Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சின்னத் தீவு புகட்டிய பெரிய பாடம்

சின்னத் தீவு புகட்டிய பெரிய பாடம்

சின்னத் தீவு புகட்டிய பெரிய பாடம்

ராபா நியுயி தீவின் பரப்பளவு 170 சதுர கிலோமீட்டர். எரிமலைக் குழம்பு குளிர்ந்து உருவான இத்தீவில் மரங்களை காண்பது அரிது. உலகிலேயே குறைந்த மக்கள் குடியிருக்கும் இடம் இதுவாகத்தான் இருக்கும். a இன்று இத்தீவு வரலாற்று நினைவுச்சின்னமாக விளங்குகிறது. இவ்வாறு வரலாற்று சின்னமாக ஆனதற்கு இங்குள்ள மோஐ (moai) என்ற பாறை சிற்பங்களுக்கும் பங்கு உண்டு. ஒருகாலத்தில் நாகரிகம் கொடிகட்டி பறந்த இத்தீவின் கலைவெளிப்பாடுதான் இந்த மோஐ சிற்பங்கள்.

மோஐ-யை எரிமலை பாறைகளிலிருந்து செதுக்கியிருக்கிறார்கள். செதுக்கிய மோஐ சிலைகளின் ராட்சத தலைகள் மட்டும் வெளியே தெரியும்படி புதைத்திருக்கிறார்கள். சிலவற்றில் உடல் பகுதியும் தெரியும்படி புதைத்திருக்கிறார்கள். ஆண்கள் போட்ட கொண்டையைக்கூட சிற்பங்களாக செதுக்கியுள்ளனர். இதற்கு பூகாவோ என்று பெயர். அரைகுறையாக செதுக்கப்பட்ட சிற்பங்கள் கல்சுரங்கத்திலும் ரோடுகளிலும் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன. இவற்றை பார்க்கும்போது, திடீரென்று சிற்பிகள் தங்கள் உளிகளை தூக்கி எறிந்துவிட்டு, நடையை கட்டிவிட்டார்களோ என்ற எண்ணம் வருகிறது. கடல் பக்கம் முதுகை காட்டி வரிசை வரிசையாக நிற்கும் சிலைகள் வேறு உள்ளன. ஒற்றை சிலை முதல் 15 சிலைகள் வரை வரிசைகள் வேறுபடுகின்றன. இந்த மோஐ சிற்பங்களின் புதிர் இதுவரை பார்வையாளர்களுக்கு குழப்பமாகவே உள்ளது.

மோஐ-யை எதற்காக உருவாக்கினார்கள், ஒருகாலத்தில் செழித்தோங்கிய நாகரிகம் ஏன் திடீரென்று மறைந்தது போன்ற புதிர்களுக்கு சமீபத்தில் அறிவியல் விடையளிக்க முயல்கிறது. அறிவியல் வெளியிடும் உண்மைகளை வெறும் வரலாறு என்று ஒதுக்கிவிட முடியாது. என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சொல்வதை போல் அவை “நவீன உலகிற்கு முக்கிய பாடம்.”

பூமியையும், இயற்கை வளங்களையும் எப்படி கையாள வேண்டும் என்ற முக்கிய பாடத்தை புகட்டுகிறது. பல்வேறு தட்பவெப்பங்களையும் கோடானுகோடி வித்தியாசமான உயிரினங்களையும் கொண்ட பூமியை ராபா நியுயி என்ற குட்டித்தீவுடன் ஒப்பிட முடியாது என்பது உண்மையே. ஆனால் இத்தீவுக்கு நேரிட்டது வெறும் பழங்கதை அல்ல. நாளை நமக்கும் நேரிடலாம். ராபா நியுயி தீவின் வரலாற்றிலிருந்து ஒருசில முக்கிய சம்பவங்களை மட்டும் இக்கட்டுரையில் ஆராயலாம். சிறு தோணிகளில், சில குடும்பங்கள் வந்து, இத்தீவில் கால்பதித்த காலம் சுமார் பொ.ச. 400. இவர்களது வருகையை கண்கொட்டாமல் பார்த்த கடல் பறவைகளே கண்கண்ட சாட்சிகள்.

சொர்க்க பூமி

இத்தீவில் தாவர வகைகள் ஏராளமாக இல்லையென்றாலும், பனை, ஹவ்ஹவ், டொரொமிரொ மரங்கள், புதர்கள், மூலிகைகள், செடிகொடிகள், பசும் புற்கள் ஆகியவை காடுகளை நிறைவாய் அலங்கரித்தன. பறவைகளின் பட்டியலில் ஆந்தை, கொக்கு, நாரை, கிளி என குறைந்தது ஆறு வகையாவது இடம்பிடித்திருக்கும். “இந்த பசிபிக் தீவுக்கூட்டத்தில்” ராபா நியுயி தீவே “கடல் பறவைகள் குஞ்சுபொரித்து குடும்பம் நடத்த தோதான இடம். இதுபோல் வேறு இடம் இருக்குமா என்பது சந்தேகமே” என்கிறது டிஸ்கவர் பத்திரிகை.

தீவுக்கு குடிவந்த மக்கள் தங்களோடு கோழிகளையும், எலிகளையும் (எலி அவர்களுக்கு பிடித்த உணவு) கொண்டுவந்தார்கள். சேப்பங்கிழங்கு, கருணைக்கிழங்கு, வள்ளிக்கிழங்கு, வாழை, கரும்பு போன்ற தோட்டப்பயிர்களையும் கொண்டுவந்தார்கள். மண் வளமாக இருந்தது. உடனே மரம் செடி கொடிகளை அகற்றி, நிலத்தை பண்படுத்தி, பயிரிட்டார்கள். மக்கள் தொகை பெருக பெருக, நிலத்தையும் விரிவாக்கிக்கொண்டே போனார்கள். ஆனால் ராபா நியுயி குறைந்த பரப்பளவை உடைய தீவு. காடுகள் நிறைந்திருந்தாலும் மர வகைகள் குறைவு.

ராபா நியுயின் வரலாறு

மகரந்த ஆய்வு, தொல்பொருள் ஆய்வு, புதைப்படிவ ஆய்வு போன்ற முக்கிய மூன்று துறைகளின் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, இன்று ராபா நியுயின் வரலாறை ஓரளவுக்கு ஊகிக்க முடிகிறது. குளம் குட்டைகளின் சேற்றிலும், சதுப்புநில சேற்றிலும் படிந்திருக்கும் மகரந்தத்தை எடுத்து சோதிப்பதே இந்த மகரந்த ஆய்வு. இந்தச் சோதனையின் மூலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த தாவர வகைகளையும், அவை மிகுதியான அளவில் எத்தனை வருடங்கள் இருந்தன என்பதையும் அறிய முடியும். சேற்றில் அடுக்கடுக்காக படிந்திருக்கும் மகரந்தத்தின் அளவை வைத்தும் காலத்தை கண்டுபிடிக்கிறார்கள். கீழே உள்ள அடுக்கு மிகவும் பழமையான காலத்தையும், மேலே உள்ள அடுக்கு சமீப காலத்தையும் குறிக்கும்.

மக்கள் குடியிருந்த வீடுகள், உபயோகித்த பாத்திரங்கள், மோஐ சிற்பங்கள், அவர்கள் உண்ட விலங்குகளின் எலும்புகள் ஆகியவற்றை தொல்பொருள் ஆய்வும், புதைப்படிவ ஆய்வும் ஆராய்கின்றன. ராபா நியுயி மக்கள் எதையும் எழுதி வைக்கவில்லை. ஆனால் சித்திரங்களாய் தீட்டி வைத்தனர். ஆகவே ஐரோப்பியர்களோடு தொடர்பு ஏற்படுவதற்கு முன்புவரை இவர்களது வரலாற்று தேதிகள் தோராயமாக கணக்கிடப்படுகிறது. இவர்களுக்கு நேர்ந்த சம்பவங்கள் ஊகங்களின் அடிப்படையிலானவை. ஆகவே பெரும்பாலான சம்பவங்களை நிரூபிக்க இயலாது. கீழே சில சம்பவங்களும், தோராய தேதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. தடித்த எழுத்துக்களில் கொடுக்கப்பட்டுள்ள தேதிகள் பொது சகாப்தத்தை அடிப்படையாக கொண்டவை.

400 பசிபிக் தீவுக்கூட்டத்திலிருந்து 20 முதல் 50 பேர் இரட்டை தோணிகளில் மிதந்தபடி இத்தீவில் வந்து இறங்கினார்கள். தோணிகளின் நீளம் சுமார் 15 மீட்டர் அல்லது அதைவிட நீளம். ஒவ்வொன்றும் 8000 கிலோ சுமக்கக்கூடியது.

800 சேற்றில் மகரந்தம் படிந்திருக்கும் அளவு குறைவாக உள்ளது. அப்படியென்றால் நிறைய காடுகளை வெட்டியிருக்கிறார்கள். நிலம் விரிவாக விரிவாக அங்கே புற்கள் வளர்ந்திருக்கும். ஆகவேதான் புல்லின் மகரந்தம் அதிகளவு படிந்துள்ளது.

900-1300 இந்தக் காலப்பகுதியில் மக்கள் உண்ட விலங்குகளின் எலும்புகளில் மூன்றில் ஒருபகுதி டால்ஃபின் எலும்புகள். கடலிருந்து டால்ஃபின்களை பிடித்து கரைக்கு கொண்டுவர பெரிய தோணிகள் தேவைப்பட்டன. அதற்காக பெரிய பனை மரங்களை வெட்டியிருக்கிறார்கள். இக்காலக்கட்டத்தில் மோஐ சிற்பங்களை எக்கச்சக்கமாக செதுக்கியுள்ளார்கள். அவற்றை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டுசெல்லவும், நாட்டி வைக்கவும் தேவையான பொருட்களை செய்ய பெரிய பெரிய மரங்களை சாய்த்தனர். பயிர் செய்யவும், விறகிற்கும் காடுகளை மெல்ல அழித்தனர்.

1200-1500 இச்சமயத்தில் சிற்பங்கள் செதுக்கும் பணி மும்முரமாக இருந்தது. இந்த மோஐ சிற்பங்களை செதுக்குவதிலும், அவற்றை வைக்கும் புனித மேடைகளை செய்வதிலும் ராபா நியுயி மக்களின் பொருள் செல்வம், இயற்கை செல்வம், உடல் உழைப்பு எல்லாம் கரைந்தன. தொல்பொருள் ஆய்வாளர் ஜோ ஆனி வேன் டில்பர்க் இவ்வாறு எழுதினார்: “ராபா நியுயி சமுதாயத்தில் நிறைய பெரிய பெரிய சிலைகளை செதுக்க முக்கியத்துவம் தரப்பட்டது. சுமார் 800 வருஷத்திலிருந்து 1300 வருஷத்திற்குள் சுமார் 1,000 சிலைகளை செதுக்கியிருக்கலாம் . . . மக்கள் தொகை உச்ச நிலையில் இருந்தபோது, ஏழு முதல் ஒன்பது பேருக்கு ஒரு சிலை என்ற விகிதத்தில் தோராயமாக கணக்கிடலாம்.”

மோஐ சிலைகளை மக்கள் வழிபடவில்லை. ஆனால் ஈம சடங்குகளிலும், விவசாய பூஜைகளிலும் முக்கியமாக பயன்படுத்தினர். அவற்றில் ஆவிகள் வந்து குடியிருப்பதாக அவர்கள் நம்பியிருக்கலாம். இச்சிலைகள், அவற்றை உருவாக்கியவர்களின் அந்தஸ்துக்கும், வீரத்திற்கும், பரம்பரைக்கும் சின்னங்களாக விளங்கின.

1400-1600 மக்கள் தொகை 7000 முதல் 9000 என்ற உச்சநிலையை எட்டியது. இத்தீவின் பறவை இனம் அழிந்துபோனதால், மகரந்த சேர்க்கைக்கும், விதைகள் பரவுவதற்கும் வழியின்றி போனது. அதனால் இருந்த கொஞ்சநஞ்ச காடும் அழிந்தது. “இத்தீவுக்கு சொந்தமான ஒரு பறவை இனம்கூட மிஞ்சவில்லை” என்கிறது டிஸ்கவர் பத்திரிகை. இந்தக் காடுகள் அழிந்ததில் திருவாளர் எலி கூட்டத்திற்கும் பெரும் பங்குண்டு. அவை பனங்கொட்டைகளை தின்றதற்கு அத்தாட்சிகள் உள்ளன.

நீரோடைகள் வற்றி, தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. அழிவு இத்தீவில் கால்வைத்து விட்டது. 1500 வருடத்தில், டால்ஃபின் எலும்புகள் அவ்வளவாக காணவில்லை. அப்படியென்றால் அவர்களுக்கு கடல் தோணிகள் செய்ய பெரிய மரங்கள் இல்லாமல் போயிருக்கும். தோணி இல்லாமல் இனி தீவிலிருந்து வெளியேறவும் முடியாது. உணவின்றி தவித்த மக்கள் கையில் கிடைத்ததையெல்லாம் சாப்பிட்டார்கள். முதலில் கடல் பறவைகளை சுத்தமாக தின்று தீர்த்தார்கள். பிறகு கோழிகளையும் பெருமளவில் சாப்பிட ஆரம்பித்தார்கள்.

1600-1722 மரங்கள் இன்றி மழை இன்றி போனது. பயிரிட்டு பயிரிட்டு மண் வளம் இழந்து போனது. சாகுபடி சடாரென்று குறைந்தது. பஞ்சம் தலைவிரித்தாடியது. ராபா நியுயி இரு கட்சிகளாக உடைந்தது. முதன்முறையாக சமுதாயத்தில் கூச்சல், குழப்பம், கலவரம் தலைதூக்கின. அநேகமாக மனிதனை மனிதன் தின்னும் காட்டுமிராண்டிகளாக மாறியிருப்பார்கள். பராக்கிரமசாலிகள் அட்டகாசங்களுக்கு அளவின்றி போனது. பயந்துபோன மக்கள் குகைகளில் ஓடி ஒளிந்து ஒடுங்கினார்கள். 1700-ம் ஆண்டில் மக்கள் தொகை கிடுகிடுவென்று குறைந்து 2000-ல் வந்து நின்றது.

1722 டச்சு நாட்டு மாலுமி ஜேகப் ராக்கீவன் என்பவரே இத்தீவை முதன் முதலில் கண்டுபிடித்த ஐரோப்பியர். அவர் ஈஸ்டர் பண்டிகையில் கண்டுபிடித்ததால் ஈஸ்டர் தீவு என்று பெயரிட்டார். தீவைப் பற்றிய அவரது அபிப்பிராயம்: “[ஈஸ்டர் தீவின்] பொட்டல் நிலத்தை பார்த்தே எந்தளவுக்கு வறுமையும் வறட்சியும் தாண்டவம் ஆடுகின்றன என்பதை சட்டென்று சொல்லிவிடலாம்.”

1770 மிச்சம் மீதி இருந்த ராபா நியுயி மக்களுக்குள் கோஷ்டி கலவரங்கள் வெடிக்க, ஒரு கோஷ்டி நாட்டிய சிலைகளை இன்னொரு கோஷ்டி தகர்த்து விட்டது. இத்தீவுக்கு 1774-ல் பிரிட்டிஷ் மாலுமி கேப்டன் ஜேம்ஸ் கூக் வந்தபோது சரிந்து கிடந்த சிலைகளை நிறைய கண்டார்.

1804-63 நாகரிக உலகுடன் இத்தீவு மக்கள் அறிமுகம் ஆக ஆக அடிமைகளாக ஆனார்கள். புதிய புதிய வியாதிகள் மக்கள் உயிரை மளமளவென்று குடித்தன. பண்டைய ராபா நியுயி மக்களின் கலாச்சாரம் முற்றுப்பெற்றது.

1864 நிறைய மோஐ சிலைகளை சாய்த்துவிட்டனர். தலைகளை உடைத்தெறிந்தனர்.

1872 கடைசியில் வெறும் 111 பேர் மாத்திரம் மீந்திருந்தார்கள்.

1888-ல் சிலி நாட்டின் ஆட்சியின் கீழ் ராபா நியுயி வந்தது. இப்போது மற்ற மக்களும் வந்து குடியேறியதால் மொத்த மக்கள் தொகை 2,100-ஐ எட்டியுள்ளது. சிலி அரசாங்கம் முழு தீவையே வரலாற்று சின்னமாக அறிவித்துவிட்டது. ராபா நியுயி தீவுக்கே உரிய இச்சிலைகளையும், இதன் வரலாற்றையும் காப்பாற்றும் எண்ணத்தில், சிதறியும், சாய்ந்தும் கிடந்த பல சிலைகளை மறுபடியும் நிறுத்திவைத்திருக்கிறார்கள்.

நமக்கு பாடம்

ராபா நியுயி மக்கள் தங்கள் தலையிலேயே மண்ணை வாரி போட்டுக்கொண்டதை ஏன் உணரவில்லை? அழிவை தடுக்க எந்தவொரு முயற்சியும் எடுக்காதது ஏன்? இதைப்பற்றி பல ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கருத்துக்களை உதிர்த்துள்ளார்கள்:

“காடுகள் ஒரே நாளில் அழிந்திருக்காது. மெல்ல மெல்ல அழிந்திருக்கும். பல ஆண்டுகள் எடுத்திருக்கும். . . . இதுபோன்ற அபாயம் வரும் என்று ஒருவேளை யாராவது சொல்லியிருந்தாலும், அந்த சிற்பிகளோ, அதிகாரவர்க்கத்தினரோ, தலைவர்களோ சுத்தமாக காதில் வாங்கியிருக்க மாட்டார்கள்.”—டிஸ்கவர்.

“இத்தீவுவாசிகள் தங்கள் ஆன்மீகத்தையும், அரசியல் கருத்துக்களையும் வெளிக்காட்ட முழு தீவையே பலியிட்டார்கள். அழியாது என்று பல வழிகளில் உபயோகித்த காடு, அழிந்தபோது புரிந்தது.”—ஈஸ்டர் தீவு—தொல்பொருள் ஆய்வு, சூழியல் ஆய்வு, கலாச்சாரம் என்ற ஆங்கில புத்தகம்.

“ராபா நியுயி தீவுக்கு நேர்ந்த அழிவை பார்க்கும்போது, கட்டுப்பாடற்ற வளர்ச்சியும், இயற்கை வளங்களை சூறையாடுவதில் வேகமும் இருந்தது பளிச்சென்று தெரிகிறது. இத்தகைய கட்டுப்பாடற்ற வளர்ச்சி, உத்வேகம் இன்றைய தொழில் மயமான உலகிற்கு மட்டும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. இவை ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கும் குணத்தை தோல் உரித்து காட்டுகின்றன.”—நேஷனல் ஜியோகரஃபிக்.

இன்று, மனிதனின் இத்தகைய குணம் மாறவில்லையென்றால் என்ன ஆவது? இந்த அண்டசராசரத்தில் நமது பூமியும் ஒரு தீவுதான். நம் பூமித்தீவின் இயற்கை வளங்களை மனிதர்கள் படுவேகத்தில், பெருமளவில் சூறையாடிக்கொண்டிருந்தால் உயிரினங்கள் எப்படி வாழ்வது? ராபா நியுயி தீவுக்கு நேர்ந்ததை பார்த்தாவது நாம் விழித்துக்கொள்ள வேண்டாமா? “அழிந்துபோன சமுதாயங்களின் வரலாறுகள்” இன்று நமக்கு எச்சரிக்கை பாடமாக அமையட்டும் என்கிறார் ஒரு எழுத்தாளர்.

இந்த வரலாறுகளிலிருந்து மக்கள் உண்மையில் பாடம் கற்றுக்கொள்கிறார்களா? வேகமாக காடுகளை அழிப்பதை பார்த்தால், உயிரினங்கள் திடுக்கிடும் அளவில் அழிவதை பார்த்தால், மனிதன் பாடம் கற்றதாக தெரியவில்லை. விலங்கியல் புத்தகத்தில் (ஆங்கிலம்) லிண்டா கியோப்னர் இவ்வாறு எழுதினார்: “ஓரிரு உயிரினம் அழிந்தாலும்சரி, ஐம்பது உயிரினம் அழிந்தாலும்சரி, அதனால் ஏற்படும் விளைவுகளை நம்மால் விவரிக்க முடியாது. உயிரினங்கள் அழிவதால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை நாம் அறிவதற்கு முன்பே, விளைவுகள் தங்கள் வேலையை தொடங்கிவிடுகின்றன.”

விமானத்தில் பயணம் செய்யும் ஒரு வாண்டு பையன் விமானத்திலிருந்து ஒவ்வொரு ஸ்க்ரூவாக எடுத்துவிடுவதாக வைத்துக்கொள்வோம். எந்த ஸ்க்ரூவை கழட்டினால் ஆபத்து என்று அவனுக்கு ஒருவேளை தெரியாமல் இருக்கும். அவன் முக்கியமான ஸ்க்ரூவை கழட்டிவிட்டால் ஒருவேளை அடுத்த பயணத்தில் விமானம் விழுந்து நொறுங்காமல் இருக்கலாம். ஆனால் எந்த நேரத்திலும் அது கீழே விழுந்து நொறுங்குவது நிச்சயம். அதேபோல் மனிதர்கள் இந்த பூமியிலிருந்து ஒவ்வொரு வருடமும் உயிரினம் என்ற “ஸ்க்ரூக்களை” 20,000-க்கு மேல் கழட்டிக்கொண்டே இருக்கிறார்கள்! அப்படியென்றால் முக்கிய ஸ்க்ரூவைப் போன்ற உயிரினத்தை மனிதன் அழிந்துவிட்டால் நம் நிலை என்னாவது? இதை எப்படி தடுப்பது? ஒருவேளை மனித குணங்களை மாற்றினால் தடுக்க முடியுமா?

ஈஸ்டர் தீவிலிருந்து பூமி தீவு வரை என்ற ஆங்கில புத்தகம் பின்வரும் முக்கிய குறிப்பை தருகிறது: “[ராபா நியுயி] தீவில் எஞ்சியிருந்த ஒரேவொரு மரத்தை வெட்டி சாய்த்தவனுக்கு அது கடைசி மரம் என்பது நன்றாகவே தெரியும். ஆனாலும் அதை வெட்டி சாய்த்தான்.”

“நம் மதத்தை மாற்ற வேண்டும்”

“ஈஸ்டர் தீவில் ராட்சத சிலைகளை சக்திப்படைத்தவை என்று நினைத்திருந்தார்கள். ஆகவே இருப்பதிலேயே யார் பெரிய சிலையை நிறுவுவது என்ற போட்டி கிராமங்களுக்கு இடையே நிலவியது. . . வீணாக சிலைகளை செய்யவும், அவற்றை வேறு இடம் கொண்டு செல்லவும், நாட்டி வைக்கவும் இயற்கை வளங்களை வாரி வாரி கொட்டினார்கள். இன்றைக்கு, பொருளாதார முன்னேற்றம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், மேம்பட்ட வாழ்க்கை, போட்டிகள் ஆகியவை புதிய தெய்வங்களாய் முளைத்திருக்கின்றன. இவற்றை, ஈஸ்டர் தீவு ராட்சத சிலைகளைப் போல் சக்திப்படைத்தவை என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். அதனால் வீண் போட்டி நிலவுகிறது. பொருள் வளம் வீணாகிறது. இத்தகைய நிலமை மாறவேண்டுவென்றால், ஒரேவொரு வழிதான் உள்ளது. இப்புதிய தெய்வங்களை கொண்டிருக்கும் நம் மதத்தை மாற்ற வேண்டும்” என்கிறது ஈஸ்டர் தீவிலிருந்து பூமி தீவு வரை.

“மனிதர் செல்லவேண்டிய வழி அவர்கள் கையில் இல்லை; நடப்பவன் காலடிப்போக்கும் அவர்கள் அதிகாரத்தில் இல்லை” என்றார் ஒரு ஞானி. (எரேமியா 10:23, பொ.மொ.) ‘நம்முடைய காலடியை’ எங்கே, எப்படி வைக்க வேண்டும் என்பதை நம்மை படைத்தவரே கற்றுத்தருவார். கஷ்டங்களிலிருந்து அவரே நம்மை காப்பார். இவற்றை கண்டிப்பாக செய்வேன் என்று பைபிளில் வாக்குக்கொடுத்திருக்கிறார். கடவுள் சொல்லியவற்றை பதிவுசெய்திருக்கும் புத்தகமே பைபிள். நமக்கு பாடம் புகட்டவே, பண்டைய காலத்தில் நல்ல நிலையில் வாழ்ந்த நாகரிக மக்களை பற்றியும், சீரழிந்துபோன நாகரிக மக்களை பற்றியும் பைபிளில் பதிவாகியுள்ளன. இன்று வாழ்க்கை இருளில் திக்குத்தெரியாமல் தவிக்கும் நமக்கு, இப்படிதான் செல்ல வேண்டும் என்று ‘நம் பாதைக்கு வெளிச்சம்’ பாய்ச்சி, வழிக்காட்டுகிறது பைபிள்.—சங்கீதம் 119:105.

உண்மையில், கடவுள் சொல்படி கேட்கும் மக்கள் இந்தப் பாதையில் தொடர்ந்து சென்றால் சாந்தம் தவழும், எல்லாருக்கும் எல்லாம் நிறைவாய் கிடைக்கும் பூலோக பூங்காவை—புதியதோர் உலகை—அடைவார்கள். அந்தப் புதிய உலகில் இன்று பாலைவனமாக உள்ள ராபா நியுயி என்ற குட்டி பசிபிக் தீவும் சோலைவனமாக மாறிவிடும்!—2 பேதுரு 3:13.

[அடிக்குறிப்பு]

a இங்குள்ள மக்கள், இத்தீவையும் தங்களையும் ராபா நியுயி என்றே அழைக்கின்றனர். ஆனால் உலக மக்கள் மத்தியில் ஈஸ்டர் தீவு, ஈஸ்டர் தீவுவாசிகள் பிரபலம்.

[பக்கம் 23-ன் தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

ஈஸ்டர் தீவு

[படத்திற்கான நன்றி]

Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.

[பக்கம் 23-ன் படம்]

“இதுபோல் சுமார் 1,000 சிலைகளை செதுக்கியிருக்கலாம்”

[பக்கம் 25-ன் படங்கள்]

பூலோகமே பூங்காவனமாக மாறும்போது, எங்கோ மூலைமுடுக்கிலுள்ள தீவுகளும் சோலைவனமாக மாறும்