Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விஷம பிரச்சாரம்

விஷம பிரச்சாரம்

விஷம பிரச்சாரம்

“உண்மை வெளியே கிளம்ப தன் காலில் செருப்பை மாட்டுவதற்குள், பொய் பாதி உலகை சுற்றி முடித்துவிடும்.”—கூறியவர் மார்க் டுவைன்.

அந்த ஆசிரியை ஏழு வயது மாணவனை நோக்கி, “அடேய் கேடுகெட்ட யூதனே!” என்று ஆவேசமாக கத்தி, பளார் என்று கன்னத்தில் அறைந்தார். அவருடைய ஆத்திரம் அதோடு தணியவில்லை. வகுப்பில் உள்ள எல்லா மாணவர்களும் வரிசையில் வந்து, அந்த சிறுவனின் முகத்தில் காறித்துப்பும்படி கூறினார்.

அந்தச் சிறுவனும், அவனுடைய பெற்றோரும் யூதர்கள் அல்ல. அவர்கள் யூத மத நம்பிக்கை உடையவர்களும் அல்ல. அதோடு அந்த ஆசிரியை அந்த மாணவனுடைய சொந்த அத்தை. அப்படியென்றால் அந்த ஆசிரியை சொன்னது அபாண்டமான பொய். அச்சமயத்தில் யூதர்களை பற்றி தவறான கருத்துக்களும், அவர்கள் மீது பகையும் காட்டுத்தீபோல் பரவிக்கொண்டிருந்தன. அவற்றை அந்த ஆசிரியை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, அந்த மாணவன்மீது வெறுப்பை தூண்டிவிட்டார். அந்த மாணவனுடைய குடும்பத்தினர் யெகோவாவின் சாட்சிகள். யெகோவாவின் சாட்சிகளை அந்த ஆசிரியையும், வகுப்பு மாணவர்களும் அடியோடு வெறுக்க அவர்கள் சென்ற சர்ச்சின் பாதிரியாரே காரணம். அவரே அவர்கள் மனதில் பகை என்ற தீயை மூட்டி, பல வருடங்களாய் எண்ணெய் ஊற்றி வந்தார். இந்த சிறுவனுடைய பெற்றோரை கம்யூனிஸ்டுகள் என்றும், அமெரிக்க உளவாளிகள் என்றும் ஏகத்திற்கு பழி சுமத்தினார்கள். பாவம் அந்த “கேடுகெட்ட யூதனின்” முகத்தில் காறித்துப்புவதற்காக வகுப்பே திரண்டு, ஆவேசமாக வரிசையில் காத்திருந்தது.

உயிர் தப்பிய அந்தச் சிறுவன், சுமார் 60 வருடங்களுக்கு முன் தனக்கு நடந்த கொடுமைகளை இன்று நம்மிடம் கூறினார். ஆனால், ஜெர்மனிலும், அதன் அண்டை நாடுகளிலும் குடியிருந்த 60 லட்சம் யூதர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடூரங்களை சொல்ல வாய்ப்பின்றி போனது. அவர்களை ஜெர்மன் நாட்டு நாஸிக்கள் தங்களுடைய முகாம்களிலும், விஷ வாயுக்கள் நிரப்பிய அறைகளிலும் அடைத்து கொன்றார்கள். இதற்கு முக்கிய காரணம் யூதர்களை பற்றி செய்யப்பட்ட விஷம பிரச்சாரமே ஆகும். யூதர்களுக்கு எதிராக இஷ்டத்திற்கு பரப்பிய தீய பிரச்சாரத்தால் பலர் உண்மையா என்றுகூட யோசிக்காமல் அவர்களை பகைவர்களாக நினைத்தார்கள். யூத இனத்தையே அடியோடு அழிப்பதுதான் நியாயம் என்று கொதித்தெழுந்தார்கள். இந்த தீய பிரச்சாரமே கொலைக்கருவியாக மாறி மக்களை பெரும் எண்ணிக்கையில் கொன்று குவித்தது.

தீய கருத்துக்களை பல விதங்களில் பகிரங்கமாக பிரச்சாரம் செய்வார்கள். சுஸ்திக் போன்ற சின்னங்கள் மூலமாகவும் பரப்புவார்கள், சாதாரண ஒரு ஜோக்கை சொல்வதைப் போல் நாசூக்காகவும் பரப்புவார்கள். சர்வாதிகாரிகளும், அரசியல்வாதிகளும், பாதிரிமார்களும், விளம்பரதாரர்களும், வியாபாரிகளும், பத்திரிகையாளர்களும், ரேடியோ, டிவி பிரபலங்களும், பொதுஜன தொடர்பு அதிகாரிகளும் இன்னும் இவர்களை போன்றோரும் மக்களை மசியவைக்கும் உத்திகளையே கையாளுகிறார்கள். அதனால் இவர்களுடைய சிந்தனைகளையும், செயல்களையும் மக்கள் கண்மூடித்தனமாக பின்பற்றுகிறார்கள்.

‘குடி குடியைக் கெடுக்கும்,’ ‘குடித்துவிட்டு வண்டி ஓட்டாதீர்’ போன்ற நல்ல சமூக கருத்துக்கள் பரப்பப்படுவது உண்மையே. ஆனால், மக்களிடையே ஜாதி கலவரத்தையும், சிறுபான்மை மதத்தினர்மேல் பகையையும் தூண்டுகிற தீய பிரச்சாரங்களை செய்வது கொடுமையிலும் கொடுமை. சிகரெட் போன்ற உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களைக்கூட விளம்பர உத்தியால் விற்றுவிடுகிறார்கள். “நம்மை கண்மூடித்தனமாக செயல்பட செய்யும் பிரச்சாரங்கள் தினம்தினம் குவிந்தவண்ணம் உள்ளன. இவை ஏதோ கருத்து பரிமாற்ற விவாதங்களோ, பட்டி மன்றங்களோ அல்ல. உண்மைகளை திரித்து, நம்முடைய உணர்ச்சிகளை குறிவைத்து எய்யப்படும் அம்புகள். பிரச்சாரங்களால் நன்மையோ தீமையோ, நம்முடைய காலம் பிரச்சாரங்களின் காலம் என்பதை மறுக்க முடியாது” என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்களான அன்டனி பார்ட்கானஸும், ஈலைட் அன்டர்சனும்.

பல நூற்றாண்டுகளாக எவ்வாறு பிரச்சாரங்கள் மூலம் மக்களுடைய சிந்தனைகளும், செயல்களும் மாற்றப்பட்டன? தீய பிரச்சாரங்களில் சிக்காமல் இருப்பது எப்படி? நம்பகமான செய்தி கிடைக்க வழி உண்டா? இக்கேள்விகளுக்கும், இதுபோன்ற கேள்விகளுக்கும் விடைகளை அடுத்த கட்டுரைகளில் காண்க.

[பக்கம் 3-ன் படம்]

யூதர்களை அடியோடு அழிக்க பிரச்சாரம் செய்யப்பட்டது