Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இரு ஆறுகளின் கதை

இரு ஆறுகளின் கதை

இரு ஆறுகளின் கதை

இந்தியாவிலுள்ள விழித்தெழு! நிருபர்

இந்திய துணைக்கண்டத்திலுள்ள இரு ஜீவ நதிகள் கோடிக்கணக்கானோருக்கு ஜீவனளித்து வருகின்றன. உலகிலேயே மிக உயரமான மலைத்தொடரில், மிகப்பெரிய பனிக்கட்டிகள் இருக்கும் இடங்களில் அருகருகே உற்பத்தியாகும் இந்த ஆறுகள் முக்கியமாக இரண்டு நாடுகளின் வழியாக 2,400 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரம் கம்பீரமாக பிரவாகித்து ஓடுகின்றன. அவை இரண்டும் வெவ்வேறு கடல்களில் வந்து கலக்கின்றன. இரண்டு பண்டைய நாகரிகங்கள் இந்த இரண்டு ஆறுகளின் அருகே தோன்றின. ஒவ்வொரு ஆறும் முக்கியமான ஒரு மதத்தின் பிறப்பை கண்டிருக்கிறது. அவை தரும் வளங்களுக்காக மனிதன் அவற்றை போற்றிவந்திருக்கிறான். ஒன்றை மனிதன் தெய்வமாக வழிபடுகிறான். அவற்றின் பெயர்கள்: சிந்து, கங்கை.

மனிதன் வாழ்வதற்கும் வளம் கொழிப்பதற்கும் தண்ணீர் அவசியமாக இருப்பதால் பண்டைய நாகரிகங்கள் ஆற்றங்கரையில்தான் தோன்றியுள்ளன. பண்டைய புராணங்களில் ஆறுகளை தெய்வங்களாக நினைத்து வழிபட்டனர். சிந்துக்கும் கங்கைக்கும்கூட இந்து புராணங்களில் தனி இடம் உண்டு. வற்றாத ஜீவ நதியாய் பலகோடி மக்களுக்கு ஜீவன் அளிக்கும் கங்கையை இந்திய மக்கள் கங்கா மாதா என்று பாசத்தோடு அழைக்கின்றனர்.

இந்துக்களுக்கும் புத்த மதத்தினருக்கும் 6,714 மீட்டர் உயரமுள்ள கைலாச மலையும், அதற்கு அருகில் உள்ள மாப்பம்யும்கொ ஏரியும் தெய்வங்கள் வாழும் இடங்களாகும்; திபெத்தில் இந்த ஏரி மானஸரோவர் என்றும் அழைக்கப்படும். நான்கு பெரிய ஆறுகளும் ஏரியிலிருந்து மிருகங்களின் வாயின் வழியாக வந்ததாக நீண்ட காலமாக நம்பப்பட்டு வந்தது. சிங்க நதி சிந்து, மயில் நதி கங்கை. திபெத்து நாட்டவர் அயல்நாட்டிலிருந்து வந்து நிலப்பகுதிகளை ஆராய்ச்சி செய்பவர்களை உள்ளே வர அனுமதிக்கவில்லை. ஆகவே 1811-ல் கிழக்கு இந்திய கம்பெனியில் வேலைபார்த்த ஆங்கிலேய நாட்டவரான கால்நடை மருத்துவர் மாறு வேடங்களில் அந்தத் தேசம் முழுவதிலும் பயணம் செய்தார். அவர் என்ன கண்டுபிடித்தார்? மானஸரோவர் ஏரியிலிருந்து எந்த நதியும் புறப்பட்டு வரவில்லை, ஆனால் மலைகளில் பிறந்த சிற்றாறுகள் சில அதற்குள் வந்து விழுகின்றன என்பதாக அவர் அறிக்கை செய்தார். 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான் சிந்து நதி, கங்கை நதியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. சிந்து திபெத்துவில் இமாலய மலையின் வடக்கே இருந்தும், கங்கை வட இந்தியாவிலுள்ள ஒரு பனிக்குகையிலிருந்தும் உற்பத்தியாகி வருகின்றன.

பண்டைய நாகரிகங்கள் தோன்றிய இடம்

பண்டைய இந்திய துணைக்கண்டத்தில் சிந்து சமவெளியில் மக்கள் குடியேறினர் என்று சொல்லப்படுகிறது. இங்கே ஹரப்பா மொஹஞ்சதாரோ என்னுமிடங்களில் புதைப் பொருள் ஆய்வாளர்கள் மிகவும் உயர்ந்த நாகரிகத்தின் இடிபாடுகளைக் கண்டுபிடித்திருக்கின்றனர். இப்படிப்பட்ட கண்டுபிடிப்புகள் 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தின; அதாவது இந்தியாவில் ஆரம்பத்தில் வந்து குடியேறியவர்கள் நாகரிகம் தெரியாத நாடோடிகள் என்ற கருத்தை அவை மாற்றிவிட்டன. 4,000 ஆண்டுகளுக்கு முன்பே சிந்து நாகரிகம் மெசபடோமியா நாகரிகத்திற்கு நிகராக விளங்கியது. தெருக்கள் அகலமாகவும் நேராகவும் ஒன்றோடொன்று குறுக்கே வெட்டும்படியும் அமைக்கப்பட்டிருந்தன. பல அடுக்கு மாடிகள் கொண்ட வீடுகள் வரிசையாக கட்டப்பட்டிருந்தன. குளியலறையிலிருந்து வெளியேறும் கழிவு நீரகற்ற குழாய்கள் இருந்தன. கழிவுகளை அகற்ற அவர்கள் செப்டிக் டாங்குகளைக்கூட கட்டியிருந்தனர். மிகப் பெரிய களஞ்சியங்கள், கோவில்கள், குளங்கள் ஆகிய அனைத்தும் மிக உயர்ந்த நகர நாகரிகம் அங்கிருந்ததை சுட்டிக்காட்டுகின்றன. மெசபடோமியா மற்றும் மத்திய கிழக்கிலிருந்த நாடுகளோடு வியாபார தொடர்பு இருந்ததற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் நீளமுள்ள சிந்து நதி அரபிக் கடலில் கலந்ததால் கடல் வாணிபம் சிறப்பாக நடைபெற்றிருக்கலாம்.

நூற்றாண்டுகள் கடந்து சென்றபோது ஒருவேளை நிலநடுக்கங்கள் அல்லது பெரும் வெள்ளப் பெருக்குகள் போன்ற இயற்கை பேரழிவுகள் காரணமாக சிந்து பள்ளத்தாக்கின் நாகரிகம் பலமிழந்திருக்க வேண்டும். இதனால் பொதுவாக ஆரியர்கள் எனப்படும் நாடோடி இனத்தவர் மத்திய ஆசியாவிலிருந்துவந்து இவர்கள்மீது படையெடுத்தனர். இவர்கள் ஆற்றினருகே இருந்த நகரவாசிகள் பெரும்பாலானோரை துரத்திவிட்டபடியால் சிந்து நதியைச் சுற்றி வளர்ந்திருந்த பண்டைய கலாச்சாரம் இப்போது தென்னிந்தியாவை நோக்கி நகர்ந்தது. இங்கே இன்று வரையாக திராவிட இனத்தவரே ஒரு முக்கிய இந்திய இனத்தொகுதியாக வாழ்ந்து வருகின்றனர்.

கிழக்கே பயணித்த ஆரியர்கள் கங்கை சமவெளியில் குடியிருக்க ஆரம்பித்தனர். இவ்வாறாக இந்திய துணை கண்டத்தில் குடியேறிய ஆரியர்கள் வட இந்தியாவில் ஒரு கலாச்சாரத்தை உருவாக்கிக் கொண்டனர். அந்தக் கலாச்சாரத்தில் கங்கை நதிக்கு முக்கிய இடம் அளித்தனர். அது இன்றுவரை தொடர்கிறது.

இரு ஆறுகள், இரு சமயங்கள்

சிந்து சமவெளி நாகரிகத்திலும் மெசபடோமியா நாகரிகத்திலும் மதப் பழக்கங்களில் ஒற்றுமைகள் இருப்பதை புதைப்பொருள் ஆய்வுகள் காட்டுகின்றன. ஆரியர்களின் மதம் என்பதாக நீண்டகாலமாக நம்பப்பட்டுவந்த இந்து சமயத்தின் ஒரு சில முத்திரைகளை சிந்து நகரங்களின் இடிபாடுகளில் கண்டுபிடித்திருக்கிறார்கள். எனவே ஆரியர்கள் சிந்து சமவெளிக்கு வருவதற்கு முன் வாழ்ந்த மக்களின் மத நம்பிக்கைகளும் ஆரியர்களின் மதநம்பிக்கைகளும் இரண்டர கலந்தன. இதன் விளைவாக இந்து சமயம் தோன்றியது. ஆரியர்கள் முதலில் சிந்து நதியைத்தான் புனிதமானதாக கருதினர், ஆனால் அவர்கள் கிழக்கே பயணப்பட்டு கங்கை ஆற்றோரங்களில் குடியேறியபோது கங்கை ஆற்றை வழிபட ஆரம்பித்தனர். நூற்றாண்டுகள் கடந்துசென்றபோது கங்கை ஆற்றின் கரையோரத்தில் அமைந்த ஹரித்துவார், அலகாபாத், வாரனாசி ஆகியன இந்து சமயத்தின் புனித ஸ்தலங்களாக ஆயின. இன்று கோடிக்கணக்கில் யாத்திரீகர்கள் இந்த ஸ்தலங்ககளுக்கு திரண்டுவந்து கங்கை நீரில் ஸ்நானம் செய்கின்றனர். இந்த ஸ்தலங்களின் வழியே செல்லும் தங்களது நோயை தீர்த்து, பாவத்தைப் போக்குவதாக மக்கள் என்று நம்புகிறார்கள்.

இந்து சமயம் சிந்துவில் ஆரம்பமானது, புத்த சமயம் கங்கை அருகே ஆரம்பமானது. வாரனாசிக்கு அருகே உள்ள சாரநாத்தில்தான் புத்தர் என்றழைக்கப்படும் சித்தார்த்த கெளதமன் முதல் உபதேசத்தை செய்தார். அந்த ஆற்றின் அகலத்தை அவர் 79 வயதில் நீந்திச் சென்றதாக சொல்லப்படுகிறது.

இன்று இந்த ஆறுகளின் சோகநிலை

4,000 ஆண்டுகளுக்கு முன்பு உயிர் வாழ்வதற்காக சிந்து, கங்கையின் கரைகளில் வந்து மக்கள் குடியேறினர். ஆனால், இன்றோ இந்த ஆறுகள் சோகத்தில் ஓடுகின்றன. இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம் ஆகிய நாடுகளில் வாழும் மக்களின் உயிரைக் காப்பாற்ற இந்த நதிகளை நல்லவிதத்தில் கவனிப்பது அவசியமாகும். (பக்கம் 16, 17-ல் வரைபடம் காண்க.) பல நாடுகள் வழியாக பாய்ந்து வருவதால் சர்வதேச ஒப்பந்தங்கள் செய்வது அவசியமாய் இருந்திருக்கிறது. பாகிஸ்தான் சிந்து நதியின் மீது மூன்று கிலோமீட்டர் நீளமும் 143 மீட்டர் உயரமுமான டார்பெல்லா அணையை நீர்ப்பாசனத்துக்காக கட்டியுள்ளது. உலகில் உள்ள மிகப் பெரிய அணைகளில் இதுவும் ஒன்று. இதற்காக 148.5 மில்லியன் கனசதுர மீட்டர் மண் நிரப்பப்பட்டு கட்டப்பட்டுள்ளது. கங்கையில் போதிய அளவு தண்ணீர் இருந்தால்தான் கல்கத்தா துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்து நல்ல முறையில் நடக்கும். இதற்கு கங்கை நதியில் கட்டப்பட்ட ஃபராகா அணை உதவுகிறது.

மற்ற நதிகளைப் போலவே கங்கை நதியும் மூச்சு திணறுவதற்கு தூய்மைக்கேடே முக்கிய காரணம். ஆகவே 1984-ல் கங்கை செயல்திட்டத்தை (Ganga Action Plan) இந்திய அரசு ஏற்படுத்தியது. கழிவு நீரை உரமாக அல்லது எரிபொருளாக மாற்றுவது, நதியில் போய் விழும் சாக்கடை நீரை வேறு பக்கம் திருப்பி விடுவது, இரசாயன கழிவுகளைக் கையாள சுத்திகரிப்பு மையங்களைக் கட்டுவது ஆகியவற்றுக்கு கவனம் செலுத்தப்பட்டது.

நதிகள் தங்கள் அழகையும் தூய்மையையும் இழந்து சோகத்தில் மூழ்கியுள்ளன. இவற்றை சோகத்திலிருந்து மனித ஏஜென்ஸிக்களால் மீட்க முடியாது. ஆனால், வெகு சீக்கிரத்தில் கடவுள் தமது ஆட்சியின் கீழ் பூமி முழுவதையும் அழகு கொஞ்சும் பூங்காவனமாக மாற்றும்போது இந்த நதிகளுக்கு பழைய அழகையும் தூய்மையையும் கொடுப்பார். அப்போது அவை சந்தோஷத்தால் தங்கள் படைப்பாளருக்கு ‘முன்பாக . . . கைக்கொட்டும்.’—சங்கீதம் 98:8.

[பக்கம் -ன் பெட்டி/தேசப்படம்16, 17]

சிந்து மகா நதி

துணை ஆறுகள் பல சேர்ந்து சிந்து என்ற மகா நதியாக பாய்வதால் உண்மையில் அது எங்கிருந்து உற்பத்தியாகி வருகிறது என்பது பற்றி வாக்குவாதம் நடந்திருக்கிறது. இமாலய மலை உயரத்தில் இருந்துதான் இந்த மாபெரும் நதி புறப்பட்டு வருகிறதென்பது உறுதி. வடமேற்கு திசையில் பாய்ந்து ஓடி, வழி நெடுக மற்ற துணை ஆறுகளோடு கலந்து “உலக கூரை”யான திபெத்தின் உயர்ந்த பீடபூமியின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்துக்கு 320 கிலோமீட்டர் தொலைவு ஓடுகிறது. இந்த நதி லடாக் பகுதியில் இந்திய எல்லை நோக்கிவரும்போது மலைகளின் வழியாக பாய்ந்து வருகிறது. அது வரும் பாதையிலுள்ள பாறைகளை அரித்து இமாலய மற்றும் காரகோரம் மலைத்தொடருக்கு இடையே ஒரு ஆற்றுப்படுகை உண்டுபண்ணுகிறது. அது, இந்தியாவுக்குள் 560 கிலோமீட்டர் தொலைவு வருவதற்குள் ஏறக்குறைய 3,700 மீட்டர் கீழிறங்கி பாய்ந்துவருகிறது. தண்ணீர் இவ்விதமாக பாய்ந்துவருகையில் அது வடக்கே பயணித்து இமாலய மலையின் மேற்கு முனையில் திடீரென பாதையை மாற்றிக்கொள்கிறது. இங்கே ஹிந்து குஷ்யிலிருந்து பாய்ந்துவரும் ஜில்லட் என்ற ஒரு பெரிய நதி இதில் வந்து சேர்ந்துகொள்கிறது. அங்கிருந்து தண்ணீர் பாகிஸ்தானில் தென்பக்கமாக ஓடுகிறது. மலைகளின் நடுவே சீறிக்கொண்டு வந்து வளைந்து நெளிந்து சிந்து கடைசியாக சமவெளிகளை அடைந்து பஞ்சாப் வழியாக ஓடுகிறது. இந்தப் பெயரின் பொருள் “ஐந்து நதிகள்” என்பதாகும். பியாஸ், சட்லெஜ், ரவி, ஜீலம், சீனாப் ஆகிய ஐந்து பெரிய கிளை ஆறுகள் ஒரு இராட்சதனின் விரிந்த கைவிரல்களைப் போல காட்சியளிக்கின்றன. இவை சிந்து நதியோடு போய் சேர்ந்துகொண்டு 2,900 கிலோமீட்டருக்கும் மேல் செல்லும் அதன் பயணத்தின் முடிவு வரை செல்கின்றன.

வணங்கப்படும் கங்கை

இமாலய மலையில் சிந்து உற்பத்தியாகும் இடத்திலிருந்து தெற்கே சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் ஆரம்பமாகும் கங்கை 2,500 கிலோ மீட்டருக்கும் மேல் பயணம் செய்து வங்கக் கடலில்போய் விழுகிறது. 3,870 மீட்டருக்கு அதிகமான உயரத்தில், பார்ப்பதற்கு ஒரு மாட்டின் வாய் போலிருக்கும் ஒரு மாபெரும் பனிக்கட்டியிலிருந்து ஒரு சிற்றாறு புறப்பட்டு வேகமாக பாய்ந்து வருகிறது. இந்தியில் இந்தப் பனிக்கட்டியை கெளமுக் என்று அழைக்கின்றனர். இந்தச் சிற்றாறு பாகிரதி ஆகும். இந்த சிற்றாறு ஆரம்பித்த இடத்திலிருந்து சுமார் 214 கிலோமீட்டருக்குப் பிறகு தேவப்பிரயாக் என்ற இடத்தில் அலக்நந்தா என்ற மற்றொரு சிற்றாறு இதனோடு சேர்ந்துகொள்கிறது. இந்த இரண்டு சிற்றாறுகளுடன் மந்தாகினி, தௌலிகங்கா, பின்டார் என்ற நதிகளும் சேர்ந்து கங்கை என்னும் மகா நதியாகிறது.

இந்திய துணைக்கண்டத்தின் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்துக்கு தென்கிழக்கு திசையில் செல்லும் கங்கையை அலஹாபாத் என்ற இடத்தில் யமுனை நதியும் வங்க தேசத்தில் மிகப் பெரிய பிரம்மபுத்திரா நதியும் சேர்ந்து கொள்கின்றன. விசிறி போல பரந்து காணப்படும் கங்கையும் அதின் கிளை ஆறுகளும் செழிப்பாக இருக்கும் கங்கை சமவெளிக்கு, அதாவது இந்தியாவில் நான்கில் ஒரு பகுதியளவான நிலத்துக்கு நீர்வளம் தருகின்றன. 10,35,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு அது நீர்பாய்ச்சி இந்தியாவிலுள்ள மூன்றில் ஒரு பகுதி மக்களின் உயிர்காக்க உதவுகிறது. இந்தப் பகுதி உலகில் ஜனநெருக்கம் மிக அதிகமாக இருக்கும் பகுதிகளில் ஒன்று. இந்தியாவின் மக்கள்தொகை இப்போது 100 கோடிக்கும் மேல் இருக்கும். வங்காள தேசத்தில் அது மிகவும் பரந்து காணப்படுவதால், உள்நாட்டு கடல் போல் காட்சியளிக்கிறது. அங்கே விதவிதமான படகுகளில் ஜனங்கள் பயணம் செய்கின்றனர். அதன்பின் கங்கை பல்வேறு முக்கிய நதிகளாகவும் அநேக சிற்றாறுகளாகவும் பிரிந்துசென்று உலகிலுள்ள மிகப் பெரிய கழிமுகங்களில் ஒன்றை உருவாக்குகிறது.

[தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

திபெத்

பாகிஸ்தான்

சிந்து

ஜீலம்

சீனாப்

சட்லெஜ்

ஹரப்பா

மொஹஞ்சதாரோ

இந்தியா

கங்கை

யமுனை

பிரம்மபுத்திரா

அலஹாபாத்

வாரனாசி

பாட்னா

கல்கத்தா

வங்காள தேசம்

நேப்பாளம்

பூடான்

[படத்திற்கான நன்றி]

Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.

[படங்கள்]

இந்துக்கள் கங்கையில் ஸ்நானம் செய்கின்றனர்

[படத்திற்கான நன்றி]

Copyright Sean Sprague/Panos Pictures