பசுக்களுக்கும் விடுமுறை!
பசுக்களுக்கும் விடுமுறை!
ஸ்விட்ஸர்லாந்திலுள்ள விழித்தெழு! நிருபர்
வருஷந்தோறும் ஸ்விட்ஸர்லாந்தில் ஆயிரமாயிரம் பசுக்கள் ‘டாட்டா’ சொல்லிவிட்டு விடுமுறையில் உல்லாசமாக செல்வது உங்களுக்குத் தெரியுமா? அவை ஒரே குஷியாக இருப்பதை நீங்கள் பார்க்க வேண்டுமே!
சுவிட்ஸர்லாந்தில் பனி நிறைந்த குளிர்காலங்களில் பால் பண்ணையிலுள்ள பசுக்கள் மாட்டுத்தொழுவத்தில் பாதுகாப்பாக படுத்துக்கொள்கின்றன. வசந்தகாலம் வந்துவிட்டால் போதும் அவற்றிற்கு கொண்டாட்டம்தான்! பச்சை கம்பளி பாவிய புல்வெளிகள், ஆங்காங்கே பூத்துக்குலுங்கும் மஞ்சள் நிற மலர் கொத்துக்கள்! பசுக்களுக்கு குதூகலம்தான். அங்கே ஆனந்தமாக ஆடிப்பாடி புல்மேய்கின்றன. காலமும் கோலமும் மாறிவிட்டதால் ஆனந்தத்தில் துள்ளி குதிப்பதை நீங்கள் பார்க்கலாம்.
மே அல்லது ஜூன் உதயத்தில் மலைச் சிகரங்களில் பனி உருகுவதால் பரந்த பசும் புல்வெளி நிலங்கள் மேய்ச்சலுக்குக் கிடைக்கின்றன. மேய்ச்சலுக்காக மாடுகளை மலைகளுக்கு ஓட்டிச்செல்வதற்கு இதுவே சரியான தருணம்!
நீர்வளமிக்க மேய்ச்சல் நிலங்கள்
சுவிட்ஸர்லாந்தில் சுமார் 10,000 மேய்ச்சல் நிலங்களை மேட்டுப் பகுதிகளில் காணலாம். இவை சுமார் 10,000 சதுர கிலோமீட்டர் பரந்து கிடக்கின்றன. தேசத்தின் மொத்த பரப்பளவில் இது நான்கில் ஒரு பங்கு. ஆகவே, மதிப்புமிகு இந்த வளம் மிகவும் கவனமாக பாதுகாக்கப்படுகிறது.
உயரமான இடங்களிலுள்ள மேய்ச்சல் நிலத்தில் முட்செடிகளும் புதர்களும் மண்டிவிடாதபடி மனிதனும் மிருகங்களும் சேர்ந்து பாடுபடுகின்றன(ர்). இதற்காக விவசாயிகள் அனுபவமிக்க மேய்ப்பர்களிடம் சுமார் 5,00,000 கால்நடைகளை ஒப்படைத்துவிடுகின்றனர். இவர்கள் பால் கறக்கும் பசுக்களையும் ஈன்றாத பசுக்களையும் கோடை விடுமுறையில் லாரியிலோ ரயிலிலோ ஏற்றி மலைப்பகுதிகளில் மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்கின்றனர்.
மலையின் மேல் மேய்ச்சல் நிலங்களுக்குச் செல்ல சாலைகளும் ரயில் பாதைகளும் கிடையா. ஆகவே, கொஞ்ச தூரம் கால்நடையாகவே செல்ல வேண்டும். கோடை காலத்தில் மந்தை மேல்நோக்கி பயணிக்கிறது. அங்கே கடல்மட்டத்துக்கு மேல் 2,000 அல்லது 2,200 மீட்டர் உயரத்திலுள்ள மேய்ச்சல் நிலத்தில் இந்த மந்தைகளுக்கு இனிப்பான ஆல்பைன் புல்லும் அழகிய வண்ண மலர்களும் கிடைக்கின்றன. மலைகளில் நீரூற்றுகள் நிறைய இருப்பதால் குடிநீருக்கு பஞ்சமே இல்லை.
கறந்த பாலை சில சமயங்களில் மலை அடிவாரத்துக்கு கொண்டுவந்து விற்பனை செய்கிறார்கள் அல்லது பதப்படுத்துகிறார்கள். ஆனால் பெரும்பாலும் மலைப் பக்கத்திலுள்ள சிறு குடில்களில் அது வெண்ணையாக அல்லது பால் கட்டியாக மாற்றப்படுகிறது. கோடை நாட்கள் குறைந்துகொண்டே வரும்போது மந்தையை குறைந்த உயரத்திலுள்ள இடங்களுக்கு ஓட்டிக்கொண்டு வருகிறார்கள். கடைசியாக, மந்தைகள் குளிர்கால குடில்களுக்கு திரும்ப வேண்டிய அந்த நாள் வருகிறது; அது வானிலையைப் பொருத்து மாறும், பொதுவாக செப்டம்பர் மாத கடைசியில் வரும். ஆம், கோடை விடுமுறை முடியப்போகிறது! ஆனால் முதலில் விசேஷமான ஒரு அணிவகுப்பு நடத்தப்படுகிறது.
கொண்டாட்டமான அந்த நாள்
ஒவ்வொரு பசுவும் எவ்வளவு பால் கறக்கிறது என்ற பதிவை வைத்து மிகச் சிறந்த பசுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அலங்கரிக்கப்படுகின்றன. அதிகமாக பால் கொடுத்த பசு பவனி வர, அணிவகுப்பு ஆரம்பமாகிறது. வண்ண வண்ண காகித மலர்களையும் ரிப்பன்களையும் சிறிய ஊசியிலையின் மரக்கிளைகளையும் வைத்து பசுக்களின் தலைகளை அலங்கரிக்கின்றனர். பசுக்களின் கழுத்தில் கட்டப்படும் மணிகள் தூரத்தில் வரும்போதே கட்டியம் கூறுகின்றன!
மந்தை மேய்ப்பர்கள் இந்த விசேஷ நிகழ்ச்சிக்காக வெள்ளை ஷர்ட்களையும் பூ வேலைப்பாடுமிக்க கருப்பு நிற வெல்வெட் ஜாக்கட்டுகளையும் அணிந்துகொள்கின்றனர். இதற்கிடையில் கீழே பள்ளத்தாக்குகளில் விவசாயம் செய்பவர்கள் சாலையோரங்களில் நின்றுகொண்டு அணிவகுப்பை வரவேற்க தயாராகின்றனர்.
தாழ்வான நிலப்பகுதிக்கு வந்தவுடன் மற்றொரு குளிர்காலத்தை பத்திரமாக கழிப்பதற்கு சொந்தக்காரரிடம் மந்தைகள் ஒப்படைக்கப்படுகின்றன. மறுபடியும் விடுமுறையை கழிக்க மலைகளுக்குச் செல்வதற்கு இன்னும் அதிக காலம் செல்லாது! ஒரே குஷிதான் போங்கள்!