Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

செவ்வாய் விண்கலத்தில் கோளாறு

டிசம்பர் மாதத்தில், மார்ஸ் போலார் லேன்டர் என்ற விண்கலம் செவ்வாய் கிரக வளிமண்டலத்தை அடைந்தது. அதன்பின் நாசாவால் அந்த கலத்தோடு தொடர்பு கொள்ள முடியவில்லை. இதற்கு முன் அனுப்பப்பட்ட மார்ஸ் கிளைமேட் ஆர்பிட்டர் பழுதடைந்து இரண்டே மாதங்கள்தான் ஆகியிருந்தன. அதற்குள் இதுவும் தோல்வியடைந்துவிட்டது. போலார் லேன்டர், பூமிக்குத் தகவல் அனுப்புவதற்கு இந்த மார்ஸ் கிளைமேட் ஆர்பிட்டர்தான் உதவி செய்திருக்க வேண்டும். லேன்டர் என்ற விண்கலம் ஏன் தோல்வி அடைந்தது என்பது தெரியவில்லை. ஆனால் ஆர்பிட்டர் பாதை தவறி எங்கோ சென்றுவிட்டது. விண்கலத்தை இயக்கும் நேவிகேஷன் மின் சிக்னல்கள், பரவலாக பயன்படுத்தப்படும் மெட்ரிக் அளவு முறையில் இருப்பதற்கு பதில் இங்லீஷ் அளவில் கொடுக்கப்பட்டிருந்தது. இந்தத் தோல்விக்கு இதுவும் ஒரு காரணம்! இந்த வித்தியாசத்தின் காரணமாக பயணச் செய்தி குறிப்புகள் அந்த கலத்திலிருந்து நாசாவுக்கு சரிவர வந்துசேரவில்லை. இதனால் ஏற்பட்ட நஷ்டத்தினால் நாசா விஞ்ஞானிகள் நொந்துபோயிருக்கின்றனர்; இருந்தாலும், முன்வைத்த காலை பின்வைக்க மாட்டோம் என்று அவர்கள் கூறுவதாக கேபிள் நியூஸ் நெட்வொர்க் கூறுகிறது. “சிவப்பு கிரகத்தின் வானிலை பற்றியும் அதன் மண்ணியல் வரலாறு பற்றியும் கற்றறிவது; உயிர் இருப்பதற்கு அறிகுறி இருக்கிறதா என்று ஆய்வு செய்வது; ஆய்வு செய்ய மனிதரை அனுப்புவதற்கு அடித்தளம் போடுவது” ஆகியவை அவர்களது இலக்குகள்.

மறைந்துவரும் சீன எழுத்துமுறை

பெண்கள் மாத்திரமே புரிந்துகொண்ட நு ஷு என்றழைக்கப்பட்ட தனித்தன்மை வாய்ந்த ஓர் எழுத்துமுறை தென் சீனாவில் ஹுனன் பகுதியில் நூற்றாண்டுகளாக பல குக்கிராமங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. பெண்களுக்கு முறையாக கல்வி கற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்ட சமயத்தில் கிராமத்துப் பெண்கள் இதை கண்டுபிடித்தனர். இந்த எழுத்துமுறையில் 700 எழுத்துக்கள் (phonetic) மாத்திரமே உள்ளன. சீன எழுத்துக்களிலோ ஆயிரக்கணக்கான எழுத்துக்கள் (ideographic) இருக்கின்றன. மென்மையான வளைவுகளோடு சரிவான வரிகளில் நு ஷு எழுதப்படுகிறது. நு ஷுவை அச்சில் ஏற்றிய திரைப்பட தயாரிப்பாளர் யாங் யூசிங் இவை “மிகவும் பெண்ணியல்பாகவும் அழகாகவும் உள்ளன, . . . இவை துணியில் நெய்யப்பட்டு தையல் வேலைப்பாட்டிலும் பயன்படுத்தப்பட்டதால் இவை பார்ப்பதற்கு சித்திரங்கள் போலவே இருந்தன” என்று விவரித்ததாக லண்டனில் வெளியாகும் தி சன்டே டைம்ஸ் அறிவிக்கிறது. நு ஷுவில் அநேக கிராமிய பாடல்களும், கவிதைகளும் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றில் கிராமிய பாரம்பரியங்களையும் தங்கள் வாழ்க்கை முறையையும் பெண்கள் வெளிப்படுத்தினர். 1949-ல் சீனாவில் பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்பட்ட போது நு ஷுவை பயன்படுத்துவது குறைந்துபோனது. இன்று இந்தப் பண்டைய எழுத்தை வயதான மூன்று பெண்களால் மாத்திரமே எழுதமுடியும்.

வன்முறை வீடியோ விளையாட்டுகள்

கனடாவில், பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள சைமன் ஃபேரஸர் பல்கலைகழகத்தைச் சேர்ந்த பிரென்ட் ஸ்டேஃபோர்டு என்ற ஆய்வாளர் ஓர் ஆய்வு செய்தார். அதற்காக, 600 இளம் வீடியோ விளையாட்டு வீரர்களை அந்த ஆய்வில் பயன்படுத்தினார். வீடியோ விளையாட்டுகள், “வன்முறையில் மகிழ்ச்சி காண நம்முடைய குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கின்றன” என்பதாக அவர் எச்சரிக்கிறார். மக்ளீன்ஸ் பத்திரிகை இவ்வாறு அறிக்கை செய்கிறது: “பயங்கரமான வன்முறை காட்சிகள் நிறைந்த, நிஜ வாழ்க்கையில் நடப்பதைப் போன்ற விளையாட்டுகளை விரும்பி முழு ஈடுபாட்டோடு ஆடும் விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். இவர்கள் திரையில் வரும் 1000 மனித உருவங்களை ஒரே இரவில் வெறியோடு ‘கொலை’ செய்கிறார்கள். இந்தக் கொலை நிகழ்ச்சிகள் பார்ப்பதற்கு தத்ரூபமாக இருக்கிறது.” இந்த வன்முறை வீடியோ விளையாட்டுகள், விளையாட்டு வீரரின் உணர்ச்சிகளை எந்தளவுக்கு தூண்டிவிடும் என்பதையும், “வன்முறை, கொலை ஆகியவற்றை சாதாரண விஷயங்களாக காட்டி அவர்களது உணர்ச்சிகளை மரத்துப்போக வைத்து, அவர்களது மனங்களை வசப்படுத்த” இவை வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதையும் இந்த ஆய்வு உறுதிசெய்தது. ஆண்டுக்கு 1,700 கோடி டாலரை வீடியோ விளையாட்டுத் தொழில் ஈட்டுகிறது. இந்தத் தொகை “திரைப்படமும் தொலைக்காட்சியும் சேர்ந்து ஈட்டும் தொகையைவிட” அதிகம். உங்கள் பிள்ளைகள் என்ன விளையாட்டுகளை விளையாடுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள், முட்டாள்த்தனமான ஒரு செயலை செய்வதற்கு அவர்களுக்குள் ஒரு உந்துதல் ஏதாவது காணப்படுகிறதா என்பதை கவனியுங்கள் என்று பெற்றோரை ஸ்டேஃபோர்டு எச்சரிக்கிறார்.

போர் செய்திகள்

“உலகம் முழுவதிலும் இப்போது 27 போர்கள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கின்றன” என்று சைக்காலஜி டுடே கூறுகிறது. ஸ்டாக்ஹோம் சர்வதேச சமாதான ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையின்படி லைபீரியாவில் ஏழு வருடங்கள் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் 1,50,000 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அங்கோலாவில் 15 வருடங்களாக நடைபெற்ற உள்நாட்டு சண்டையில் 5,00,000 பேர் மரித்திருக்கிறார்கள். துருக்கியில் 1984 முதல் நடைபெற்றுவரும் மோதல்களில் 37,000-க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 1983 முதற்கொண்டு இலங்கையில் நடைபெற்றுவரும் போரில் 60,000 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். “இரண்டாம் உலகப் போருக்கு பிறகு 2 கோடிக்கும் அதிகமானோர் போரில் மரித்திருக்கின்றனர்; இவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்களே” என்று அந்தப் பத்திரிகை கூறுகிறது. “எதிர்காலத்திலும் மக்கள் மும்முரமாக போரில் ஈடுபடும் வாய்ப்பு இருக்கிறது . . . காரணம் பொருளாதாரம். போர் என்பது ஆண்டுக்கு 80,000 கோடி டாலர் செலவழிக்கும் மிகப் பெரிய ‘தொழிற்சாலையாக’ வியாபித்திருக்கிறது, இதனால் சிலருக்கு லாபமும் அதிகம்.” தலையங்கம் இவ்வாறு கூறுகிறது: “மனிதன் மனிதனையே அழிப்பதில் சூரன்தான், என்னே விநோதப் பிறவி.” ஐக்கிய நாடுகள் அமைப்பு இந்த ஆண்டைத்தான் சர்வதேச சமாதான ஆண்டாக அறிவித்துள்ளது.

புகைபிடித்தலும் பார்வையிழப்பும்

“புகைபிடித்தல் பார்வையிழப்புக்கு முக்கிய காரணமாகும்” என்கிறது கான்பரா டைம்ஸ் செய்தித்தாள். ஆஸ்திரேலிய மக்களில் 50-க்கும் மேற்பட்ட வயதுள்ளவர்களில் 20 சதவீதத்தினரின் பார்வையிழப்புக்கு புகைப்பிடித்தலே காரணம் என்று ஆஸ்திரேலியன் நேஷனல் பல்கலைக்கழகத்தையும் சிட்னி பல்கலைக்கழகத்தையும் சேர்ந்த ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். மாக்குலா பார்வைக்கோளாறு, வயதாகும்போது ஏற்படுகிறது. இந்நோய், புகைப்பிடிக்காதவர்களைவிட புகைப்பிடிப்பவர்களுக்கு இரண்டிலிருந்து ஐந்து மடங்கு அதிகமாக ஏற்படுகிறது என்பதை ஆஸ்திரேலியா, ஐக்கிய மாகாணங்கள், ஐரோப்பாவில் செய்யப்பட்ட ஆய்வுகள் காட்டுவதாக ஆய்வாளர்கள் எடுத்துரைக்கின்றனர். “புகைப்பிடித்தால் பார்வை போய்விடும்” என்ற எச்சரிப்பு சிகரெட்டு பாக்கெட்டுகளில் அச்சிடப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலியன் நேஷனல் யுனிவர்சிட்டியைச் சேர்ந்த வேயின் சிமித் ஆலோசனை கூறுகிறார்.

பெற்றோரின் கவனக்குறைவும் பிள்ளை துஷ்பிரயோகமும்

1998 நிதியாண்டின்போது பிள்ளைகள் அதிகளவு துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக அஸாகி ஈவினிங் நியூஸ் கூறுகிறது. இவ்வாறு அறிவிக்கப்பட்ட வழக்குகள் அதற்கு முந்தின ஆண்டைவிட 30 சதவீதம் அதிகம். “பிள்ளைகளை வளர்க்கும் முழு பொறுப்பையும் தோளில் சுமக்கும் தாய்மார்களுக்கு அழுத்தம் அதிகரித்துவருவதும், அதே சமயத்தில் துஷ்பிரயோகமும் அலட்சியமும் அறிக்கை செய்யப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்கள் மத்தியில்” அதிகரித்து வருவதும் இதற்கு காரணங்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஜப்பானில் வீட்டில் அல்லது நிறுத்தப்பட்ட காரில் தனியாக விடப்படும் சிறு பிள்ளைகளின் மரண எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும்கூட தி டெய்லி யோமியரி கூறுகிறது. இவ்வாறு இறந்த சில பிள்ளைகளுடைய பெற்றோர் அவர்களைத் தனியாக விட்டுவிட்டு சூதாடிக்கொண்டிருந்தனர். சமீப காலம் வரையாக இப்படிப்பட்ட வழக்குகளில் சில பெற்றோரே குற்றவாளிகளாக தீர்க்கப்பட்டிருந்தனர். ஆனால் இப்போதோ, கவனக்குறைவாக இருக்கும் பெற்றோரை தண்டிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருக்கின்றனர்.

ஹெச்ஐவி-யுடன் சிசுக்கள்

“ஆப்பிரிக்காவில் 50 சதவீத குழந்தைகள் எய்ட்ஸ் நோயை உண்டுபண்ணும் ஹெச்ஐவி என்ற கிருமியோடு பிறக்கின்றனர்” என்று யுனைட்டெட் பிரஸ் இன்டர்நேஷனல் அறிவிக்கிறது. ஆப்பிரிக்காவில் சில இடங்களில் ஹெச்ஐவியும் எய்ட்ஸும் மனித ஆயுசில் கிட்டத்தட்ட 25 வருடம் விழுங்கி ஏப்பம் விட்டது என்று ஹெச்ஐவி/எய்ட்ஸ் ஜாயின்ட் யுனைட்டெட் நேஷன்ஸ் புரோகிராமின் செயலர் டாக்டர் பீட்டர் பயோ சொல்கிறார். அறிக்கை மேலுமாக இவ்வாறு கூறுகிறது: “ஹெச்ஐவி அதிகமாக காணப்படும் 21 நாடுகள் ஆப்பிரிக்காவில்தான் உள்ளன, இவற்றில் 10 நாடுகளில் மக்கள் தொகையில் 10 சதவீதத்தினர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.” உலகம் முழுவதிலும் எய்ட்ஸ் சம்பந்தப்பட்ட மரணங்களில் சுமார் 80 சதவீதம் ஆப்பிரிக்காவில்தான் நிகழ்ந்துள்ளது.

பெடல் சக்தி

“சக்தியைப் பயன்படுத்தியே ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்கிறோம். மிக சிறப்பாக ஆற்றலை பயன்படுத்தி இடம் விட்டு இடம் செல்வதற்கு சைக்கிளே சிறந்த வாகனம். அதற்கு காரணம் அது பெடல் சக்தியை பயன்படுத்துகிறது என்பது மட்டுமல்ல, மிகக் குறைந்தளவு சக்தியே வீணாகும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது” என்பதாக ராய்டர் செய்தி சேவையின் அறிக்கை கூறுகிறது. பால்டிமோரிலுள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைகழகத்தைச் சேர்ந்த பொறியாளர்கள், சைக்கிளின் பாகங்கள் இயங்கும் விதத்தை ஒரு கம்ப்யூட்டரால் சோதிப்பதற்கு புறசிவப்பு கதிர் காமிராவை பயன்படுத்தினர். சைக்கிளின் சங்கிலி நகரும்போது சிறிதளவு வெப்பமே உற்பத்தியாவதை அவர்கள் கவனித்தனர். சைக்கிள் நகருவதில் இருக்கும் ஆற்றல் திறமை 98.6 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, அதன் சக்கரபல்லைச் சுற்றுவதற்கு பயன்படுத்தப்பட்ட சக்தியில் 2 சதவீத சக்தி மாத்திரமே வெப்பமாக இழக்கப்படுவதை கண்டு பொறியாளர்களே ஆச்சரியமடைந்தனர்” என்று அறிக்கை கூறியது. “வித்தியாசமான சூழ்நிலைகளில் சைக்கிளின் ஆற்றல்திறனை சோதித்தபோது அதற்கு கிடைத்த மிக மோசமான ஸ்கோர் 81 சதவீதம். இதை கவனித்த ஆய்வுக் குழுவின் தலைவர் ஜேம்ஸ் ஸ்பைசர் இவ்வாறு கூறினார்: “சங்கிலியால் இயங்கும் இதன் அமைப்பு 100 வருடங்களுக்கும் மேலாக இன்னும் மாறாதிருப்பதை பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.”

“போலி மழை”

சீனாவிலுள்ள சிங்கியாங் உகூர் ஆட்டோனாமஸ் ரீஜனில் உள்ள டர்பானில் போலி மழை பெய்கிறது! மேலே கருமையான மழை மேகங்கள் கடந்து சென்றாலும் நிலத்தில் வானிலை உஷ்ணமாகவும் வறட்சியாகவும் இருக்கும் என்று சைனா டுடே அறிவிக்கிறது. வானத்திலிருந்து மழை பெய்வது போல இருக்கும், ஒருவர் கையை தலைக்கு மேலே ஆட்டினால் மழைத்துளிகள் கைகளில் படும். ஆனால், டர்பானில் மிதமிஞ்சிய உலர்ந்த வெப்பநிலை இருப்பதால் மழைபெய்யும் வேகத்தைவிட நீராவியாதல் வேகமாக நடைபெறுகிறது. ஆகவே “போலி மழை” நிலத்தில் வந்து விழுமுன்னே நீராவியாகிவிடுகிறது.

ஆபத்தான உணவு

அண்மையில், மேற்கு இந்தியாவிலுள்ள கச்சா மாவட்டத்தில் ஒரு பசு நோய்வாய்ப்பட்டிருந்தது. அதற்கு அறுவை சிகிச்சை செய்த கால்நடை மருத்துவர் ஒருவர் அதன் வயிற்றிலிருந்து 45 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பைகளை வெளியே எடுத்தார் என்று கேரளாவில் வெளியாகும் தி வீக் பத்திரிகை அறிவித்தது. பிளாஸ்டிக் பைகளைத் தவிர துணிகள், தேங்காய் நார், ஒரு கம்பி சுருள், திருகாணி ஆகியவையும் அதன் வயிற்றில் தஞ்சமடைந்திருந்தன. இந்தியாவில் தெருவில் திரியும் பசுக்கள் குப்பைத் தொட்டியில் போடப்படும் உணவை தின்றே உயிர் வாழ்கின்றன. எனவே, அங்கே வீசப்படும் பிளாஸ்டிக் பைகள் அவற்றின் உயிரைக் குடித்துவிடுகின்றன. பாலுக்காக வீட்டில் வளர்க்கப்படும் பசுக்கள்கூட மேய்ச்சல் நிலத்துக்குப் போகும் வழியில் சாலையோரத்தில் இருக்கும் குப்பைத் தொட்டியில் இருப்பவற்றை ருசிக்கின்றன. கோமாரி நோய்க்கு அடுத்ததாக பசுக்களை கொல்லுவது பிளாஸ்டிக் பைகளே என்பதுதான் கொடுமையிலும் கொடுமை என்று டாக்டர் ஜடேஜா சொன்னார். பிளாஸ்டிக் பைகள் பசுவின் வயிற்றில் செரிமானம் ஆகாது. எனவே அப்பைகள் அடிவயிற்றில் போய் அடைத்துக்கொள்ளும்போது பசுவால் உணவை அசைபோட முடிவதில்லை. இப்படிப்பட்ட பசுக்களை காப்பாற்றுவதற்கு யாரும் முயற்சி செய்வதில்லை. செருப்பு தைக்கும் தொழிலாளர்கள், செத்துப்போன பசுக்களின் தோலை உரித்தெடுக்கும்போது எக்கசக்கமான பிளாஸ்டிக்கை அவற்றின் வயிற்றில் கண்டுபிடித்தனர், அவர்கள்தான் டாக்டர் ஜடேஜாவுக்கு இதைத் தெரியப்படுத்தினர்.