Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சுண்டியிழுக்கும் சான்டீரியா

சுண்டியிழுக்கும் சான்டீரியா

சுண்டியிழுக்கும் சான்டீரியா

மெக்ஸிக்கோவிலுள்ள விழித்தெழு! நிருபர்

சான்டீரியா பல வருடங்களாக கியூபாவில் முக்கிய மதமாக திகழ்கிறது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக இந்த மதம் மற்ற நாடுகளிலும் பரவியுள்ளது. உதாரணமாக மெக்ஸிக்கோ நகரின் முக்கிய சந்தைவெளியின் ஒரு பகுதியில் எங்கு பார்த்தாலும் சான்டீரியோ வணக்கத்துக்குரிய பொருட்களை விற்கும் கடைகள்தான். அங்கு சிலுவைகள், மெழுகுவர்த்திகள், தாயத்துக்கள் என்று பல பொருட்கள் விற்கப்படுகின்றன. இந்தக் கடைகளுக்கு போட்டானிக்காஸ் என்று பெயர். அமெரிக்காவிலுள்ள பெரிய நகரங்களிலும் இதுபோன்ற கடைகளைக் காணலாம். நியூ யார்க் நகரில், தொலைபேசி புத்தகத்தைப் புரட்டினால் மற்ற கடைகளைவிட இந்தக் கடைகளுக்கே அதிகமாக விளம்பரம் கொடுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

பரம்பொருளோடு சங்கமம், இதோடு சம்பந்தப்பட்ட புதுவிதமான ஒளிவட்டம் ஆகியவையே மக்களை இதனிடமாக சுண்டியிழுக்கிறது. சான்டீரியா பற்றி பிரபலமான லத்தீன் இசையிலும் இலக்கியத்திலும் குறிப்புகள் உண்டு. இப்போது சான்டீரியா, மதம் என்ற போர்வையில் அல்ல, மத சார்பற்ற கலாச்சாரம் என்ற பெயரில் உலாவர ஆரம்பித்திருக்கிறது. அந்தளவுக்கு மாறிக்கொண்டு வருவதால், ஆப்பிரிக்க-கரிபிய இசையிலும் கலைநிகழ்ச்சிகளிலும் இதைக் காணலாம்.

பண்டைய ஆப்பிரிக்காவில் தோற்றம்

நைஜீரியாவிலுள்ள யோருபாக்கள் கடைபிடிக்கும் பண்டைய ஆப்பிரிக்க மதத்தின் அடிப்படை அம்சங்களையும் பாரம்பரியங்களையும் சான்டீரியாவில் காணலாம். யோருபாக்கள் 1770-க்கும் 1840-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் கரிபியன் தீவுகளுக்கு அடிமைகளாக கொண்டுசெல்லப்பட்டபோது, அவர்கள் தங்கள் மதத்தையும் தங்களோடு எடுத்துச்சென்றனர். அமெரிக்கா கண்டத்திற்கு வந்தப்பின் அடிமைகளாக இருந்த இந்த ஆப்பிரிக்கர்கள் கத்தோலிக்க மதத்தை ஏற்றுக்கொள்ள வற்புறுத்தப்பட்டனர். ஆனால் தங்கள் பாரம்பரியங்களை விட்டுவிட அவர்கள் மனம் இடங்கொடுக்கவில்லை. ஆகவே அவர்கள் இரண்டு மதங்களையும் கலந்து புதிய ஒரு மதத்தை உருவாக்கினர். இரண்டு மத பழக்கங்களின் இந்தக் கலவை ஒருமைப்பாட்டு முயற்சி என்று அழைக்கப்படுகிறது.

தங்கள் சொந்த நம்பிக்கைகளின்படி வழிபட விரும்பிய அடிமைகள் கத்தோலிக்க புனிதர்களை இரண்டு விதமாக வழிபட்டனர். ஒன்று ரோமன் கத்தோலிக்க புனிதராக நினைத்து வழிபட்டனர். இரண்டாவது அந்த புனிதரை ஒரு ஆப்பிரிக்க கடவுளாகவும், அவருக்கு சக்திகள் இருப்பதாகவும் எண்ணி வழிபட்டனர். இதன் காரணமாக ஒரிஷா என்றழைக்கப்பட்ட ஆப்பிரிக்க தெய்வங்களும் தேவதைகளும் இப்போது கத்தோலிக்க புனிதர்களின் உருவங்களாக மாறிவிட்டனர். ஆனால், ஆப்பிரிக்காவில் அவர்கள் கடைப்பிடித்து வந்த சடங்குகள், பழக்கங்கள், நம்பிக்கைகள் மாறவே இல்லை. கியூபாவிலுள்ள ஒரு சான்டீரா பூசாரி இவ்வாறு விளக்கி கூறுகிறார்: “ஒருமைப்பாட்டு முயற்சியால் கத்தோலிக்க கடவுளை பீடத்தில் வைத்து நாங்கள் வணங்குகிறோம். ஆனால் அதைப் பார்க்கும்போது எங்கள் கண்களுக்குத் தெரிவது ஆப்பிரிக்க கடவுள்தான்.”

ரோமன் கத்தோலிக்க ஆராதனை சடங்குகள், ஞானஸ்நானம், பரிசுத்தப் பொருட்கள் ஆகியவை ஆப்பிரிக்காவின் ஆவியுலக தொடர்பு பழக்கங்களோடு இரண்டற கலந்தன. அதனால்தான் ஊடு, ஒபியா, மக்கும்பா போன்ற மதங்களில் கத்தோலிக்க சடங்குகள் காணப்படுகின்றன. ஆரம்பத்திலிருந்தே லத்தீன் அமெரிக்காவிலிருந்த கத்தோலிக்க சர்ச் ஆப்பிரிக்க மதங்களை தடைசெய்த காரணத்தால் இவர்கள் சான்டீரியா மதப்பழக்கங்களை நீண்ட காலமாக இரகசியமாய் பின்பற்றி வந்தனர். வேறு வழியின்றி, இரண்டு மதங்களையும் கலந்து அடிமைகள் உருவாக்கியிருந்த புதிய மதத்தை ஒருவழியாக கத்தோலிக்க சர்ச்சும் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தது.

சான்டீரியாவின் சிறப்பியல்புகள்

இந்த மதத்தின் சிறப்பியல்புகள் யாவை? இம்மதத்தைச் சேர்ந்தவர்கள் சான்டீரோஸ் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் உன்னத தெய்வம் என்று ஒரு கடவுளையும் அதோடு சேர்ந்து பல தெய்வங்களையும் வழிபடுகின்றனர், பல தெய்வங்களை வணங்குவதை ஒரிஷா என்று அழைக்கின்றனர். இப்படிப்பட்ட பல தெய்வ வழிபாடு யோருபா பான்தியான் என்றும் அழைக்கப்படுகிறது. குறிசொல்லும் சான்டீரியா பூசாரிகள் ஒரிஷாவின் விருப்பம் என்ன என்பதை தெரிவிக்கிறார்கள். சில சமயங்களில் இந்தத் தெய்வங்கள் அவர்களுடைய விருப்பத்தைத் தெரிவிக்க பக்தர்கள்மீது வந்திறங்குவதாக சொல்லப்படுகிறது. பிராத்தனைகள், இசை, நன்னடத்தை, காணிக்கைகள் மூலம் இவர்கள் ஒரிஷாவின் அனுக்கிரகத்தை வேண்டலாம். இவர்களுடைய வணக்கத்தில் பீடங்கள் மிகவும் முக்கியமானவை. இவர்கள் வீடுகளில் பீடங்கள் வைத்து அதில் பூக்கள், ரம், கேக்கு, சுருட்டு ஆகியவற்றை படைக்கிறார்கள். இது தெய்வங்களைக் குஷிப்படுத்தி, ஆசிகளை அள்ளி வழங்கும்படி செய்யும் என்பது நம்பிக்கை.

லிசெட் ஆல்வரேஸ் நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையில் சான்டீரியா தத்துவத்தைப் பற்றி இந்த விளக்கம் தருகிறார்: “இந்த மதம் மரணத்துக்குப் பின்னான வாழ்க்கைக்கு அதிக கவனம் செலுத்துவதில்லை. தற்போதுள்ள வாழ்க்கைக்கே முக்கியத்துவம் தருகிறது, அது இயற்கை சக்திகளுக்கு கவனம் செலுத்துகிறது. ஒவ்வொரு தெய்வமும் ஓர் இயற்கை அம்சத்தை பிரதிநிதித்துவம் செய்கிறது. உதாரணமாக, ‘இடி’ என்ற இயற்கை சக்தி, பலம் என்ற மனித தன்மையை குறிக்கிறது.” சான்டீரியா பூசாரிகள் ஒரிஷாவைக் கேட்டு தினசரி பிரச்சினைகளைத் தீர்க்க உதவி செய்கிறார்கள். இவர்கள் கத்தோலிக்க பாதிரியார் இல்லை. சாதாரணமான சான்டீரியா சடங்குகளை இவர்கள் கோவில்களில் செய்யாமல் வீடுகளில் செய்கின்றனர்.

மனதுக்கு ஆறுதலையும் பொருளாதார ஆதரவையும் தேடுபவர்களை இம்மதம் அதிகமாக கவர்ந்திழுக்கிறது. ஏனென்றால் இது சமுதாய உணர்வை, ஒரு குடும்பத்திலிருப்பதைப் போன்ற உணர்வை அளிக்கிறது. சான்டீரியா மதம் இருக்கும் தேசங்களுக்கு குடியேறும் மக்களும் வறுமையில் இருப்பவர்களும் இதனால் மிகவும் கவர்ந்திழுக்கப்படுகிறார்கள். இம்மதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் குறிப்பிட்ட தொகுதிகளாக பிரிந்திருக்கின்றனர். ஒரு தொகுதியில் ஞான தந்தை/தாயாக, ஆலோசகராக, பூசாரியாக ஒரு ஆணோ அல்லது பெண்ணோ செயல்படுகிறார். புதிய உறுப்பினர்களைச் சேர்த்துக்கொள்கையில் பூசாரிகள் இசை, நடனம், மிருக பலிகளோடு சடங்குகளைச் செய்கின்றனர். பிறந்த நாட்கள், திருமணங்கள், மரணங்கள் வரும்போதும் மிருகங்கள் பலியிடப்படுகின்றன. கோழி குஞ்சுகள், வெள்ளாடுகள், புறாக்கள், ஆமைகள் ஆகியவை பலிக்காக பயன்படுத்தப்படுகின்றன.

சான்டீரியாவின் இசை

சான்டீரியா வணக்கத்தில் இசைக்கு முக்கிய பங்குண்டு. சமயச்சடங்குகளில் தெய்வங்களை வரவழைப்பதற்காக இசையோடு முரசு கொட்டுகிறார்கள். குறிப்பிட்ட ஒவ்வொரு தெய்வத்தையும் வரவழைக்க ஒவ்வொரு விதமான ராகம் இசைக்கப்படுகிறது. காதைப்பிளக்கும் இந்த முரசின் சப்தம் வெகு தூரத்தில் உள்ளவரின் காதையும் விட்டுவைப்பதில்லை.

முரசு, ஸைலோஃபோன், அல்லது மரிம்பாஸ் என்ற இசைக்கருவிகள் மேற்கு ஆப்பிரிக்காவில் நூற்றாண்டுகளாக இந்த வழிபாட்டுத் தொகுதியினரின் இசைக் கருவிகளாக இருந்துவந்துள்ளன. அடிமைகள் இதை அமெரிக்காவுக்கு கொண்டுவந்தனர் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம். பிரேஸிலில் சடங்கு முறையில் மிருகங்களை பலியிட்டு அதன் தோல்களை வைத்து இந்த புனிதமான முரசுகளை தயாரித்தனர். புதிய கருவிகளை கத்தோலிக்க சர்ச்சிலிருந்து எடுத்துவரப்பட்ட “புனித” நீரில் முழுக்காட்டுவது வழக்கமாக இருந்தது. மற்ற முரசுகள் ஹைதியிலுள்ள ஆப்பிரிக்க கரிபிய கலாச்சாரத்தின் குறிப்பிட்ட ஒரு தெய்வத்தைப் பிரதிநிதித்துவம் செய்தன.

சந்தையில் சான்டீரியாவின் புனித இசை, காம்ப்பேக்ட் டிஸ்கில் சாதாரணமாக கிடைக்கிறது. ராகங்களை இசைப்பதற்கு அவர்கள் அதிகமாக முரசுகளைத்தான் பயன்படுத்துகின்றனர். முரசு இசையில் சான்டீரியா தெய்வங்களின் பெயர்கள் அல்லது அந்த மதப் பழக்க வழக்கங்கள் தலைப்புகளாக இடம்பெறுகின்றன. காலம் செல்ல செல்ல லத்தீன் இசையும் இதோடு கலந்துவிட்டிருக்கிறது. சான்டீரியாவுக்கே உரிய பதங்கள் சில இசைத் தட்டுகளில் இடம் பெற்றுள்ளன.

பைபிள் என்ன சொல்கிறது

சான்டீரியா, ஆவியுலகத்தோடு நெருங்கிய தொடர்புடைய ஒரு வணக்கமாகும். இதை பைபிள் கண்டனம் செய்கிறது. (லேவியராகமம் 19:31) “பில்லிசூனியம்” “மாம்சத்தின் கிரியை”களில் ஒன்று என கடவுளுடைய வார்த்தை கூறுகிறது. இதில் ஈடுபடும் ஒரு நபர் கடவுளுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்க முடியாது. (கலாத்தியர் 5:19-21) கடவுளுடைய தயவை பெற விரும்புகிறவர்கள், “விக்கிரகாராதனைக்கு விலகி,” “பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளு”ம்படி பைபிள் கட்டளையிடுகிறது.—1 கொரிந்தியர் 10:14; யோவான் 4:23, 24.

சான்டீரியாவின் பழக்க வழக்கங்களும் இசையும் அதிகமதிகமாக மதசார்பற்றதாக மாறிவரும் உண்மையைக் குறித்து கிறிஸ்தவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிலும் லத்தீன் அமெரிக்க கலாச்சாரத்தின் சில அம்சங்களிலும் சான்டீரியா பின்னி பிணைந்திருக்கிறது. மக்கள் இவற்றை விரும்பி ரசிக்கிறார்கள். இவை தீங்கற்றவை என்று நினைக்கிறார்கள். ஆனால், ஒரு காரியம் எவ்வளவு பிரபலமானதாக அல்லது தீங்கற்றதாக தோன்றினாலும் பைபிள் நியமங்களுக்கு முரணாக இருக்கும்போது கிறிஸ்தவர்கள் அதை தவிர்க்க வேண்டும்.—2 கொரிந்தியர் 6:14-18.

[பக்கம் 25-ன் பெட்டி/படங்கள்]

சான்டீரியாவில் பயன்படுத்தப்படும் சொற்கள்

பாபாலு எய்: சுகப்படுத்தும் கடவுள், “புனிதர்” லாசரோ என்று வழிபடுகிறார்கள்.

சேங்கோ: அக்கினி, இடி, மின்னல் கடவுள், பீரங்கி படையின் காவல் தெய்வம். கத்தோலிக்க மதத்தில் “புனிதர்” பார்பரா என்று வழிபடப்படுகிறார்.

இஃபா கார்ப்பஸ்: சான்டீரியா பாரம்பரியத்தைக் குறிக்கும் 256 சின்னங்களில் சட்டங்கள் கூறப்பட்டுள்ளன.

எக்கோலி ஒருன்: மரிக்கும்போது எல்லா மனிதரும் செல்லும் அந்த “வானுலகம்”. ஆனால் துன்மார்க்கர் பூமியில் நரகத்தில் வாழ்ந்து எக்கோலி ஒருனில் துன்பப்படுகிறார்கள்.

ஓபாட்டாலா: மனித உயிரையும் மனச்சாட்சியையும் மண்ணிலிருந்து உருவாக்கின கடவுள்.

ஓச்சுன்: ஆறுகள், காதல், திருமணம், பணம், சந்தோஷம், மிகுதி ஆகியவற்றின் தேவதை. அதோடுகூட, வர்ஜன் டி லா கரீதாத் என்ற பெயரில் கியூபாவின் காவல் தெய்வம் என்று நம்பப்படுகிறது.

ஓகுன்: சுரங்க தொழிலாளிகளையும் மற்ற தொழிலாளிகளையும் காக்கும் தெய்வம். புனித பீட்டர் என்று வழிபடப்படுகிறார்.

ஓலாடுமேர்: அண்டத்தைப் படைத்த கடவுள்.

ஓருமிலா: தனிநபரின் விதியை தீர்மானிக்கும் கடவுள்.

ஏமய்யா அல்லது ஷெமைய்யா: சமுத்திரம், கருவள தேவதை. கியூபாவில் வர்ஜன் டி ரெக்லா அல்லது கன்னி மரியாள்.

[பக்கம் 24-ன் படம்]

போட்டானிக்காவில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள சான்டீரியா பூஜை பொருட்கள்