Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘மரண கலாச்சாரத்திலிருந்து’ இளைஞரை மீட்டல்

‘மரண கலாச்சாரத்திலிருந்து’ இளைஞரை மீட்டல்

‘மரண கலாச்சாரத்திலிருந்து’ இளைஞரை மீட்டல்

ன்றைய இளைஞர்களுக்கு சாவு ஏன் சுவாரஸ்யமான சமாச்சாரம் ஆகிவிட்டது? அமெரிக்காவிலுள்ள இல்லினாய்ஸ் மாகாணத்தின் பிரதிநிதி ஹென்றி ஹைட் இவ்வாறு சொன்னார்: “இளைஞர்களின் மனதில் இருக்கும் ஆன்மீக சூனியத்தை வன்முறையும் சாவும் நிரப்புகின்றன.”

டைம் பத்திரிகை வாசகர் ஒருவர் எழுதினார்: “இன்று இளைஞர்களிடையே மரண கலாச்சாரம் நிலவுவதற்குக் காரணம், அவர்களுக்கு ஒழுக்க சம்பந்தமான, ஆன்மீக சம்பந்தமான விஷயங்கள் கற்றுத் தரப்படாததே. பெற்றோர்களின் சோம்பேறித்தனமும், வன்முறையான பொழுதுபோக்கும்கூட அதற்கான காரணங்கள்.”

தனிமை, இளைஞர்களை வாட்டும் மற்றொரு பெரிய பிரச்சினை. தாய் தகப்பன் இருவருமே வேலைக்கு செல்வதால் சில பிள்ளைகள் முக்கால்வாசி நேரம் தனியாக இருக்கின்றனர். இன்னும் சிலருக்கு ஒன்று அப்பா இல்லை அல்லது அம்மா இல்லை. ஒரு பத்திரிகையின்படி, ஐக்கிய மாகாணங்களில் இளைஞர்கள் தினமும் சுமார் 3.5 மணிநேரம் தனியாக இருக்கின்றனர். வாராவாரம் அவர்கள் பெற்றோரோடு செலவிடும் நேரம் 1960-களில் இருந்ததைவிட 11 மணிநேரம் இப்போது குறைந்திருக்கிறது. இன்னும் சில பிள்ளைகள் பெற்றோரின் உணர்ச்சிப்பூர்வ ஆதரவு இல்லாமல், அல்லது பெற்றோர் இருந்தும் இல்லாத நிலையில் வளர்கின்றனர்.

பெற்றோர் செய்ய வேண்டியது

இளைஞர்கள் “ஆன்மீக சூனியத்தோடு” போராடுவதால், பெற்றோரின் பங்கு முக்கியமானது. பிள்ளைகளுக்கு நல்ல பொழுதுபோக்கு தேவை, அதேசமயம் கவனிப்பும் வழிகாட்டுதலும் தேவை என்பதை பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும். பிள்ளைகளுக்கு விருப்பமான மியூஸிக், டிவி புரோகிராம்கள், வீடியோக்கள், நாவல்கள், வீடியோ கேம்ஸ், சினிமாக்கள் ஆகியவற்றைப் பற்றி அன்போடும் அக்கறையோடும் அவர்களோடு பெற்றோர் பேச வேண்டும். அநேக இளைஞர்கள், வாய்விட்டு சொல்லாவிட்டாலும், பெற்றோரின் பாசத்திற்காகவும் அன்பான புத்திமதிகளுக்காகவுமே ஏங்குகின்றன. பிள்ளைகளிடம் சுத்திவளைக்காமல் நேரடியாக பேச வேண்டும், ஏனெனில் இன்றைய உலகில் எது சரி எது தவறு என்று அவர்களால் எதையும் தெளிவாக புரிந்துகொள்ள முடிவதில்லை. பெற்றோர் தாங்கள் இளைஞர்களாக இருந்த காலத்தைவிட பல மடங்கு சீர்கெட்டிருக்கும் காலத்திலேயே தங்கள் பிள்ளைகள் திண்டாட வேண்டியிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

பிள்ளைகளை பாதுகாக்க விரும்பும் பெற்றோர் அவர்களோடு தவறாமல் உரையாடுவார்கள், அவர்கள் சொல்வதை கவனமாக கேட்பார்கள், இக்காலத்து நாகரிகத்தின் ஆபத்துக்களைக் குறித்தும் எச்சரிப்பார்கள். பெற்றோர் பாசமாகவும், தேவைப்படும் போதெல்லாம் கண்டிப்பாகவும் நடந்துகொள்கையில் நல்ல பலன் கிடைக்கும்.—மத்தேயு 5:37.

யெகோவாவின் சாட்சிகள் பைபிளையும் பைபிள் சார்ந்த பிரசுரங்களையும் வீடியோக்களையும் a பயன்படுத்தி பிள்ளைகளோடு தவறாமல் உரையாட முயற்சிக்கின்றனர். அந்தச் சந்தர்ப்பங்களில் அவர்களை திட்டி கண்டிப்பதற்கு பதிலாக உற்சாகப்படுத்தும் ஆன்மீக விஷயங்களையே கலந்துபேசுகிறார்கள். இப்படி குடும்பமாக உட்கார்ந்து பேசுகையில் ஒவ்வொரு பிள்ளையின் பிரச்சினைகளையும் கேட்டுத் தெரிந்துகொண்டு, தனிப்பட்ட கவனம் செலுத்துகின்றனர்.

பெற்றோரிடமிருந்து வழிகாட்டுதல் பெறாத இளைஞருக்கு, “என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்” என்ற வார்த்தைகள் எவ்வளவு தெம்பளிக்கின்றன! (சங்கீதம் 27:10) இரக்கங்களின் பிதாவாகிய யெகோவா இளைஞருக்கு எவ்வாறு உதவுகிறார்? யெகோவாவின் சாட்சிகளது சபையில் அநேகர் அடைக்கலம் புகுந்து, மற்றவர்களது பாசத்தைப் பெற்று, வாழ்க்கை பற்றிய எல்லா சந்தேகங்களையும் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஹோசியாஸ் என்ற இளைஞன் சொல்கிறான்: “வாழ்ந்து வாழ்ந்து என்னத்த சாதிக்கப்போறோம் என்றுதான் முதலிலெல்லாம் நினைப்பேன். ஒரு குறிக்கோளே இல்லாம, நம்பிக்கையும் இல்லாம இருந்தேன். ஆனால் எம்மேல அன்புகாட்ட கடவுள் இருக்காருன்னு தெரிஞ்சுகிட்டப்போ என் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டது. அதுக்கு யெகோவாவின் அமைப்புதான் முக்கிய காரணம். சொந்தபந்தம் இல்லாத குறையை சபையில இருந்த சகோதரர்கள் தீர்த்துவைச்சாங்க. சபையிலிருக்கும் மூப்பர்களும் மற்றவர்களும் எனக்கு ஊன்றுகோல் மாதிரி.”

சொல்லப்போனால், இளைஞர்கள் மட்டுமல்ல இன்னும் அநேகரும் யெகோவாவின் சாட்சிகளுடைய சபை கூட்டங்களுக்கு தவறாமல் செல்வதால் மன ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் புதுத்தெம்பு பெறுகிறார்கள். இதைப் பற்றி மனிதவியல் நிபுணரான பெட்ரிஷியா ஃபார்ச்சுனி தன் கட்டுரை ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டார்: “யெகோவாவின் சாட்சிகள், இப்படித்தான் வாழவேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் வரையறையையும் ஏற்படுத்திக்கொண்டு அவற்றின்படி தங்கள் சிந்தனையையும் செயலையும் நல்வழிப்படுத்துகிறார்கள்.” இந்த ‘கட்டுப்பாடும்’ ‘வரையறையும்’ பைபிளை அடிப்படையாக கொண்டவை. ஆகவே, மற்றவர்கள் எதிர்ப்படும் அதே பிரச்சினைகள்தான் யெகோவாவின் சாட்சிகளுக்கும் வருகிறது என்றாலும் பைபிள் தரும் விசேஷ ஞானத்தால் அவர்களால் சமாளிக்க முடிகிறது. பைபிளின் தெளிவான போதனைகளும் நெறிகளுமே அவர்களை பாதுகாக்கின்றன.

‘மரணமில்லாத’ காலம்

யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றங்களில், புதிய உலகைப் பற்றிய கடவுளுடைய வாக்குறுதியே மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. விரைவில் வரவிருக்கும் இந்தப் புதிய உலகில் “நீதி வாசமாயிருக்கும்,” ‘பயப்படுத்துபவர் எவரும் இருக்கமாட்டார்கள்.’ (2 பேதுரு 3:13; மீகா 4:4) அதுமட்டுமல்ல, கடவுள் ‘மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைப்பார்’ என ஏசாயா தீர்க்கதரிசி பதிவுசெய்திருக்கிறார். முதல் மனிதனாகிய ஆதாம் செய்த பாவத்தாலேயே மனிதகுலத்திற்கு மரணம் வந்தது. ஆனால் விரைவில் ‘மரணமே இருக்காது’ என கடவுள் வாக்குறுதி அளிக்கிறார்.—ஏசாயா 25:8; வெளிப்படுத்துதல் 21:3, 4; ரோமர் 5:12.

உதவிக்காக தவிக்கும் இளைஞரா நீங்கள்? பைபிளைப் புரட்டிப் பார்த்து, வாழ்க்கையில் குறிக்கோளையும் நம்பிக்கையையும் பெற உங்களை அழைக்கிறோம். யெகோவாவின் சாட்சிகளுடைய உதவியால், மிகச் சிறந்த எதிர்காலத்தை பற்றிய, அதாவது கடவுள் வாக்குறுதி அளித்திருக்கும் புதிய உலகைப் பற்றிய நம்பிக்கையை நீங்கள் பெற முடியும்.

[அடிக்குறிப்பு]

a உவாட்ச் டவர் சொஸைட்டி வெளியிட்ட இளைஞர் கேட்கின்றனர்—நல்ல நண்பர்களை பெறுவது எப்படி? என்ற லேட்டஸ்ட் வீடியோ இளைஞருக்கு நடைமுறையான உதவி அளிக்கிறது. தற்போது இது ஆங்கிலத்தில் கிடைக்கிறது.

[பக்கம் 9-ன் படம்]

பிள்ளைகள் சொல்வதை கவனமாக கேட்டு, அவர்களது பிரச்சினைகளை புரிந்துகொள்ள பெற்றோர் நேரத்தை ஒதுக்க வேண்டும்

[பக்கம் 10-ன் படங்கள்]

“வாழவேண்டிய சரியான முறையை யெகோவாவின் சாட்சிகள் உறுதியாக கடைப்பிடிக்கிறார்கள்”