Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நான் வெளிநாடு போகவா?

நான் வெளிநாடு போகவா?

இளைஞர் கேட்கின்றனர் . . .

நான் வெளிநாடு போகவா?

“எனக்கு இங்கே பிடிக்கவேயில்லை. வேற எங்காவது போகணும்.”—சாம்.

“எனக்கு எதையாவது புதுசு புதுசா பார்க்க ரொம்ப பிடிக்கும்.”—மேரின்.

“கொஞ்ச நாள், வீட்டைவிட்டு எங்கேயாவது போய் இரு. அதுதான் உனக்கு நல்லதுனு என்னோட குளோஸ் பிரண்ட் சொன்னான்.”—அன்டராஸ்.

“துணிச்சலா ஏதாவது செய்யணும்னு துடிக்கிறேன்.”—ஹேகன்.

வருஷா வருஷ ம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். வெளிநாட்டிலே செட்டிலாக முடியாவிட்டாலும், கொஞ்ச நாட்களுக்காவது அங்கே போக மாட்டோமா என்ற ஏக்கம் உங்களையும் வாட்டுகிறதா? அன்டராஸ் தன் வெளிநாட்டு பயண அனுபவத்தை இவ்வாறு கூறுகிறான்: “மறுபடியும் ஒரு சான்ஸ் கிடைச்சா, ஜாலியா போயிட்டு வருவேன்.”

வெளிநாடுகளில் பணம் சம்பாதிக்க அல்லது புதிய மொழியைக் கற்க சில இளைஞர்கள் சில காலம் போவதுண்டு. உதாரணத்திற்கு, ஆவ் பேர் (au pair) என்ற அரசாங்க கல்வி திட்டம் பல நாடுகளில் பிரபலம். இத்திட்டத்தின்படி, மொழியைக் கற்க வெளிநாடு செல்லும் மாணவ மாணவியர், யாருடைய வீட்டிலாவது தங்கியிருந்து மொழியை கற்கலாம். அவர்கள் இம்மாணவர்களுக்கு உணவும், இருக்க இடமும் தர, பதிலுக்கு இவர்கள் வீட்டு வேலைகளை செய்து தருவார்கள். மீதி நேரத்தில் மாணவர்கள் அவர்களிடமிருந்தும் அந்நாட்டு மொழியைக் கற்றுக்கொள்வார்கள். இளைஞர்கள் மேற்படிப்புக்காகவும் வெளிநாடு செல்வது உண்டு. குடும்பத்தை காப்பாற்ற வேலை தேடியும் வெளிநாடு செல்கிறார்கள். பள்ளிப் படிப்பு முடிந்ததும் மேற்கொண்டு என்ன செய்வது என்று விழிப்பவர்களும் வெளிநாடுகளுக்கு படையெடுக்கிறார்கள்.

இதுபோன்ற எத்தனையோ காரணங்களுக்கு இன்றைய இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். ஆனால், கிறிஸ்தவ இளைஞரோ கடவுளுக்கு ஊழியம் செய்ய செல்கிறார்கள். எங்கெல்லாம் ஊழியர்கள் குறைவாக உள்ளனரோ அங்கெல்லாம் ராஜ்ய செய்தியை பரப்ப வேண்டும் என்பதற்காக போகிறார்கள். எது எப்படியோ இத்தகைய பயணத்தில் நன்மைகளும் உண்டு. இது சுயமாக செயல்பட கற்றுத்தரும். பிறநாட்டவரின் கலாச்சாரத்தை அதிகமாக அறிந்துகொள்ள முடியும். புதிய மொழியை நன்றாக கற்றுக்கொண்டால் வேலைவாய்ப்பும் அதிகம்.

ஆனால், வெளிநாட்டு பயணம் எப்போதும் இனிதாக முடிவதில்லை. வெளிநாட்டில் ஒரு வருடம் தங்கி படித்த மாணவியின் சோக கதையைக் கேளுங்கள்: “வெளியூர் போனா கடைசி வரைக்கும் ஜாலியா இருக்கும்னு நெனச்சேன். ஆனா பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல.” வெளிநாடு போகும் இளைஞர்கள் சிலர் பேராசைக்காரர்களின் வலைகளில் விழுந்துவிடுகிறார்கள். மாட்டிக்கொண்ட இளைஞர்களை இவர்கள் எல்லா விதங்களிலும் சக்கையாக பிழிந்தெடுக்கிறார்கள். இன்னும் சிலர் பல தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள். ஆகவே, வெளியூர் போக மூட்டை முடிச்சுகளை கட்டும் முன், என்னென்ன ஆபத்துகள் வரலாம் என்பதை ஆற அமர யோசியுங்கள்!

எண்ணங்களை எடைபோடுங்கள்!

வெளியூர் போகும் காரணத்தை யோசித்துப்பாருங்கள். கடவுளுக்கு ஊழியம் செய்ய அல்லது குடும்பத்தை காப்பாற்ற வெளிநாடுகளுக்கு போவது வேறு, வெறுமனே ஜாலிக்காக போவது வேறு. பலர் மேலே குறிப்பிட்ட இளைஞர்கள் போல் ஜாலிக்காக, சுதந்திரமாக திரிய, சாகசம்புரிய சீமைக்கு போக விரும்புகிறார்கள். இதில் தவறு ஏதுமில்லை. அதனால்தான் பைபிள் பிரசங்கி 11:9-ல் இளைஞர்களுக்கு இவ்வாறு ஊக்கம் தருகிறது: “வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு.” ஆனால் வசனம் 10 பின்வரும் எச்சரிக்கையைக் கொடுக்கிறது: “மனக்கவலையை ஒழியுங்கள். உடலுக்கு ஊறு வராதபடி காத்துக்கொள்ளுங்கள்.”

அப்பா அம்மா விதிக்கும் கட்டுப்பாடுகளை வெறுத்து, வெளிநாடு செல்ல நினைத்தால் ஒருவேளை உங்களுக்கு “ஊறு,” அதாவது கஷ்டம் வரலாம். ஊதாரி மகனைப் பற்றி இயேசு ஒரு கதையைச் சொன்னார். அது உங்களுக்கு தெரியுமா? அந்தக் கதையில் ஒரு இளைஞன் தன்னலத்திற்காக வெளிநாடு செல்கிறான். அநேகமாக சுதந்திரமாக திரிய ஆசைப்பட்டிருப்பான். ஆனால் போன இடத்திலோ அவனுக்கு எக்கசக்கமான கஷ்டங்கள். விரைவிலேயே பசியாலும், வறுமையாலும் வாடுகிறான். ஆன்மீக ரீதியிலும் அவதிப்படுகிறான்.—லூக்கா 15:11-16.

சிலர் வீட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு பயந்து வெளிநாடு செல்ல நினைக்கிறார்கள். வாட் இஸ் அப் என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியை ஹைக் பர்க் இவ்வாறு எழுதியுள்ளார்: “வீட்டில் நிம்மதி இல்லை, . . . என்பதற்காக வேறு எங்காவது போய் சந்தோஷமாக இருக்கலாம் என்று கனவுக்கூட காணாதீர்கள்!” ஆகவே, என்ன பிரச்சினை வந்தாலும் எதிர்நீச்சல் போடுங்கள். மனசுக்கு பிடிக்காத விஷயங்களுக்காக வீட்டை விட்டு ஓடுவதில் ஒரு பயனுமில்லை.

எக்கச்சக்கமாக பணம் சம்பாதிக்க வேண்டும், பொருள் குவிக்க வேண்டும் என்ற பேராசை இளைஞர்களுக்கு கொக்கிப்போடுவது கொடுமையிலும் கொடுமை. மேலைநாடுகளில் எல்லாம் செல்வமயம், வாழ்க்கையை ஜமாய்க்கலாம் என்று கற்பனை கோட்டைகளை கட்டுகிறார்கள். மேல்நாட்டில் எல்லாரும் பணத்தில் மிதப்பதாக தப்புக்கணக்கு போடுகிறார்கள். முன்பின் தெரியாத நாட்டிற்கு சென்ற இளைஞர்கள் பலர் பசிபட்டினியால் திண்டாடிய கதைகள் ஏராளம் உண்டு. a பைபிள் தரும் எச்சரிக்கையை கேளுங்கள்: “பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக்குத்திக்கொண்டிருக்கிறார்கள்.”—1 தீமோத்தேயு 6:10.

போக தயாரா?

வெளிநாட்டில் கஷ்டங்களோ, பிரச்சினைகளோ சச்சரவுகளோ வந்தால் அவற்றை சமாளிக்கும் அளவுக்கு உங்களுக்கு உண்மையில் அனுபவம் உள்ளதா என்பதை கவனமாக யோசித்து பாருங்கள். நீங்கள் போகும் இடத்தில் ஓரே அறையை இன்னொருவருடன் பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கும் அல்லது அந்நியர் வீட்டில் தங்க வேண்டியிருக்கும். நிறைய விஷயங்களில் அவர்களோடு அட்ஜஸ்ட் பண்ண வேண்டியிருக்கும். அப்படியென்றால், இப்போது வீட்டில் எந்தளவுக்கு அட்ஜஸ்ட் செய்கிறீர்கள் என்பது முக்கியம். ஒருவேளை இப்படி தன்னலமாக இருக்கக்கூடாது என்று அப்பா அம்மா அடிக்கடி உங்களை திட்டிக்கொண்டிருந்தால், சாப்பாட்டு விஷயத்தில் இது வேண்டாம் அது வேண்டாம் என்று நீங்கள் நச்சரித்துக்கொண்டிருந்தால், வீட்டு வேலைகளில் உதவி செய்யாதிருந்தால் போகும் இடத்திலும் கஷ்டப்படுவீர்கள். இப்போதே இவற்றை உங்களால் சமாளிக்க முடியவில்லை என்றால், அங்கே எப்படி சமாளிக்கப்போகிறீர்கள்?

நீங்கள் கிறிஸ்தவராக இருந்தால், ஆன்மீக விஷயத்தில் குறைவராமல் பார்த்துக்கொள்வீர்களா? பைபிளை படி, கிறிஸ்தவ கூட்டங்களுக்கு போ, வெளி ஊழியத்திற்கு போ என்று அம்மா அப்பா உங்களுக்கு சொல்லிக்கொண்டே இருக்க வேண்டுமா? ஆன்மீக ரீதியில் நீங்கள் உறுதியாக இருக்கிறார்களா? இல்லையென்றால், வெளிநாட்டில் தவறான வழியில் செல்ல சோதனைகள் வரும்போது அல்லது தவறுகளை செய்ய நண்பர்கள் தூண்டும்போது உங்களால் தாக்குப்பிடிக்க முடியாது. ஒருவேளை இதுபோன்ற பிரச்சினைகள் உங்கள் தாய்நாட்டில் வந்திருக்காது. உதாரணத்திற்கு, கிறிஸ்தவ இளைஞன் ஒருவன் வெளிநாட்டிற்கு படிப்பதற்காக சென்றான். அவன் பள்ளிக்குச் சென்ற முதல் நாளே, போதைப்பொருள் கிடைக்கும் இடத்தை ஒரு மாணவன் கூறினான். பிறகு அதே பள்ளியில் படிக்கும் மாணவி ஒருத்தி, இவனிடம் வந்து ‘டேட்டிங்’ போகலாமா என்று கேட்டாள். இவனுடைய ஊரில் பெண்கள் இதுபோல் வெளிப்படையாக தங்கள் விருப்பத்தை தெரிவிப்பதில்லை. ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு சென்ற இன்னொரு இளைஞன் இவ்வாறு கூறுகிறான்: “ஐயோ! இங்கே திரும்புற இடமெல்லாம் ஆபாச படங்கள். எங்க நாட்டுல இதுமாதிரி படங்கள பொது இடங்கள்ல பார்க்கவே முடியாது.” ஆகவே நீங்கள் மட்டும் ‘விசுவாசத்தில் உறுதியாக’ இல்லாமல், வெளிநாடு சென்றால் உங்கள் ஆன்மீக கப்பல் உடைந்து சுக்குநூறாகிவிடும்.—1 பேதுரு 5:9.

விஷயங்களை சேகரியுங்கள்!

போவதற்கு முன், எல்லா விஷயங்களையும் சேகரியுங்கள். மற்றவர்கள் இப்படி சொன்னார்கள், அப்படி சொன்னார்கள் என்று நம்ப வேண்டாம். அரசாங்க திட்டத்தின் மூலம் நீங்கள் வெளிநாட்டில் படிக்க நினைத்தால் அதற்கு எவ்வளவு செலவாகும்? ஆயிரக்கணக்கில் செலவாகும் என்பதை நீங்கள் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டீர்கள். வெளிநாட்டு படிப்பு உங்கள் நாட்டில் செல்லுமா என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். அந்த நாட்டின் சட்டங்கள், கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைப் பற்றி எந்தளவுக்கு விஷயங்களை திரட்ட முடியுமோ திரட்டுங்கள். அங்கே தங்குவதற்கு எவ்வளவு செலவாகும்? ஏதாவது வரிகள் கட்ட வேண்டியிருக்குமா? அங்கு ஏதேனும் நோய் வரும் அபாயம் உள்ளதா? இந்த விஷயங்களை அந்த நாட்டில் வாழ்ந்த மக்களிடமிருந்து தெரிந்துகொள்வது நல்லது.

உணவு, தங்குமிடம் போன்றவற்றையும் கவனிக்க தவறாதீர்கள். பொதுவாக வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு பெற்றோர்போல் இருந்து உணவையும் இடத்தையும் தருபவர்கள் பண ஆதாயத்தை எதிர்பார்ப்பதில்லை. ஆனாலும், பைபிள் நெறிகளை மதிக்காதவர்களோடு தங்க நேரிட்டால் நிறைய விஷயங்களில் அட்ஜஸ்ட் செய்யவேண்டியிருக்கும். அதனால் உங்களுக்கு டென்ஷன் அதிகரிக்கும். இவர்களை விட்டால் நண்பர்களிடத்திலோ உறவினர்களிடத்திலோ தங்க வேண்டும். அப்படி தங்கும்போது, ‘விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு’ என்ற பொன்மொழியை மறந்துவிடாதீர்கள். அவர்கள் தங்கு, தங்கு என்று சொன்னாலும்கூட அதிக சிரமம் தராமல் பார்த்துக்கொள்ளுங்கள். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் போன்ற உறவு சிதைந்து, விஷம்போல் ஆகிவிடும்.—நீதிமொழிகள் 25:17-ஐ ஒப்பிடுக.

வெளிநாட்டில் இருக்கும்போது, பணம் சம்பாதிக்க நினைத்தால், அந்நாட்டு சட்டங்களை மீறாமல் இருப்பது உங்கள் கிறிஸ்தவ கடமை. (ரோமர் 13:1-7) அப்படி வேலை செய்ய அந்நாட்டு சட்டத்தில் இடம் உண்டா? அதற்கு என்ன நிபந்தனைகள்? சில நாடுகளில், அந்நிய நாட்டவர் அந்நாட்டின் அனுமதி இன்றி வேலை செய்வது சட்டவிரோதமாகும். இப்படியாக நீங்கள் சட்டவிரோதமாக வேலைசெய்தால் நேர்மையான கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொள்ள முடியாது. அதோடு அடிப்படை பாதுகாப்பும் கிடைக்காமல் கஷ்டப்படுவீர்கள். உதாரணத்திற்கு, விபத்து போன்ற அசம்பாவிதங்களின்போது கைகொடுக்கும் இன்சூரன்ஸ் பணமும்கூட கைக்கு எட்டாமல் போய்விடும். அப்படியே வேலை செய்ய சட்டத்தில் இடமிருந்தாலும்கூட, கவனமும் சாதுரியமும் தேவை. (நீதிமொழிகள் 14:15) ஏனென்றால் பழிபாவத்திற்கு அஞ்சாத முதலாளி வர்க்கம் வெளிநாட்டு தொழிலாளர்களை அட்டையைப்போல் உறிஞ்சிவிடுவார்கள்.

தீர்மானம் உங்கள் கையில்

வெளிநாட்டிற்கு போவது என்பது மிகப் பெரிய தீர்மானம். ஆகவே எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்பட முடியாது. பெற்றோருடன் ஆற அமர உட்கார்ந்து, வெளிநாட்டிற்கு போவதால் வரும் நல்லது கெட்டதுகளை பற்றி பேசுங்கள். ஆர்வத்துடிப்பால் அறிவுக்கண்ணை இழக்காதீர்கள். எதற்காக போகிறீர்கள் என்பதை ஒருதலைபட்சமாய் அலசி ஆராயாதீர்கள். அப்பா அம்மா சொல்வதை காதுகொடுத்து கேளுங்கள். நீங்கள் எவ்வளவு தூரம் போனாலும் தாய் தந்தை பாசம் விட்டுப்போகாது. உங்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் துடிதுடித்துப்போவார்கள். அவர்கள் பணம் தரவில்லை என்றால் நீங்கள் அதோகதிதான்.

எல்லாவற்றையும் கவனமாக ஆராய்ந்தபின் வெளிநாடு போவது உங்களுக்கு சரிப்படாது என்றோ அல்லது போவதை கொஞ்ச காலம் ஒத்திப்போடலாம் என்றோ யோசிக்கலாம். முதலில் கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருக்கும். ஆனால் உங்களுக்கு சந்தோஷம் தரும் எத்தனையோ விஷயங்கள் உள்நாட்டிலேயே இருக்கும். உதாரணத்திற்கு, உங்கள் ஊரிலுள்ள எத்தனையோ சுற்றுலா இடங்களை சுற்றி சுற்றி வரலாமே! இப்போதே வெளிநாட்டு மொழியை கற்கலாமே! ஒருநாள் உங்களுக்கும் வெளிநாடு செல்கிற வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்கலாம்.

ஓ, வெளிநாட்டிற்கு போக தீர்மானித்துவிட்டீர்களா? சரி, போகிற பயணம் இனிதாக அமைய சில முத்தான அறிவுரைகளை அடுத்த “இளைஞர் கேட்கின்றனர். . . ” பகுதியில் பார்ப்போம்.

[அடிக்குறிப்பு]

a உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியின் காவற்கோபுரம் ஏப்ரல் 1, 1991 ஆங்கில இதழில் வெளியான, “பணக்கார நாட்டிற்கு போகும் முன் யோசிக்க வேண்டியவை” என்ற கட்டுரையைக் காண்க.

[பக்கம் 13-ன் படம்]

சிலர் ராஜ்ய செய்தியை பரப்புவதற்காக வெளிநாடு செல்கிறார்கள்

[பக்கம் 14-ன் படம்]

வெளிநாடு போவதால் வரும் நன்மை தீமைகளைப் பற்றி பெற்றோருடன் பேசுங்கள்