாரியா? உஷார்!
ஓசி சவாரியா? உஷார்!
ஆஸ்திரேலியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
வருடம் 1990. உச்சி வெயில் நேரம். இடம் ஆஸ்திரேலியாவில் தென் சிட்னியில் ஹூம் நெடுஞ்சாலை. அங்கே பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த 24 வயது பவுல் ஆனியன்ஸ் பயணப்பையை (back-pack) தன் முதுகில் சுமந்தபடி போய்கொண்டிருந்தார். இவர் லிஃப்ட் கேட்டதும், தயவு தாட்சண்யம் காட்டும் டிரைவர்கள் யாராவது வண்டியை நிறுத்துவார்கள். பவுலும் ஓசி சவாரியில் (hitchhiking) சுற்றிக்கொண்டிருந்தார். வழக்கம்போல் இவர் லிஃப்ட் கேட்டு, கை காட்டியதும் ஒரு வண்டி நின்றது. பவுலுக்கு ஒரே சந்தோஷம். பாவம் பவுல்! முன்பின் தெரியாதவருடைய வண்டியில் தனக்கு மரண குழி வெட்டப்படும் என்பதை கனவில்கூட நினைத்திருக்க மாட்டார். a
ஆபத்தை அறியாத பவுல் முன்பக்க சீட்டில் உட்கார்ந்துகொண்டு, டிரைவரோடு அரட்டை அடித்துக்கொண்டு வந்தார். பார்ப்பதற்கு சாந்த சொரூபியாக இருந்த டிரைவர் கொஞ்ச நேரத்திற்குள் கோபம் கொப்பளிக்க, காரசாரமாக வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தான். பிறகு அந்த டிரைவர் திடீரென்று வண்டியை ஓரம் கட்டி, சில டேப்புகளை சீட்டுக்கு அடியிலிருந்து எடுக்கவேண்டும் என்றான். ஆனால் அவன் டேப்புக்கு பதிலாக, தூப்பாக்கியை எடுத்து பவுலின் நெஞ்சுக்கு நேரே குறிவைத்தான்.
சீட்டில் ஆடாமல் அசையாமல் உட்காரும்படி டிரைவர் மிரட்டினான். ஆனால் பவுல் அதை கொஞ்சமும் காதில் வாங்காமல், உடனே சீட் பெல்ட்டை அவிழ்த்து, வண்டியிலிருந்து குதித்து நெடுஞ்சாலையில் ஒரே ஓட்டமாக ஓடினார். அந்த டிரைவரும் துரத்திக்கொண்டே ஓடிவந்தான். மற்ற வண்டிக்காரர்கள் எல்லாரும் இதை வேடிக்கைப் பார்த்தார்கள். கடைசியில் பவுலை பிடித்துவிட்டான். அவருடைய டி ஷர்ட்டை கொத்தாக பிடித்து தூக்கி, தரையில் பொத்தென்று வீசினான். பவுல், அவனிடமிருந்து எப்படியோ தன்னை விடுவித்து, எதிரே வந்த வேனுக்கு முன் ஓடி, அதை நிறுத்தும்படி வற்புறுத்தினார். குழந்தைகளோடு வேனை ஓட்டிவந்த அந்த அம்மா பயந்துபோனார். பவுல் கெஞ்சியதால் நடு ரோட்டிலேயே வண்டியை நிறுத்தி, அவரை ஏற்றுக்கொண்டு மின்னல் வேகத்தில் பறந்தார். பவுலை தாக்கியவன் பல கொலைகளை செய்தவன் என்பது பிறகு தெரிந்தது. அவனது கொலை பட்டியலில் ஓசி சவாரி செய்த ஏழு பேர் அடங்குவர். இந்த ஏழு பேரில் சிலர் ஜோடியாக சென்றவர்கள்.
இந்த அப்பாவிகள் ஏன் இந்தக் கொலைகாரனிடம் சுலபமாக மாட்டிக்கொண்டார்கள்? கொலைகாரனை
விசாரித்த நீதிபதி இவ்வாறு கூறினார்: “இந்தக் கொலையாளியிடம் 19 முதல் 22 வயதுக்குட்பட்ட இளைஞர்களே சிக்கியிருக்கிறார்கள். இவர்கள் வீட்டைவிட்டு வெகுதூரம் வந்திருப்பது கொலையாளிக்கு சாதகமாக இருந்திருக்கிறது. ஏனென்றால் ஏதாகிலும் அசம்பாவிதம் நடந்திருந்தாலும், உடனே யாரும் இவர்களை தேடி வந்திருக்க மாட்டார்கள். அதோடு, பிள்ளைகள் எங்கேயாவது சுற்றிக்கொண்டிருப்பார்கள் என்ற நினைப்பே உறவினர்களுக்கு இருந்திருக்கும்.”சுதந்தர பறவை
சில வருடங்களுக்கு முன் உலகை சுற்றுவது என்றால் ஒருசிலராலேயே முடிந்தது, இன்றோ உலகம் சுற்றுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உதாரணத்திற்கு, கடந்த ஐந்து வருடத்திற்குள் ஆஸ்திரேலியாவிலிருந்து ஆசியாவுக்கு வருவோரின் எண்ணிக்கை இரு மடங்கை தாண்டிவிட்டது. அனுபவ புதுமையும், சாகச புத்துணர்ச்சியும் பெற விரும்பும் ஏராளமான டீனேஜர்களும் இளைஞர்களும் தூர தேசங்களுக்கு விமானத்தில் சிட்டாக பறக்கிறார்கள். போன இடத்தில் பயண செலவை மிச்சப்படுத்த பலர் ஓசி சவாரியில் சுற்றுகிறார்கள். ஆனால் இன்று உலகில் பல இடங்களில் இத்தகைய ஓசி சவாரி செய்பவருக்கும்சரி, ஓசியாக வண்டியில் ஏற்றிக்கொள்பவருக்கும்சரி பாதுகாப்பு இல்லை.
பயணத்திற்கு தைரியமும் உற்சாகமும் இருந்தால் மட்டும் போதாது. நிதானமும், சமயோசித்த புத்தியும் தேவை. தொலைந்த பிள்ளைகளை தேடும் பெற்றோருக்காக எழுதப்பட்ட புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “இளைஞர்கள் பயண ஆர்வத்தால் தேவையானவற்றை எடுக்காமல், ஆபத்துக்களை கொஞ்சம்கூட யோசிக்காமல், பொறுப்புகளை அறியாமல் உடனே கிளம்பிவிடுகிறார்கள்.”
அந்தப் புத்தகம் மேலும் கூறியதாவது: “சுற்றுலா ஏற்பாடு செய்யும் குழுவோடு சுற்றுவோரும், தொழில் பயணம் போவோரும், வழிகாட்டும் புத்தகத்தோடு செல்வோரும் தொலைந்து போவதில்லை. ஆஸ்திரேலியாவிலும் சரி, மற்ற நாடுகளிலும் சரி, பயணப்பையை முதுகில் சுமந்து, ஓசி சவாரி செய்யும் நபர்களே தொலைந்து போகிறார்கள்.”
ஓசி சவாரியோ காசு கொடுத்த சவாரியோ, விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கூடவே வழிகாட்டும் புத்தகத்தை எடுத்து செல்லுங்கள். இது இல்லாமல் போனால் ஆபத்து அதிகம். பயணம் போனவர் எங்கே இருக்கிறார் என்பது உறவினருக்கோ நண்பர்களுக்கோ தெரியாமல் போனால், ஆபத்தான சமயத்தில்கூட அவர்களால் ஓடி வந்து உதவ முடியாது. உதாரணத்திற்கு, பயணி ஒருவர் மருத்துவமனையில் சுயாதீனம் இல்லாமல் படுத்துகிடக்கிறார். வீட்டிலுள்ளவர்களுக்கோ அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியாது. இந்த அவல நிலையை என்னென்று சொல்வது?
தொடர்பு தொடரட்டும்!
ஓசி சவாரியில் தொலைந்து போன ஏழு பேரைப் பற்றி பிரிட்டிஷ் பத்திரிகையாளர் ரிச்சர்டு ஷீயர்ஸ் தனது ஹைவே டு நோவே என்ற புத்தகத்தில் எழுதினார். அவர்கள் “திடீரென்று குடும்பத்தினரோடும் நண்பர்களோடும் தொடர்புகொள்வதை நிறுத்தினார்கள்.” இப்படி திடீரென்று தொடர்பை துண்டித்தால், பயணம் போனவர்கள் தொலைந்து விட்டார்களா அல்லது வெறுமனே தொடர்புகொள்ளாமல் இருக்கிறார்களா என்று குடும்பத்தினருக்கு தெரியாது. ஆகவே பயணம் போனவர் உண்மையில் தொலைந்து போனாலும்கூட போலீஸுக்கோ, அதிகாரிகளுக்கோ புகார் கொடுக்க உறவினர்கள் தயங்குவார்கள்.
ஓசி பயணத்தில் சுற்றுலா சென்ற இளம் பெண் ஒருத்தி, போனில் அடிக்கடி தன் பெற்றோரோடு தொடர்புகொண்டாள். ஆனால் போனில் போட சில்லறை தீர்ந்ததும், பேசுவதை நிறுத்திவிட்டாள். விபரீதத்தை புரிந்துகொண்ட இந்த பெற்றோர் மற்ற பெற்றோர்களுக்கு தரும் வேண்டுகோள் இதோ: “பயணம் போகும் உங்கள் பிள்ளைகளுக்கு போன் கார்டு (காசுக்கு பதில் இந்த பிளாஸ்டிக் அட்டையை உபயோகித்து பேசலாம்) கொடுத்து அனுப்புங்கள் அல்லது வீட்டிற்கு போன் பேச வேறு ஏதாவது ஏற்பாடு செய்து கொடுங்கள்.” இந்தப் பெற்றோர் இதுபோன்ற கார்டை கொடுத்திருந்தாலும் தங்கள் அருமை மகளின் உயிரை காப்பாற்றியிருப்பார்களா என்பது சந்தேகமே. ஆனால் பயணி அடிக்கடி உறவினர்களோடு தொடர்புகொண்டால் தொல்லைகளை தடுக்க முடியும். தடுக்க முடியாவிட்டாலும் குறைக்க முடியும்.
தொலைந்துபோன அந்த ஏழுபேரும், ஓசி சவாரி செல்ல உலகிலேயே பாதுகாப்பான இடம் ஆஸ்திரேலியா என்பதை பயண புத்தகத்தில் படித்திருப்பார்கள். ஆனாலும் பாதுகாப்பாக வீடு திரும்பவில்லையே! ஆகவே ஓசி சவாரிக்கு “பாதுகாப்பான” நாடுகளில், இரண்டு பேராக சுற்றுவதுகூட மடத்தனம் என்று தெரிகிறது!
[அடிக்குறிப்பு]
a சில இடங்களில் இப்படி ஓசி சவாரி செய்வது சட்டப்படி குற்றம்.
[பக்கம் 27-ன் படம்]
பெற்றோர் பிள்ளைகளுக்கு போன் கார்டுகளை கொடுத்து அல்லது போன் பேசுவதற்கு வேறு ஏற்பாடு செய்து கொடுத்தால் ஓரளவுக்கு டென்ஷனை குறைக்கலாம்