Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

புன்னகை புரிவீர்! புத்துணர்ச்சி அடைவீர்!

புன்னகை புரிவீர்! புத்துணர்ச்சி அடைவீர்!

புன்னகை—புரிவீர்! புத்துணர்ச்சி அடைவீர்!

ஜப்பானிலுள்ள விழித்தெழு! நிருபர்

அதில் போலித்தனம் இல்லாதபோது சந்தேகம் எனும் மாயமான் ஓடிவிடும். பல வருஷங்களாக அடிமனதில் மண்டிக்கிடக்கும் தப்பெண்ணம் தவிடுபொடியாகிவிடும். சந்தேகத்தாலும் அவநம்பிக்கையாலும் அடைபட்ட உள்ளக் கதவுகள் உடைந்துபோகும். மனநிம்மதியையும் மனமகிழ்ச்சியையும் மழைபோல பொழியும். “உங்களை நான் புரிந்துகொண்டேன், கவலைப்படாதீர்கள்” என்று தட்டிக்கொடுக்கும். “நாம் நல்ல நண்பர்களாக இருக்கலாம்” என்று சொல்லி மனதை குளிர வைக்கும். சக்திவாய்ந்த அந்த ஆயுதம்தான் என்ன? அதுவே புன்னகை! உங்கள் புன்னகை!

புன்னகை என்பது என்ன? “வேடிக்கை, சம்மதம் அல்லது சந்தோஷத்தைக் காட்ட, இதழ் இலேசாக விரிய மென்மையாக சிரித்தல்” என்று பொதுவாக அகராதிகள் விளக்கமளிக்கின்றன. புன்னகை ஒருவரின் உணர்வுகளை மற்றவர்களுக்கு மௌனமாக வெளிப்படுத்துகிறது. புன்னகையால் இகழ்ச்சியை வெளிப்படுத்தலாம் அல்லது அலட்சியத்தையும் வெளிப்படுத்தலாம்.

புன்னகைக்கு இவ்வளவு சக்தியா? யாரோ ஒருவர் உங்களைப் பார்த்து புன்னகைத்ததால் நிம்மதியடைந்தது அல்லது சந்தோஷப்பட்டது ஞாபகமிருக்கிறதா? அல்லது ஒருவர் புன்னகைக்காதபோது பயந்துபோனது அல்லது மனம் நொந்துபோனது ஞாபகமிருக்கிறதா? ஆம், புன்னகைக்கு சக்தி உண்டு. அது புன்னகை புரிபவரையும் அவர் யாரைப் பார்த்து புன்னகைக்கிறாரோ அவரையும் சந்தோஷப்படுத்துகிறது. பண்டைய காலத்தில் வாழ்ந்த யோபு தன்னுடைய சத்துருக்களைப் பற்றி இவ்வாறு சொன்னார்: “அவர்களைப் பார்த்து நான் புன்முறுவல் பூத்தபோது, ‘அத்தகைய பேறு நமக்குக் கிடைத்ததோ’ என ஐயுற்றனர், என் முகத்தோற்றத்தின் ஒளியைப் பெற ஏங்கிக் கிடந்தனர்.” (யோபு 29:24, கத்தோலிக்க பைபிள்.) யோபுவின் முகத்தில் வீசிய “ஒளி” நம்பிக்கையை அல்லது உற்சாகத்தை பரப்பியது.

புன்னகை இன்று வரையாகவும் நன்மைகளை அள்ளி வழங்குகிறது. இதமாக இதழ் விரிந்தால் மனதில் மண்டிகிடக்கும் பதற்றம் பறந்துவிடலாம். பிரஷர் குக்கரில் உள்ள பாதுகாப்பு வால்வ் போல அது செயல்படுகிறது. மனதில் இறுக்கம் அல்லது ஏமாற்றம் இருந்தால் புன்னகை அந்த இறுக்கத்தை நீக்கிவிடுகிறது, சோர்வும் நீங்கிவிடுகிறது. உதாரணத்துக்கு டோமோக்கோ என்ற பெண்ணை எடுத்துக்கொள்ளுங்கள். மற்றவர்கள் அடிக்கடி அவளை பார்ப்பதை அவள் கவனித்தாள். ஆனால் இவள் பார்க்கும்போது அவர்கள் உடனடியாக வேறு பக்கமாக முகத்தைத் திருப்பிக்கொள்வார்கள். டோமோக்கோவுக்கு இது மிகவும் வேதனையாக இருந்தது. ஒரு நாள் இவளுடைய சிநேகிதி இவளுக்கு ஒரு ஐடியா கொடுத்தாள். அவர்கள் உன்னைப் பார்த்தால் உடனடியாக அவர்களைப் பார்த்து புன்னகைத்துவிடு என்றாள். இரண்டு வாரங்கள் முயற்சிசெய்து டோமோக்கோ இதையே செய்தாள். என்ன ஆச்சரியம் பாருங்கள்! அனைவரும் அவளைப் பார்த்து திரும்ப புன்னகை செய்தார்கள். பதற்றங்கள் பதருகளாக பறந்துவிட்டன! “வாழ்க்கை உண்மையில் ஆனந்தமானது” என்றாள் அவள். ஆம், புன்னகை மலரை மற்றவர்கள்மீது அள்ளி வீசுங்கள், அது சிநேக தென்றலாக வந்து தழுவும்.

அனைவருக்கும் நல்லது

புன்னகைக்கும் நமது உணர்ச்சிகளுக்கும் தொடர்பு உண்டு. நமக்கு நல்ல மனநிலை கிடைக்க புன்னகை உதவும். உடல் ஆரோக்கியத்துக்கும் அது நல்லது. “வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்” என்பது பழமொழி. ஒருவரின் உடலுக்கும் உள்ளத்திற்கும் அதிகம் தொடர்பிருப்பதாக மருத்துவ அதிகாரிகள் கூறுகின்றனர். எப்போதும் மனபாரத்தோடு, எதிலும் நம்பிக்கையில்லாமல் இருந்தால், நம்முடைய உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என்பதை அநேக மருத்துவ ஆராய்ச்சிகள் ஆமோதிக்கின்றன. ஆனால், முகத்தில் புன்னகை வீசினால் மனசுக்குள் மகிழ்ச்சி கீதமாக இசைக்கும். எப்போதும் கலகலவென்று சிரித்துக்கொண்டு வலம்வந்தால் நோய் நம் பக்கத்தில் வர அஞ்சும்.

புன்னகை மற்றவர்களை வசீகரிக்கிறது. உங்களுக்கு ஆலோசனை அல்லது புத்திமதி அளிக்கப்படும் ஒரு சந்தர்ப்பத்தை கற்பனை செய்துகொள்ளுங்கள். ஆலோசனை சொல்பவரின் முகபாவனை எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள்? அவருடைய முகம் கடுகடுவென்று இருந்தால் அது அவருடைய கோபத்தையும் எரிச்சலையும் வெறுப்பையும்கூட வெளிப்படுத்தும். மறுபட்சத்தில் ஆலோசனை சொல்பவர் முகத்தில் இதமான புன்னகை தவழ்ந்தால் நீங்கள் செளகரியமாக உணர்ந்து, அவர் சொல்லும் அறிவுரையை தாராளமாக ஏற்றுக்கொள்வீர்கள் அல்லவா? மன இறுக்கமான சூழலில் ஒருவருக்கொருவர் தவறாக புரிந்துகொள்வது சகஜம். ஆனால் அந்த நேரத்தில்கூட புன்னகை வீசினால் மனஸ்தாபங்கள் மறையலாம்.

புன்னகை—நல் எண்ணங்களின் பூக்கள்

புன்னகை செய் என்று சொன்னதும் பளீரென்று புன்னகை வீச நாம் ஒன்றும் திறமையான நடிகர்கள் அல்ல, அதுபோல் புன்னகைக்க நாம் விரும்புவதும் இல்லை. நம்முடைய புன்னகை போலியாக இல்லாமல், இயல்பாக இருக்க வேண்டும். செய்தித்தொடர்பு பள்ளி ஆசிரியர் ஒருவர் இவ்வாறு கூறினார்: “முதலில் ரிலாக்ஸ் செய்துகொள்ளுங்கள். பிறகு மனசார புன்னகை செய்யுங்கள். இல்லாவிட்டால் அது மிகவும் செயற்கையாக இருக்கும்.” மனசார எவ்வாறு புன்னகை செய்யலாம்? இதற்கு பைபிள் நமக்கு உதவி செய்கிறது. நம்முடைய பேச்சைக் குறித்து மத்தேயு 12:34, 35 இவ்வாறு சொல்கிறது: “இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும். நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்.”

மௌனமாக நம்முடைய உணர்வுகளை வெளிக்காட்டுவதே புன்னகை என்பதை மறந்துவிடாதீர்கள். “இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்” என்பதையும் “நல்லவைகள்” “நல்ல பொக்கிஷத்திலிருந்து” வரும் என்பதையும் நாம் அறிவோம். அப்படியென்றால் மனதிலும் இதயத்திலும் போலித்தனம் இல்லாதபோது கள்ளமில்லா புன்னகைக்கு பஞ்சமிருக்காது. நம் இருதயத்திலிருப்பது நம் சொல்லிலும் செயலிலும் மட்டுமல்ல, நம் முகபாவனையிலும் பளிச்சென்று தெரியவந்துவிடும். ஆகவே நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்வதற்கு நாம் எப்போதும் உழைக்க வேண்டும். மற்றவர்களைப் பற்றி நாம் என்ன யோசிக்கிறோமோ அது பளிச்சென்று நம் முகத்தில் தெரிந்துவிடும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சும்மாவா சொன்னார்கள். ஆகவே குடும்ப அங்கத்தினர்கள், அக்கம் பக்கத்திலுள்ளவர்கள், நண்பர்கள் ஆகியவர்களின் நல்ல குணங்களையே நாம் சிந்திப்போமாக. அப்போது அவர்களைப் பார்த்து மனசார புன்னகைப்பது நமக்கு சுலபம். அது நற்குணம், இரக்கம், தயவு ஆகிய நல்ல எண்ணங்கள் நிரம்பி வழியும் இதயத்திலிருந்து மலர்ந்த புன்னகையாக இருக்கும். அந்த மலர்ச்சி கண்களிலும் தெரியும். பார்ப்போரின் முகமும் மலரும்.

ஆனால், வளர்ந்த விதத்தால் அல்லது சூழ்நிலையால் சிலருக்கு புன்னகைப்பது கடினம். நல்லெண்ணம் படைத்தவர்களாக அவர்கள் இருந்தாலும், புன்னகைப்பது அவர்களுக்குப் பழக்கமில்லாமல் இருக்கலாம். உதாரணமாக, ஜப்பானிய ஆண்கள் எல்லா சந்தர்ப்பங்களிலும் அடக்கமாக, அமைதியாக இருப்பதே வழக்கம். ஆகவே முன்பின் தெரியாதவர்களைப் பார்த்து புன்னகை செய்யும் பழக்கம் அவர்களில் அநேகருக்கு இல்லை. மற்ற தேசங்களைச் சேர்ந்தவர்களும்கூட இப்படி இருக்கலாம். கூச்ச சுபாவத்தால் புன்னகைக்க சிரமப்படுவோரும் உண்டு. ஆகவே ஒருவர் எந்தளவு புன்னகைக்கிறார் அல்லது எவ்வளவு அடிக்கடி புன்னகைக்கிறார் என்பதை வைத்து அவரை எடைபோடக் கூடாது. ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள். அவர்களுடைய குணங்களும் வெவ்வேறு. அவர்கள் மற்றவர்களோடு பேசும் முறைகளும் வெவ்வேறு.

புன்னகைப்பது உங்களுக்குக் கஷ்டமாக இருந்தால், ஏன் சற்று முயற்சி எடுக்கக்கூடாது? பைபிள் கூறுகிறது: “நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக; . . . யாவருக்கும் நன்மை செய்யக்கடவோம்.” (கலாத்தியர் 6:9, 10) மற்றவர்களைப் பார்த்து புன்னகைப்பதும் ‘நன்மை செய்யும்’ வழியாகும். இது உங்களால் முடிந்ததே! ஆகவே புன்னகையோடு மற்றவர்களுக்கு வாழ்த்துச் சொல்லவும், உற்சாகமாக பேசவும் முந்திக்கொள்ளுங்கள். உங்களது புன்னகை அவர்களை கட்டிப்போடும். புன்னகை செய்ய செய்ய அது உங்கள் உதட்டோரங்களில் நிரந்தரமாக குடிகொள்ளும்.

[பக்கம் -ன் பெட்டி12]

எச்சரிக்கை

நாம் பார்க்கும் புன்னகை எல்லாமே போலித்தனம் இல்லாத புன்னகை இல்லை என்பது கசப்பான உண்மை. ஏமாற்றுப் பேர்வழிகளும் உள்ளதை உள்ளவாறு கூறாத வியாபாரிகளும் மற்றவர்களும் மிக அழகாக புன்னகை செய்வார்கள். புன்னகைத்துவிட்டால் சந்தேகம் ஏற்படாது, நாம் மயங்கிவிடுவோம் என்பது அவர்களுக்குத் தெரியும். மோசமான நடத்தையில் ஈடுபடுபவர்களும் அசுத்தமான எண்ணமுள்ளவர்களும் கவர்ச்சியாக புன்னகை செய்யலாம். ஆனால் அவர்களுடைய புன்னகை போலியானது, அது ஏமாற்றிவிடும். (பிரசங்கி 7:6) ஆனால் அளவுக்கு அதிகமாக மற்றவர்களை சந்தேகிக்காத அதே சமயத்தில், கையாளுவதற்கு கடினமாக இருக்கும் “கடைசி நாட்களில்” நாம் வாழ்வதை மனதில் வைத்து இயேசு பரிந்துரை செய்தது போல ‘சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போல கபடற்றவர்களுமாய்’ நாம் இருக்க வேண்டும்.—2 தீமோத்தேயு 3:1; மத்தேயு 10:16.

[பக்கம் -ன் படம்13]

புன்னகை மலர வாழ்த்துவதில் முந்திக்கொள்ளுங்கள்