Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பொய் பிரச்சாரம்

பொய் பிரச்சாரம்

பொய் பிரச்சாரம்

“பக்குவமாக எடுத்துச்சொல்லி, தொடர்ந்து பிரச்சாரம் செய்தால் மக்கள் சொர்க்கத்தை நரகம் என்றும், நரகத்தை சொர்க்கம் என்றும் நம்பிவிடுவார்கள்.”—அடால்ஃப் ஹிட்லர், மைன் காம்ப்.

தகவல் சாதனங்களான அச்சு இயந்திரம், ரேடியோ, டிவி, டெலிபோன், இன்டர்நெட் மலிந்துவிட்டதால், கண்மூடித்தனமாக செயல்பட தூண்டும் பிரச்சாரங்களும் திடீரென்று பெருகிவிட்டன. இன்றைய தகவல் புரட்சி யுகத்தில், யார் வேண்டுமென்றாலும், எங்கு வேண்டுமென்றாலும் தகவல்களை அனுப்புவதால், மக்களிடம் தகவல்கள் வந்து குவிகின்றன. இப்படி வந்து குவியும் தகவல்களை மக்கள் அவசரமாக படிக்கிறார்கள். தகவல்கள் உண்மையா என்றுகூட ஆராயாமல் வெளுத்ததெல்லாம் பால் என்று நம்புகிறார்கள்.

மக்கள் எதையும் கண்மூடித்தனமாக ஏற்கும் வரை குள்ளநரி குணம்கொண்ட பிரச்சாரவாதிகளுக்கு ஏக கொண்டாட்டம். குறிப்பாக இனவெறியை தூண்டும் எண்ணங்களை இவர்கள் எளிதில் பரப்பிவிடுகிறார்கள். பிரச்சாரத்தின் மூலம் மக்கள் உணர்ச்சிகளை தூண்டி, அவர்களுடைய பயத்தை பகடைக்காயாக பன்படுத்தி, மொழி வெறியை மூலதனமாக இட்டு, அறிவை மழுங்க செய்து, இனவெறியை கிளறுகிறார்கள். இதுபோன்ற தந்திர உத்திகள் வெற்றியடைந்த வரலாறுகள் ஏராளம் ஏராளம்.

பிரச்சாரம் பிறந்த வரலாறு

இன்று “பிரச்சாரம்” என்றதும், தந்திரமான உத்தி என்ற தவறான கருத்தே நிலவுகிறது. ஆனால் பிரச்சாரம் என்ற வார்த்தையை ‘பிரசவித்தபோது’ அதன் அர்த்தமே வேறு. ரோமன் கத்தோலிக்க மத குருமார்களின் உயர்மட்ட குழுவை லத்தீனில் காங்கிரிகேட்டோ டெ ப்ராப்பகண்டா ஃபிடி (விசுவாசத்தை பரப்பும் குழு) என்று அழைத்தனர். இதிலிருந்தே “ப்ராப்பகண்டா” என்ற ஆங்கில சொல் பிறந்தது. இந்தக் குழுவை ப்ராப்பகண்டா என்று சுருக்கமாக அழைத்தனர். மிஷனரிகளை மேற்பார்வை இடுவதற்காக இந்தக் குழுவை போப் கிரிகாரி XV 1622-ல் நிறுவினார். பிறகு ஒரு கருத்தை பரப்பும் செயலுக்கு “ப்ராப்பகண்டா,” அதாவது “பிரச்சாரம்” என்ற முத்திரை குத்தப்பட்டது.

ஆனால், பிரச்சாரம் பிறந்தது 17-ம் நூற்றாண்டில் அல்ல. தொன்றுதொட்டே மனிதன் ஏதாவது ஒரு வழியில் தன் கருத்துக்களையும், புகழையும், வீரதீர சாகசங்களையும் பிரச்சாரம் செய்திருக்கிறான். உதாரணத்திற்கு எகிப்திய மன்னர்களின் காலத்திலிருந்தே, பிரச்சாரவாதிகள் தங்கள் எண்ணத்தை ஈடேற்ற கலையை ஒரு கருவியாக பயன்படுத்தி வருகிறார்கள். எகிப்திய பாரோக்கள் தங்கள் வலிமையையும், நிலையான தன்மையையும் பறைசாற்ற பிரமீடுகளை கட்டினார்கள். அவ்வாறே ரோமர்கள் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக, அதாவது தங்கள் நாட்டின் புகழ் கொடிகட்டி பறக்க வேண்டும் என்பதற்காக கட்டடக்கலையில் கைவண்ணம் பதித்தனர். ஆனால் முதலாம் உலகப்போரின் போது, மீடியா மூலம் வெளிவந்த போர் செய்திகளை அரசாங்கங்கள் தலையிட்டு மாற்றியதால், “பிரச்சாரம்” என்ற வார்த்தையின் அர்த்தமே தலைகீழ் ஆனது. இரண்டாம் உலகப் போரின்போது, அடால்ஃப் ஹிட்லரும், ஜோஸப் கோபில்ஸும் தலைசிறந்த பிரச்சாரவாதிகளாக திகழ்ந்தார்கள்.

இரண்டாம் உலகப் போருக்குப்பின், தேசிய கொள்கையை பரப்ப அதிகமாக பிரச்சாரம் செய்யப்பட்டது. போரில் ஈடுபட்டிருந்த நாடுகள், அனல்பறக்கும் பிரச்சாரங்களை செய்து, தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருந்த மக்களைக்கூட தூண்டி, அவர்களை படையில் சேர்த்தன. அச்சமயத்தில், நாட்டு நடப்பு, நாட்டு கொள்கை என ஒவ்வொரு அம்சத்தையும் பிரச்சாரவாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார்கள். இன்றைய பிரச்சாரங்களில் தந்திரமும் பொய்யும் புரட்டும் மலிந்துவிட்டன என்பதை தேர்தல் பிரச்சாரங்களையும், சிகரெட் கம்பெனிகளின் விளம்பரங்களையும் பார்த்தே தெரிந்துகொள்ளலாம். ‘பெரிய பெரிய’ ஜம்பவான்கள் சிகரெட்டை ஸ்டைலாகப் பிடித்து, ஊதித்தள்ளுவதை விளம்பரம் செய்கிறார்கள். அதனால் உடலுக்கு எந்தக் கெடுதியும் வராததுபோல் காட்டுகிறார்கள். ஆனால் சிகெரெட் பிடித்தால் நம் கதி என்னாகும் என்பதை சொல்லியா தெரிய வேண்டும்?

சொல்வதெல்லாம் பொய், பொய்யைத் தவிர வேறில்லை!

பிரச்சாரவாதிகள் வாயைத் திறந்தாலே மடைதிறந்த வெள்ளம்போல் பொய்கள் வந்து கொட்டுகின்றன. உதாரணத்திற்கு, 1543-ல் மார்ட்டின் லூத்தர் எழுதிய புத்தகத்தில் ஐரோப்பாவில் இருந்த யூதர்களைப் பற்றி எக்கச்சக்கமாக பொய்களை அள்ளிவீசினார்: “இவர்கள்தான் கிணற்றில் விஷம் கலந்தவர்கள், கொலைகாரர்கள், பிள்ளைகளை கடத்துபவர்கள் . . . பழிபாவத்திற்கு அஞ்சாத விஷமிகள், எதிரிகள், பழிவாங்கும் மூர்க்கர்கள், தந்திரம் மிக்க பாம்புகள், தேள்போல் கொட்டும், தீமை செய்யும் பிசாசின் பிள்ளைகள்.” அவர் பொய்களை சொன்னதோடு நிறுத்தாமல், பெயரளவில் கிறிஸ்தவர்களாய் இருந்தவர்களை வன்முறையில் இறக்கிவிட்டார். “அவர்களுடைய ஜெப ஆலயங்களையும் பள்ளிகளையும் கொளுத்துங்கள் . . . அவர்களுடைய வீடுகளை அழித்து தரைமட்டம் [ஆக்குங்கள்]” என்று தூண்டிவிட்டார்.

யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களை ஆராய்ச்சி செய்த ஒரு சமுதாய வரலாற்று பேராசிரியர் இவ்வாறு கூறினார்: “யூதர்களை வெறுத்தது அவர்களுடைய நடவடிக்கைகளைப் பார்த்து அல்ல. அவர்களுடைய குணங்களை அறிந்தும் அல்ல. ஊர் உலகத்தில் என்ன தப்பு நடந்தாலும் அதை யூதர்கள்மேல் தூக்கிப்போட்டார்கள். இயற்கை நாசத்திற்கும்சரி, நாட்டில் நடக்கும் பிரச்சினைகளுக்கும்சரி யூதர்களுடைய தலைகளையே உருட்டினார்கள்.”

“பொது” என்ற போர்வையில்

எதையும் பொதுப்படையாக கூறுவது பிரச்சாரவாதிகளின் மற்றொரு தந்திர உத்தி. இப்படி பொதுவாக கூறிவிடுவதால் உண்மைகள் மறைக்கப்படுகின்றன. குறிப்பிட்ட இனத்தவரை கேவலப்படுத்தவும் அல்லது அவர்களுக்கு விரோதமாக வெறுப்பை தூண்டவும் விஷயங்களை பொதுவில் கூறிவிடுவார்கள். சில ஐரோப்பிய நாடுகளில், “நாடோடிகள் [அல்லது குடியேறிவர்கள்] என்றாலே திருடர்கள்” என்று நினைக்கிறார்கள். ஏன் இப்படி?

ஒரு நாட்டில், யார், எது என்று எந்த விவரமும் இன்றி பொத்தம் பொதுவில் குற்றம் சாட்டப்பட்டது. அது வெளிநாட்டவர்கள் மீது அந்நாட்டு மக்களுக்கு “வெறுப்பு ஏற்படுத்தி, இனவெறியையும் கிளப்பிவிட்டது” என்கிறார் பத்திரிகை எழுத்தாளர் ரிச்கார்டொஸ் சோமெரீடிஸ். ஆனால், குற்றஞ்செய்வதில் உள்நாட்டுவாசி, அயல்நாட்டுவாசி என்ற பாகுப்பாடு இருப்பதாக தெரியவில்லை. இதை புள்ளிவிவரத்தோடு சோமெரீடில் விளக்கினார்: கிரீஸ் நாட்டில் “நடந்த 100 குற்றங்களில் 96 குற்றங்களை [கிரீஸ் நாட்டவர்கள்] செய்திருக்கிறார்கள். இந்தக் குற்றங்கள் பணத்திற்காக அல்லது வேறு ஏதோ காரணங்களுக்காக செய்யப்பட்டவை. இனவெறியால் செய்யப்பட்டவை அல்ல.” ஆனால், இக்குற்றங்களை குறிப்பிட்ட மக்களே செய்தார்கள் என்ற பொய்யான தகவலை தந்து, வேற்று இன மக்கள் மீது “தொடர்ந்து வெறுப்பையும், இனவெறியையும் வளர்ப்பது” மீடியாக்களே என்கிறார்.

“பெயர்” என்ற முத்திரையில்

சிலருக்கு அவர்கள் என்ன சொன்னாலும் மற்றவர்கள் ஆமாம் சாமி போட வேண்டும். யாராவது ஆமாம் சாமி போட மறுத்தால், உடனே அவர்கள்மீது இல்லாததையும் பொல்லாததையும் கூறி சந்திக்கு இழுப்பார்கள். ஏன் அவர்கள் தங்களுடைய கருத்தை மறுக்கிறார்கள் என்று யோசிக்கவே மாட்டார்கள். மக்கள் மத்தியில் ஒருவரைப் பற்றி அல்லது ஒரு தொகுதியினரைப் பற்றி, அல்லது ஒரு கருத்தைப் பற்றி தவறான எண்ணத்தை பரப்புவதற்காக ஏதேனும் ஒரு கெட்டப் பெயரை சூட்டிவிடுகிறார்கள். ஏனென்றால் இழிவான பெயரிட்டு அழைத்தால் டக்கென்று மனதில் பதிந்துவிடும். இப்படி கெட்டப் பெயர் இட்டவனுக்கு, தான் இட்டப் பெயர் பட்டென்று மக்கள் மனதில் பதிய வேண்டும் என்ற கெட்ட எண்ணம். இந்தப் பெயரை கேட்ட மாத்திரத்தில், உண்மையா என்றுக்கூட ஆராயாமல் ஒருவனை அல்லது அவனுடைய கருத்தை மக்கள் நிராகரித்து விட்டால், பெயரிட்டவனுக்கு ஏக கொண்டாட்டம்.

உதாரணத்திற்கு, சமீப வருடங்களில், மதப் பிரிவினரை எதிர்க்கும் (anti-sect) மனோபாவம் பல ஐரோப்பிய நாடுகளிலும், பிற நாடுகளிலும் படு வேகமாக பரவிவருகிறது. இதனால் சிறுபான்மை மதத்தினரை கண்டாலே பகைவர்களை காண்பது போல் ஆவேசத்தால் பொங்கி எழுகிறார்கள். ஏற்கெனவே அவர்கள்மீது இருக்கும் வெறுப்பில் இது எண்ணெய் ஊற்றுவதுபோல் உள்ளது. “மதப் பிரிவு” என்ற வார்த்தை “நச்”சென்று மனதில் பதியும் வரை பரப்பிக்கொண்டே இருக்கிறார்கள். 1993-ல் ஜெர்மன் பேராசிரியர் மார்டின் கிரீலெ இவ்வாறு எழுதினார்: “மதப் பிரிவு” என்றதும் “எதிர்ப்புவாதி” என்ற கருத்து நிலவுகிறது. “எதிர்ப்புவாதி ஒருவரை அன்று ஜெர்மனியில் எப்படி நடத்தினார்களோ அதேபோல் இன்றும் நடத்துகிறார்கள். அவரை முன்பு தீயிலிட்டு [உயிரோடு அழித்தார்கள்] . . . இன்று அவருடைய பெயரை கெடுத்து, அவரை தனிமைப்படுத்தி, அவருக்கு பொருளாதார நெருக்கடியை தந்து கொஞ்சம் கொஞ்சமாக கொல்கிறார்கள்.”

பிரச்சார ஆய்வுக் கழகம் இவ்வாறு கூறுகிறது: “ஒருவரைப் பற்றி தவறான கருத்துக்களை பரப்பியதால் ஏற்பட்ட பயங்கர விளைவுகளுக்கு உலக வரலாறே சான்று. அவை நம் ஒவ்வொருவருடைய மனநிலையையும் பாதித்தன. ஒருவருடைய புகழை குழிதோண்டி புதைத்தன, [மக்களை] சிறையில் அடைக்க வைத்தன, மனிதனுக்கு வெறியை மூட்டி போரில் ஈடுபட வைத்தன, சக மனிதனை ஈவிரக்கமின்றி கொலைசெய்ய வைத்தன.”

உணர்ச்சிகளை நோக்கி எய்யும் அம்புகள்

உண்மைகளை உரைக்கும்போது, அறிவுப்பூர்வமாக விவாதிக்கும்போது உணர்ச்சிகளுக்கு இடமில்லை என்பது உண்மையே. ஆனால் எறும்பு ஊர அம்மியும் தேயும் என்பதுபோல், தொடர்ந்து ஓதிக்கொண்டிருந்தால் அசையாத மனமும் அசைந்து கொடுக்கும். மக்கள் உணர்ச்சிகளை தூண்டிவிடுவதில் கைதேர்ந்த பிரச்சாரவாதிகள் உண்மைகளை திரித்து, வாழைப் பழத்தில் ஊசி நுழைப்பதைபோல் மக்கள் உணர்ச்சிகளில் நைசாக தங்கள் கருத்துக்களை நுழைத்துவிடுகிறார்கள்.

பயம் என்ற உணர்ச்சிக்கு முன் நல்லது கெட்டதை உணரும் அறிவு மழுங்கிவிடும். பொறாமை என்ற குணம் எப்படி செயல்படுமோ அதேபோல் பயம் என்ற குணமும் செயல்படும். பிப்ரவரி 15, 1999 தேதியிட்ட தி குளோப் அண்ட் மெயில் என்ற கனடா நாட்டு செய்தித்தாள் மாஸ்கோவில் நடந்த சம்பவத்தை வெளியிட்டது: “கடந்த வாரம் மாஸ்கோவில் மூன்று இளம் பெண்கள் தற்கொலை செய்துகொண்டார்கள். இப்பெண்கள் யெகோவாவின் சாட்சிகளை வெறித்தனமாக பின்பற்றியவர்கள் என்று ரஷ்ய செய்தி மீடியா உடனே கருத்து தெரிவித்துள்ளது.” “வெறித்தனம்” என்ற வார்த்தையை கவனியுங்கள். இப்படி இளம் பெண்களை தற்கொலை செய்ய தூண்டியதாக சொல்லப்படும் வெறித்தன மதத்தை அல்லது மத அமைப்பை கண்டு மக்கள் கண்டிப்பாக பயப்படுவார்கள். ஆனால் அந்தப் பெண்களுக்கும் யெகோவாவின் சாட்சிகளுக்கும் உண்மையில் தொடர்பு இருந்ததா?

குளோப் செய்தித்தாள் மேலும் இவ்வாறு கூறியது: “அந்தப் பெண்களுக்கும் [யெகோவாவின் சாட்சிகளுக்கும்] எந்தவித தொடர்பும் இல்லை என்பதை போலீசார் பிறகு தெரிவித்தார்கள். ஆனால் அதற்குள் மாஸ்கோ டிவி சேனலில் மதப் பிரிவினரை வசைபாடி, நாஸி ஜெர்மனியில் யெகோவாவின் சாட்சிகளுக்கும் ஹிட்லருக்கும் தொடர்பு இருந்ததாக கதைகட்டிவிட்டது. ஆயிரக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் நாஸிக்களால் மரண முகாம்களில் கொல்லப்பட்டார்கள் என்ற வரலாற்று அத்தாட்சிகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு, வதந்தியை பரப்பிவிட்டது.” இப்படி வதந்தியை பரப்பியதால், உண்மை தெரியாத உள்ளங்கள், பயந்துபோன மனங்கள் யெகோவாவின் சாட்சிகளை தற்கொலை கூட்டத்தினராக அல்லது நாஸிக்களின் கூட்டாளிகளாக நினைத்திருக்குமே!

வெறுப்பு என்ற உணர்வை தூண்டுவதில் பிரச்சாரவாதிகள் வல்லவர்கள். இவர்கள் வெறுப்பை தூண்டிவிட “விஷம் கக்கும்” வார்த்தைகளையே தேர்ந்தெடுப்பார்கள். குறிப்பிட்ட இனத்தினர் மீதோ, நிறத்தினர் மீதோ, மதத் தொகுதியினர் மீதோ வெறுப்பை தூண்டிவிடும் நச்சு வார்த்தைகள் ஏராளமாக உள்ளன.

கர்வம் என்ற குணத்தை நோக்கியும் சில பிரச்சாரவாதிகள் அம்பு எய்கிறார்கள். கர்வம் கொள்ள செய்யும் வார்த்தைகளை உபயோகிப்பார்கள். உதாரணத்திற்கு பின்வரும் வாக்கியங்களில் கர்வம் கொள்ள வைக்கும் வார்த்தைகளை கவனியுங்கள்: “அது அறிவாளிகளுக்குத்தான் . . . தெரியும்.” “இதெல்லாம் உன்னைப் போன்ற மெத்த படித்த மேதாவிக்குத்தான் . . . புரியும்.” இப்படியெல்லாம் சொன்னால், மற்றவர்களுக்கு முன் நாம் முட்டாள்களோ என்ற பயத்தை கொடுக்கும். இப்படி செய்தால் மக்கள் கண்மூடித்தனமாக செயல்படுவார்கள் என்பது பிரச்சாரவாதிகளுக்கு நன்றாகவே தெரியும்.

கோஷங்களும் சின்னங்களும்

ஒருவருடைய நிலையை அல்லது குறிக்கோளை எடுத்துரைக்க ஏதேதோ கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. கோஷங்களில் விஷயங்கள் தெளிவின்றி இருப்பதால் எளிதில் ஏற்றுக்கொள்ள படுகிறது.

உதாரணத்திற்கு நாட்டில் பெரும் பிரச்சினைகள் அல்லது போர் வரும்போது தலைவர்கள் பின்வரும் கோஷங்களை எழுப்பலாம்: “நல்லதோ, கெட்டதோ இது என் நாடு,” “இது என் தந்தை நாடு,” “இது என் தாய்நாடு,” “இது என் மதம்,” “இது என் குடும்பம்” அல்லது “உயிர் நாட்டிற்கு, உடல் மண்ணிற்கு.” இத்தகைய கோஷங்களை எழுப்பும்போது, மக்கள் நாட்டில் ஏன் பிரச்சினை வந்தது அல்லது போர் மூண்டது என்று கவனமாக ஆராய்வார்களா? அல்லது கோஷங்களை அப்படியே ஏற்றுக்கொள்வார்களா?

முதலாம் உலகப் போரின்போது, வின்சன்ட் சர்ச்சில் இவ்வாறு கூறினார்: “இதோ அமைதியாக வேலைசெய்துகொண்டிருக்கும் இந்த விவசாயிகள் கூட்டத்திற்கும் இந்த தொழிலாளர் கூட்டத்திற்கும் ஒரேவொரு சின்ன சிக்னல் கொடுத்தால் போதும், உடனே சீறிப்பாயும் சிங்கங்களாய் மாறி தங்கள் நாட்டு எதிரிகளை கொன்று குவிப்பார்கள்.” மக்களை ஏதாவது செய்ய சொன்னால் ஏன், எதற்கு என்று எதையும் யோசிக்காமல் உடனே செய்தார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

பிரச்சாரவாதிகள் தங்கள் கருத்துக்களை பரப்ப பல்வேறு சின்னங்களை வைத்திருக்கிறார்கள். இது 21 முறை வான் நோக்கி சுடப்படும் இராணுவ மரியாதையாக இருக்கலாம், இராணுவ சல்யூட்டாக இருக்கலாம், ஒரு கொடியாகவும் இருக்கலாம். பிரச்சாரவாதிகள் பெற்றோரின் பாசத்தைக்கூட விட்டுவைப்பதில்லை. தந்தை நாடு, தாய் நாடு, தாய் திருச்சபை போன்ற பாச வார்த்தைகளையும் சேர்த்து தங்கள் எண்ணங்களை சாதித்துவிடுகிறார்கள்.

தந்திரமாக, நாசூக்காக செய்யப்படும் பிரச்சாரம், ஒருவருடைய யோசிக்கும் திறனை, பகுத்தறிவையும் மழுங்கடித்து, அவரை கூட்டத்தோடு கோவிந்தா போட வைத்துவிடும். இத்தகைய பிரச்சாரத்தில் சிக்காமல் இருப்பது எப்படி?

[பக்கம் 8-ன் சிறு குறிப்பு]

தந்திரமாக, நாசூக்காக செய்யப்படும் பிரச்சாரம் யோசிக்கும் திறனையும் பகுத்தறிவையும் மழுங்கடிக்கும்

[பக்கம் 7-ன் பெட்டி/படம்]

யெகோவாவின் சாட்சிகள் செய்வது பிரச்சாரமா?

யெகோவாவின் சாட்சிகள் யூதர்களுடைய கருத்துக்களை பரப்புவதாக சில எதிர்ப்பாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். சாட்சிகள் செய்யும் ஊழியத்தை கம்யூனிச கருத்துக்களை பரப்பும் செயல் என்று சிலர் பழிபோடுகிறார்கள். யெகோவாவின் சாட்சிகளுடைய சேவை, “அமெரிக்க அரசின்” நலன்களையும், கருத்துக்களையும் பரப்பும் நோக்கில் செய்யப்படுவதாக கூறுகிறார்கள். சமுதாயத்தை, பொருளாதாரத்தை, அரசியலை, சட்ட ஒழுங்கை மாற்றும் எண்ணத்தோடு, அரசாங்கத்திற்கு எதிராக கலகம் செய்யும், நாட்டில் அமைதியைக் கெடுக்கும் கும்பல் என்று சாட்சிகளை சாடுகிறார்கள். எப்படி கம்யூனிச கருத்துக்களையும் பரப்பிக்கொண்டு, அமெரிக்க அரசுக்காக செயல்பட முடியும்? இப்படி இந்தக் குற்றச்சாட்டுகள் ஒன்றுக்கொன்று முரண்படுவதிலிருந்தே இவை உண்மை அல்ல என்பது வெட்டவெளிச்சம்.

மேற்கூறிய எந்தக் குற்றத்தையும் யெகோவாவின் சாட்சிகள் செய்வதில்லை. இவை அபாண்டமான பொய். இயேசு தமது சீஷர்களுக்கு பின்வரும் கட்டளையைக் கொடுத்தார்: “பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.” (அப்போஸ்தலர் 1:8) இந்தக் கட்டளையை யெகோவாவின் சாட்சிகள் பயபக்தியாக பின்பற்றுவதால் சாட்சிக்கொடுக்கும் ஊழியத்தை செய்கிறார்கள். பரலோக ராஜ்யத்தின் மூலம் கடவுள் இந்த முழு உலகிற்கும் சமாதானத்தை கொண்டுவரப்போகிறார் என்ற நல்ல செய்தியை “மாத்திரம்” எடுத்துசொல்கிறார்கள்.—மத்தேயு 6:10; 24:14.

யெகோவாவின் சாட்சிகள் நாட்டிற்கும், சட்ட ஒழுங்கிற்கும் எந்தவிதத்திலும் கெடுதல் செய்யாத கிறிஸ்தவ சமுதாயத்தினர் என்ற உண்மையை அவர்களை அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

யெகோவாவின் சாட்சிகளால் சமுதாயத்திற்கு ஏற்பட்ட நன்மைகளை பல பத்திரிகையாளர்களும், நீதிபதிகளும், இன்னும் பலரும் பாராட்டியிருக்கிறார்கள். இதோ சில உதாரணங்கள். தென் ஐரோப்பாவில் நடந்த யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாடு ஒன்றில் கலந்துகொண்ட ஒரு பத்திரிகையாளர் இவ்வாறு கூறினார்: “இவர்கள் குடும்ப பாசம் மிக்கவர்கள். அன்பும் பண்பும் மிக்க இவர்கள் மனச்சாட்சியின்படி வாழ்கிறார்கள். இத்தகைய நல்ல பண்புகளை கற்றுள்ள இவர்கள் எந்தவிதத்திலும் மற்றவர்களுக்கு தீங்குசெய்வதில்லை.”

யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி ஒரு காலத்தில் தவறாக நினைத்திருந்த இன்னொரு பத்திரிகையாளர் இவ்வாறு கூறினார்: “இவர்கள் வாழும் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஒரு பாடம். ஒழுக்க தராதரங்களையும், நீதி தராதரங்களையும் இவர்கள் மீறுவதில்லை.” அரசியல் அறிஞர் யெகோவாவின் சாட்சிகளை இவ்வாறு பாராட்டுகிறார்: “இவர்கள் மற்றவர்களிடத்தில் பண்போடும், பணிவோடும், அன்போடும் நடந்துகொள்கிறார்கள்.”

அரசாங்க அதிகாரிகளின் சொல்கேட்டு நடப்பது முக்கியம் என்பதை யெகோவாவின் சாட்சிகள் கற்றுத்தருகிறார்கள். இவர்கள் அரசாங்க சட்டத்திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கும் நல்ல குடிமக்கள். பைபிள் சொல்படி, நேர்மை, உண்மை, தூய்மை போன்ற கடமைகளை தவறாது ஆற்றுபவர்கள். ஒழுக்கம் மிக்க வாழ்க்கை வாழும் இவர்கள், மற்றவர்களுக்கும் ஒழுக்கமாக வாழ சொல்லித்தருகிறார்கள். இவர்கள் எந்தவித பேதமுமின்றி, எந்நாட்டு மக்களும் ஒரு தாய் மக்களே என்று வாழ்கிறார்கள். அரசியல் புரட்சிகள், ஆர்ப்பாட்டங்கள் என எதிலும் கலந்துகொள்ள மாட்டார்கள். அரசாங்க அதிகாரிகளின் சட்டங்களுக்கு அடிபணிந்து நடப்பதில் யெகோவாவின் சாட்சிகள் சிறந்துவிளங்குகிறார்கள். அதே சமயத்தில் எல்லா அதிகாரிகளுக்கும் மேலான அதிகாரி, சர்வ வல்ல இறைவன் யெகோவாவே என்றும், அவர் இந்தப் பூமியில் நிலையான சமாதானத்தையும், நீதியான ஆட்சியையும் கொண்டுவருவார் என்றும் பொறுமையோடு காத்திருக்கிறார்கள்.

யெகோவாவின் சாட்சிகள் செய்வது கல்விபுகட்டும் சேவை. பைபிளை பாடப் புத்தகமாக வைத்து, உலகெங்கும் உள்ள மக்களுக்கு இவர்கள் பைபிள் நெறிகளை போதிக்கிறார்கள். அதனால் மக்கள் நல்நடத்தையை அறிந்து, ஒழுக்கம் தவறாமல் வாழ்கிறார்கள். இவர்கள் மக்களுக்கு கற்றுத்தரும் நல்ல பண்புகள், குடும்ப வாழ்க்கையை நல்லபடியாக நடத்தவும், இளம் பிள்ளைகளுக்கு வரும் பிரச்சினைகளை சமாளிக்கவும் உதவுகின்றன. மக்கள் கெட்ட பழக்கங்களிலிருந்து விடுபடவும் உதவுகிறார்கள். மற்றவர்களோடு நட்போடு பழகும் சிறந்த கலையையும் மக்களுக்குச் சொல்லித்தருகிறார்கள். சாட்சிகளுடைய இத்தகைய சேவைக்கு “பிரச்சாரம்” என்ற முத்திரையைக் குத்த முடியுமா? கருத்துக்கள் சரமாரியாக பரிமாறப்படும் இந்தக் காலத்திலும், “பிரச்சாரத்திற்கும், கல்விக்கும் வித்தியாசம் உண்டு” என்கிறது தி உவர்ல்டு புக் என்ஸைக்ளோப்பீடியா.

[படங்கள்]

யெகோவாவின் சாட்சிகளுடைய புத்தகங்கள் குடும்ப தராதரங்களையும் ஒழுக்க தராதரங்களையும் கற்பிக்கின்றன

[பக்கம் 5-ன் படங்கள்]

போரில் ஈடுபடவும் சிகெரட் பிடிக்கவும் தூண்டும் பிரச்சாரத்தால் பல உயிர்கள் பலியாகின்றன