Dst—காலத்திற்கு முன்பே கனிந்த கருத்தா?
Dst—காலத்திற்கு முன்பே கனிந்த கருத்தா?
ஏன் கடிகாரத்தை வருடத்துக்கு இருமுறை ரி செட் செய்ய வேண்டும்? கடிகார முள்ளை முன்னும் பின்னும் நகர்த்தி அட்ஜெஸ்ட் செய்து வைப்பதென்பது சிலருக்கு உண்மையில் எரிச்சலூட்டும் வேலை. இளவேனிற் காலத்தில் கடிகார முள்ளை முன்னாலும் இலையுதிர் காலத்தில் அதை பின்னாலும் ரி செட் செய்ய வேண்டும். ஏன் இவ்வாறு ரி செட் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது? பகல் நேர சேமிப்பை (daylight saving time [DST]) ஆரம்பித்தவர் யார்?
பகல் நேரத்தை சேமிக்க வேண்டும் என்ற கருத்தை 1784-ல் முதல் முதலாக கூறியவர் பெஞ்சமின் ஃபிராங்லின் என்று என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா கூறுகிறது. நூறு ஆண்டுகளைத் தாண்டிய பிறகு, வில்லியம் வில்லட் என்ற இங்கிலாந்து நாட்டவர் இதற்காக சுறுசுறுப்பாக பிரச்சாரம் செய்தார். ஆனால் பார்லிமென்டில் ஒரு சட்டம் இயற்றப்படும் முன்னே வில்லட் மரித்துப்போனார்.
கென்டிலுள்ள சிஸ்லிஹர்ஸ்ட்டில் ஒரு கட்டடக் கலை நிபுணராக இருந்தவரே வில்லட். அவர்தான் நேரத்தை அட்ஜெஸ்ட் செய்வதால் கிடைக்கும் பயனை கண்டுபிடித்து விளக்கிக் கூறினார் என்று பிரிட்டிஷ் எழுத்தாளர் டோனி பிரான்சிஸ் எழுதியிருக்கிறார். கோடையில் ஒருநாள் அதிகாலை வேளையில் பெட்ஸ் உட்டில் வில்லட் குதிரைமீது சவாரி செய்துகொண்டிருந்தார். ஜன்னல் மூடப்பட்டிருந்த பல வீடுகளை அவர் கவனித்தார். அதைப் பார்த்தவுடன், ‘பகல் நேரம் எவ்வளவு வீணாகிக் கொண்டிருக்கிறது’ என்று அவர் நினைத்திருக்க வேண்டும். அப்போதுதான் நேரத்தை அட்ஜெஸ்ட் செய்வதால் எவ்வளவு பயன் என்பதை அவர் கண்டுபிடித்திருக்க வேண்டும். அதிலிருந்து, கடிகாரத்தை அட்ஜெஸ்ட் பண்ண பிரிட்டிஷ் பார்லிமென்டில் ஒரு மசோதாவை அவர் சிபாரிசு செய்ய ஆரம்பித்தார். ஒரு சமயம் 20 நிமிடங்கள் என்ற கணக்கில் 80 நிமிடங்கள் வரை வசந்த காலத்தில் கடிகார முள்ளை முன்னுக்குத் திருப்பியும் இலையுதிர் காலத்தில் அதை பின்னுக்குத் திருப்பியும் வைப்பதன் மூலம் கோடை காலங்களில் கிடைக்கும் பகல் நேரத்தை நன்றாக பயன்படுத்த முடியும்.
வில்லட் இவ்வாறு எழுதியதாக ஃபிரான்சிஸ் கூறுகிறார்: “வெளிச்சம் என்பது படைப்பாளர் மனிதனுக்கு தந்த மிகப் பெரிய பரிசுகளில் ஒன்றாகும். நம்மைச் சுற்றி பகல் வெளிச்சமிருக்கையில் உற்சாகம் கொடிகட்டி பறக்கிறது, கவலைகள் சுமையாக அழுத்துவதில்லை, வாழ்க்கையோடு போராட தைரியம் பிறக்கிறது.”
பார்லிமென்டில் சட்டம் இயற்றப்படும் வரை அரசன் ஏழாவது எட்வர்டு காத்திருக்கவில்லை. அரசு மாளிகை, அதைச் சுற்றியிருந்த 19,500 ஏக்கர் சான்ட்ரிங்ஹாமை பகல் நேரம் சேமிப்பு பகுதி என்று அறிவித்தார். பிற்பாடு விண்ட்ஸாரிலும் பால்மோரிலும் அரசுக்கு சொந்தமான இடங்களில் இதே மாற்றங்களைச் செய்தார்.
பகல் நேர சேமிப்பை ஏற்றுக்கொள்ள முதலில் முரண்டு பிடித்த அரசியல்வாதிகள் பிறகு ஏன் ஒத்துக்கொண்டார்கள்? முதல் உலகப்போர் நடந்த சமயத்தில் எரிபொருளை இவர்கள் மிச்சப்படுத்த விரும்பினர். பகல் நேரத்தை சேமித்ததால் விளக்குகளுக்கு தேவையான எரிபொருளின் அளவை குறைக்க முடிந்தது. மற்ற நாடுகளும் இதே போன்ற காரணங்களுக்காக இந்தக் கருத்தை விரைவில் ஏற்றன. இரண்டாம் உலகப்போரின் சமயத்தில் கோடையில் இரு முறை நேரத்தை அட்ஜெஸ்ட் செய்து பகல் நேரம் சேமிக்கப்பட்டன. இதனால், கோடையில் இரண்டு மணிநேரங்களும் குளிர்காலத்தில் ஒரு மணி நேரமும் கிடைத்தன.
வில்லியம் வில்லட்டுக்கு பெட்ஸ் உட்டில் ஒரு நினைவுச் சின்னம் வைக்கப்பட்டிருக்கிறது, அந்தப் படத்தை நாம் வலது பக்கம் காணலாம். அது “கோடை காலத்துக்காக சிறிதும் சளைக்காமல் போராடிய அந்த மாமனிதருக்கு” அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கதிர் மணிப்பொறிக்கு கீழே Horas non numero nisi aestivas என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதன் பொருள் “நான் கணக்கிடுவது மணிநேரங்களை அல்ல, கோடை காலத்தைத்தான்.”
[பக்கம் 31-ன் படத்திற்கான நன்றி]
நன்றி: National Trust