Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிரச்சாரத்தில் சிக்காதீர்!

பிரச்சாரத்தில் சிக்காதீர்!

பிரச்சாரத்தில் சிக்காதீர்!

“பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்.”நீதிமொழிகள் 14:15.

கல்விக்கும் பிரச்சாரத்திற்கும் மாபெரும் வித்தியாசம் உண்டு. கல்வி எப்படி சிந்திக்க வேண்டும் என்பதை போதிக்கும். பிரச்சாரம் எதை சிந்திக்க வேண்டும் என்று சொல்லும். சிறந்த ஆசிரியர்கள் ஏதேனும் ஒரு விஷயத்தை சொன்னால் அதை பல கோணங்களில் எடுத்துரைத்து, நன்மை தீமைகளை சுட்டிக்காட்டி, மாணவர்களையும் விவாதத்தில் ஈடுபடுத்துவார்கள். ஆனால் பிரச்சாரவாதிகள் தங்கள் கருத்துக்களை உங்கள் மீது திணிப்பார்கள். உங்களை வாயே திறக்க விடமாட்டார்கள். இவர்களுடைய உள்நோக்கம் என்னவென்று நமக்கு தெரியாது. தங்களுக்கு சாதகமான உண்மைகளை மட்டும் எடுத்துக்கொண்டு, மற்றவற்றை மறைத்துவிடுகிறார்கள். இவர்கள் உண்மைகளை திரிக்கிறார்கள். பொய்களை உதிர்க்கிறார்கள். பொய்யும் மெய்யும் சரிபாதி கலந்தே பேசுகிறார்கள். உங்களை சிந்திக்கவிடாமல், உணர்ச்சிகளை தூண்டுவதே இவர்களது லட்சியம்.

பிரச்சாரவாதிகள் சொல்வதெல்லாம் சரியானவை, ஒழுக்கம் நிறைந்தவை என்று முலாம் பூசுகிறார்கள். அவர்கள் சொல்வதை பின்பற்றினால் நீங்கள்தான் ‘பெரும்புள்ளி’ என்று உசுப்பிவிடுகிறார்கள். இவர்கள் கும்பலில் சேர்ந்துவிட்டால் எந்தவித பிக்கல் பிடுங்கல் இல்லாமல் வசதியோடு வாழலாம் என்று ஆசையை கிளறிவிடுகிறார்கள்.

இப்படிப்பட்ட பிரச்சாரவாதிகளை பைபிள் “வீண்பேச்சுக்காரர்,” “மனதை மயக்குகிறவர்கள்” என்று அழைக்கிறது. (தீத்து 1:10) இந்த ஆட்களிடமிருந்து சிக்காமல் இருப்பது எப்படி? முதலில் உங்களுக்கு அவர்களுடைய தந்திரமான உத்திகள் நன்றாக தெரிந்துவிட்டால், அவர்கள் சொல்லும் விஷயங்கள் உண்மையா இல்லையா என்பதை உடனே கண்டுபிடித்துவிடுவீர்கள். அதற்கு இதோ சில டிப்ஸ்.

கவனம் தேவை: எதையும் ஏற்கும் மனம் ஒரு குழாய் மாதிரி. அதில் குடி நீரும் போகலாம், கழிவுநீரும் போகலாம். நம் மனம் நாற்றமடிக்க விரும்பமாட்டோம். ஆகவே கவனம் தேவை. பண்டை காலத்தில் வாழ்ந்த சாலொமோன் ராஜா ஒரு சிறந்த கல்வியாளரும்கூட. அவர் தரும் எச்சரிக்கை இதோ: “பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.” (நீதிமொழிகள் 14:15) ஆகவே பிரச்சாரவாதிகள் சொல்லும் விஷயங்களை கவனமாக ஆராய்ந்து, எது தேவை, எது தேவையில்லை என்று முடிவெடுங்கள்.

அதேநேரத்தில் நம் மனக்கதவுகளை ஒரேயடியாக சாத்திவிடுவதும் நல்லதல்ல. ஏனென்றால், சில நேரங்களில் நம் சிந்தனைகளை நல்வழிப்படுத்தும் நல்ல கருத்துக்களை தெரியாமல் புறக்கணித்துவிடுவோம். ஆகவே எல்லாவற்றையும் ஏற்காமல், அதே சமயத்தில் நல்லவைகளை ஒதுக்காமல் இருப்பது எப்படி? நமக்கு கிடைக்கிற விஷயங்களை ஆராய்ந்து பார்க்க ஓர் அளவுகோல் தேவை. ஒரு கிறிஸ்தவருக்கு பைபிளே மிக சிறந்த அளவுகோல். அது அள்ள அள்ள குறையாத அறிவுச்சுரங்கம். பைபிளை அளவுகோளாக வைத்திருக்கும் கிறிஸ்தவர் தன் சிந்தனைகளை நல்வழிப்படுத்த தேவையான வழிகாட்டுதலை பைபிளிலிருந்து பெறுவார். அதேசமயத்தில் புதிய விஷயங்களை ஏற்கும் பரந்தமனம் உடையவராகவும் இருப்பார். ஆகவே புதிய விஷயங்களை அவர் பைபிள் என்ற அளவுகோலுடன் ஒப்பிட்டுப்பார்த்து, சரியான விஷயங்களை மட்டும் ஏற்றுக்கொள்வார். ஆனால், பைபிள் கற்பிக்கும் ஒழுக்க தராதரங்களோடு ஒத்துப்போகாத விஷயங்களை, அவற்றால் வரும் அபாயங்களை உடனே கண்டுபிடித்துவிடுவார்.

பகுத்தறிவு தேவை: பகுத்தறிவு என்பது, “ஒரு விஷயத்தை சரியாக கணிக்கும் திறன்.” அது “விஷயங்களை சிந்தித்து, சீர்தூக்கிப்பார்த்து, அவற்றை காரணகாரியங்களோடு தொடர்புபடுத்தி அல்லது பிரித்து அறியும் திறன்.” ஆகவே பகுத்தறிவாளருக்கு ஒரு விஷயத்தில் மறைந்திருக்கும் சூட்சுமங்கள் தெரிந்துவிடுவதால், சரியான முடிவு எடுக்கிறார்.

நாமும் பகுத்தறிவோடு இருந்தால், யார் “இன்சொல் பேசி, முகமன் கூறிக் கபடற்ற உள்ளத்தினரை ஏமாற்றுகிறார்கள்” என்பது தெரிந்துவிடும். (உரோமையர் 16:18, பொது மொழிபெயர்ப்பு) தேவையற்ற அல்லது தவறாக வழிநடத்தும் விஷயங்களை ஒதுக்கிவிட்டு, முக்கிய சாராம்சத்தை மட்டும் எடுத்துக்கொள்ள பகுத்தறிவு உதவும். ஆனால், தவறாக வழிநடத்தும் விஷயங்களை எப்படி கண்டுபிடிப்பீர்கள்?

விஷயத்தை சோதித்தறியுங்கள்: முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ போதனையாளர் யோவான் இவ்வாறு கூறினார்: “அன்பார்ந்தவர்களே, தூய ஆவியின் தூண்டுதல் தமக்கு இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் எல்லாரையும் நம்பிவிடாதீர்கள்; அந்தத் தூண்டுதல் கடவுளிடமிருந்து வருகிறதா எனச் சோதித்தறியுங்கள்.” (1 யோவான் 4:1, பொ.மொ.) திரவத்தை சர்ர்ர்ர்ர்ரென்று உறிஞ்சும் ஸ்பான்ஞ் போல் சிலர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லா விஷயங்களையும் அப்படியே மனதுக்குள் உறிஞ்சுகிறார்கள். இப்படி உறிஞ்சுவதற்கு வசதியாக விஷயங்கள்வேறு குவிந்துகிடக்கின்றன.

ஆனால், மனம் என்ற மாளிகையில் எந்த விஷயத்தை குடி அமர்த்தலாம் என்பதை அவரவரே தீர்மானிப்பது நல்லது. ‘நம் உருவத்திற்கும் உண்ணும் உணவிற்கும் தொடர்பு உண்டு” என்ற பொன் மொழி, நம் மனதிற்கும் பொருந்தும். ஆகவே நீங்கள் எதை படித்தாலும், எதை பார்த்தாலும், எதை கேட்டாலும் அது பிரச்சார வாதியின் கருத்தா அல்லது உண்மையா என்பதை சோதித்தறியுங்கள்.

மேலும், நாம் பரந்த மனப்பான்மையோடு இருந்தால், புதிய கருத்துக்களை மட்டும் இன்றி, நம்முடைய சொந்த கருத்துக்களையும் மனப்பூர்வமாக சோதித்தறிவோம். அவை வெறும் கருத்துக்களே. ஆகவே, அக்கருத்துகளை ஏற்கவேண்டும் என்றால், முதலில் அவற்றை நம் பகுத்தறிவால் ஆராய்ந்து, அவற்றிலுள்ள உண்மைகளை அளவுக்கோலால் அளக்க வேண்டும்.

கேள்விக் கணை தொடுக்க வேண்டும்: இன்று பலர் ‘திறமையாக வாதாடி [நம்மை] ஏமாற்றிவிடுகிறார்கள்’ என்று இதுவரை பார்த்தோம். (கொலோசையர் 2:4, பொ.மொ.) ஆகவே ஏமாற்றும் விவாதங்களை நம் முன் வைத்தால், கேள்விக் கணைகளை தொடுக்க வேண்டும்.

சொல்கிற விஷயத்தில் ஏதேனும் உள் அர்த்தம் உள்ளதா என்பதை முதலில் ஆராயுங்கள். அதற்கு பின்வரும் கேள்விகளை கணையாக தொடுக்கவும்: விஷயத்தை சொல்வதன் நோக்கம் என்ன? சொல்கிற விஷயத்தில் மற்றவர்களை இழிவுப்படுத்தும் பெயர்களோ, சேதிகளோ இருக்கிறதா? தேவையற்ற விஷயங்களை தள்ளிவிட்டப்பின், மீதி உள்ள விஷயத்தில் என்ன நன்மை உள்ளது? கூடுமானவரை விஷயத்தை சொல்லும் நபரின் பின்னணியை தெரிந்துகொள்வது நல்லது. அதற்காக பின்வரும் கேள்விகளை கேளுங்கள்: அவர்கள் எப்போதும் உண்மை பேசுகிறவர்களா? பிரச்சாரம் செய்யும் “அதிகாரிகள்” யார்? பிரச்சாரம் செய்யும் நபரோ, அமைப்போ, புத்தகமோ தரும் விஷயம் சிறந்ததா? நம்பகமானதா? ஒருவேளை அவர்கள் சொல்லும் விஷயம் உங்கள் உணர்ச்சியை தூண்டிவிடும் என்றால், பின்வரும் கேள்வியை கேளுங்கள்: ‘இந்த விஷயத்தை உணர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் ஆராய்ந்துவிட்டேன், இதனால் என்ன பயன்?’

கூட்டத்தோடு கோவிந்தா போடாதீர்: எல்லாரும் ஒரேமாதிரியாக யோசிப்பதால் அது உண்மை ஆகிவிடாது என்பதை நீங்கள் உணர்ந்துவிட்டால் வேறுவிதமாக யோசிக்க தைரியம் வரும். எல்லாரும் ஒரேமாதிரியாக யோசிப்பதால் நீங்களும் அவ்வாறே யோசிக்க வேண்டும் என்பது சட்டமா என்ன? உண்மையை அளவிட பிரபல கருத்து ஒன்றும் அளவுகோல் அல்ல. முதலில் ஒரு கருத்தை எல்லாரும் ஏற்பதும், பிறகு அது தவறு என்று நிரூபிக்கப்படுவதும் காலம் காலமாக நடந்துவரும் கதை. உண்மைதான், குப்பலோடு கோவிந்தா போட ஆசை அடித்துக்கொள்ளும். யாத்திராகமம் 23:2-ல் கொடுத்திருக்கும் கட்டளை இதோ: “தீமைசெய்ய திரளானபேர்களைப் (கும்பலை) பின்பற்றாதிருப்பாயாக.” கும்பலை பின்பற்றும் முன் இந்த நியதியை யோசித்துப்பாருங்கள்.

அறிவும் பிரச்சாரமும் இரு துருவங்கள்

சற்று முன்பு, தெளிவாக சிந்திக்க பைபிள் உதவுகிறது என்று பார்த்தோம். இயேசு கடவுளை நோக்கி, “உம்முடைய வசனமே சத்தியம்” என்றார். (யோவான் 17:17) இயேசு பைபிளை சத்திய வார்த்தை என்று கூறியதில் யெகோவாவின் சாட்சிகளுக்கு துளிக்கூட சந்தேகம் இல்லை. ஏனென்றால் “சத்தியபரனாகிய” கடவுளே பைபிளின் ஆசிரியர்.—சங்கீதம் 31:5.

பிரச்சாரங்கள் மலைபோல் வந்து குவிவதால் எது உண்மை எது பொய் என்று திணரும் இந்தக் காலத்தில், யெகோவாவின் வார்த்தையில் உள்ளதெல்லாம் சத்தியமே, சத்தியத்தை தவிர வேறில்லை என்பது நெஞ்சுக்கு இதம். ‘தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ள’ நினைக்கும் கயவர்களிடம் சிக்காமல் இருக்க பைபிளே உதவும்.—2 பேதுரு 2:3.

[பக்கம் 9-ன் படங்கள்]

தேவையற்ற அல்லது தவறாக வழிநடத்தும் விஷயத்தை ஒதுக்கிவிட பகுத்தறிவு உதவும்

[பக்கம் 10-ன் படம்]

நீங்கள் எதை படித்தாலும் பார்த்தாலும் அது உண்மையா என்று சோதித்தறியுங்கள்

[பக்கம் 11-ன் படம்]

எல்லாரும் ஒரேமாதிரியாக யோசிப்பதால் அது உண்மை ஆகிவிடாது

[பக்கம் 11-ன் படம்]

கடவுளுடைய வார்த்தையில் உள்ளதெல்லாம் சத்தியமே, சத்தியத்தை தவிர வேறில்லை