Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“சாவாமை” ஜீனைத் தேடி

“சாவாமை” ஜீனைத் தேடி

“சாவாமை” ஜீனைத் தேடி

மனிதன் சாவாமையுள்ளவன் என்பதை விளக்க முயலும் கட்டுக்கதைகளுக்கும் கற்பனைக் கதைகளுக்கும் பஞ்சமே இல்லை. உதாரணமாக, மனிதனுக்கு சாவாமையைக் கொடுக்க கடவுள் ஒரு பச்சோந்தியை அனுப்பினார், ஆனால் அது மிகவும் தாமதமாக ஆர அமர நடந்து வந்தது, அதற்குள் மரண செய்தியைக் கொண்டுவந்த மற்றொரு பல்லி அதை முந்திக்கொண்டுவிட்டது என்கிறது ஒரு ஆப்பிரிக்க கதை. எளிதில் ஏமாந்துவிடும் மனிதர் பல்லியின் செய்தியை ஏற்றுக்கொண்டார்களாம். சாவாமையை இழந்துபோனார்களாம்.

அதே போலவே, பல நூற்றாண்டுகளாக, மனிதன் ஏன் சாகிறான் என்ற கேள்விக்கு விடைகாண தத்துவஞானிகள் முயற்சித்திருக்கிறார்கள். பொ.ச.மு. நான்காம் நூற்றாண்டில், கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாட்டில் மனிதன் தொடர்ந்து உயிர்வாழ்வது, வெப்பத்தையும் குளிரையும் சமநிலைப்படுத்த அவனுடைய உடலுக்கிருக்கும் திறமையைப் பொருத்தது என்று கற்பித்தார். அவர் இவ்வாறு சொன்னார்: “எப்போதுமே ஓரளவு வெப்பக் குறைவினால்தான் மரணம் ஏற்படுகிறது.” மறுபட்சத்தில், மனிதனுடைய மரணத்துக்குப்பின் உயிர்வாழும் சாவாமையுள்ள ஆத்துமா அவனுக்கிருக்கிறது என்று பிளேட்டோ கற்பித்தார்.

இன்று நவீன அறிவியல் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக முன்னேறியுள்ளது. இருந்தபோதிலும் நாம் ஏன் முதுமை அடைகிறோம், மரிக்கிறோம் என்பது பற்றிய அறிவியலரின் கேள்விகளுக்கு இன்னும் விடைகாண முடியாமல் தவிக்கின்றோம். லண்டனில் வெளியாகும் தி கார்டியன் வீக்லி இவ்வாறு கூறினது: “மருத்துவ விஞ்ஞானத்தில் நமக்கு புதிராக இருப்பது, மனிதன் ஏன் இருதய நோயினால் அல்லது புற்றுநோயினால் மரிக்கிறான் என்பதல்ல. ஆனால் எந்த நோயும் இல்லாத போதும் ஏன் மரிக்கிறான் என்பதே புதிராக உள்ளது. மனித செல்கள் கிட்டத்தட்ட 70 வருடங்களாக, பலமுறை பிரிந்து, இறந்த செல்களை மாற்றீடு செய்து, உடலை சீராக புதுப்பித்துக் கொண்டே போகின்றன, ஆனால் திடீரென்று ஒரேடியாக அவை பெருகுவதை ஏன் நிறுத்திவிட வேண்டும்?”

முதுமையடைதலை புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் மரபியல் வல்லுநர்களும் மூலக்கூறு உயிரியல் வல்லுநர்களும் செல்லிடமாக தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர். இந்த மிக நுண்ணிய செல்களுக்குள் நீடூழி வாழ்வதற்கான இரகசியம் புதைந்திருக்கும், அதைக் கண்டுபிடித்துவிடலாம் என்று அனேக விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள். உதாரணமாக மரபு பொறியியல் மூலம் விஞ்ஞானிகள் புற்று நோயையும் இருதய நோயையும் ஒழித்துவிடுவார்கள் என்று சிலர் சொல்கின்றனர். என்றும் வாழவேண்டும் என்ற மனிதனின் கனவை நனவாக்கும் பயணத்தில் விஞ்ஞானம் எவ்வளவு அருகில் வந்துள்ளது?

செல்லின் புதிர்களை விடுவித்தல்

இதற்கு முன்னால் விஞ்ஞானிகள் செல்லின் புதிர்களை விடுவிக்க முயற்சி எடுத்திருக்கிறார்கள். ஆனால் அதைச் செய்வதற்கு தேவையான கருவிகள் அப்போது அவர்களிடம் இல்லை. கடந்த நூற்றாண்டில்தான் விஞ்ஞானிகள் ஒரு செல்லை உற்றுப்பார்த்து ஆராய்ச்சி செய்து அதன் அடிப்படை பகுதிகள் பலவற்றை கவனித்தனர். அவர்கள் என்ன கண்டுபிடித்திருக்கின்றனர்? “செல் ஒரு சிறிய அண்டமாக உள்ளது” என்கிறார் விஞ்ஞான எழுத்தாளர் ரிக் கோர்.

ஒரு செல் எவ்வளவு சிக்கலானது என்று தெரியுமா? ஒவ்வொரு செல்லும் கோடிக்கணக்கான மூலக்கூறுகள் என்றழைக்கப்படும் மிகச் சிறிய அலகுகளால் ஆனது. ஆனால் அவற்றில் அசாதாரணமான ஒழுங்கையும் வடிவமைப்பையும் விஞ்ஞானிகள் பார்க்கிறார்கள். ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மரபியல், மூலக்கூறு அறிவியலின் உதவிப் பேராசிரியர் பிலிப் ஹானவால்டு இவ்வாறு கூறுகிறார்: “ஆயிரக்கணக்கான கெமிக்கல் மாற்றங்கள் ஒன்றைத் தொடர்ந்து மற்றொன்று ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் ஒரு சாதாரண செல் வளர முடியும்.” அவர் மேலும் கூறுகிறார்: “செல் ஏற்கெனவே புரோகிராம் செய்யப்பட்டதால் அதற்குள் வேதியியல் மாற்றங்கள் நடைபெறுகின்றன. இவற்றை சாதனைகள் என்றே சொல்ல வேண்டும். ஒரு விஞ்ஞானி ஆய்வுக்கூடத்தில் செய்யும் சாதனையோடு இவற்றை ஒப்பிட்டால் செல்லுக்கே வெற்றி.”

அப்படியென்றால் உயிரியல் முறைகளின் மூலமாக மனிதனின் வாழ்நாளை நீட்டிக்க முயற்சி செய்வது எத்தனை பிரம்மாண்டமான வேலையாக இருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள். இதற்கு அடிப்படை கட்டுமான அலகுகளைப் பற்றி ஆழமான புரிந்துகொள்ளுதலும் இந்த கட்டுமான அலகுகளைக் கையாளுவதற்கு திறமையும்கூட அவசியமாக இருக்கும். உயிரியலர்கள் சந்திக்க வேண்டிய சவாலை விளக்குவதற்கு மனித செல்லுக்குள் என்ன இருக்கிறது என்பதை நாம் பார்க்கலாம்.

எல்லாம் ஜீன்கள் செய்யும் வேலை

ஒவ்வொரு செல்லினுள்ளும் நியூக்ளியஸ் என்றழைக்கப்படும் சிக்கலான கட்டுப்பாட்டு மையம் ஒன்று உள்ளது. செல்களில் பல வினைகள் நடைபெற வேண்டும். இதைச் செய்வதற்கு நியூக்ளியஸ் சங்கேத முறையில் கட்டளை கொடுக்கிறது. இந்தக் கட்டளைகள் குரோமோசோம்களில் சேமித்து வைக்கப்படுகின்றன.

நம்முடைய குரோமோசோம்களில் முக்கியமாக இருப்பது புரதமும் டியாக்ஸிரைபோநியூக்ளிக் அமிலம் அல்லது சுருக்கமாக டி.என்.ஏவும் தான். a 1860-களின் பிற்பகுதியிலிருந்து விஞ்ஞானிகள் டி.என்.ஏ. பற்றி அறிந்திருக்கின்றனர் என்பது உண்மைதான். ஆனாலும் 1953-ல்தான் அதன் மூலக்கூற்றின் அமைப்பை சரியாக புரிந்துகொள்ள முடிந்தது. இன்னும் பத்தாண்டுகள் சென்றபின்தான் உயிரியலர்கள் மரபுத்தகவலை எடுத்துச் செல்ல டி.என்.ஏ. மூலக்கூறுகள் பயன்படுத்தும் “மொழியை” புரிந்துகொள்ள ஆரம்பித்தனர்.—பக்கம் 22-ல் இருக்கும் பெட்டியைப் பார்க்கவும்.

1930-களில் ஒவ்வொரு குரோமோசோமின் நுனியிலும் குரோமோசோமை பலப்படுத்த உதவும் ஒரு குறுகிய டி.என்.ஏ. வரிசை இருப்பதை மரபியல் வல்லுநர்கள் கண்டனர். இதற்கு டெலோமியர்ஸ் என்பது பெயர். அதாவது கிரேக்க வார்த்தை டெலாஸ் (முடிவு) மெராஸ் (பகுதி) என்பதிலிருந்து இது வருகிறது. டி.என்.ஏ.வின் இந்தச் சிறிய பகுதி ஒரு ஷு லேஸின் முடிவிலிருக்கும் உறையைப் போல அதைப் பாதுகாக்கிறது. இந்த டெலோமியர்ஸ் இல்லையென்றால் நம்முடைய குரோமோசோம்கள் சிறு சிறு துண்டுகளாக பிரிந்து உடைந்து போகும், ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டுவிடும் அல்லது உறுதியில்லாமல் போய்விடும்.

ஆனால் பெரும்பாலான செல்களில், ஒவ்வொரு தடவை செல் பிரிந்த பிறகும் டெலோமியர்ஸ் சுருக்கமடைவதை ஆய்வாளர்கள் கவனித்தனர். இதன் காரணமாக 50 தடவை பிரிந்தபின் செல்லின் டெலோமியர்ஸ் சின்னஞ்சிறிய முடிச்சாக சிறுத்துவிடுகிறது, செல் பிரிதல் நின்றுபோய் செல் மரித்துவிடுகிறது. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை வரையாக செல்கள் பிரிந்து பின்னர் மரித்துவிடுகின்றன என்று 1960-களில், முதன் முதலில் கருத்து தெரிவித்தவர் டாக்டர் லியோநார்டு ஹேஃபிளிக். ஆகவே இந்த நிகழ்ச்சியை அநேக விஞ்ஞானிகள் ஹேஃபிளிக் எல்லை என்று குறிப்பிடுகின்றனர்.

செல்கள் முதுமையடைவது ஏன் என்பதை டாக்டர் ஹேஃபிளிக் கண்டுபிடித்துவிட்டாரா? சிலர் அப்படி நினைத்தார்கள். 1975-ல் நேச்சர்/சையன்ஸ் ஆண்டுமலரில் முதுமை என்ற துறையில் நிபுணர்களாக இருந்த அறிவாளிகளின் ஒரு குழு, “எல்லா உயிரினங்களும் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் தன்னையே அழித்துக்கொள்ளும் துல்லியமான ஒரு அமைப்பை தங்களுக்குள் கொண்டிருக்கின்றன. இது முதுமை காலத்தைக் காட்டும் ஒரு கடிகாரத்தைப்போல செயல்பட்டு படிப்படியாக உடலில் உயிர் நீடித்திருப்பதை குறைத்து விடுகிறது” என்று கூறினர். கடைசியாக விஞ்ஞானிகள் முதுமையடைதலைக் குறித்து புரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டார்கள் என்ற நம்பிக்கை மலர்ந்தது.

1990-களில், மனிதரில் புற்றுநோய் செல்களை ஆய்வு செய்த ஆய்வாளர்கள், இந்த “செல்லில் இயங்கும் கடிகாரத்தைப்” பற்றி மற்றொரு முக்கியமான விஷயத்தைக் கண்டுபிடித்தனர். நோயுற்ற இந்த செல்கள் தங்கள் “செல்லுலார் கடிகாரத்தை” எவ்வாறு புறக்கணித்து எல்லையில்லாமல் பிரிந்துகொண்டே இருப்பது என்பதைத் தெரிந்து வைத்திருக்கின்றன என்று கண்டுபிடித்தனர். இந்தக் கண்டுபிடிப்பு 1980-களில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட அசாதாரணமான ஒரு நொதியைப் பற்றி யோசிக்க வழிநடத்தியது. இதுவே பெரும்பாலான புற்றுநோய் செல்களில் காணப்படுகிறது. இந்த நொதியின் பெயர் டெலோமெரேஸ். அது என்ன செய்கிறது? டெலோமியர்ஸை நீளமாக்குவதன் மூலம் செல்லின் “கடிகாரத்தில்” நேரத்தை மாற்றி வைத்து இயக்க உதவும் சாவிக்கு டெலோமெரேஸை ஒப்பிடலாம்.

முதுமைக்கு முடிவா?

வெகுவிரைவில் டெலோமெரேஸ் ஆய்வு, மூலக்கூறு அறிவியல் துறையில் மிகவும் ஆர்வத்துக்குரிய விஷயமாக ஆனது. இயல்பான செல் பிரிவின்போது டெலோமியர்ஸின் நீளம் குறைவதை ஈடுசெய்ய டெலிமெரேஸை உயிரியல் அறிஞர்கள் பயன்படுத்த முடிந்தால், முதுமையடைதலை நிறுத்திவிடலாம் அல்லது கணிசமாக தாமதிக்க வைக்கலாம் என்பதே அவர்களது நப்பாசை. ஆய்வுக்கூடத்தில் டெலோமெரேஸை வைத்து சோதனை செய்யும் ஆய்வாளர்கள், இயல்பான மனித செல்களுக்கு “எல்லையில்லாமல் பெருகும் திறமை”யைக் கொடுக்க முடியும் என்பதை ஏற்கெனவே செய்துகாட்டிவிட்டனர் என்று ஜெரோன் கார்ப்பரேஷன் நியூஸ் அறிவிப்புசெய்து மற்றவர்களை ஆச்சரியப்பட வைத்தது.

இந்த முன்னேற்றங்களின் மத்தியிலும் சமீப எதிர்காலத்தில் உயிரியல் அறிஞர்கள் டெலோமெரேஸைக் கொண்டு நம்முடைய வாழ்நாளை நீட்டிக்கச் செய்வார்கள் என்று நம்மால் எதிர்பார்க்க முடியாது. ஏன்? முதுமை என்பது டெலிமியர்ஸ் சிதைவதால் மட்டுமே ஏற்படுவதில்லை. உதாரணத்துக்கு ரிவர்சிங் ஹுமன் ஏஜிங் என்ற புத்தகத்தின் ஆசிரியர் டாக்டர் மைக்கேல் ஃபேஸலின் குறிப்புகளைக் கவனியுங்கள்: “இன்று நாம் முதுமை என்று புரிந்துகொண்டிருப்பதை வென்றுவிட்டால், அப்போதும்கூட ஏதாவது புதிய, புரியாத விதத்தில் முதுமையடைந்து கொண்டுதான் இருப்போம். நம்முடைய டெலிமியர்ஸை கால வரையறையின்றி நீட்டிக்கொண்டே போனாலும் முதிர் வயதின் காரணமாக வரும் நோய்கள் வேண்டுமானால் வராமல் இருக்கலாம், ஆனால் நாம் அப்போதும்கூட பலமிழந்து, சோர்வடைந்து மரித்துப்போவோம்.”

முதுமையடைதலுக்கு உயிரியல் காரணிகள் பல உண்டு என்பது என்னவோ உண்மைதான். ஆனால், அப்படிப்பட்ட காரணங்கள் தற்போது விஞ்ஞானிகளால் எட்ட முடியாத தொலைவிலேயே இருக்கின்றன. எனவே கனவில் கண்ட பொருள் கைக்கு எட்டுமா என்ற நிலையில்தான் அவர்கள் இருக்கிறார்கள். மாஸசூட்ஸின் தொழில்நுட்ப நிறுவனத்தின் லியோனார்டு குவாரன்டி இவ்வாறு கூறுகிறார்: “முதுமையடைதல் என்பது தற்போது ஒரு புரியாப் புதிராகவே இருக்கிறது.”—சயன்டிபிக் அமெரிக்கன், 1999.

உயிரியலரும் மரபியலரும் மனிதன் ஏன் முதுமையடைந்து மரிக்கிறான் என்பதை புரிந்துகொள்ள ஒரு பக்கம் தங்கள் மண்டையைப் போட்டு உடைத்துக்கொண்டு செல்லை ஆராய்கையில் இதற்கு உண்மையான காரணம் என்ன என்பதை கடவுளுடைய வார்த்தை வெளிப்படுத்துகிறது. அது இவ்வாறு கூறுகிறது: “ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால் மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.” (ரோமர் 5:12) ஆம், விஞ்ஞானத்தால் ஒருபோதும் சரிசெய்ய முடியாத ஒரு நிலைமையினால் மனிதனுக்கு மரணம் ஏற்படுகிறது, அதுதான் சுதந்தரிக்கப்பட்ட பாவம்.—1 கொரிந்தியர் 15:22.

மறுபட்சத்தில், நம்முடைய படைப்பாளர், கிறிஸ்துவினுடைய மீட்பின் பலியின் மூலமாக சுதந்தரிக்கப்பட்ட பாவத்தின் விளைவுகளை நீக்கப்போவதாக வாக்களிக்கிறார். (ரோமர் 6:23) முதுமையையும் மரணத்தையும் எவ்வாறு தலைகீழாக மாற்றுவது என்பது நம்முடைய சிருஷ்டிகருக்குத் தெரியும் என்பது நிச்சயம். ஏனென்றால், சங்கீதம் 139:16 இவ்வாறு சொல்கிறது: ‘என் கருவை உம்முடைய கண்கள் கண்டது, அவைகள் அனைத்தும் உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.’ யெகோவா தேவன் மரபியல் தொகுப்பை ஆரம்பித்து அது துல்லியமாக இயங்குவதற்கு கட்டளையிட்டார் என்பது நிச்சயம். ஆகவே, சரியான காலம் வரும்போது, அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியும் ஆட்களுக்கு நம்முடைய ஜீன்கள் நித்திய வாழ்க்கையை அனுமதிக்கும்படி அவர் பார்த்துக்கொள்வார்.—சங்கீதம் 37:29; வெளிப்படுத்துதல் 21:3, 4.

[அடிக்குறிப்புகள்]

a டி.என்.ஏ. பற்றிய கூடுதலான விளக்கத்துக்கு 1999 விழித்தெழு! செப்டம்பர் 8, பக்கங்கள் 5-10 காண்க.

[பக்கம் -ன் பெட்டி22]

டி.என்.ஏ.வின் “மொழி”

டி.என்.ஏ. மொழியின் அடிப்படை அலகுகள் அல்லது “எழுத்துக்கள்” வேதிக்கூறுகளாகும், இது மென்காரங்கள் (bases) என்று அழைக்கப்படுகிறது. மென்காரங்கள் நான்கு வகைப்படும்: தைமைன், அடினைன், குவானைன், சைட்டோஸைன். இவை பொதுவாக T, A, G, C என்று சுருக்கி கூறப்படுகிறது. “அந்த நான்கு மென்காரங்களையும் நான்கு எழுத்துக்களாக எண்ணிக்கொள்ளுங்கள், எழுத்துக்களை அர்த்தமுள்ள வார்த்தைகளாக நாம் வரிசைப்படுத்துவது போல நம்முடைய ஜீன்களை உண்டுபண்ணும் Aக்களும் Tக்களும் Gக்களும் Cக்களும் செல் புரிந்துகொள்ளும் விதமாக மும்மூன்று எழுத்துக்கள் அடங்கிய ‘வார்த்தைகளை’ உண்டாக்குகின்றன. இந்த மரபு “வார்த்தைகள்,” “வாக்கியங்களை” உண்டுபண்ணி குறிப்பிட்ட ஒரு புரதத்தை எவ்வாறு தயாரிப்பது என்பதை செல்லுக்கு சொல்லுகிறது. டி.என்.ஏ. மூலக்கூற்றிலுள்ள மென்காரங்கள் எந்த வரிசையில் அமைந்திருக்கின்றனவோ அதைப் பொருத்தே அந்தப் புரதம் உங்கள் சாப்பாட்டை ஜீரணிக்க உதவும் நொதியாக செயல்படுமா, கிருமிகளை விரட்டியடிக்கும் நோய் எதிர்ப்பு பொருளாகுமா, அல்லது உங்கள் உடலினுள் காணப்படும் ஆயிரக்கணக்கான புரதங்களில் ஒன்றாகுமா என்பது முடிவாகும். செல் என்ற புத்தகம் டி.என்.ஏ.வை “உயிரின் நகல்” என்று கூறுவது நமக்கு ஆச்சரியமாயில்லை.

[பக்கம் 21-ன் படம்]

குரோமோசோமின் பளபளப்பான முனையே செல்கள் மறுபடியும் மறுபடியும் பிரிவதை அனுமதிக்கிறது

[படத்திற்கான நன்றி]

நன்றி: Geron Corporation