Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

புயலுக்குப் பின்னே பிரான்ஸில் நிவாரணப்பணி

புயலுக்குப் பின்னே பிரான்ஸில் நிவாரணப்பணி

புயலுக்குப் பின்னே பிரான்ஸில் நிவாரணப்பணி

பிரான்ஸிலிருந்து விழித்தெழு! நிருபர்

பிராஸ்வாஸ் என்ற பெண், குளிர்காய அடுப்பை மூட்டுவதற்காக கொஞ்சம் விறகுகளை எடுக்க மெல்ல கதவை திறந்தார். திறந்ததும் “என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை. வாசல்படி வரை தண்ணீர். தோட்டத்து கேட் வழியே பெரிய அலைகள் சீறியபடி வந்துகொண்டிருந்தன” என்றார். அவருடைய கணவர் டேரி, கழுத்துவரை தண்ணீர் இருந்ததையும் பொருட்படுத்தாமல், கராஜில் உள்ள ஏணியை எடுத்துக்கொண்டு வந்தார். அவர் தனது மூன்று பிள்ளைகளையும், மனைவியையும் வீட்டின் மேல்தளத்திற்கு ஏற்றிவிட்டு தானும் வந்து சேர்ந்தார். அங்கே சென்றதும் கூரையை பிய்த்து எறிந்தார். ஒருபுறம் தொப்பையாக நனைந்ததாலும், இன்னொரு புறம் பயத்தாலும் இவர்கள் பல மணிநேரம் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். கடைசியில் ஹெலிகாப்டரில் வந்த போலீசார் இவர்களை பார்த்து விட்டார்கள். பத்திரமாக காப்பற்றினார்கள்.

அடைமழை பெய்து, ஆற்றின் கரைகள் எல்லாம் அடித்துக்கொண்டு போனது. வெள்ளத்தை தடுக்க போட்ட சுவர்கள் சுவடு தெரியாமல் போயின. குழம்புபோல் இருந்த வெள்ள நீரில் 10 மீட்டர் உயரத்திற்கு எழும்பிய அலைகள், போன திசையில் உள்ளதையெல்லாம் அடித்து சென்றன. வெள்ளத்தின்போது சிலர் காருக்குள் மாட்டிக்கொண்டதாலும், சிலர் தூங்கும்போது வீட்டுக்குள் தண்ணீர் புகுந்ததாலும் 30 பேருக்குமேல் பலியானார்கள். இந்த பேரழிவில் தப்பித்த ஒருவர், எங்கும் வெள்ளக்காடாக இருந்த பயங்கரமான அந்த நவம்பர் இரவை “உலக அழிவிற்கு” ஒப்பிட்டார். பிரான்ஸின் தென்மேற்கு பகுதியில், 329 நகரங்களும் கிராமங்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.

வெள்ளத்தை மிஞ்சிய புயல்

பிரான்ஸின் தென்மேற்கு பகுதியில் வெள்ளத்தால் ஏற்பட்ட அழிவிலிருந்து மக்கள் மீள்வதற்குள் மறுபடியும் இயற்கை பேரழிவு தாக்கியது. அட்லாண்டிக் பெருங்கடலில் திடீரென்று உருவான குறைந்த தாழ்வழுத்த மண்டலம், புயலென உருவெடுத்து துவம்சம் செய்தது. டிசம்பர் 26, 1999-ல் பிரான்ஸின் வடக்கு பகுதியில் வீசிய புயல், அடுத்த நாள் இரவு தென்பகுதியை நாசம் செய்தது. காற்றின் வேகம் மணிக்கு 200 கிலோமீட்டருக்கு மேல் இருந்தது. அரசாங்க பதிவுகளின்படி, 17-ம் நூற்றாண்டிலிருந்து இதுபோன்ற புயல் பிரான்ஸில் அடிக்கவேயில்லை.

புயல் தாக்கிய சமயத்தில் ஹெலன் 8 மாச கர்ப்பிணி. தன் அனுபத்தை கூறுகிறார்: “நான் ரொம்ப பயந்துட்டேன். என் வீட்டுக்காரர் மோட்டர் பைக்கில் வீடு திரும்ப வேண்டும். மரக்கிளைகள் தாறுமாறாக எல்லா திசையிலும் பறந்துகொண்டிருந்தன. அவர் குழந்தையின் முகத்தை பார்ப்பதற்காவது உயிரோடு இருப்பாரா என்றுக்கூட எனக்கு சந்தேகம் வந்தது. எப்படியோ நல்லபடியா வீட்டுக்கு வந்துட்டார். வீட்டிற்குள் வெள்ளம் கிடுகிடுனென்று உயர ஆரம்பித்தது. நாங்க சன்னல் வழியா குதிச்சி வெளியவந்தோம்.”

பிரான்ஸில் குறைந்தது 90 பேர் இறந்திருக்கலாம். இவர்கள் வெள்ளத்தில் மூழ்கியோ, கூரை, புகைக்கூண்டு, மரக்கிளை ஆகியவை வீழ்ந்தோ இறந்தவர்கள். நூற்றுக்கணக்கான பொதுமக்களுக்கும், நிவாரணப் பணியில் ஈடுபட்டோருக்கும் பெரும் காயங்கள் ஏற்பட்டன. பிரான்ஸின் அண்டை நாடுகளான பிரிட்டன், ஜெர்மனி, ஸ்பெய்ன், சுவிட்சர்லாந்து ஆகியவற்றையும் புயல் தாக்கி 40-க்கும் அதிகமானோரை கொன்றுபோட்டது.

நாசங்கள்

பிரான்ஸ் தேசத்திலுள்ள 96 மாவட்டங்களில், 69 மாவட்டங்களை “இயற்கை சேதத்திற்கு உட்பட்ட பகுதிகள்” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஏற்பட்ட நஷ்டம் சுமார் 7,000 கோடி பிராங்க்ஸ் (1,100 கோடி அமெரிக்க டாலர்கள்). புயலுக்குப்பின் சில நகரங்கள், கிராமங்கள், துறைமுகங்கள் போர்க்களம்போல் காட்சியளித்தன. சாலைகளிலும், இரயில் பாதைகளிலும் மரங்களும், பெரிய மின் கம்பங்களும் விழுந்துகிடந்தன. கட்டடங்களின் கூரைகள் பிய்த்துக்கொண்டு பறந்தன. கட்டடம் கட்ட உதவும் கிரேன் எந்திரங்கள் நொறுங்கி விழுந்தன. படகுகளை காற்று அலேக்காக தூக்கி, துறையின் மேடைமீது வைத்துவிட்டு போனது. தோட்டப்பயிர்களை நாசமாக்கி, செடி வளர்க்கும் கண்ணாடி அறைகளை நொறுக்கி, பழத்தோட்டங்களை சின்னாபின்னம் ஆக்கிய புயல் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வயிற்றில் அடித்தது.

சில மணிநேரம் வீசிய புயல், பிரான்ஸில் உள்ள காடுகளையும், தேசிய பூங்காக்களையும், பல லட்ச ஏக்கரில் வளர்க்கப்பட்ட மரங்களையும் அழித்து துவம்சம் செய்தது. சுமார் 30 கோடி மரங்கள் அழிந்துபோனதாக பிரான்ஸ் தேசிய காட்டு இலாக்கா அறிவித்துள்ளது. பல நூற்றாண்டுகளாக இருந்த பெரிய மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டன அல்லது தீக்குச்சிகளைப்போல் சடக் சடக் என்று உடைந்தன. அக்குட்டைன், லோரேன் காடுகள் சுத்தமாக பெருக்கி துடைத்ததை போல் ஆங்காங்கே வெற்றிடமாய் காட்சியளித்தன.

பர்னாடு என்ற காட்டு அதிகாரி ஒரு யெகோவாவின் சாட்சி. காட்டில் கண்ட காட்சியை விவரிக்கிறார்: “புயல் நின்ற பிறகு, அடுத்த நாள் காட்டுக்கு போனேன். ஏற்பட்ட நாசத்தைப் பார்த்ததும் எனக்கு பயங்கர அதிர்ச்சி. அந்த நாசத்தைப் பார்த்தால் எல்லாருக்கும் கண்டிப்பாக வயிறு எரியும்! என் சபையில் உள்ள 80 சதவிகித மக்களுக்கு இந்த காடுதான் படி அளக்கிறது. இதுல வயசானவங்க ரொம்பவும் பாதிக்கப்பட்டிருக்காங்க. அவங்க என்ன செய்வதென்று தெரியாம விழிக்கிறாங்க.” வெர்சைலில் பேலஸ் என்ற அழகிய பூங்காவில் 10,000 மரங்கள் வேரோடு சரிந்தன. “இத்தோட்டத்தின் பழைய அழகை மீட்க இரண்டு நூற்றாண்டுகள் எடுக்குமே” என்று இத்தோட்டத்தின் தலைமை அதிகாரி புலம்புகிறார்.

மின் கம்பிகள் அறுந்ததால் மின்சாரம் இன்றி, பிரான்ஸ் மக்கள் தொகையில் ஆறில் ஒரு பகுதியினர் இருளில் வாடினார்கள். துரிதமாக நிவாரணப் பணிகளை மேற்கொண்ட போதிலும், ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இன்றி, தொலைபேசி இன்றி இரண்டு வாரம் அவதிப்பட்டார்கள். சில சிறு சிறு கிராமங்களோடு சுத்தமாக தொடர்புகொள்ள முடியவில்லை. பிரான்ஸ் மக்கள் வேறு வழியின்றி கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்தார்கள். மின் விளக்கு இல்லாததால் மெழுகுவர்த்தியை கொளுத்தினார்கள். இவர்களை பார்த்தபோது 21-ம் நூற்றாண்டில் வாழும் மக்களைப் போல் தெரியவில்லை. ஏதோ நூறு வருஷத்திற்கு முன் இருந்தவர்களைப் போல் வாழ்ந்தார்கள்.

அரசு கட்டிடங்களும், கோட்டைகளும், சர்ச்சுகளும் புயலுக்கு இரையாகின. நிறைய வழிபாட்டு ஸ்தலங்கள் பாதிக்கப்பட்டன. யெகோவாவின் சாட்சிகளுடைய 15 ராஜ்ய மன்றங்கள் நாசமாகின. சில ராஜ்ய மன்றங்களில் மெழுகுவர்த்தி ஒளியில் அல்லது மண்ணெண்ணை விளக்கில் கூட்டங்கள் நடந்தன.

சுமார் 2,000 யெகோவாவின் சாட்சிகளுடைய குடும்பங்களின் சொத்துக்கள் புயலால் நாசம் அடைந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தது முதல் கூரைகள் ஆற்று வெள்ளத்தில் அழிக்கப்பட்டது வரை பலவிதங்களில் இவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. நிறைய சாட்சிகளுக்கு காயங்கள் ஏற்பட்டன. சாராட் மாகாணத்தை சேர்ந்த 77 வயது யெகோவாவின் சாட்சி ஒருவரது வீட்டில் வெள்ளம் புகுந்ததால் இறந்துபோனார். மனைவி உயிர் தப்பினார். ஆனால் தன் கண்ணெதிரே கணவர் இறப்பதை பார்த்த அந்த அம்மாவின் பரிதாபத்தை என்னவென்று சொல்வது! பலர் மரணத்தின் வாசலை தொட்டுவிட்டு வந்தார்கள். “நான் உயிர் பிழைத்தது பெரிய அதிசயம். கதவை உடைத்துக்கொண்டு வெள்ளம் பாய்ந்தோடி வந்தது. குபுகுபுவென்று தண்ணீர் மட்டம் ஐந்தடிக்கு உயர்ந்தது. நான் உடனே பக்கத்திலிருந்த பீரோவை கெட்டியாக பிடித்து தொங்கியதால் பிழைத்தேன்” என்கிறார் 70 வயது கில்பர்ட்.

நிவாரணப் பணிகள்

புயல் அடித்த அடியில், பிரான்சிலும், ஐரோப்பா முழுவதிலும் மக்கள் ஆச்சரியம்தரும் வகையில் ஒன்றுபட்டிருக்கிறார்கள். “தர்ம காரியங்களை தானாக முன்வந்து செய்யலாம், நட்புக்காக செய்யலாம், நல்ல எண்ணத்தால் செய்யலாம். ஆனால் சிலநேரங்களில் கட்டாயம் செய்தாக வேண்டும்” என்கிறது லே மீடி லீப்ரி செய்தித்தாள்.

புயல் நின்றதும் பாதிக்கப்பட்ட உள்ளூர் சபை சாட்சிகளுக்கும், மற்றவர்களுக்கும் உதவ உடனே யெகோவாவின் சாட்சிகளுடைய நிவாரணப் பணி குழு களத்தில் இறங்கியது. ராஜ்ய மன்றங்களை கட்டுவதற்காக அமைக்கப்பட்ட ரீஜினல் பில்டிங் கமிட்டி, தன்னார்வ தொண்டர்களை பல குழுக்களாக பிரித்து பணியில் முடுக்கி விட்டது. நவம்பரில் பிரான்ஸின் தென்மேற்கு பகுதியில் புயலின் கோரத்தாண்டவத்தால் ஏற்பட்ட நாசங்களை சரிசெய்ய 3,000 சாட்சிகள் திரண்டு வந்தார்கள். இவர்கள் மீட்கும் பணியிலும், சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபட்டார்கள். பாதிக்கப்பட்டோரின் வீடுகளிலிருந்து சேற்றையும், தண்ணீரையும் வாரி இறைத்து உதவினார்கள். சில கிராமங்களில் மற்ற தன்னார்வ தொண்டர்கள் வரும்முன், சாட்சிகளே முதலில் ஓடிச்சென்று உதவினார்கள். அரசாங்க கட்டிடங்கள், பள்ளிகள், தபால் நிலையங்கள், டவுன் ஹால்கள், முதியோர் இல்லங்கள் என எல்லாவற்றையும் சுத்தம் செய்து கொடுத்தார்கள். இவர்கள் கல்லறைகளைக்கூட விட்டுவைக்கவில்லை. அவற்றையும் சுத்தம் செய்தார்கள். பல சந்தர்ப்பங்களில், நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த மற்றவர்களோடு இவர்களும் சேர்ந்து பணிபுரிந்தார்கள்.

சாட்சிகள், ஜாதி மத வேறுபாடு பாராமல் எல்லாருக்கும் உதவி செய்தார்கள். “நாங்கள் கிராம பாதிரியாருடைய வீட்டின் அடித்தளத்தை சுத்தம் செய்து கொடுத்தோம்” என்கிறார் ஒரு சாட்சி. உதவியை பெற்றுக்கொண்ட மக்கள் சாட்சிகளைப் பற்றி என்ன நினைத்தார்கள் என்பதை அவரே மேலும் கூறினார்: “நாங்கள் ஏதோ வானத்திலிருந்து குதித்து வந்து உதவிசெய்ததைப் போல் மக்கள் எங்களை பார்த்தார்கள்.” ஓர் அதிகாரி இவ்வாறு கூறினார்: “சாட்சிகள் சுவிசேஷத்தை படிப்பதால் ஏதோ கடமைக்காக தங்கள் அண்டைவீட்டாருக்கு உதவியதாக ஒருவேளை மற்றவர்கள் நினைக்கலாம். ஆனால், என்னை பொருத்தவரை சுவிசேஷத்தின்படி, தங்கள் மதப் போதனையின்படி அச்சரம் பிசகாமல் வாழும் மக்கள் இவர்களே.” தன்னார்வ தொண்டராய் பணியாற்றிய சாட்சி ஒருவர் கூறியது: “ஈரமுள்ள எந்த நெஞ்சும் உதவ ஓடிவரும். ஏதோ நம்மால் முடிந்த உதவியை அக்கம் பக்கத்திலுள்ள மக்களுக்கு செய்வதில் கிடைக்கும் ஆத்ம திருப்தியே தனி.”

டிசம்பரில் இரண்டு முறை வீசிய புயலால், நிறைய சாட்சிகளால் தங்கள் உடன் சகோதரர்களோடு பல நாட்களுக்கு தொடர்புகொள்ள முடியவில்லை. வட்டாரக் கண்காணிகளின் தலைமையின் கீழும், உள்ளூர் மூப்பர்களின் தலைமையின் கீழும் நிவாரணப் பொருட்களை விநியோகித்தார்கள். சாலைகள் எங்கும் மரங்களும், விளக்கு கம்பங்களும் விழுந்து கிடந்தன. தொலைபேசிகள் செயலிழந்தன. இதனால் சில கிலோமீட்டர் தூரத்தில் இருந்தவர்களைக்கூட சென்றெட்ட முடியவில்லை. இவர்களை எப்படியும் போய் சந்திக்க முடிவுசெய்த சாட்சிகள், அலங்கோலமாக அழிந்து கிடந்த காடுகளை கடந்து, கால்நடையாகவும், சைக்கிளிலும் வந்து சேர்ந்தார்கள். இவர்கள் மரம் முறிந்து விழும் அபாயத்தைக்கூட பொருட்படுத்தாமல் உதவ ஓடினார்கள். இம்முறையும், இத்தொண்டர்கள், பள்ளிக்கூடங்களையும், நூல்நிலையங்களையும், முகாமிடும் இடங்களையும், அக்கம் பக்கத்திலிருந்த வீடுகளையும் பாடுபட்டு சுத்தம்செய்து கொடுத்தார்கள். அரசாங்கம் கேட்டுக்கொண்டதன் பேரில் காட்டுப் பாதையில் விழுந்துகிடந்த மரங்களை அகற்றினார்கள்.

“அன்புக்கு இல்லை அடைக்கும் தாழ்!”

இந்த இயற்கை சீற்றங்களால் பலர் பயந்துபோய், அதிர்ச்சியால் உறைந்துபோயிருக்கிறார்கள். குறிப்பாக சிறுபிள்ளைகளும் வயதானவர்களும் திகிலிலிருந்து மீளவில்லை. மக்கள் வீடுகளையும், குடும்பத்தினரையும் பறிகொடுத்து தவிக்கிறார்கள். இவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு வர நண்பர்களின் ஆதரவும், உறவினர்களின் அரவணைப்பும் அவசியம் தேவை. அவசர மனநல குழுவிலுள்ள டாக்டர் கேபிரியல் கோட்டின், வெள்ளத்திற்கு பின் ஓட் என்ற மாகாணத்திற்கு சென்றபோது இவ்வாறு கூறினார்: “பாதிக்கப்பட்ட மக்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களோ, அதே மதத்தை சேர்ந்தவர்கள் வந்து உதவினாலே போதும்.”

மக்களுக்கு உதவுவதை யெகோவாவின் சாட்சிகள் தங்கள் தார்மீக கடமையாகவும், ஆன்மீக கடமையாகவும் கருதுகிறார்கள். ‘சரீரத்தில் [உண்மை கிறிஸ்த சமுதாயத்தில்] பிரிவினையுண்டாயிராமல், அவயவங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படிக்கு . . . ஒரு அவயவம் [ஒருவர்] பாடுபட்டால் எல்லா அவயவங்களும் [எல்லாரும்] கூடப் பாடுபடும்’ என்று அப்போஸ்தன் பவுல் குறிப்பிட்டார்.—1 கொரிந்தியர் 12:25, 26.

கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஹெலனுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. அவர் சாட்சிகள் தனக்கு உதவியதை இவ்வாறு கூறினார்: “புயல் ஓய்ந்து சில மணி நேரத்திற்குள் நம் சகோதர சகோதரிகள் உதவி செய்ய வந்துவிட்டார்கள். அவர்கள் வீட்டில் உள்ள எல்லாவற்றையும் சுத்தம் செய்து கொடுத்தார்கள். புயலில் பாதிக்கப்பட்ட சாட்சிகள்கூட மற்றவர்களுக்கு உதவி செய்ய வந்தது நெஞ்சை உருக்கியது. அவர்களாகவே மனப்பூர்வமாக செய்த உதவிகளை என்னென்று சொல்வது!”

ஆடெட் என்ற சாட்சியின் வீடு வெள்ளத்தால் அழிந்தது. மற்ற சாட்சிகள் வந்து உதவியதை இவ்வாறு விவரித்தார்: “அவர்கள் எனக்கு நிறைய ஆறுதல் சொன்னார்கள். அவர்கள் செய்த உதவிகளை பார்த்து நான் திக்குமுக்காடி போனேன். நான் உருகிப்போனேன்.” சாட்சிகளிடம் உதவியை பெற்ற பலருடைய மனநிலையை ஒரு சாட்சி ஒரே வரியில் இவ்வாறு விவரித்தார்: “அன்புக்கு இல்லை அடைக்கும் தாழ்!”

[பக்கம் 18, 19-ன் பெட்டி/படம்]

கறுப்பு அலை”

டிசம்பரில் புயல் தாக்குவதற்கு சற்று முன், பிரான்ஸின் கடலோரத்திலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் ஏரேக்கா என்ற எண்ணெய் கப்பல் மூழ்கி, 10,000 டன் பெட்ரோலியம் கடலில் சிந்தியது. பிரிட்டானே கடற்கரையிலிருந்து வென்டீ கடற்கரை வரை சுமார் 400 கிலோமீட்டர் தூரத்திற்கு எண்ணெய் படலம் மிதந்தது. எண்ணெய் படலம் ஒரே இடத்தில் இருந்தால் ஓரளவுக்கு சுத்தம் செய்துவிடலாம். ஆனால் புயல் வீசியதால் பல இடங்களுக்கு எண்ணெய் திட்டுதிட்டாக பரவி, நிலமை மேலும் மோசமானது. அவற்றை சுத்தம் செய்வது பெரும் பாடானது. பாறைகளிலும், மணலிலும் படிந்திருந்த எண்ணெய்யை சுத்தம் செய்ய சிறுவர் முதல் வயதானவர் வரை ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பிரான்ஸ் முழுவதிலிருந்தும் வந்து குவிந்தார்கள்.

இந்த விபத்து கடல் உயிரினங்களை பெரிதும் பாதித்துள்ளது. சிப்பிகளையும், ஓடுள்ள கடல் உயிரினங்களையும் வைத்து தொழில் செய்யும் தொழிற்சாலைகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. ப்ஃபின், கிரெப், கானெட், குல்லெமோட் போன்ற கடல் பறவைகள் குறைந்தது 4,00,000 இறந்திருக்கும் என்று பறவை ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மார்ச், 1978-ல் பிரிட்டானேயில் சூப்பர் டாக்கர் ஆம்கோ கெடிஷ் கடலில் மூழ்கியதால் ஏற்பட்ட அழிவைவிட இது பத்து மடங்கு அதிகம். இங்கிலாந்து, ஐயர்லாந்து, ஸ்காட்லாந்து போன்ற நாடுகளிலிருந்து எல்லாம் பறவைகள் கோடை வாசஸ்தலத்திற்காக பிரான்ஸ் வந்திருந்தன. ரோச்போர்ட் பறவைகள் சரணாலயத்தின் இயக்குநர் இவ்வாறு குறிப்பிட்டார்: “இந்த எண்ணெய் விபத்து உண்மையிலேயே மகா அழிவு. இதுபோன்ற விபத்தை நான் இது வரை பார்த்ததில்லை. . . . பிரான்ஸ் கடலோரங்களில் உள்ள அரிய பறவை இனங்கள் பலவீனமாகிவிடும் அல்லது அழிந்துபோய்விடும் என்ற அச்சம் ஆட்டிப்படைக்கிறது.”

[படத்திற்கான நன்றி]

© La Marine Nationale, France

[பக்கம் 15-ன் படம்]

ஹெலிகாப்டர் நூற்றுக்கணக்கானோரை காப்பாற்றியது. இதோ குஸாக் டியோடிலில் காப்பாற்றும் காட்சி

[படத்திற்கான நன்றி]

B.I.M.

[பக்கம் 15-ன் படம்]

நாசமான திராட்சை தோட்டத்தின் நடுவில், ‘அம்போ’வென்று கிடக்கும் இரயில் பாதை

[படத்திற்கான நன்றி]

B.I.M.

[பக்கம் 15-ன் படம்]

இதுபோல் நூற்றுக்கணக்கில் கார்கள் நொறுங்கி கிடந்தன

[பக்கம் -ன் படம்16]

வீல்டெனை சேர்ந்த இவர் ஏழு மணி நேரம் தப்பிக்க வழியின்றி தவித்தார்

[படத்திற்கான நன்றி]

J.-M Colombier

[பக்கம் 16, 17-ன் படம்]

குருஸை மாகாணத்தில் பைன் மரங்கள் தீக்குச்சிகளை போல் நொறுங்கி கிடக்கும் காட்சி

[படத்திற்கான நன்றி]

© Chareyton/La Montagne/MAXPPP

[பக்கம் 16, 17-ன் படம்]

வெர்சைலில் பேலஸ் பூங்காவில் மட்டும் 10,000 மரங்கள் சாய்ந்தன

[படத்திற்கான நன்றி]

© Charles Platiau/Reuters/MAXPPP

[பக்கம் 17-ன் படம்]

புயலுக்கு அடுத்த நாள், நார்மாடியிலுள்ள செயின்ட் பையர் சூர் டிவ்வியில் நாசக் காட்சி

[படத்திற்கான நன்றி]

© M. Daniau/AFP

[பக்கம் 18-ன் படம்]

லா ரெட்ராய்ட் என்ற இடத்தில் வயதான ஒருவருடைய வீட்டையும் (மேலே); ரெய்ஸாக் டியோடியிலுள்ள டவுன் ஹாலையும் (வலதுபுறம்) யெகோவாவின் சாட்சிகள் சுத்தம் செய்யும் காட்சி